Advertisement

 அத்தியாயம் – 2

 

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ…

போவாயோ கானல் நீர் போலே தோன்றி

அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்

எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்…

இரண்டு தோசை ஒரு ஆப்பிளுடன் இரவு உணவை சீக்கிரமே முடித்து படுக்கைக்கு வந்த நியதி உறக்கம் வரும் வரை பாடலைக் கேட்போமென்று அலைபேசியில் பாடலை ஒலிக்க விட்டு படுத்திருந்தாள். நீல நிற ஜீரோ வாட்ஸ் வெளிச்சம் இதமாய் அறையை நிறைத்திருக்க கட்டிலில் அசையாமல் கிடந்தவளின் விழிகளில் என்றும் போல் இன்றும் அப்பாடலைக் கேட்டதும் கண்ணீர் துளிர்த்தது.

“அபி…! அபி…! ஏன் இப்படிப் பண்ணின…? எதுக்காக என் வாழ்க்கைல வந்த, கானல் நீரா வந்து காணாமப் போகவா…? இந்த வலியை என்னால தாங்கிக்கவே முடியலியே…? ஏண்டா, ஏன் இப்படிப் பண்ண…? நான் என்ன தப்பு பண்ணேன்…? எதுக்காக என்னை தவிக்க விட்டுப் போயிட்ட… ஒவ்வொரு நாளும் சாப்பிடப் பிடிக்காம, தூக்கம் வராம, எதுக்காக வாழறோம்னு தெரியாம… என்ன வாழ்க்கை இது…? எதுக்கு எனக்கு இப்படி ஒரு துரோகத்தைப் பண்ணின…?”

கண்ணுக்குப் பழகிய சிறு வெளிச்சத்தில் விட்டத்தைப் பார்த்து மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் நியதி.

“ஏய் வெள்ளக்கோழி…! நீ பார்க்க குழந்தையாட்டம் இருக்கேன்னு சொன்னா, அதுக்காக குழந்தை போலவே பிஹேவ் பண்ணுவியா…? கண்ணைத் துடைச்சிட்டு எழுந்து போய் முகம் கழுவிட்டு வா, சும்மா புலம்பிட்டு…! உனக்கு இதெல்லாம் செட் ஆகலை…” அபிமன்யு சொல்லுவது போல் ஒரு பிரம்மை தோன்ற சட்டென்று எழுந்தாள். முகத்தைக் கழுவி வந்தவள் லைட்டைப் போட்டாள்.

சில நேரம் மனதுக்கு இதத்தைத் தரும் தனிமையே சில நேரம் துன்பம் தரும் கொடுமையாகவும் மாறி விடுகிறது. யோகா புத்தகம் ஒன்றைக் கையிலெடுத்து திறந்தாள்.

‘உடல், மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒருமுகப் படுத்துவதே யோகக் கலை. உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தங்களைக் குறைத்து அமைதி தருவது. இலக்கின்றி அலையும் மானுட வாழ்வில் இலக்கை நிர்ணயித்து சேர வேண்டிய இலக்கில் கொண்டு போய்ச் சேர்க்க யோகா ஒரு சிறந்த கருவியாகும்.’

“எனக்கென்று என்ன இலக்கு இருக்கிறது…? ஒவ்வொரு நாளையும் வாழ்ந்து தீர்க்கிறேன் என்பதைத் தவிர…” அவள் இதழில் கசப்பாய் ஒரு புன்னகை விரிந்தது.

அவளை அதிகம் யோசிக்க விடாமல் அலைபேசி சிணுங்கி எடுக்கச் சொல்லிக் கொஞ்சியது. அதில் ஒளிர்ந்த பெயரைக் கண்டதும் உற்சாகமாய் எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.

“அம்மா…!”

“நியதி…! எப்படிடா இருக்க…? சாப்டியா…?”

அமைதியாய் கேட்ட குரலில் அன்பு சொட்டியது.

“ம்ம்… ஆச்சு மா, நீங்க சாப்டிங்களா…? மாத்திரை போட்டிங்களா…?” அக்கறையுள்ள மகளாய் விசாரித்தாள்.

“ம்ம்… என்னடா, குரல் ஒரு மாதிரி இருக்கு…? அழுதியா…?” தன்னைக் கண்டு கொண்டாரே என்று அவள் அமைதியாய் இருக்க அன்போடு தொடர்ந்தார் அம்பிகை.

“அங்கே வொர்க் எல்லாம் எப்படி இருக்கு… புது இடம், புது மனுஷங்க எல்லாம் பழகிடுச்சா…? நல்லாப் பழகறாங்களா…?

“அம்மா…! நான் இங்கே வந்து ஒரு வாரம் தானே ஆச்சு… இப்போதைக்கு யோகா சென்டருக்குப் போறேன், அங்கே உள்ள நடைமுறைகளைத் தெரிஞ்சுக்கறேன்… இனிதான் எனக்குன்னு தனியா கிளாஸ் எடுக்க விடுவாங்க போலருக்கு, மத்தபடி நிஷான்னு ஒரு மலையாளி நர்ஸ் அறிமுகம் ஆயிருக்கா… எல்லாத்தையும் விட இங்கே உள்ள கிளைமேட்டும் சூழ்நிலையும் எனக்குப் பிடிச்சிருக்கு மா…”

“ம்ம்… வெரி குட்…! அப்படியே நாலு மனுஷங்களோட பேசு, பழகு… மேலே பரந்திருக்கிற ஆகாயமும், கீழே பூமியுமா இந்த உலகம் ரொம்பப் பெருசு நியதி மா…! நீயே உன்னோட சிறகுகளை கிழிச்சுகிட்டு பறக்காம இருந்துடாத, உனக்கான தேடல்கள் என்னவோ அதை நிச்சயம் கடவுள் காட்டுவார்… நமக்குள் தேடல்கள் இல்லாமப் போயிட்டா நாமளே காணாமப் போயிருவோம்… வாழ்க்கையும் சுவாரஸ்யத்தைக் கொடுக்காது, இந்த பூமிக்கு வர்ற எல்லா உயிருக்குமே ஒரு காரணம் இருக்கும்… அதைத் தேடி வாழ்க்கையை அழகாக்க முயற்சி பண்ணுறது நம்ம கைல தான் இருக்கு…”

எத்தனையோ முறை சொன்ன விஷயங்களை மீண்டும் அவளிடம் சொன்னார் அம்பிகை.

“ம்ம்… புரியுது மா…!”

“காலம் தான் எல்லாத்துக்கும் மருந்துனு சொல்லுவாங்க, உன்னோட காயத்தையும் அது நிச்சயம் ஆத்தும்…”

“…………..”

“சரி… நான் வச்சிடறேன், படுத்துத் தூங்கு… நாளைய பொழுது உனக்கு உற்சாகமா விடியட்டும், குட் நைட்…!”

“குட் நைட் மா…!” சொன்னவள் அலைபேசியை வைத்தாள். மனது சற்றுத் தெளிந்திருக்க, தன்னை வளர்த்த அன்னை சொன்னதை அசை போட்டபடி தான் வளர்ந்த ஆஸ்ரமத்தைப் பற்றி யோசித்தபடி படுத்திருந்தாள்.

நியதி ஆஸ்ரமத்தில் வளர்ந்தவள். அம்பிகை அவளுக்கு மட்டுமல்ல, பல பெண் குழந்தைகளுக்கும் அன்னையானவர். இருந்தாலும் நியதி அவருக்கு சற்று ஸ்பெஷல். அவருக்கு மிகவும் பிடித்த தோழியும், தங்கையைப் போன்றவளுமான சாரதாவின் மகள் தான் நியதி. சிறு வயதில் காதல் மயக்கத்தில் ஒருவனை நம்பி, வீட்டை விட்டு வந்தவளின் வயிற்றில் கருவை விதைத்துவிட்டு அந்தப் பாவி காணாமல் போய்விட, ஆதரவின்றி தன்னையும் வயிற்றில் வளர்ந்த உயிரையும் மாய்த்துக் கொள்ளப் போனவளைத் தடுத்து ஆதரவுக் கரம் நீட்டி ஆசிரமத்துக்கு அழைத்து வந்தவர் அம்பிகை. துவண்டு கிடந்தவளுக்கு வார்த்தைகள் மூலம் உரமிட்டு மனதைத் திடப்படுத்தி வாழ்க்கையை நேரிடும் பக்குவத்தைக் கொடுத்தவர்.

அவர் கொடுத்த தைரியத்தில் சற்றுத் தெளிந்த சாரதா அந்த ஆசிரமத்தில் தன்னால் முடிந்த பணிகளை ஓயாமல் செய்து அழகான மகளையும் பெற்று அவளுக்கு நியதி எனப் பெயரும் வைத்தாள்.

“அதென்ன சாரதா, பொண்ணுக்கு நியதின்னு பேரு வச்சிருக்க…?” வியப்புடன் கேட்ட அம்பிகையிடம் அவள் சொன்ன விளக்கத்தைக் கேட்டு அசந்து போனவர் இப்போதும் அதை நியதியிடம் சொல்லுவதுண்டு.

“நியதின்னா விதி, கர்ம வினைன்னும் அர்த்தம் இருக்கு மா… என்னோட விதி தான் என் கைல இவளைக் கொடுத்திருக்கு… ஒவ்வொருத்தர் செய்யுற கர்மத்தோட பலன் தான் அவங்க கைக்கு வரும்… நான் பெத்தவங்களை யோசிக்காம, சுயநலமா என் காதலை மட்டும் யோசிச்சதுக்கான கர்ம பலன் தான் என் வாழ்க்கை எனக்கு எழுதியிருக்கிற விதி… என் மகளோட விதியாச்சும் நல்லாருக்கணும்…” என்றாள் கண்ணில் நீர் மல்க.

மகளே இனி தனது வாழ்க்கை என்று தன்னைத் தேற்றிக் கொண்டவளை விதி மீண்டும் துரத்த நியதிக்கு ஒரு வயது முடிந்திருக்கையில் விஷக் காய்ச்சலில் படுத்தவள் பிறகு எழுந்திருக்கவில்லை. அன்று முதல் அம்பிகையே இவளுக்கு அன்னையாகிப் போயிருந்தார்.

ஆஸ்ரமத்துப் பள்ளியில் படிக்கையில் யோகாவில் ஆர்வம் காட்டியவளை டிகிரி முடித்ததும் அதை முறைப்படி படிக்க வைத்து சர்டிபிகேட் வாங்க வைத்திருந்தார். அம்பிகையின் அன்பும், வழிகாட்டலும் தான் நியதியின் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொண்டு வந்தது. பெயருக்கேற்ற அம்பிகை தான் அவர், யோசித்துக் கிடந்தவள் உறங்கிப் போயிருந்தாள்.

மலரே..! என்னுயிரில் விடரும் பனிமலரே…

மலரே நின்னே காணாதிருந்தால்

மிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே…

பிடித்த பாடலை வாய்க்குள் முணுமுணுத்தபடி கீழே வந்த ஆத்ரேயன் அங்கிருந்த நயனாவை அள்ளி மேலே தூக்கி சுற்ற ஷோபனா அலறினார்.

“டா… சிஞ்சு வாவைக்கு குடலு மறையும்…” (உரம் விழுதல்)

“செரியச்சா, நானு…” நவீனும் போட்டிக்கு வர நயனாவை இறக்கி நவீனைத் தூக்கி சுற்றினான் ஆத்ரேயன்.

“டா, பரஞ்சா கேள்க்கில்லே…” (சொன்னா கேக்க மாட்டியா)

“எந்தா ஷோபி டார்லிங், இதொக்கே ஒரு ரசமல்லே…”

“ரசமல்ல, அவியலா…” கடுப்புடன் அன்னை சொல்ல அவர் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினான்.

சிவந்த அவர் முகம் மேலும் சிவந்தது. “ஆஹா, என்டே அம்மா எந்தொரு சுந்தரியா… வெறுதே அல்ல, அச்சன் வீணு போயது…” அவன் சொல்ல நாணத்தில் அன்னையின் முகம் மேலும் சிவக்க, அவன் சிரித்தான்.

“ஆஹா, நாண் வந்து… நாண் வந்து… என்டே ஷோப குட்டிக்கு நாண் வந்து…”

“போடா செருக்கா, இவன்டே ஒரு கார்யம்…” சிணுங்கியவர் உணவு மேஜையில் அமர்ந்தவனுக்கு தட்டை வைத்தார்.

“வசந்தே, வெள்ளப்பம் ஒயிச்சில்லே…” (ஆப்பம் ஊத்தினியா)

“இதோ கொண்டு வராம் அம்மே…” என்ற வசந்தா சூடாய் ஆப்பம் சுட்டுக் கொண்டு வருவதற்குள் தட்டில் தாளமிடத் தொடங்கி இருந்தான் ஆத்ரேயன். அவனை முறைத்த ஷோபனா, “ஒரு மினிட்டு நிண்ட கையும், காலும் வெறுதே இரிக்கில்லே… தின்னுந்த பிளேட்டில் தாளமிடல்லே…”

“ஓகே…! வசந்த சேச்சி, தின்னாத்த பிளேட் உண்டெங்கில் எடுத்து தருமோ…” என்று குரல் கொடுக்க அவன் காதைப் பிடித்துத் திருகினார் ஷோபனா.

Advertisement