Advertisement

“சாவி கிட்ட பேசினேன், உன்னைப் பார்க்க விருப்பப்படறா…”

“ம்ம்…” என்றவளுக்கு அவரது விருப்பம் இப்போது எதைப் பற்றிப் பேசுவதற்கு என்றும் புரிந்தது.

“ஆத்ரேயன் அடுத்த வாரக் கடைசில பொள்ளாச்சிக்கு சாவியைப் பார்க்கப் போவான் போலருக்கு, உன்னையும் அவனோட வரச் சொன்னா… ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னா…” அம்பிகை சொல்ல நியதியின் புருவம் யோசனையில் சுருங்கியது.

“இந்த ஆதி எதுக்கு அத்தையைப் பார்க்கப் போறான்… அடிக்கடி இப்படிப் போவானா…? அவங்க என்ன முக்கியமான விஷயத்தை இவன் உள்ளப்ப என்கிட்ட சொல்லப் போறாங்க…” யோசித்தவளுக்கு குழம்பியது.

எண்ணங்களை அலைய விட்டிருந்தவள் யாரோ தன்னை நோக்கி நடந்து வரும் ஓசையில் கண்ணைத் திறக்க ஆத்ரேயன் புன்னகையுடன் முன்னில் நின்றான். கையில் ரோஜாப் பூவை வைத்திருந்தவன் நீட்டி காலை வணக்கம் சொல்ல கடுப்புடன் வாங்காமல் முறைத்தாள் நியதி.

“எந்தா…? மலர் டீச்சர்னு ரோஜா மலரையும் இஷ்டமல்லே…” என்றவனுக்கு பதில் சொல்லாமல் எழுந்து நடந்தாள்.

“மலரே நின்னே காணாதிருந்தால்…” அவனது இதழ்கள் பின்னில் முணுமுணுக்க நின்றவள் திரும்பி வந்தாள்.

“ப்ளீஸ், என்னை இயல்பா இருக்க விடுங்க ஆதி… தயவுசெய்து உங்க எண்ணத்தை மாத்திக்கங்க…”

“ஹூம்… மாற்றணம்னு விசாரிச்சிருந்தா நினக்கும், அபிக்கும் மேரேஜ் ஆயது அறஞ்சப்போ தன்னே ஞான் மாறியிரிக்கும்… விதியின் ஆசையும் நாம சேரணும்னு தான் போலிருக்கு… இல்லெங்கில் மீண்டும் நான் உன் ஜீவிதத்தில் வந்திரிக்கில்லா, அப்ப ஒரு முறை நின்னை மிஸ் செய்து, இனியும் மிஸ் செய்யான் பற்றில்லா… எனிக்கு நின்னே அத்தர இஷ்டமானு முத்தே…” என்றவனின் குரல் நெகிழ்ந்து மென்மையாய் ஒலிக்க அவள் மனம் இளகினாலும் காட்டிக் கொள்ளாமல் கோபமாய் பேசினாள்.

“நீங்க என்னைத் தொந்தரவு பண்ணிட்டே இருந்தா நான் என் அத்தைக்குக் கொடுத்த சத்தியத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கும்னு நினைக்கறேன்…” சொன்னவள் சட்டென்று நடக்கத் தொடங்க அவன் வலியோடு நின்றான்.

அதன் பின் வந்த நாட்களில் ஆத்ரேயன் வரும்போது அவன்  பார்வை மௌனமாய் அவளைத் தொடர்ந்தாலும், அருகே வந்து எதையும் பேச முயற்சிக்கவில்லை. அடுத்த கிளாஸ் தொடங்க எல்லாரும் தயாராய் இருக்க உள்ளே வந்த பெண்ணைக் கண்ட ஆத்ரேயனுக்கு எங்கேயோ கண்டது போல் தோன்ற, யோசனையாய் பார்த்தான்.

அவனிடம் புன்னகையுடன் வந்தவள், “ஹலோ ஆதி, நான் சாதனா… என்னை போட்டோவில் கண்டில்லே…” எனவும் சட்டென்று கிளிக்கானவனின் முகம், “இவள் எதற்கு இப்போது இங்கே வந்திருக்கிறாள்…” என யோசனையில் சுருங்க அவள் உரிமையுடன் தொடர்ந்தாள்.

“ஆன்ட்டி நிங்கள்டே யோகா சென்டர் பற்றிப் பரஞ்சப்போ கண்டிட்டு போகான் விசாரிச்சு… நல்ல வெளிய சென்டர் ஆனல்லோ, எத்தர ஸ்டூடன்ட்ஸ் உண்டு…” என்று சில பல கேள்விகளை ஆவலுடன் கேட்கத் தொடங்க அவளைத் தவிர்க்கவும் முடியாமல் பதில் சொன்னான் ஆத்ரேயன்.

கிளாஸ் தொடங்காமல் எல்லாரும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க, “மாஸ்டர், யூ கண்டின்யூ…” என்றவன், “கம்…” என அவளைத் தனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவள் புன்னகையுடன், “அப்போ நாளே காணாம், பை…” என சொல்லிச் செல்ல அவள் வந்தது முதல் கவனித்துக் கொண்டிருந்த நியதியின் மனதில், “அவள் யாராக இருக்கும்…? மிகவும் உரிமையோடு பேசுகிறாளே…” என்ற கேள்வி பிராண்டிக் கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலை சாதனாவும் பிகினர்ஸ் கிளாஸுக்கு வர, ஆத்ரேயனே அவளுக்கு சொல்லிக் கொடுத்தான்.

சீனியர் வகுப்புகளுக்கு மட்டுமே ஆசனம் சொல்லிக் கொடுப்பவன் இன்று ஒரு பிகினருக்கு சொல்லிக் கொடுக்கவும் திகைப்புடன் பார்த்த நியதி அவளையும் மீறி சாதனாவை கவனித்தாள்.

கேரள மண்ணுக்கே உரிய செழுமையுடன், பணத்தின் செழுமையும் சேர பொன்னிறத்தில் பளபளத்த உடல்வாகும், பெரிய கண்களும், கூர்த்த மூக்கும், அழகான இதழ்களில் லிப்ஸ்டிக் பூச்சுடன் மேலே தூக்கிக் கட்டிய கொண்டையோடு சற்றே பூசிய உடல் வாகில் அழகாய் இருந்தாள் சாதனா. ஆத்ரேயனைக் காணும் போதெல்லாம் அவள் விழிகள் பட்டாம்பூச்சியாய் படபடக்க விழிகளில் சிறு நாணம் ஒட்டிக் கொண்டு மேலும் அவளை அழகியாக்கியது.

அவள் தன்னை விட அழகாய் இருப்பதைக் கண்டு மனதில் இயல்பாய் ஒரு பொறாமை தோன்றுவதாய் நியதிக்குத் தோன்ற பார்வையை மாற்றிக் கொண்டவளுக்கு அது சாதனாவின் அழகில் வந்த பொறாமை அல்ல, ஆத்ரேயன் அவளருகே உள்ள அருகாமையில் வந்த பொறாமை என யோசிக்கத் தோன்றவில்லை.

சாதனா வந்த அன்றே ஆத்ரேயன் அன்னையிடம், “இது உங்கள் வேலையா…” என கோபத்துடன் விசாரிக்க, அவர் இளக்காரமாய் சிரித்தார்.

“எந்தாடா மோனே… சாதனா நேரில் காணான் போட்டோவை விட நல்ல சுந்தரி அல்லே… அவளுக்கு யோகா படிக்கான் இஷ்டம்னு பரஞ்சு, அதானு நின்டே சென்டரில் வந்து ஜாயின் செய்தது… இதில் எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா…” என அவர் நழுவினாலும் இது அவர் வேலை தான் என ஆத்ரேயனுக்குப் புரியவே செய்தது.

சாதனா ஜாயின் செய்த மறுநாள் அவளைக் காண அங்கே வந்த ஷோபா, “எந்தா மருமோளே…! என்டே மகன் யோகா நல்லா சொல்லிக் கொடுக்கிறானா…?” எனக் கேட்க, அவள் நாணத்துடன் தலையாட்டி சிரித்தாள். ஷோபாவுடன் நின்றிருந்த நியதியின் கண்களில் திகைப்பு தெரிய ஜான்ஸி சந்தோஷமாய் புன்னகைத்தாள்.

“என்ன மேடம் சொல்லறீங்க…? மாஸ்டர்க்கு மேரேஜ் கன்பர்ம் ஆயோ…? பாஸ் பரஞ்சதே இல்லா…” என்று சந்தோஷமும், வருத்தமுமாய் கேட்க, “இனியும் கன்பர்ம் செய்திட்டில்லா…” சற்றுத் தள்ளி நின்ற ஆத்ரேயன் அவர்கள் பேசுவதைக் கேட்டு வேகமாய் வந்து பதில் சொன்னதோடு அன்னையை முறைத்தான். அவரை எதுவும் சொல்லா விட்டாலும் வீட்டில் சென்று கோபித்தான்.

“அம்மா நிங்கள் செய்யுறது எனிக்கு கொஞ்சமும் இஷ்டம் ஆயில்லா… நீங்க என்னெல்லாம் பிளான் பண்ணாலும் சாதனாவை ஒரு ஸ்டூடண்டா பார்ப்பேனே ஒழிய அவள் மேல் எனக்கு எந்த இன்ட்ரஸ்டும் இல்ல…”

“ஓ…! அப்ப என்னதான் உன் தீர்மானம்…? நாங்க பார்த்த சாதனாவும் வேண்டாம்… உன் அண்ணி சொன்ன பொண்ணும் வேண்டாம்னா இப்படியே இருக்கலாம்னு நினைச்சியா…?” அதிசயமாய் கோபப்பட்டார் ஷோபா.

“ப்ச்… நான் அப்படி ஒண்ணும் பரஞ்சில்லா, எனிக்கு குறச்சு சமயம் வேணும்னு தான் சொல்லறேன்…”

“எடா… சாதனாவுக்கு என்ன குறைச்சல்…? அழகில்லையா, அந்தஸ்தில்லையா…? படிப்பு, பண்பு தான் இல்லையா…? ஏன் அவளை வேண்டாம்னு சொல்லற…” என்றார் தன்மையாக.

“எனிக்கு அவள் மேல எந்த வெறுப்பும் இல்ல அம்மே… ஆனா, விருப்பும் இல்லா, ப்ளீஸ் மனசிலாக்கு…”

“விருப்பெல்லாம் கல்யாணம் முடிஞ்சு ஒண்ணா வாழத் தொடங்கும்போது வந்திடும்… உன் மனசுல வேற யாரும் இல்லேன்னா அவளை ஏத்துக்க என்ன கஷ்டம்…?” என்றார்.

அன்னையின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சில நொடிகள் அமைதியாய் நின்றவன், “என் மனசில ஒருத்தி இருக்கா… ஆனா, அவ என்னை ஏத்துக்க கொஞ்சம் டைம் வேணும்…” என்றான் குரலை சரியாக்கிக் கொண்டு.

“ஹேய்…! இதெப்போ… யாரடா அக்குட்டி…?” என்றார் அன்னை முகம் மலர ஆர்வத்துடன்.

நியதியைப் பற்றிய விவரங்கள் எல்லாம் அறிந்த பின்னும் அன்னையின் ஆர்வம் இப்படியே இருக்குமா…? என யோசித்தவன், “கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க மா, சொல்லறேன்…” என்றான்.

“அடடா, இதை நீ முன்னமே சொல்லி இருக்கலாமே… சாதனாகிட்ட நான் கிளாஸ்க்கு வந்து ஜாயின் பண்ண சொல்லிருக்க மாட்டேனே…” என்றார் வருத்தத்துடன்.

“அவளிடம் நான் எல்லாத்தையும் சொல்லி புரிய வச்சுக்கறேன், நிங்கள் விஷமிக்கண்டா…”

“ம்ம்… எப்படியோ எனக்கு உன்னை சீக்கிரமே கல்யாணக் கோலத்தில் பார்த்தாப் போதும்… அது நான் விரும்பிய பெண்ணோ, நீ விரும்பிய பெண்ணோ… நல்ல குட்டியா இருந்தாப் போதும்…” என்றார் சந்தோஷத்துடன்.

நாட்கள் இயல்பாய் நீங்க ஆத்ரேயன் நியதியிடம் வேறு எதுவும் தனியே பேசவில்லை. அவன் சாதனாவிடம் தன் மனதிலுள்ளதை சொல்ல அவளும் இயல்பாய் புரிந்து  கொண்டு அவனிடம் நட்பாகப் பழகினாள். அவளிடமும் விரும்புவது யாரை என்று ஆத்ரேயன் சொல்லவில்லை. அன்று வகுப்பு முடிந்து ஆத்ரேயனின் அறைக்கு சென்ற சாதனா, சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க நியதிக்கு எரிச்சலாய் இருந்தது.

“வகுப்பு முடிந்தால் வீட்டுக்குக் கிளம்பாமல் இந்த சாதனாவுக்கு என்ன ரூமில் அரட்டை வேண்டியிருக்கிறது, அதுவும் மேரேஜ் இன்னும் முடிவாகாமல்…” என கடுப்புடன் யோசிக்கவும் செய்தவள் முகம் எரிச்சலைக் காட்டியது.

சாதனா கிளம்பவும் ஆத்ரேயனும் வெளியே வந்தான்.

தனியே நின்ற நியதியிடம் வந்தவன், “நாளை எர்லி மார்னிங் பொள்ளாச்சி கிளம்பறோம், ரெடியா இரு…” அதிகாரமாய் சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு கிளம்பிவிட கடுப்புடன் அவனைப் பார்த்து நின்றாள் நியதி.

“நியதி…! பாஸ் எந்தானு பரஞ்சது…” அவளிடம் வந்த ஜான்ஸி கேட்க, “ஊருக்குப் போக லீவ் கேட்டிருந்தேன், ஓகே சொல்லிட்டுப் போறார்…” என்றாள் சமாளிப்புடன்.

வெள்ளி இரவன்று அவளை மொபைலில் அழைத்த ஆத்ரேயன், காலை ஆறு மணிக்கு கிளம்பத் தயாராய் இருக்க சொல்ல, அவள் வெறுமனே ‘ம்’ என்றாள்.

“என்னோடு பயணிக்கறதுல உனக்கு வருத்தமொண்ணும் இல்லியே…” அவன் அக்கறையாய் கேட்க, சட்டென்று பதில் சொன்னாள் நியதி.

“வரலேன்னு சொன்னா மட்டும் என்னை விட்டுடவா போறிங்க, அத்தை என்னைப் பார்க்கணும்னு சொல்லும்போது  நானும் வந்துதானே ஆகணும்… காலைல ரெடியாருப்பேன், வச்சிடறேன்…” கடுப்புடன் சொல்லி வைத்து விட்டாள்.

“நீ என்னோட வரப் போறது, இந்த வழிப் பயணத்தில் மட்டுமில்லை நிதிம்மா, வாழ்க்கைப் பயணத்திலும் நீதான் எனக்குத் துணையா வரப் போற…” மனதுள் சொல்லிக் கொண்ட ஆத்ரேயனின் முகத்தில் மென்னகை அரும்பியது.

மலர்களை உனக்குப்

பரிசளிக்க நினைத்தேன்…

நீயே மலரென்பதால்

என் மனதையே உனக்கு

பரிசாகக் கொடுக்கிறேன்…

வீழ்ந்தாலும் உன் மலரடியில்

வீழ்வேன்… வாழ்ந்தாலும்

உன் மனதோடு வாசமாய்

நீங்காமல் நிறைந்திருப்பேன்…

Advertisement