Advertisement

“எ..என்னாச்சு மேடம், நியதி இங்கே இல்லியா…?” அவனது கேள்விக்கு வேதனையுடன் அவரைப் பார்த்தவர், “ம்ம், இருக்கா, அரை உயிரோட இருக்கா…” என்ற வார்த்தைகள் அவனைக் கொன்றே விட்டது.

“எ..எந்தா பரயனது…? நியதிக்கு எந்து பற்றி…?” அதிர்ச்சியுடன் எழுந்து நின்றவனைக் கனிவுடன் பார்த்தார்.

“தம்பி…! உங்க அதிர்ச்சியே நியதி மேல நீங்க வச்சிருக்கிற நேசத்தைக் காட்டுது, இதெல்லாம் யாருகிட்டயும் சொல்லக் கூட விரும்பல… இருந்தாலும், அவளை இஷ்டப்பட்டு நீங்க வந்து கேக்கறதால சொல்லறேன்… யார் கண் பட்டுச்சோ, பூவா மலர்ந்து பூந்தோட்டமா வாழ வேண்டியவ, இந்த சின்ன வயசுல வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நிக்கறா…” என்றவரின் கண்களும் கலங்க அவரை அதிர்ந்து பார்த்தான்.

“வ்வாட்…? அ..அம்மே… எனிக்கொந்தும் மனசிலாயில்ல, ப்ளீஸ், கொஞ்சம் தெளிவாயி பரயுமோ…?”

“ம்ம்… அபிமன்யுன்னு ஒரு பையன் நியதியை ரொம்ப லவ் பண்ணி ஆசையா கல்யாணமும் பண்ணினான்… அன்புன்னா என்னன்னே தெரியாத என் நியதிக்கு அன்பைக் காட்டி சொர்கத்தை உணர வச்சான்… ஆனா வாழ யோகம் இல்லாத பாவி…! ஒரே மாசத்துல அவளை விதவை ஆக்கி, இருண்ட நரகத்துல, நடை பிணமாத் தள்ளிட்டு அல்பாயுசுல அவ கண்ணு முன்னாடியே போயி சேர்ந்துட்டான்…”

“எ..எந்தா…? எங்கனே…?” என்றான் அதிர்ச்சியுடன்.

“ரெண்டு பேரு சந்தோஷத்தைப் பார்த்து அந்த கடவுளுக்கே பொறுக்கல போலருக்கு… கல்யாணமாகி ஒரு மாசம் ஆனதும் அதைக் கொண்டாடனும்னு அபிமன்யு, நியதியை ஈவனிங் வெளிய கூட்டிட்டுப் போனான்… கோவிலுக்குப் போயிட்டு டின்னரை ஹோட்டலில் முடிச்சிட்டு, நைட் ஷோ சினிமாக்குப் போயிட்டுத் திரும்ப வரும்போது தான் அந்த விபத்து நடந்துச்சு… அவனோட ஒர்க் ஷாப்புக்கு சர்வீஸ் வந்திருந்த காருல தான் போயிருந்தாங்க… அது சட்டுன்னு பிரேக் பிடிக்கல, அது புரிஞ்சதும் அபி நியதியை சைட் டோர் ஓபன் பண்ண சொல்ல, அவளும் என்னன்னு கேட்டுட்டே செய்திருக்கா… சட்டுன்னு அவளை வெளியே தள்ளின அபிமன்யுவோட கார் ஸ்பீடா ஒரு லோடு லாரில மோத ஸ்பாட் அவுட்… கீழே விழுந்த நியதி அடிபட்டு, புரியாம எழுந்து பார்க்கிறதுக்குள்ள எல்லாமே முடிஞ்சிருச்சு…”

ஆத்ரேயன் கண்களில் கண்ணீருடன் அதிர்ச்சியாய் கேட்டிருக்க, அம்பிகை தொடர்ந்தார்.

“பாவம்…! கண்ணு முன்னாடி புருஷன் செத்த அதிர்ச்சில அந்தப் புள்ள மயக்கமும், மருட்சியுமா ஒரு வாரம் நினைவில்லாம ஆசுபத்திரில கிடந்தா… அப்புறமும் தன்னைப் பற்றின உணர்வே இல்லாம எங்காவது வெறிச்சுகிட்டு வெளிச்சத்தைப் பார்க்கக் கூட பிடிக்காம இருட்டுக்குள்ளயே ஒடுங்கிக் கிடந்தா… அவளை அப்படியே விட்டா சரியாகாதுன்னு மனநல மருத்துவர்களைக் காட்டினேன்… அவங்க முயற்சில மெதுவா அந்த அதிர்ச்சில இருந்து தேறினவ அபிமன்யுவோட அம்மா அவளைப் பார்க்கவே வராததால அவங்களை விசாரிச்சா… மகன் இறந்த துக்கத்துல அபிமன்யுவோட அம்மா சாவித்திரியும் பக்கவாதம் வந்து படுக்கைல விழுந்துட்டாங்க, அவங்களைப் பார்த்துக்கற நிலமைல இவளும் இல்லை… அவங்க தம்பி வந்து அக்காவை ஊருக்கு அழைச்சிட்டு போயிட்டாங்க, நியதி என்னோட தான் இருந்தா…”

எழுந்து நின்றிருந்த ஆத்ரேயன் அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் தளர்ந்து அமர்ந்தான். கலங்கிய கண்ணீரைக் கர்சீப்பில் துடைத்துக் கொண்டு, மூக்கை உறிஞ்சிய அம்பிகை மேலே சொல்லத் தொடங்கினார்.

“அவங்களுக்கு இப்படி ஆனதை சொன்னதும், நான் போயி பார்த்துக்கறேன்னு சொன்னா… சரி, அவளுக்கும் ஒரு மாற்றமா இருக்கும்னு ஊருக்குப் போக சம்மதிச்சேன்… அது கொஞ்சம் கிராமம், இந்த சமூகம் புருஷன் இறந்த பொண்ணை அவ்ளோ சாதாரணமா ஏத்துக்குமா என்ன…? விதவைகளை ஒதுக்கப்பட்டவர்களா தானே இப்பவும் பார்க்குது… அங்க ஊருல இருக்கிறவங்களோட அனுதாபமும், விசாரிப்பும், முதுகுக்குப் பின்னாடி இவளை ராசி இல்லாதவன்னு சொல்லுற பேச்சும் இவளை மறுபடி வீட்டுக்குள்ளயே முடங்க வச்சுது…” அவர் சொன்ன விஷயங்கள் ஒவ்வொன்றும் அவன் மனதைக் கிழிக்க, அதிர்ச்சி மாறாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

“அப்புறம் சாவித்திரியே இவளை இங்கே அனுப்பி வச்சுட்டா… இப்படி சும்மா இருந்தா மனசு எதையாவது யோசிச்சிட்டே இருக்கும்னு அவளை வற்புறுத்தி பிள்ளைங்களுக்கு யோகா கிளாஸ் எடுக்க வச்சேன்… பக்கத்துல ஒரு ஸ்கூல்ல கேட்டு யோகா டீச்சரா வேலைக்கு அனுப்பினேன்… அப்படியும் அவ மனசு அபிமன்யுவை நினைக்கறதை விடல, வேலை நேரத்துல கொஞ்சம் இயல்பா இருந்தாலும் தனிமைல எல்லாம் அவனைப் பத்தி யோசிச்சு கலங்கிட்டே இருக்கா, இப்பவும் ஸ்கூலுக்கு தான் போயிருக்கா…” என்றவர் சில வினாடிகள் அவன் முகத்தையே பார்த்தார்.

“நான் சொன்னதைக் கேட்டு உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கா தம்பி… நியதி இப்போ நீங்க பார்த்த பொண்ணு கிடையாது, அவ ஒரு விதவை…! தேவையில்லாம நீங்க இன்னும் அவளை நினைச்சுட்டு இருக்கக் கூடாதுன்னு தான் இத்தனை விஷயத்தையும் முதன் முறை பார்க்கிற உங்ககிட்ட சொன்னேன்… போங்க தம்பி, வீட்டுல பார்க்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருங்க…” என்றவரின் வார்த்தைகளோடு முகத்திலும் வேதனை நிறைந்திருந்தது. சில நிமிடங்கள் அப்படியே இருந்த ஆத்ரேயன், நிமிர்ந்தான்.

“அம்மா…!”

“சொல்லுங்க தம்பி…”

“எனிக்கு நியதியை கல்யாணம் கழிச்சு தருமோ…?”

அவனது கேள்வியில் திகைத்தவர் யோசனையாய் பார்த்தார்.

“தம்பி…! ஒரு அம்மாவா பட்டுப் போன என் பொண்ணு வாழ்க்கை மறுபடி தளிர் விடறதுல எனக்கு சந்தோஷம் தான்… ஆனா, இது அனுதாபத்திலோ, அவசரத்திலோ எடுக்க வேண்டிய முடிவு கிடையாது… நீங்க சம்மதிச்சாலும், உங்க குடும்பம் சம்மதிக்குமான்னு சொல்ல முடியாது… அதோட அபிமன்யுவோட அம்மா சாவித்திரி, நியதியோட சம்மதமும் இந்த விஷயத்துல ரொம்ப முக்கியம்… அபிமன்யு மேல உயிரையே வச்சிருந்த பொண்ணு, இப்ப உங்களைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்குவாளான்னு தெரியல… அதனால இந்த விஷயத்துல அவசரப்பட்டு நீங்க எந்த முடிவுக்கும் வர வேண்டாம், கொஞ்சம் யோசிங்க…” என்றார்.

“இப்ப சொன்னாலும், இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு சொன்னாலும் என் முடிவு மாறப் போறதில்ல, நியதி தான் என் மனைவின்னு நான் முடிவு பண்ணிட்டேன்… சாவித்திரி அம்மாவைப் பார்த்தும் இது சம்மந்தமாப் பேச உங்க அனுமதி வேணும்… உங்க எல்லாருக்கும் ஓகேன்னா, நியதியை எப்படியாச்சும் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறது என் பொறுப்பு…” என்றான் நம்பிக்கையுடன்.

அவனது அழுத்தமான வார்த்தைகள் அவனது மனதை சொல்ல, அம்பிகையின் மனதிலும் சிறு நம்பிக்கை விதை விழ, முயன்று பார்க்கும் எண்ணம் வந்தது.

ஆத்ரேயனுக்கு சாவித்திரியின் முகவரியைக் கொடுத்த அம்பிகை அவரிடம் போனிலும் விஷயத்தை சொல்ல, மகன் உயிராய் நேசித்த பெண்ணின் வாழ்க்கையில் மறுபடியும் வசந்தம் வருவதில் அவருக்கும் சந்தோஷமே. அவரை நேரில் காண பொள்ளாச்சி சென்றவன் அவரது ஆசியோடும், சம்மதத்தோடும் சந்தோஷமாய் திரும்பினான்.

நியதியை அவளுக்குத் தெரியாமலே ஸ்கூல் முன்னே நின்று கண்டவன், அவளது நலிந்த தோற்றம் கண்டு கலங்கிப் போனான். வலி சுமந்த இருண்ட கண்களில் மீண்டும் வெளிச்சத்தை மீட்டுக் கொடுக்க உறுதி கொண்டான்.

நியதியிடம் நேரடியாய் அணுகாமல் அவளைத் தன்னை உணர வைத்து, இயல்பாய் நேசத்தை மலர வைக்க வேண்டும் என நினைத்த ஆத்ரேயன் அம்பிகை, சாவித்திரியின் உதவியால் அவளை மூணாரில் அவனது யோகா சென்டரிலேயே வேலையில் சேரவும் செய்தான்.

நடந்ததை அவன் வேதனையோடு சொல்லிக் கொண்டிருக்க நியதியின் கன்னங்களில் கண்ணீர்த் தடங்கள். அமைதியாய் எழுந்தவள் பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள்.

அவன் முன்னில் அழ விரும்பாமல் உள்ளே சென்று அழுகிறாள் எனப் புரிந்தவன் அவளை அழைக்கவில்லை.

“அழட்டும்… அழுது தீர்த்து யோசிக்கட்டும்…! அப்போதுதான் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும்…” என நினைத்தான்.

அவளுக்குப் பசிக்குமென்று தோன்ற அடுக்களை சென்றவன் கஞ்சிக்கு அரிசியைக் கழுவி தண்ணி வைத்தான். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கவும் அடுப்பைக் குறைத்துவிட்டு வர அப்போதும் நியதி வந்திருக்கவில்லை.

பாத்ரூம் கதவருகே நின்றவன், “முத்தே…! கதவு திறக்கு…” எனக் குரல் கொடுக்க, “ப்ளீஸ், நீங்க கிளம்புங்க ஆதி…” என பதிலுக்கு குரல் வந்தது. தன்னை நோக்கத் தயங்குகிறாள் எனப் புரிய, “சரி, அடுப்பில் கஞ்சி வச்சிருக்கேன், ஆப் செய்யான் மறக்கண்டா… குடிக்கணம் கேட்டோ, நான் நாளே வராம்…” என்றவன் கதவைத் திறந்து வெளியேறினான்.

மழை பொழிந்து மேகம்

நிர்மலமானது போல்

கணவனை இழந்த பெண்ணின்

வாழ்க்கை நிர்மலமாகலாமா…

பாதையெங்கும் குத்திடும்

நெருஞ்சி முட்களை பூவாய்

மாற்றிடும் வித்தையை

காலம் தான் சொல்லிடுமா…

Advertisement