Advertisement

அத்தியாயம் – 21

ஜன்னலருகே நின்று பழைய நினைவுகளை யோசித்தபடி இருந்த நியதியின் கவனத்தைத் தட்டப்பட்ட கதவின் ஓசை நிகழ்வுக்குக் கொண்டு வர சென்று கதவைத் திறந்தாள்.

வெளியே ஷோபனா நின்றிருந்தார்.

“மோளே… ஊணு கழிஞ்சு நம்மள் குருவாயூர் கிளம்பனும், இதா, இதில் குறச்சு ஆபரணங்கள் இருக்கு… என் ஆதிக் குட்டன் கல்யாணம் பண்ணப் போற பொண்ணுக்குன்னு  வாங்கி வச்சது, இனி இது நினக்கானு…” சொல்லியபடி  உள்ளே வந்தவர் ஒரு நகைப்பெட்டியை அவளிடம் நீட்ட வாங்காமல் தயங்கிக் கொண்டு அவரைப் பார்த்தாள் நியதி.

“அம்மா…! இதெல்லாம் எதுக்கு…? எனக்கு அதிகமா நகை போடவே பிடிக்காது…” என்றவளைப் புன்னகையுடன் பார்த்தவர் அவள் கை பற்றி கட்டிலில் அமர வைத்தார்.

“அது சரி, பூவும் நகையும் இஷ்டப்படாத பெண்ணுண்டோ…? நீ என்ன சாமியாரினி ஆகவா போற…? பொண்ணுன்னா பூவும், நகையும், புடவையும் தானே அழகு… இதொக்கே என்டே மருமகளுக்கு நான் தர்றது, வேண்டாம்னு சொல்லக் கூடாது…” என்றவர் அவளது கண்கள் கலங்குவதைக் கண்டு கையில் தட்டிக் கொடுத்தார்.

“எந்தா மோளே, எந்தினு கரயனது…?”

“அம்மா…! எ..எனக்கு சொல்லத் தெரியல, ஆனா கொஞ்சம் பதட்டமா, பயமா இருக்கு…” என்றவளைத் தோளில் சாய்த்து தட்டிக் கொடுத்தார் ஷோபனா.

ஷோபனாவை நியதி ஆன்ட்டி என அழைப்பதைக் கண்ட ஆத்ரேயன், “இங்கெல்லாம் புருஷனுக்கு என்ன உறவோ அதே போல் தான் வந்த மருமகளும் கூப்பிடுவாங்க, நீ அம்மான்னு விளிச்சா மதி…” எனவும் அவளும் ஆன்ட்டியில் இருந்து அம்மாவாகப் பிரமோஷன் கொடுத்திருந்தாள்.

நாளை காலை குருவாயூரில் கல்யாணம் முடிந்து அதற்கு மறுநாள் மூணாறில் ரிசப்ஷன் என முடிவு செய்திருந்தனர். நியதியின் சார்பாய் அம்பிகையும் இல்லத்தில் உள்ள சிலரும் நேராக குருவாயூர் வந்து விடுவதாக சொல்லி இருந்தனர். சாவித்திரிக்கு பயணிக்க முடியாதென்பதால் கல்யாணம் முடிந்து அவரைக் காண இருவரும் பொள்ளாச்சி செல்லலாம் என ஆதி முடிவு செய்திருந்தான்.

கல்யாணம் முடிவான பிறகு நியதியை அந்த பிளாட்டில் தங்க வைக்க விருப்பமின்றி தங்கள் வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டான் ஆத்ரேயன்.

“மோளே… பழைய விஷயம் யோசிச்சு பீல் பண்ண வேண்டாம், இனி உன் லைப்ல சந்தோஷத்தை மட்டுமே அந்த குருவாயூரப்பன் தரட்டும்… நடந்து முடிஞ்சதை யோசிச்சு வருத்தப்படாம என் மகனோட வாழப் போறதை நினைச்சு சந்தோஷப்படு, எல்லாம் சரியாகும்…” என்றவர் அவள் தலையில் தடவிக் கொடுத்து எழுந்து சென்றார்.

ஆனாலும் அவள் மனம் மட்டும் அமைதியாகவே இல்லை. கீழே குழந்தைகள், பெரியவர்கள் பேச்சு சத்தம் கேட்டது. கல்யாணத்திற்கு ஆத்ரேயன் மிக முக்கிய உறவுகளை மட்டும் அழைத்திருந்தான். நியதியின் முதல் கல்யாணம் பற்றி ஆத்ரேயனின் அம்மா, அண்ணன், அண்ணி தவிர இங்கே யாரிடமும் சொல்லவில்லை. அதற்கு அவசியம் இல்லையென்று சொல்ல வேண்டாமென்று கூறி விட்டான். அவனது குட்ட மாமாவிடம் கூட சொல்லவில்லை.

யாருடைய வாய்க்கும் பேசு பொருளாகவோ, பரிதாபப் பார்வைக்கோ நியதியை இலக்காக்க ஆதி விரும்பவில்லை.

ஜான்ஸியிடம் நியதி சொல்வதாக சொன்னதற்கும் மறுத்து விட்டவன், “எனக்கும், என் குடும்பத்துக்கும் உன்னைப் பற்றித் தெரியும்… அவங்க யாருக்கும் இந்தக் கல்யாணத்தில் மறுப்புமில்லை, பிறகு எதற்கு மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்…” என சொன்னவன் எல்லாரிடமும் அவளைக் காதலித்து மணமுடிப்பதை மட்டுமே சொல்லி இருந்தான்.

ஆத்ரேயன் வீட்டில் நியதியை விரும்புவதாக சொன்னதும், முன்னமே அவர்களும் காதல் கல்யாணம் புரிந்தவர்கள் என்பதால் அவனது அன்னைக்கோ, அண்ணன், அண்ணிக்கோ பெரிதாய் மறுப்பிருக்கவில்லை.

“அது தமிழ் குட்டியாச்சே… நினக்கு நல்ல நாயர் தரவாட்டுப் பெண்ணை லவ் செய்தூடே ஆதி…” என்று அண்ணி ஆதிரை மட்டும் தயங்கிக் கேட்க,

“அதிநெந்தா… நின்டே அம்மாயப்பன் தமிழன் அல்லே, நாங்க நல்லா வாழலியா… நியதி நல்ல குட்டியானு, அவளை எனிக்கு முன்பே இஷ்டமானு…” என்று ஷோபனா சந்தோஷப் படவே செய்தார். ஆத்ரேயனின் அண்ணன் அபிநந்தனுக்கும் காதல் கல்யாணத்தில் எதிர்ப்பு இல்லை. நியதியும் யோகா படித்தவள் என்பதால் தம்பியின் தொழிலுக்கும் அவள் துணையாக இருப்பாள் என்று யோசித்தவன், “ம்ம்… குழப்பமில்லா… அக்குட்டி நினக்கு பொருத்தமாய குட்டி தன்னே, குடும்பம் ஒக்கே எங்கனே…” என்றான்.

அவள் இல்லத்தில் அம்பிகையின் பொறுப்பில் வளர்ந்தவள், இப்போது அவளுக்கென்று அவர் மட்டுமே இருக்கிறார் என சொல்லும்போது கூட, “ச்சோ பாவம், அதுக்கென்ன… இங்கே வந்தா நாம அவளுக்கு எல்லா உறவுமா இருந்து நல்லாப் பார்த்துக்கலாம்…” என்று ஷோபனா சொல்லவே செய்தார்.

அவர்கள் சந்தோஷமாய் நியதியை ஏற்றுக்கொள்ளத் தயாராகும் போது தான் தயங்கிக் கொண்டே அவளுக்கு இது இரண்டாவது கல்யாணம் எனும் விஷயத்தை சொன்னான் ஆத்ரேயன். அதைக் கேட்டதும் மூவரும் அதிர்ந்து சிறிது நேரம் மௌனம் சாதிக்க ஷோபனா எதுவும் சொல்லாமல் பட்டென்று எழுந்து சென்று விட்டார்.

“ஆதி…! எந்தா பரயனது…? நியதிக்கு இது ரெண்டாம் கெட்டோ…?” அதிர்ச்சியுடன் வாய் பிளந்தாள் ஆதிரா.

“ம்ம்… அதே ஏடத்தி, மேரேஜ் முடிஞ்சு ஒரு மாசத்துலயே அவ ஹஸ்பன்ட் இறந்துட்டார்… இத்தனை நாள் எனக்கு சம்மதம் சொல்லாதவளை ரொம்ப சிரமப்பட்டு தான் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்கேன்…”

“ஓ… இதொக்கே நினக்கு எங்கனே அறயும்…? அவளை உனக்கு முன்னமே அறயுமோ…?” ஆதிரா வியப்புடன் தொடர்ந்து கேட்க அபிநந்தன் அவர்கள் பேசுவதைக் கவனித்தாலும் யோசனையுடன் இருந்தான்.

“ம்ம் எனிக்கு முன்னமே அவளை அறயாம்…” என்றவன் அவளைக் கண்டதும் தான் விரும்பியது முதல் அம்பிகை, சாவித்திரியைப் பார்த்துப் பேசியது அவர்கள் மூலமாய் நியதியை சம்மதிக்க வைத்தது வரை சுருக்கமாய் சொல்லி முடிக்க ஆதிரா வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அண்ணன் அபிநந்தன் மௌனமாய் இருப்பதைக் கண்ட ஆத்ரேயன் தயக்கத்துடன் அவனிடம் கேட்டான்.

“ஏட்டா… எந்தா ஒண்ணும் பரயாத்தது…? அச்சன் போய பின்னே உங்களைத்தான் நான் அச்சன் ஸ்தானத்துல பார்க்கறேன், உங்க அபிப்ராயம் எனக்கு ரொம்ப முக்கியம்… எதுவா இருந்தாலும் சொல்லுங்க ஏட்டா…”

“ஆதி…! லவ் மேரேஜ்க்கு எங்க யாருக்கும் எதிர்ப்பு இல்லை, ஏன், கல்யாணமாகி புருஷனோட ஒரு மாசமே வாழ்ந்த ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க நினைக்கிற உன் எண்ணம் கூட ரொம்ப நல்லது தான்…”

“ஐயோ…! நான் அவ மேல பரிதாபப்பட்டு இந்த முடிவுக்கு வரல ஏட்டா, அவளை நான் ரொம்ப நேசிக்கிறேன்… ஒரு முறை தவற விட்ட என் காதல் மீண்டும் கை நழுவிப் போயிடக் கூடாதுன்னு நினைக்கறேன்… எனக்கு நியதியை அத்தர இஷ்ட்டமானு ஏட்டா…” அவனது குரல் தவிப்பும், காதலும் கலந்து உணர்வுக் கலவையாய் ஒலிக்க அபிநந்தன் தம்பியைத் திகைப்புடன் பார்த்தான்.

“நினக்கு அக்குட்டியை அவ்ளோ இஷ்டமா…? அவளுக்கும் நின்னே இஷ்டமானோ…?” என்றான் யோசனையுடன்.

“ம்ம்… நியதி முதலில் தயங்கினா, ஆனா அவளோட மனசும் என்னை விரும்புறதை ஐ பீல் இட்… அதான் பெரியவங்க மூலமா பேசி அவளை சம்மதிக்க வச்சேன்…”

“ஓகே… உன் காதலும், எண்ணமும் எங்களைப் போல சின்னவங்களுக்குப் புரியுது, பட் அம்மாவைப் போல பழைய ஆளுங்களுக்கு இதெல்லாம் ஏத்துக்க கொஞ்சம் கஷ்டம்…”

அபிநந்தன் சொல்லும்போதே வெளியே வந்த ஷோபனா, “ஏன்…? எனக்கென்ன கஷ்டம்… நாங்க எல்லாம் புதுமையா சிந்திக்கத் தொடங்கி வருஷங்களாச்சு… என் மகன் லவ் பண்ணின பொண்ணுன்னு யோசிக்கறதை விட இவ்ளோ சின்ன வயசுல வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நிக்குற சின்னப் பொண்ணுக்கு என் மகன் புது வாழ்க்கையைக் கொடுக்கப் போறதை நினைச்சா எனக்குப் பெருமையாருக்கு… நியதி தான் என் ரெண்டாவது மருமக, எனக்கு இதுல பரிபூரண சம்மதம்…” என்றவரை இளையவர் மூவரும் வியப்புடன் பார்க்க புன்னகைத்தார் ஷோபனா.

“என்ன அப்படிப் பார்க்கறிங்க, கோபமா கோபிச்சிட்டு உள்ளே போனேன் நினைச்சிங்களா… இதை எடுக்கதான் போனேன்…” என்றவர் கையில் வெள்ளி குங்குமச்சிமிழ் இருந்தது.

“அ..அம்மே… நான் காணுந்தது எல்லாம் ஸ்வப்னம் அல்லல்லோ, சரிக்கும் அம்மைக்கு இதில் சம்மதமானோ…?” ஆத்ரேயன் நம்ப முடியாமல் கேட்க அவன் கன்னத்தில் செல்லமாய் இடித்தார் அவன் அன்னை.

Advertisement