Advertisement

அத்தியாயம் – 19

மூணாரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது ஆத்ரேயனின் இன்னோவா. அவர்கள் மறையூரில் பயணித்துக் கொண்டிருக்க காற்றில் நிறைந்திருந்த சந்தன மணமும், தேயிலை, ஏலக்காய் மணமும் இதமாய் நாசியை உரசின.

வரிசையாய் நின்ற சந்தன மரங்களை இரும்பு வேலி போட்டுக் கட்டியிருந்தாலும் இயல்பாய் வந்த மணத்தை யாராலும் கட்டி வைக்க முடியவில்லை. வழியில் ஒரு டீக்கடையைக் கண்ட ஆத்ரேயன் வண்டியை நிறுத்தினான்.

“இவிட நாயர் கடையில் ஒரு சாய குடிச்சிட்டு போகாம்… சூடான நேந்திரம் பழ பஜ்ஜி உண்டாகும், நீ கழிச்சிட்டு உண்டோ…?” எனக் கேட்க மறுப்பாய் தலையாட்டினாள்.

“நந்தாயிரிக்கும் கழிச்சு நோக்கு…” சொன்னபடி ஆத்ரேயன் இறங்க, அது அவனது வாடிக்கையான இடம் எனப் புரிந்தது.

நாயரிடம் சிரிப்புடன் ஏதோ கேட்டுக் கொண்டே இரண்டு கண்ணாடி கிளாஸில் சுத்தமான தேயிலை டீயும், பேப்பரில் சுற்றிய நான்கு பழ பஜ்ஜியுடனும் வந்தான்.

நியதியிடம் நீட்டியவன், “எடுத்தோ…” என காலையில் எதும் சாப்பிடாமல் கிளம்பியதில் அவளுக்கும் பசிக்கத் தொடங்கியிருக்க, மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். அந்த காலை நேரக் குளிருக்கும், பசிக்கும் உண்மையிலேயே டீயும், பழ பஜ்ஜியும் மிகவும் சுவையாய் இருந்தன.

அதுவரை பின் சீட்டில் எதுவும் பேசாமலே அமர்ந்திருந்தவள், “தேங்க்ஸ்…” எனவும் புன்னகைத்தான் ஆத்ரேயன். அவனும் அவளிடம் அந்தச் சூழலில் எதுவும் பேசி சங்கடப்படுத்த விரும்பாமல் அமைதியாகவே வண்டி ஓட்டினான். சாப்பிட்டு வண்டியை எடுத்தவன் வேறு எங்கும் நிறுத்தவில்லை. உடுமலை வழியாய் பொள்ளாச்சியை அடைந்து சாவித்திரியின் வீடு நோக்கி அவன் வண்டியை செலுத்த, “இதுக்கு முன்னாடி என் அத்தையைப் பார்க்க இங்க வந்திருக்கிங்களா…?” என்றாள் வியப்புடன்.

“ம்ம்…” அவன் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி நிறுத்த, அவளுக்கு மனதில் நிறைய கேள்விகள் இருந்தாலும் எதுவும் கேட்கப் பிடிக்காமல் அமைதியானாள்.

பொள்ளாச்சி சாலையின் இரு மருங்கும் அடர்த்தியாய் வளர்ந்திருந்த புளிய மரங்கள் வெயிலை கீழே அனுப்பாமல் வெளிச்சத்தை சிதறடித்து சாலையெங்கும் பொற்காசுகளை சிதற விட்டது போலிருந்தது. அழகான அந்த காட்சிகள் மனதில் பதியாமல் வெறுமனே வெறித்திருந்தாள் நியதி. அங்கலக்குறிச்சியில் நுழைந்த வண்டி சில தெருக்களில் பயணித்து தென்னை மரங்கள் சூழ நின்ற ஒரு பழங்கால பெரிய வீட்டின் முன் நின்றது. முன்னில் வாசலில் இருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் காரைக் கண்டதும் எழுந்து கொள்ள அவர் சாவித்திரியின் தம்பி சந்தானம் என நியதிக்கு அடையாளம் தெரிந்தது.

காரிலிருந்து இறங்கிய ஆத்ரேயனை “வாங்க தம்பி…” என முகம் மலர வரவேற்றவர், நியதி தயக்கத்துடன் இறங்கி வரவும், “வாடா கண்ணு…” என அன்புடன் அழைத்தார்.

பேச்சு சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்த அவரது மனைவி நளினி இருவரையும் கண்டதும் நனைந்த கையை சேலைத் தலைப்பில் துடைத்துக் கொண்டே முன்னில் வந்து புன்னகையுடன் வரவேற்றார்.

“வாங்க தம்பி… வா கண்ணு, எப்படி இருக்க…?” என பரிவுடன் அவள் கை பற்றி நலம் விசாரிக்கவும் செய்தார்.

“ம்ம்… இருக்கேன் மா, நீங்கல்லாம் எப்படி இருக்கீங்க…?”

“நல்லாருக்கோம் கண்ணு, உள்ளார வாங்க… டிபன் சாப்பிட்டு அண்ணியைப் பார்க்கலாம்…” என அழைத்துச் சென்றார்.

“எனக்குப் பசிக்கல மா, அத்தையைப் பார்த்திட்டு வரேன்…”

“எனக்கும் டிபன் வேண்டா ஆன்ட்டி…” என்றான் ஆத்ரேயன்.

“சரி, ரெண்டு பேரும் அண்ணி கூட பேசிட்டு இருங்க… நான் காப்பியாச்சும் எடுத்தாரேன், ஏங்க கூட்டிட்டுப் போங்க…” என கணவருக்கு ஆணை இட்டுவிட்டு அடுக்களைக்கு சென்றார்.

அந்த வீட்டில் சின்னச் சின்னதாய் பல அறைகள் இருக்க இறுதியாய் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார் சந்தானம். வீட்டைச் சுற்றிலும் நிறைந்திருந்த மரங்கள் வீட்டுக்கு இயற்கையாய் குளுமையைக் கொடுத்ததோடு சற்று இருட்டாக்கவும் செய்திருந்தன. ஜன்னல்கள் குறைவாக இருந்தாலும் வீடு காற்றோட்டமாய் இருந்தது. சாவித்திரி இருந்த அறைக்குள் நுழைந்த சந்தானம், “அக்கா… அவங்க வந்துட்டாங்க…” எனவும் வெறுமனே கண் மூடிக் கிடந்த சாவித்திரி கண் திறந்தார். கம்பீரமாய், புஷ்டிப்பாய் இருந்தவரின் இப்போதைய மெலிந்த தோற்றத்தைக் கண்டதும் நியதியின் கண்கள் கலங்கின.

“அத்தை…” கண்ணீருடன் அருகே சென்றவளின் கையை மெலிந்த விரல்களால் பற்றிக் கொண்டார்.

அவர் அருகே அமர்ந்தவள், “எப்படி இருக்கீங்க அத்தை… இப்ப உடம்புக்கு பரவால்லியா…?” எனக் கேட்க மெல்ல தலையசைத்தவர், “சாப்பிட எதுவும் கொடுத்தீர்களா…?” என்பது போல் சைகையில் தம்பியிடம் கேட்க, “நளினி காப்பி எடுக்கப் போயிருக்கா க்கா…” என்றார் சந்தானம்.

மெல்ல பார்வையை உயர்த்தி ஆத்ரேயனை நோக்கியவர் புன்னகையுடன் அவனது கையைப் பற்றி அருகே இருந்த நாற்காலியில் அமருமாறு காட்டினார்.

“அம்மே…! இப்ப எங்கன உண்டு…? ஆயுர்வேத மருந்து எடுக்கான் தொடங்கியதும் மாற்றம் உண்டோ…?”

“ம்ம்… பரவா..ல்லப்பா… கை, கால் அசைக்க முடியுது, பேச்சு கூட முன்னைக்குப் பரவால்ல…” என்றார் சிரமத்துடன்.

“ஓ… தொடர்ந்து மருந்து எடுத்தா சரியாகும் அம்மே…”

“ம்ம்… ரெண்டு பேரும் முதல்..ல ஏதாச்சும் சாப்பிடுங்க…” அவர் சொல்லும் போதே நளினி இரண்டு தட்டில் தோசை, சட்னி, கிளாசில் காப்பியுடன் வந்தார்.

“காலைல நேரமாக் கிளம்பி இருப்பிங்க, ரெண்டு தோசையாச்சும் சாப்பிடுங்க…” என்று தட்டை நீட்ட, மறுக்க முடியாமல் கை கழுவி வந்தவர்கள் சாப்பிட்டு சுத்தமான பசும்பாலில் போடப்பட்ட காப்பியைக் குடித்தனர்.

“நவீன் வந்திட்டு போயோ ஆன்ட்டி…” ஆத்ரேயன் கேட்க,

“ஆமாம் தம்பி… ரெண்டு வாரம் முன்னாடி தான் நாலு நாள் லீவுல சென்னைல இருந்து வந்திட்டுப் போனான்…”

“அவிடே ஜோலி, தாமஸம் (தங்குமிடம்) இஷ்டமாயில்லே…”

“ம்ம்… நீங்க பார்த்து ஏற்பாடு பண்ணின வேலையாச்சே, ரொம்ப வசதியா இருக்குன்னு தான் நவீன் சொன்னான்…” அவர்கள் பேசுவதை திகைப்புடன் பார்த்தாள் நியதி.

“சரி, நீங்க பேசிட்டு இருங்க… நான் மதிய சமையலுக்கு ரெடி பண்ணறேன்…” சொன்னவர், “என்னங்க, ரெண்டு தேங்கா, மட்டை உறிச்சு வச்சிட்டு அந்தக் கோழி ஒண்ணை சரி பண்ணிக் கொடுங்க… தம்பிக்கு நான் வைக்கிற நாட்டுக் கோழிக் குழம்பு ரொம்பப் பிடிக்கும்…” கணவனிடம் சொன்னபடி இருவரும் நகர்ந்தனர்.

நியதி நடப்பது ஒன்றும் புரியாமல் திகைப்புடன் எல்லாரையும் பார்ப்பதை கவனித்த சாவித்திரி அவள் கையில் புன்னகையுடன் தட்டிக் கொடுத்தார்.

“என்னடா, ஆச்சர்யமா இருக்கா…? ஆத்ரேயன் தம்பியை கடந்த ஆறு மாசமா இவங்க எல்லாருக்கும் தெரியும்… எப்ப என்னைப் பார்க்க முதல்ல இங்க வந்தாரோ அந்த நாள்ல இருந்து என் மகனைப் போலவே இந்த குடும்பத்துக்கு வேண்டிய எல்லா உதவியும் பண்ணிட்டு இருக்கான், ஆதி எனக்குப் பிறக்காம போன மகன்…” என்றார் நெகிழ்வுடன். சிரமத்துடன் பேசிவிட்டு அவர் மூச்சு வாங்க ஆத்ரேயன் அவரது கையைப் பற்றிக் கொண்டான்.

“அம்மே… சம்சாரிக்கான் புத்தி முட்டன்டா, எல்லாம் பின்னே பரயாம்… நிங்களை நம்முடே ஆயுர்வேத ஹாஸ்பிடலில் நேரில் கொண்டு போயி அட்மிட் ஆக்கி ட்ரீட்மென்ட் கொடுத்தால் ஒரு சமயம் இன்னும் நல்லோணம் சம்சாரிக்கான் பற்றும்…” என்றான் ஆறுதலுடன்.

“இருக்கட்டும் பா… இப்ப பேசும்போது கொஞ்சம் சிரமம் மட்டும் தான் இருக்கு, முன்னைக்கு எவ்வளவோ தெளிவாப் பேச முடியுது…” என்றார் அவனிடம் சந்தோஷத்துடன்.

“ம்ம்…”

“வீட்டுல எல்லாரும் சுகமா…? பயணம் சுகமா இருந்ததா…”

“எல்லாம் சுகம்… அம்மயானு என்டே கல்யாணம் குறிச்சு சம்சாரிச்சு டார்ச்சர் செய்யன…” என்றான் சின்ன சிரிப்புடன்.

“ம்ம்… பிள்ளைங்க நல்லபடியா வளர்ந்து நிறைவா நிக்கும் போது எந்தத் தாயும் அவனைக் கல்யாணக் கோலத்துல பார்க்க விரும்புவா தானே…” என்றவர் நியதியை இயல்பாய் நோக்க அவள் முகம் சிறுத்து குனிந்து அமர்ந்திருந்தாள்.

“ஆதி…! ரொம்ப தூரம் வண்டி ஓட்டிக் களைச்சிருப்ப, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கப்பா…” அவர் சொல்லவும் மறுக்காமல் எழுந்தவன், “நான் பக்கத்துல வாய்க்காலுக்குப் போயிட்டு வரேன் மா…” என்றபடி கிளம்பினான்.

“இவன் வீட்டில்தான் எல்லாரையும் தெரிந்திருக்கிறான் என்றால் வாய்க்காலையும் தெரிந்து வைத்திருக்கிறானே…”  அவள் பார்த்துக் கொண்டிருக்க ஆத்ரேயன் போய் விட்டான்.

“நியதி மா…! என்னைக் கொஞ்சம் சாய்வா உக்கார வை…” சாவித்திரி சொல்ல அவள் உதவ சாய்ந்து அமர்ந்தார். அவள் மேல் பார்வையை ஓட்டியவர், முன்னுக்கு இப்போது அவள் முகமும் உடலும் தெளிந்திருப்பதாய் உணர்ந்தார். “நியதி மா…! ஆதியைப் பத்தி நீ என்ன நினைக்கற…?” அவரது கேள்வியில் சட்டென்று நிமிர்ந்தவள் கண்களில் குழப்பத்தைக் காட்டினாலும் மௌனமாய் கூறினாள்.

“நான் எதுவும் நினைக்கலை அத்தை…”

“சரி…! பெண்களுக்கு மறுமணம் தப்புன்னு நினைக்கறியா…?”

திகைப்புடன் நிமிர்ந்தவள் யோசித்தே பதில் சொன்னாள்.

“மறுமணம் தப்புன்னு நான் சொல்லலை அத்தை… அது சம்மந்தப்பட்ட பெண்களோட மனநிலை, குடும்ப சூழ்நிலை, தேவை பொறுத்தது… எனக்கு வேண்டாம்னு தான் சொன்னேன்…” அவளது நிலையையும் சேர்த்தே சொன்னாள்.

“ஏன்மா…? உன்னை சந்தோஷமா வாழ வைச்சுப் பார்க்க எங்களுக்கு உரிமை இல்லையா…?”

“அச்சோ…! நான் அப்படி சொல்லலை, அத்தை…”

“பின்ன ஆத்ரேயனைக் கல்யாணம் பண்ணிக்க ஏன் மறுக்கற…? உன் பிரச்சனை தான் என்ன…?”

“நான்தான் பிரச்சனை அத்தை…! என் மனசு தான் பிரச்சனை… அது உங்க மகனைத் தவிர யாரையும் நினைக்க மாட்டேன்னு தவிக்குது…” சொல்கையில் கண்ணீர் வழிந்தது.

Advertisement