Advertisement

 அத்தியாயம் – 18

ஆறு மாதங்கள் ஓடி இருக்க அந்த விடியலில் பெய்து கொண்டிருந்த மழையில் சூரியனும் போர்வைக்குள் சுருண்டு கிடக்க வெளிச்சம் முழுமையாய் வந்திருக்கவில்லை.

உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த நியதி எழுந்து ஜன்னலருகே வந்து நின்றாள். கண்ணாடி ஜன்னலில் மழைத் தண்ணீர் விழுந்து கோடாய் கீழே இறங்கியதைக் காண ஜன்னல் அழுவது போல் தோன்றியது.

அவள் மனதும் அழுது கொண்டு தான் இருந்தது. மறுநாள் விடியலில் தான் ஆத்ரேயன் வாரியருக்கும் அவளுக்கும் கல்யாணத்திற்காய் நிச்சயிக்கப் பட்டிருந்தது.

ஜன்னலின் கொக்கியை விலக்கி சிறிது திறக்க பூந்தூறல் போட்டுக் கொண்டிருந்த வானம் வஞ்சனை இல்லாமல் அவள் மீதும் பன்னீரைத் தெளிக்க எப்போதும் ரசிப்பவளின் மனது இன்று குழம்பிக் கிடந்ததால் வெறித்து நின்றாள்.

இந்த ஆறு மாதங்களில் தான் என்னவெல்லாம் நடந்து விட்டது. நியதியின் மறுப்பும், கண்ணீரும் ஆத்ரேயனிடம் மட்டுமல்லாமல் அபிமன்யுவின் அன்னை சாவித்திரியிடமும் எடுபடவே இல்லை.

ஆத்ரேயனின் விருப்பம் தெரிந்து அவனிடம் சம்மதிக்காமல் அழுது புலம்பியவளை அப்படியே விட்டுவிடவில்லை அவர்கள். அம்பிகையும். சாவித்திரியும், ஆத்ரேயனுமாய் நடத்திய மும்முனைத் தாக்குதலில் அவள் மிகவும் குழம்பியும், தடுமாறியும் போயிருந்தாள்.

மறுநாள் யோகா சென்டருக்கு செல்லாமல் ஊருக்குக் கிளம்ப நினைத்தவள் அம்பிகைக்கு அழைத்து நடந்ததைச் சொல்லி கதறினாள். இங்கே இனியும் என்னால் இருக்க முடியாது கிளம்புகிறேன் என்றவளை சாவித்திரியின் சத்தியத்தை சொல்லி அம்பிகை கட்டிப் போட்டதோடு, ஆத்ரேயனின் காத்திருப்பையும், அவளது சம்மதத்தால் மலரப் போகும் இருவரின் வாழ்க்கை பற்றியும் யோசிக்கக் கூறினார்.

ஆனால் முறுகிக் கொண்டு முரண்டு பிடிக்கும் இதயமோ ஆத்ரேயனைப் பற்றி யோசிப்பது கூட அவள் அபிமன்யுவின் மீது வைத்திருக்கும் காதலுக்கு செய்யும் துரோகம் எனக் கூக்குரலிட குழம்பி தவித்துப் போனாள். ஆத்ரேயனை நேரில் காண தைரியம் இன்றி தவிப்புடன் அறைக்குள் அடைந்திருந்தவளை அவனே வந்து கண்டான்.

கதவு தட்டும் ஓசையில் தயக்கத்துடனே திறந்தவள் முன் அமைதியாய் நின்றவனைக் காண முடியாமல் குனிந்து கொண்டவளைத் தாண்டி உள்ளே வந்தான் ஆத்ரேயன். அவளது வீங்கிய முகமும், சிவந்த கண்களும் இரவெல்லாம் அழுதிருக்கிறாள் என்று சொல்ல வருந்தினான் அவன்.

“இப்ப பனி உண்டோ…?” கேட்டவன் அவள் நெற்றியில் கை வைக்க வர சட்டென்று விலகிக் கொண்டாள் நியதி.

“எந்து பற்றி இவள்க்கு…? எல்லாவற்றையும் யோசித்து குழம்பி தானே ஒரு தெளிவுக்கு வருவாள் என நினைத்தால், அவளைத் தனிமையில் அதிகம் யோசிக்க விட்டு என் மேல் சின்னதாய் தோன்றிய விருப்பத்தையும் காணாமல் போக்கி விட்டேனோ…” தவிப்புடன் அவள் முகம் பார்த்தவன் அமைதியாய் கட்டிலில் அமர்ந்தான்.

அவள் ஜன்னலருகே கம்பியைப் பிடித்தபடி சோக சித்திரமாய் முதுகு காட்டி நிற்க அவனுக்கு வருத்தமாய் இருந்தது. அவனது விருப்பத்தை சொன்னதும் உடனே அவள் சம்மதித்து விடுவாளென்று அவனும் நினைக்கவில்லை.

அபிமன்யுவின் காதலையும், நினைவுகளையும் நெஞ்சில் பச்சை குத்திக் கொண்டிருக்கும் அவளது மனதை மெதுவாகவே மாற்ற முடியுமென்று அவனுக்கும் தெரியும்…

வீட்டில் மும்முரமாய் தொடங்கிய கல்யாணப் பேச்சும், அவனது அருகாமையை அவளது ஆழ்மனம் இயல்பாய் ஏற்றுக் கொள்ளத் தொடங்கிய தைரியமும் தான் இப்போது அவனது மனதை வெளிப்படுத்த வைத்த விஷயங்கள். அதோடு என்றாக இருந்தாலும் இந்த அழுகை இல்லாமல் முழு மனதாய் அவளால் தன்னை ஏற்க முடியாது என்றும் அவனுக்குத் தோன்றியது. தனது அருகாமையும், அன்பும் மட்டுமே அவளைத் தன்னை நேசிக்க வைக்கும் மந்திரங்கள் என்று ஆத்ரேயன் நினைத்திருந்தான்.

நியதியின் சம்மதம் கிடைத்த பின்தான் அவனது வீட்டில் இவளைப் பற்றிய விஷயங்களை சொல்லி சம்மதம் வாங்க வேண்டும்… முன்பொருமுறை அவன் காலம் தாழ்த்தியதில் கை விட்டுப் போய், இப்போது சந்தோஷத்தை இழந்து கலங்கி நிற்பவளின் கண்ணீரைத் துடைத்து புதிய ஒரு சந்தோஷ உலகத்தைக் காட்டாமல் இப்படி அருகே வைத்துக் காலம் தாழ்த்துவதில் அவனுக்கும் விருப்பமில்லை.

இன்பமும், துன்பமும் வாழ்வின் இரட்டைப் பிள்ளைகள்… இரண்டும் ஒன்றை விட்டு ஒன்று விலகுவதில்லை. துன்பம் அறிந்த நெஞ்சால் மட்டுமே இன்பத்தை மதிக்க முடியும்… இருட்டென்று ஒன்று இல்லாவிட்டால் வெளிச்சத்தின் வண்ணமும் யாருக்கும் தெரிந்திருக்கப் போவதில்லை…

அவளது வாழ்வில் இனி வெறும் இருட்டு மட்டுமே என ஓரமாய் ஒதுங்கிச் செல்பவளை அப்படியே விட்டுவிட ஆத்ரேயனால் மட்டுமல்ல, அம்பிகை, சாவித்திரி போன்ற அன்னையரின் மனமும் ஒத்துக் கொள்ளவில்லை.

“முத்தே…! இதெந்தா இங்கனே… பழசெல்லாம் நினைச்சு வல்லாதே விஷமிச்சு போயோ…?” ஆறுதலும் அக்கறையுமாய் வெளிப்பட்ட அவனது குரலில் சட்டென்று கண்ணீர் துளிர்க்க வலியோடு திரும்பினாள் நியதி.

“எதுக்கு…? எதுக்கு என் வாழ்க்கைல நீங்க வரணும்னு நினைக்கறிங்க… இதோ, இந்த அக்கறையும், அன்பும் எல்லாம் எதுக்காக…! இதுக்கெல்லாம் நான் ராசியில்லாதவ, எப்படியாச்சும் மீதியிருக்கிற என் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கணும்னு உயிரை பிடிச்சு வச்சிட்டு இருக்கேன்… தயவு செய்து என் வழியில நீங்க குறுக்க வர நினைக்காதிங்க…” கையைக் கூப்பியபடி கண்ணீருடன் குனிந்து நின்றவளை வேதனையுடன் பார்த்தான் ஆத்ரேயன்.

“நினக்கு என்னை இஷ்டமல்லே மலர் டீச்சர்…?” அவனது கேள்வியில் சட்டென்று திகைத்தவள் முகம் சுருங்கி பின் கோபமாய் மாறியது.

“நீங்க ஸ்டாப்ஸ் கிட்ட அன்பும் அக்கறையும் கொண்ட நல்ல பாஸ்… பணத்தோட கர்வமோ, பாஸ்ங்கற திமிரோ இல்லாம தோழமையோட எல்லாரையும் பாக்குற விசால புத்தி உங்களுக்கு இருக்கு… எல்லாரும் நல்லாருக்கணும், முடிஞ்ச வரை மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைக்கிற நல்ல மனசு உங்களுக்கு… இதெல்லாம் இருக்கிற உங்களை எல்லாரும் தான் இஷ்டப்படுவாங்க… அது போல தான் நானும் உங்க மேல மதிப்பும், மரியாதையும், பிரியமும் வச்சிருக்கேன்… அந்த இஷ்டம் நீங்க நினைக்கிற இஷ்டம் கிடையாது, இது மரியாதைல வந்தது…” படபடவென்று அவனுக்குப் புரிய வைத்துவிடும் நோக்கில் அவள் பொரிய அவன் மெல்லப் புன்னகைத்தான்.

அதைக் கண்டவள் முகம் சுருங்க திரும்பிக் கொண்டாள்.

“சரி…! மரியாதைல வந்த இஷ்டம் மாறான் ரொம்ப சமயம் வேண்டாம்… அது விடு…! ரெண்டாம் கல்யாணம் லோக குற்றமொண்ணும் இல்லியே, நீயேன் சம்மதிக்க மறுக்கற…”

“ப்ளீஸ் ஆதி…! புரிஞ்சுக்கங்க, எனக்கு இன்னொரு கல்யாணம், வாழ்க்கை பத்தி எல்லாம் எந்த யோசனையும் இல்லை… என் மனசு எப்பவும் அபியை மட்டும் தான் நினைச்சிட்டு இருக்கும்…”

“வெரிகுட்…! அது தப்பில்லை, நான் உன்னை அபியை மறக்கவும் சொல்லலை… அவனோட என்னையும் நேசின்னு தான் சொல்லறேன்…” என்றான் ஆத்ரேயன்.

அவனை முறைத்தவள், “ஒரு மனசுல ரெண்டு பேரை எப்படி நேசிக்க முடியும்…? என்னால முடியாது…”

“ஏன் முடியாது… மனசென்ன, நிலமா பட்டா போட்டு இது உனக்கு, இது அவனுக்குன்னு பங்கு பிரிக்க… அது காத்து மாதிரி…! நேசத்தை எத்தனை பேருக்கு வேணும்னாலும் பகிர்ந்து கொடுக்க முடியும், சுவாசமா உணர வைக்கவும், உயிர் கொடுக்கவும் முடியும்… உன்னை மட்டுமே மனசுல சுமந்திருக்கிற என் நேசத்துக்கும் உயிர் கொடுன்னு தான் கேக்கறேன்…” அவனது குரல் உள்வாங்கி மென்மையாய் ஒலிக்க பதில் சொல்லாமல் நின்றிருந்தாள் நியதி.

அவளுக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை. காதலை முழுமையாய் உணர்ந்தவளுக்கு அவனுடைய காதலைக் குறை சொல்ல முடியவில்லை.

அபியைத் தவிர இன்னொருத்தரை நினைப்பது கூட அவன் காதலுக்கு செய்யும் துரோகமாகுமோ… என்றுதான் அவளது மனம் தவித்தது. மீதமுள்ள வாழ்நாள் முழுதையும் அவன் நினைவிலேயே கழிப்பது மட்டுமே அவனுடைய காதலுக்கு தான் கொடுக்கும் மரியாதை என்று தோன்றியது.

அவளுடைய மௌனமும், முகத்தில் தெரிந்த வலியும் அவனை யோசிக்க வைக்க, “சரி, கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்…” என நினைத்தவன் எழுந்தான்.

“மலரே…! நீ என்னை ஏற்பதும், மறுப்பதும் உன் விருப்பம்… ஆனா, ஏற்கும் வரை காத்திருப்பது என் விருப்பம்… அது ஏதாயாலும் பின்னே நோக்காம்… பட், சென்டரில் வராதே இங்கனே ரூமில் தன்னே இரிக்கண்டா… அது சரியல்லா…” சொன்னவன் அவளது தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு வெளியேற சிறிது நேரம் அப்படியே நின்றாள் நியதி.

ஆத்ரேயனுக்கு வலிக்கும்படி நிராகரித்துப் பேசியதில் மனம் வலித்தது. அவனது இதமான தோழமையும், அருகாமை தரும் பாதுகாப்பு உணர்வும் மனதுக்குப் பிடித்திருந்தாலும் அதைத் தாண்டி அவனோடு தனது வாழ்க்கையை இணைத்து யோசிக்க பயமாய் இருந்தது… அப்படி யோசிப்பதும்கூட அபிமன்யுவின் நேசத்துக்கு செய்யும் துரோகமென்று அவள் மனம் முகமூடி அணிந்து கொண்டிருந்தது.

சிறிது நேரம் அப்படியே நின்றவள் குளித்து யோகா சென்டருக்குக் கிளம்பினாள். ஜான்ஸியும் மற்றவர்களும் நலம் விசாரிக்க ஆத்ரேயன் அவள் கண்ணில் படவில்லை.

மேலும் சில வாரங்கள் ஓடியிருக்க, சென்டரில்  ஆத்ரேயனைக் காணாமல் அவள் மனம் கேள்வி எழுப்பினாலும், அவனைக் காணாததும் ஒரு விதத்தில் நல்லது தான் என நினைத்தாள். அவன் புதிய பில்டிங் விஷயமாய் பிஸியாய் இருக்கிறான் எனத் தெரிந்தது.

இந்த நாட்களில் இயல்புக்கு மீண்டிருந்தவள் வழக்கம் போல் மார்னிங் யோகா பாட்ச் முடிந்ததும் கார்டனில் அவளது மரத்தடிக்கு சென்று சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்தாள். மனது அடங்க மறுக்க எண்ணங்கள் குதிரையின் பாய்ச்சலை விட வேகமாய் எங்கெங்கோ தாவிக் கொண்டிருந்தன.

முன்தினம் அம்பிகை அழைத்தபோது கேட்டிருந்தார்.

“நியதி மா…! யோசிச்சியா…?”

“எதைப் பத்தி மா…?” என்றவளின் மனம் பதிலை அறிந்தே இருந்தாலும் கேள்வி கேட்டது.

“ஆத்ரேயன் சொன்னதைப் பத்தி…” அவரது கேள்விக்கு அவள் மௌனம் காக்க அவரே தொடர்ந்தார்.

Advertisement