Advertisement

“ஆதியும் எனக்கு மகன் தான்… அபி உன்மேல வச்சிருந்த நேசத்துக்கு இந்த ஆத்ரேயனோட நேசம் கொஞ்சமும் குறைஞ்சதில்லன்னு உனக்கு ஏன் புரியலை…?”

“நான் யாரோட நேசத்தையும் அளவிட்டுப் பார்க்க விரும்பலை அத்தை… அபியோட நேசத்தை என்னால மறக்க முடியலைன்னு தான் சொல்லறேன்…”

“அபி உன்னை எப்பவும் சந்தோஷமா வச்சுக்கணும்னு ஆசைப்பட்டான்… ஆனா நீ இப்படி இருக்கறது அவனோட ஆன்மாவுக்கு எவ்வளவு வேதனையைக் கொடுக்கும்…?” இந்தக் கேள்விக்கு அவளிடம் கண்ணீரே பதிலாய் இருந்தது.

“சொல்லு நியதி மா…! உன்னை இப்படிப் பார்க்க அவன் ஆன்மா விரும்புமா…?” என்றார் அவளிடம்.

“என் விதி இதைத்தானே விரும்புது அத்தை…” கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மெல்ல சொன்னாள் நியதி.

“நியதி மா…! என் அபி உன் மேல எவ்ளோ பிரியம் வச்சிருந்தான்னு உன்னை விட எனக்குத் தெரியும்… நீ அவனைக் கல்யாணம் பண்ண சம்மதிக்காத போதே பல கற்பனை பண்ணி வச்சிருந்தான்… உனக்கு அது வாங்கிக் கொடுக்கணும்… உனக்கு எல்லா உறவுமா இருந்து பார்த்துக்கணும், சந்தோஷமா வச்சுக்கணும்… இந்தக் கருவாயனயா நாம வேண்டாம்னு சொன்னோம்னு அவளை மாத்தி யோசிக்க வைக்கணும், அந்த அளவுக்கு என் நேசத்தை அவ மேல கொட்டணும்னு சொல்லிட்டு இருப்பான்… நானும் சின்ன வயசுலயே புருஷனை இழந்தவ தான்… கையில அஞ்சு வயசுக் குழந்தையோட நின்னப்ப இந்த உலகத்தையே வெறுத்து மலைச்சு நின்னவளுக்கு என் மகன் தான் மீதி வாழ்க்கை எப்படி இருக்கணும்னு முடிவு பண்ண வச்சான், என்னோட மிச்ச வாழ்க்கைக்கு ஆதாரமா இருந்தான்… இந்த உலகம் ரொம்பப் பொல்லாதது, சின்ன வயசுல ஆதரவில்லாம நிக்கற பொண்ணுங்களை பந்தாடிப் பார்க்க நினைக்கும், அதோட இஷ்டத்துக்கு வளைஞ்சு கொடுக்கலேன்னா ஒடிச்சு கீழ போடப் பார்க்கும்… நீ ரொம்ப சின்ன வயசு, இன்னும் வாழ்க்கைல பார்க்கவும், அனுபவிக்கவும் ஏராளம் இருக்கு… எதுவும் வேண்டாம்னு விலகி நின்னா இந்த சமூகம் உனக்கு எப்பவும் பாதுகாப்பைக் கொடுக்காது… எல்லாத்தையும் விட உன் வாழ்கையை சந்தோஷமா அமைச்சுத்தர வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களுக்கும் இருக்கு… உன் வாழ்க்கையை இப்படி பட்டுப் போக வச்சிட்டமேன்னு வேதனைப்படுற அபியோட ஆன்மா சாந்தியடையவாச்சும் நீ இதுக்கு ஒத்துக்கணும்… இல்லன்னா, அவன் இந்த அம்மாவை மன்னிக்க மாட்டான்…” அவர் சொல்லிக் கொண்டிருக்க அவள் கண்ணீரில் கரைந்தாள்.

“நியதி மா…! ஆத்ரேயன் ரொம்ப நல்லவன்… உன் மேல அவனுக்குள்ள அன்பு ஆழமானது, அது உன் மேல உள்ள பரிதாபத்துல வந்ததில்லை… அதை நீ புரிஞ்சுக்கணும்…”

“எ..என்னால அபியை மறக்க முடியல அத்தை…”

“அவனோட இழப்பு தாங்கிக்க முடியாத ஒண்ணு தான், இல்லேன்னு சொல்லல… எனக்கும் அம்பிக்கும் வயசாகுது, நீ சந்தோஷமா இருக்கேங்கற நிம்மதியோடதான் எங்க இறுதிக்காலம் இருக்கணும்… அதான், ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல உன்னை வர சொன்னேன்…” அவர் சொல்ல வேதனையுடன் பார்த்தாள் நியதி.

“என் அபி சாகக் கிடக்குற கடைசி நேரத்துலயும் உன்னைப் பத்தி தான் யோசிச்சான்… நீ அவனுக்கு ஆக்சிடண்ட் ஆனதைப் பார்த்து நினைவில்லாம மயங்கிக் கிடந்தப்ப என்கிட்ட ஒரு சத்தியம் வாங்கினான்…” என்றவர் நிறுத்த அவள் அவரையே வலியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எ..என்ன சத்தியம் அத்தை…?”

“உன் வாழ்க்கை இப்படியே பட்டுப் போயிடக் கூடாது… உன்னை தகுந்த ஒருத்தனுக்கு மறுமணம் செய்து கொடுத்து சந்தோஷமா வாழ வைக்கனும்னு சொன்னான்… நானும் அவன் கடைசி ஆசையை நிறைவேத்துவேன்னு சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டேன்…” என்றவர் கண் கலங்கினார். அதிர்ச்சியுடன் அவரை நோக்கிய நியதி சட்டென்று தேம்பி அழத் தொடங்க, அவள் கையை ஆறுதலாய் பற்றினார்.

“அபியும், ஆதியும் நான் வேறயாப் பார்க்கல… ஆதிகிட்ட நான் என் மகனோட நேசத்தை உணர்றேன், உருவம் வேறயா இருந்தாலும் ரெண்டு பேர் நேசமும் உண்மை… என் மகனுக்கு கொடுத்த சத்தியத்தை நான் நிறைவேற்றணும்னு நினைக்கிறேன்… உனக்கு, அவன் ஆசைப்பட்ட சந்தோஷமான வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கணும்… இல்லேன்னா இறுதி காலத்தை நெருங்கிட்டு இருக்கற என் ஆன்மாவும் சாந்தியடையாது… தயவு செய்து இந்த புது வாழ்க்கைக்கு நீ உன்னைத் தயார் செய்துக்க நியதி மா…” அவரது குரலில் வேண்டுகோளோடு ஆணையும் கலந்திருந்தது. நியதி திகைப்பும் அதிர்ச்சியுமாய் அவரைப் பார்த்திருக்க, அவர் தொடர்ந்தார்.

“நான் யாரோ ஒரு புதியவனுக்கு உன்னைக் கல்யாணம் பண்ண நினைக்கலை… ஆத்ரேயனை இப்ப உனக்கும் தெரியும், அவனோட விருப்பமும், சுபாவமும் தெரியும்… அவனை விட நல்ல ஒருத்தனை என்னால தேட முடியாது… இந்த அத்தையோட சத்தியத்தையும், உன் அபியோட ஆசையையும் நிறைவேற்றிக் கொடுக்க நீ தயவுசெய்து இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கணும் நியதி மா…” அதிகம் பேசியதில் அவருக்கு மூச்சிரைக்க, பெரிதாய் மூச்சுகளை எடுத்துக் கொண்டார்.

நியதி பதில் சொல்லாமல் சிலையென நின்றாள். அவள் மனது முன்பும், பின்பும் எதையும் யோசிக்க மறுத்து ஸ்தம்பித்து அப்படியே நின்றது. அவளால் மறுக்கவும் முடியாத, ஏற்கவும் முடியாத ஒரு நிலையில் நின்றாள்.

“நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு நியதி மா… நான் சொன்னது எல்லாத்தையும் யோசி, இங்கிருந்து கிளம்பும்போது எனக்கு ஒரு நல்ல பதிலை சொல்லுவேன்னு எதிர்பார்க்கிறேன்… என்னைக் கொஞ்சம் படுக்க வை…” என்றவரை அவள் படுக்க வைக்க, எல்லாம் பேசியாகி விட்டது என்பது போல் சோர்வில் கண்ணை மூடிக் கொண்டார் சாவித்திரி. அவருக்கு அடுத்து இருந்த அறைக்குள் நுழைந்தவள் கட்டிலில் அமர்ந்தாள். அந்த அறைதான் அவள் இங்கே இருந்தபோது உபயோகித்த அறை. தன் நிலையை எண்ணி கண்ணீர் நிற்காமல் பொங்கியது.

“விதியின் சதியில் தனது வாழ்க்கை இரு படகில் பயணம் போலாகி விட்டதே… ஆதியை மணக்க சம்மதித்தால் மட்டும் என் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம்… என்னுடைய கேடு கெட்ட ராசி அவனையும் பாதித்து விட்டால்… அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியுமா…? ஆனால் அத்தை சத்தியம், அபியின் இறுதி ஆசை என்று ஏதேதோ சொல்கிறார்களே… அவர்களை மறுக்க முடியுமா…? என்னை ஏன் இப்படி ஒரு இக்கட்டில் நிறுத்தினாய் முருகா…” என மனம் புலம்பியது. வெகுநேரம் யோசித்தவளுக்கு ஆதியின் குடும்பத்தில் உள்ளவர்களை யோசித்ததும் மனம் இளகியது.

எத்தனை அன்பான, சந்தோஷமான குடும்பம்… சாதாரணப் பெண்களே அங்கே வாழ ஆசைப்படுகையில் ஆஸ்ரமத்தில் யாருமின்றி வளர்ந்த அவளுக்கு இது பெரிய பாக்கியம்… ஆனால் ஆதி வீட்டில் இதற்கு சம்மதிப்பார்களா என்ற சந்தேகம் வர, அப்படியானால் நீ இதற்கு சம்மதிக்கிறாயா…? என்று மனம் கேள்வி கேட்க திகைத்தாள்.

அத்தையை நினைக்கையில் மனம் நெகிழ்ந்தது. அபியின் மரணம் அவருக்கும் எத்தனை பெரிய இழப்பு… அப்போதும் அவளைக் குத்திப் பேசாமல் வாழ்க்கையை சரி செய்ய நினைக்க அவருக்கு எத்தனை நல்ல உள்ளம் வேண்டும்… அவர் வார்த்தையை எப்படி அவளால் மறுக்க முடியும்…?

உண்மையில் அவளுக்கு ஆத்ரேயனைப் பிடிக்காமலில்லை… அவனது அன்புக்கும், அக்கறைக்கும் அவளது கட்டுப்பாடை மீறி மனம் ஏங்கத்தான் செய்தது. ஆனாலும் கல்யாணம் என்று வரும்போது அவனை முழுமையாய் தன்னால் நேசிக்க முடியுமா… அபியை மறக்காமல் ஆதியை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்…? என ஏதேதோ யோசித்து குழம்பியவள் கண்ணீருடன் உறங்கிப் போயிருந்தாள்.

வாய்க்காலிலிருந்து திரும்பிய ஆத்ரேயன், சாவித்திரியிடம் செல்ல அவனை ஆறுதலுடன் பார்த்தவர், “அவகிட்ட எல்லாம் சொல்லி இருக்கேன்ப்பா… யோசிக்கட்டும், நிச்சயம் ஒரு நல்ல முடிவு சொல்லுவான்னு நம்பறேன்…” அவர் சொன்னது நம்பிக்கையைக் கூட்ட நியதியைத் தேடி அடுத்த அறைக்கு வந்தவன் அவள் கண்ணீர் காய்ந்திருக்க, அப்படியே உறங்குவதைக் கண்டு மனம் நெகிழ்ந்தது.

“முத்தே… எந்தினு நீ இத்தர பீல் செய்யனது… எனிக்கறயாம், நின்டே மனசு என்னை இஷ்டப்படுது, பட்சே நீ அதை  சம்மதிக்கில்லா… எந்த இழப்பும் தவிர்க்க முடியாதது, அதுக்காக உன்னையும் நீ இழந்துடக் கூடாது… உனக்கான வாழ்க்கையை நீ ஜீவிக்கணம், எனிக்கு நீ வேணம் முத்தே…” கண்கள் கலங்க, அவள் நெற்றி வியர்த்திருப்பதைக் கண்டு மின்விசிறியின் சுவிட்சைத் தட்டிவிட்டு வெளியே சென்றான்.

மதிய உணவு முடிந்து மாலை வரை நியதியைத் தனிமையில் யோசிக்க விட்ட சாவித்திரி மாலை சிற்றுண்டி முடிந்ததும் இருவரையும் அழைத்தார்.

“நளினி…! அதை எடும்மா…” “சரிங்க அண்ணி…” என்ற நளினி கையில் ஒரு பெட்டியோடு திரும்பி வந்தார். “அதை அவகிட்ட கொடு…” எனவும் நளினி நியதியிடம் நீட்ட, அவள் குழப்பத்துடன் அவர்களைப் பார்த்தாள்.

“இதுல உனக்கு அபி வாங்கிக் கொடுத்த நகையோட, என்னோட நகையும் இருக்கு, உன்னை நல்லபடியா ஆதிகிட்ட ஒப்படைச்சுட்டா நிம்மதியா கண்ணை மூடுவேன்… உன்னைக் கல்யாணக் கோலத்துல பார்க்கிற பாக்கியத்தை எனக்குக் கொடுப்பியா, நியதி மா…” தளர்ந்த விரல்களால் அவள் கையைப் பற்றி கேட்டவர் ஒரு முடிவுக்கு வந்து விட்டது புரிய பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.

“சொல்லு நியதி மா, நான் சொன்னதை நீ யோசிச்சியா…?”

“அ..அத்தை… ப்ளீஸ், ராசியில்லாத எனக்கு இதெல்லாம் வேண்டாமே…” என்றாள் இறுதி முயற்சியாக.

“என்ன பேசற…? நீ ராசியில்லாதவ இல்லை, உன்னோட வாழ என் மகனுக்கு தான் ராசியில்ல, இந்த மகனுக்காச்சும் அதுக்கான பாக்கியத்தைக் கொடு…” என்றவர் அவள் பதிலை எதிர்பார்க்காமல் ஆத்ரேயனின் கையைப் பற்றினார்.

“நியதி மா… இந்த அத்தையோட வார்த்தைக்கு நீ கட்டுப்படுவ தானே…” எனக் கேட்கவும், அவள் பதில் சொல்லாமல் கலங்கிய கண்ணுடன் தலையை சம்மதமாய் ஆட்ட, சாவித்திரியின் முகம் மலர்ந்தது.

ஆத்ரேயனின் கையைப் பற்றி அதில் நியதியின் கையை வைத்தவர், “இனி இவ உன் பொறுப்பு, பத்திரமா பார்த்துக்க ஆதி…” என்றார் நெகிழ்வுடன்.

“சத்தியமா என் ஜீவனைப் போல நோக்காம் அம்மே…” என்ற ஆத்ரேயன் நியதியை நோக்க அவள் குனிந்திருந்தாள்.

“அத்த…! உங்க ஆசையையோ, அபிக்கு நீங்க கொடுத்த வாக்கையோ என்னால மறுக்க முடியாது, ஆனா எனக்கு கொஞ்சம் டைம் வேணும்…” என்றாள் வேண்டுதலுடன்.

“ம்ம், வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்களைத் தவிர்க்கக் கூடாது நியதி மா, வாழாமலே வாழ்க்கையை முடிக்கவும் நினைக்கக் கூடாது… வர்ற தையில உங்க கல்யாணத்தை வச்சாகணும், அதுவரை நிதானமா உன் மனசை புது வாழ்க்கைக்குத் தயார் பண்ணிக்க…” என்றார் முடிவுடன்.

மணமில்லா மலர்களுக்கும்

மலர்ந்து வீசும் மனமுண்டு…

நேசமென்னும் நீரூற்றி

காதலோடு கரம் நீட்டுகையில்

பற்றி ஏற்றுக் கொள்ளும்

மனமிருந்தால் மறுமணமும்

மணம் சேர்க்கும்… வாடிய

மலரும்தான் மணம் வீசும்…

Advertisement