Advertisement

“ஹா… என்ட பொன்னு ஷோபே, ஒரு காதில்லாதவனே ஏது பெண்ணும் திரிஞ்சு நோக்கில்லா, பின்ன நிங்கள் சூசைடு செய்யேண்டி வரும்… எனிக்கு ஆலோயிக்கானே வையா…” (ஒரு காதில்லாதவனை எந்தப் பொண்ணும் திரும்பிப் பார்க்க மாட்டா, அப்புறம் நீங்க தற்கொலை பண்ணிக்க வேண்டி வரும், என்னால யோசிச்சுப் பார்க்கவே முடியல)

“ஆஹான், ஞான் எந்தினு சூஸைடு செய்யுன்னு…?” (ஆஹாங், நான் எதுக்கு தற்கொலை பண்ணனும்)

“பின்னே… மகனு கல்யாணம் கழிஞ்சு ஒரு குஞ்சுக்கால் காணாத துக்கத்தில் நீங்கள் சூசைடு செய்யில்லே, அம்மே…” (மகனுக்கு கல்யாணமாகாம, ஒரு பேரக் குழந்தையைப் பார்க்காத சோகத்தில் நீங்க தற்கொலை பண்ணிப்பீங்களே)

“அம்பட கேமா… என்னே அங்கன நீ கொல்லிக்கல்லே… எனிக்கு என்டே சிஞ்சு மோளும், பொன்னு மோனும் மதி…” (அடப் பாவி, என்னை நீ அப்படி சாகடிக்க வேண்டாம், எனக்கு சிஞ்சுவும், பொன்னுவும் போதும்)

“ப்ச்… அப்போ என்னோடு ஷோபைக்கு ஸ்நேகமில்லே…”

“ஹா… உள்ள ஸ்நேகம் மதி, நினக்கு கல்யாணம் கழிப்பிச்சு கொடுத்து ஸ்நேகம் காணிக்கேண்ட ஆவஸ்யமில்லா…” (இருக்கிற பாசம் போதும், உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு தான் பாசத்தைக் காட்டணும்னு அவசியமில்லை)

அவர்கள் பேசுவதை மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் வாயிலும் ஆத்ரேயன் ஆப்பத்தைப் பிய்த்து வைத்துக் கொண்டிருக்க, அவர்களும் இவர்கள் சண்டையைப் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

“எந்தே…! ராவிலே தன்னே அம்மையும், மோனும் தொடங்கியோ…?” (என்ன, காலைலயே அம்மாவும், மகனும் தொடங்கியாச்சா…?) கேட்டபடி அபிநந்தன் சாப்பிட வர, புன்னகையுடன் அருகில் அமர்ந்தாள் ஆதிரா.

“அம்மே… ஆ…! நோக்கு…” நயனா வாயைத் திறந்து காட்டி சாப்பிடுவதாக சொல்ல நவீனும் திறந்து காட்டினான்.

“ஆஹா, ரெண்டு வாவக் குட்டிகளும் நல்ல குட்டிகளாயிட்டு பட்சணம் கழிச்சல்லோ, வெரி குட்…” பாராட்டினாள். (ரெண்டு குட்டீசும் நல்ல பசங்களா சாப்பிட்டிங்களே…)

“ம்ம்… இவரு ரெண்டு பேரும் கழிக்கான் வேண்டி ஞான் பாவம் என்ட அம்மையே சூஸைடு வரே செய்யிப்பிச்சு…” (ம்ம் இவங்க ரெண்டு பேரும் சாப்பிடறதுக்கு நான் என் அம்மாவை தற்கொலை செய்யற வரைக்கும் போக வச்சிட்டேன்…) என்று சிரித்த ஆத்ரேயனின் அடர்ந்த தலை முடியை செல்லமாய் கலைத்து விட்டார் ஷோபனா.

“டா, இது எந்து வேஷமா…? முடியும், தாடியும் எடுத்தூடே…” (இது என்ன வேஷம், தலை முடி, தாடி எடுக்கலாம்ல)

“நோ, நோ, இதானு அம்மே இப்பத்த பாஷன், ராக்கி பாய் ஸ்டைல்…” என்றவன் அன்னையின் கையைத் தலையில் வைத்து முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கிக் கொண்டான்.

“எந்து பாஷனோ…? முடி கண்ணிலு வீணு கோங்கண்ணு (மாறுகண்) ஆவாதிருந்தா மதி…”

“தாடியும், முடியும் உண்டெங்கிலும் அம்மட மோன் வளரே சுந்தரன் அல்லே…” (தாடியும், முடியும் அதிகமா இருந்தாலும் அம்மாவோட மகன் அழகன் தானே…) சிரித்தபடி சொன்னவன் வாஷ்பேஷினில் கைகழுவி அன்னையின் சேலைத் தலைப்பில் துடைக்க அவர் அதட்டினார்.

“டா, அதினல்லே அவிடே டவல் வச்சிருக்கினது… என்டே நல்ல ஸாரி ஒக்கே நனவாக்கி…” (டேய், அதுக்கு தானே அங்க டவல் இருக்கு, என்னோட நல்ல சேலை எல்லாம் நனைச்சு வச்சிட்டு) செல்லமாய் கோபித்தார் ஷோபனா.

“ஆஹாங், எடா சுந்தரா, ஒண்ணு நின்னே…” (நில்லு) அபிநந்தன் சொல்ல அவனருகே வந்தான் ஆத்ரேயன்.

“எந்தா ஏட்டா…?”

“நீ போய காரியம் எந்தாயி…? ஒண்ணும் பரஞ்சில்லா…”

“ஞான் போய காரியம் சக்ஸஸ் ஆவாதே இருக்குமோ ஏட்டா, எல்லாம் ஓகே…! நம்மள யோகா சென்டர் எக்ஸ்டன் செய்யான் உள்ள பர்மிஷனும் கிட்டி…”

“ம்ம்… மிடுக்கன் தன்னே…” (சாமர்த்தியசாலி)

“இப்போ சென்டரிலேக்கு ஆனோ போனது…”

“அல்ல ஏட்டா… குறச்சு பணி தீர்த்திட்டே போவுள்ளு…”

“ஓகே…” என்றவன் சாப்பிடத் தொடங்க ஜீன்ஸ், டிஷர்ட்டுக்குள் நுழைந்திருந்த சின்ன மகனையே பார்த்திருந்த அன்னையின் கண்களில் பெருமிதம் மின்னியது.

ஆத்ரேயன் வாரியர்…! படிப்பிலும், சமர்த்திலும் என்றும் முதலிடம்… எந்த ஒரு விஷயத்தையும் தீர்க்கமாய் யோசித்தே செய்யும் சுபாவக்காரன். கேரளத் தண்ணீரில் வெளுத்த உடலும், முகத்தில் கட்டை மீசையும், தாடியுமாய் நடிகர் முகுந்தன் உன்னிக்கு டப் கொடுக்கும் உருவம்… அவனது நல்ல உயரத்திற்கு ஏற்ற உடல்வாகும் யோகாவில் ரப்பராய் வளையும் உடலுமாய் இளம் பெண்களை கவரும் கவர்ச்சிக் கண்ணன். (கவர்ச்சி கன்னிக்கு பெண்பால்)

சிரிக்கும் நீள் விழிகளில் சதா ஒட்டிக் கொண்டிருக்கும் குறும்பு. எதையும், ஈஸியாய் எடுத்துக் கொள்ளும் சுபாவம் என்றாலும் முக்கியமான விஷயங்களில் அந்தக் குறும்பு காணாமல் போய் நிதானம் ஒட்டிக் கொள்ளும். அப்போது வேறு ஒரு ஆத்ரேயனைக் காணலாம்.

வாசலில் தடதடத்த புல்லட் சத்தம் ஆத்ரேயன் கிளம்பி விட்டதை சொல்ல மூத்த மகனும், மருமகளும் சாப்பிட்டு ஹாஸ்பிடல் கிளம்ப மதிய உணவுக்கு செய்ய வேண்டியதை வசந்தாவிடம் சொல்லிவிட்டு குழந்தைகளுடன் தனது அறைக்கு சென்றார் ஷோபனா.

“அத்தம்மே, எனிக்கு கார்த்தூன் வேணம்…” என்ற நவீனுக்கு டீவியை வைத்துக் கொடுத்தவர், “சிஞ்சு வாவைக்கு முடி கட்டி விடட்டே…” எனவும் குழந்தை ஆவலுடன் அவர் மடியில் வந்து அமர்ந்து கொண்டாள்.

அவளது குட்டித் தலையில் பட்டுப் போன்ற மென்மையுடன் அடர்த்தியாய் இருந்த முடியை சீவி வகிடெடுத்து இரண்டு பக்கமும் குதிரைவால் போட்டுவிட கண்ணாடியில் பார்த்த குழந்தையின் முகம் மலர்ந்தது.

“அத்தம்மே…! சூப்பதாயிட்டு உண்டு…” என்றவளின் கொழுகொழு கன்னத்தில் முத்தமிட்டு அணைத்துக் கொண்டார்.

குழந்தைகளுடன் அவர் ஐக்கியமாகிவிட அன்றைய பொழுது அழகாய் நகரத் தொடங்கியது.

மணி காலை ஒன்பதை எட்டியிருந்தது.

காலை ஏழு மணிக்கு துடங்கிய யோகா வகுப்பின் இரண்டாவது பாட்ச்சுக்கு அந்தப் பெரிய மண்டபம் போன்ற ஹாலில் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. முன்னிருந்த மேடையில் புத்தர் பெரிய சிலையாக தியானத்தில் அமர்ந்திருந்தார். ஒரு பாட்ச் ஒரு மணி நேரம். குறைந்தது முப்பது மாணவர்கள் இருந்தனர்.

எல்லாரும் கண் மூடி, கால் மடக்கி நிமிர்ந்து தரையில் அமர்ந்திருக்க, கால் முட்டின் மீது இருந்த இரண்டு கைகளில் பெருவிரலை ஆட்காட்டி விரலில் சேர்த்து முத்திரை போல் வைத்திருக்க சுவாசப்பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருந்தது.

“இதில் போர் ஸ்டெப்ஸ் உண்டு…” (புரிவதற்காய் தமிழில்)

“முதலில் சுவாசத்தை உள்ளே இழுக்க வேண்டும். இதற்கு பூரகம் என்று பெயர். அடுத்து இழுத்த சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைக்க வேண்டும். இது கும்பகம். உள்ளே நிறுத்திய சுவாசத்தை வெளியே விடுதல் ரேசகம். வெளியே விட்ட சுவாசத்தை அப்படியே வெளியே நிறுத்தி வைப்பது. இப்படி சுவாசத்தை முறைப்படுத்தி கட்டுக்குள் வைத்துக் கொண்டாலே நம் எடையையும் எளிதாக கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்…”

“நியதி…! ஸ்டார்ட்…!” நாற்பதுகளில் இருந்த யோகா மாஸ்டர் சுரேந்திரன் சொல்ல யோகா மாணவர்கள் முன் அமர்ந்திருந்த நியதி அதை செய்து காண்பித்தாள்.

“நீங்களும் அதே போல் கூட செய்யுங்கள்…” சுரேந்திரன் சொல்ல அவர்களும் செய்யத் தொடங்கினர்.

“ஓகே…! டுடே கிளாஸ் ஓவர்… இனி மற்றந்நாள் (நாளான்னிக்கு)… அதுவரே வீட்டில் பிராக்டிஸ் செய்யணம்…”

“தேங்க் யூ மாஸ்டர்…” ஸ்டூடண்ட்ஸ் சொல்லி எழுந்து கொள்ள நியதியும் எழுந்தாள். கறுப்பு நிற யோகா பான்ட்டும் டாப்பும் அணிந்து குதிரைவால் போல் முடியை மேலே தூக்கிக் கட்டியிருந்தாள்.

“நியதி…! நெக்ஸ்ட் 10.30 னு பிகினர்ஸ் கிளாஸ், டுடே யுவர் டே… நீ கிளாஸ் எடுத்தால் மதி…”

“ஓகே…! தேங்க் யூ மாஸ்டர்…”

சொன்னவர் நகர்ந்துவிட அவளது டவலை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டவள் ஸ்டாப் ரூமுக்கு சென்றாள். பாத்ரூம் சென்றுவிட்டு தண்ணி குடித்துவிட்டு வெளியே வந்தவள் சிறிது நேரம் புத்தரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இங்கே வந்தது முதல் அந்த புத்தர் சிலையை அடிக்கடி இப்படிதான் முறைத்துக் கொண்டிருக்கிறாள்.

உனக்கு புத்தன் பிடிக்குமா…? என்று கேட்டால் யசோதை பிடிக்கும் என்று சொல்லுவாள். அவளுக்கு உலக வாழ்வில் எல்லாவற்றையும் துறந்து போதி மரத்தடியில் ஞானம் கொண்ட புத்தனைக் காட்டிலும், எல்லாரையும் நேரிட்டு கஷ்டங்களைக் கடந்து வாழ்ந்த யசோதையைப் பிடிக்கும்… பாவம், இளம் வயதில் கைக்குழந்தையுடன் இந்த ஊரின் பேச்சும், தூற்றலும் கேட்டு ராஜ்ஜியத்தையும் நிர்வகித்து, தனது ஆசா பாசங்களையும் துறந்து வாழ்வை நேரிட்ட அவள்தான் எதார்த்த ஞானி என்ற எண்ணம் எப்போதும் அவளுள் உண்டு. இன்றும் அப்படியே புத்தரை வெறித்து நின்றவளைப் பின்னிருந்து கேட்ட குரல் திரும்ப வைத்தது.

“பாவம் புத்தன்…!” சிரிப்புடன் நின்றிருந்தான் ஆத்ரேயன்.

என் கண்ணீரும்

வறண்டது… ஆனால்

உன் நினைவெப்படி

வளர்ந்தது… நான்

உன்னை தேடித் தேடி

அலைந்திடவா தொலைந்தாய்…

அன்னையில்லாத பிள்ளை

அழுதிடும் என்பதை

ஏன் மறந்தாய்…

Advertisement