முழுமையாய் விடிந்திடாத தை மாத விடியற்காலை. எங்கும் இருட்டைப் போர்த்திக் கொண்டு உணர மனமின்றி உலகம் மயக்கத்தில் கிடந்தது. அந்த அதிகாலைக் குளிரைப் பொருட்படுத்தாது இரண்டு கால்களையும் மடக்கி உட்கார்ந்து, இரண்டு கைகளையும் கால் மூட்டின் மீது வைத்து கண்களை மூடி தியானம் செய்து கொண்டிருந்தாள் நியதி. பால்கனியில் ஊசியாய் உடலைத் துளைத்த குளிரை அவளது உள்ளமும், உடலும் பொருட்படுத்தவில்லை.
சீராய் சுவாசத்தை உள்ளிழுத்து வெளியேற்றியபடி, இதழ்கள் அலைபேசியில் ஒலித்த காயத்ரி மந்திரத்தை உடன் சேர்ந்து மென்மையாய் உச்சரித்துக் கொண்டிருந்தன. உச்சந்தலையில் முடியை வாரி சுருட்டி ஜப்பான் கொண்டையிட்டு எந்த அலங்காரமும் இன்றி அமர்ந்திருந்தாலும், வெண்ணிற மேனி, இமை மூடியிருந்த அகண்ட விழி, கூர் நாசி, அளவான சின்ன இதழ், யோகா உடைக்குள் கச்சிதமாய், ஒதுங்கி இருந்த உடல் வளைவுகள் என அசையாமல் அவள் அமர்ந்திருந்த விதம் கண்கள் திறக்காத அழகிய சிற்பத்துக்கு பெண் வேடமிட்டு அமர்த்தியது போல் இருந்தது.
நியதி என்னும் பெயருக்கு கட்டுப்பாடு, ஒழுக்க விதி, முறைமை, வரையறை எனப் பல அர்த்தங்கள் இருக்க எந்த அர்த்தத்தில் அந்தப் பெயரை வைத்திருப்பார்களோ…?
பத்து நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தவள் கண் திறந்தாள். சூரியன் வெளிச்சத்தைப் பிரபஞ்சமெங்கும் பரப்பத் தயாராகியிருக்க சுற்றிலும் பார்வையை ஓட்டியவள் கால்கள் இரண்டையும், ஒன்று சேர்த்து நேராக நிமிர்ந்து நின்று, சூரியனைப் பார்த்தாள். உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து கட்டைப் பெருவிரல்கள் இரண்டையும் நெஞ்சின் மத்தியில் வணங்குவது போன்று வைத்தவளின் இதழ்கள் ‘ஓம் மித்ராய நமஹ…’ என உச்சரித்துக் கொண்டிருந்தது. மெல்ல உள்மூச்சு வாங்கியவள், கைகளிரண்டையும் நேராக நிமிர்த்தி தலைக்கு மேல் தூக்கி பின்புறம் பிறை போல் வளைந்தாள். இதழ்கள் ‘ஓம் ரவியே நமஹ’ என உச்சரித்தது.
அடுத்து மெதுவாக மூச்சை வெளியேற்றி உள்ளங்கைகள் பாதங்களுக்கு இணையாக நிலத்தைத் தொடும் வரை மெதுவாக முன்புறம் வளைந்தவள் தலை முழங்கால்களைத் தொட்டது. கால்கள் வளையாமல் நிமிர்ந்தவாறு நின்றிருந்தவள் இதழ்கள், ‘ஓம் சூர்யாய நமஹ…’ என்றது.
தொடர்ந்து யோகாவில் சூரிய நமஸ்காருக்கான 12 நிலைகளையும் செய்தவள் அதே போல 12 ரவுண்டுகளை திரும்பவும் செய்து முடித்தாள். முகத்தில் பொடித்திருந்த வேர்வையில் சூரிய ஒளி பட்டு மின்ன கை, கால், முகம் உடலெங்கும் வேர்வை சுரப்பிகள் திறந்து கொண்டது போல் ஒரு குளிர்மையை உணர்ந்தாள். மேலும் சில ஆசனங்களை செய்துவிட்டு யோகா மேட்டை மடித்து வைத்து எழுந்தவள் சுற்றிலும் பார்வையை ஓட்ட எப்போதும் போல காணும் இடமெங்கும் பசுமையைப் போர்த்திக் கொண்டிருந்த அந்தப் பிரதேசம் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் அழகாய் தெரிந்தது. அது அவள் இருந்த அப்பார்ட்மென்டின் பின்பகுதி. இயற்கை அன்னையின் பூரண தரிசனம் நிறைந்திருந்த கடவுளின் தேசத்தில் மூணாரின் ஒரு பகுதியில் ஞாயிறு அன்று அந்த விடியல் நடந்திருந்தது.
சிறிது நேரம் இயற்கையை ரசித்தபடி கண் போன போக்கில் பசுமையைப் பார்த்திருந்தவளின் இதழ்கள் மட்டும் புன்னகையைத் தொலைத்திருக்க, கண்களில் வெறுமை மட்டுமே நிறைந்திருந்தது.
“அம்மாவின் வற்புறுத்தலில் இங்கே வராமலிருந்திருந்தால் இப்போதும் நான் முடங்கிக் கிடந்திருப்பேனோ…? இந்த இயற்கை அன்னையின் மலர்ச்சி வெந்து கருகிப் போன என் மனதுக்கும் அமைதியைத் தருகிறதே… தறி கெட்டுத் தன் பாட்டில் பறந்து கொண்டிருந்த என் மனதும் இந்த ஒரு வாரமாய் எனது கட்டுக்குள் வந்தது போல் தோன்றுகிறதே…” யோசனையுடன் நின்றவள் வீட்டுக்குள் நுழைந்தாள்.
ஒரு கட்டில், அலமாரி, மின்விசிறி, சின்னதாய் மூலையில் இருந்த டீப்பாயின் மீது யோகா பற்றிய சில தமிழ் புத்தகங்கள் என இருக்க, அந்தப் பெரிய அறையின் ஒரு பக்கம் தடுத்து சின்னதாய் அடுக்களை ஆக்கி இருந்தனர். அங்கே கேஸ் ஸ்டவ், சிறிது பாத்திரங்கள், சுவரோடு இருந்த செல்ப் என ஒரு ஆள் தங்குவதற்கு மட்டுமே வசதி கொண்ட பிளாட், உள்ளேயே பாத்ரூம் என அவளுக்குப் போதுமானதாகவே இருந்தது. அடுக்களைக்குள் நுழைந்தவள் மூணாரின் பச்சைத் தேயிலையில் சிறிது கிரீன் டீ வைத்து எடுத்துக் கொண்டு மீண்டும் பால்கனிக்கு சென்றாள்.
இலக்கில்லாப் பார்வையுடன் தடுப்புச் சுவரில் சாய்ந்தபடி நின்றவளுக்கு குளிரான காலையில் சூடான தேநீர் சுகமாய் தொண்டைக்குள் சென்று கதகதப்பைக் கொடுத்தது. மனம் மீண்டும் பழைய நினைவுகளுக்குத் தாவியது.
வேண்டிய மட்டும் அழுது விட்டதால் இப்போது கண்ணீர் பொங்கி வழியவில்லை. கண்ணீர் சுரப்பியும் வறண்டு விட்டதோ…? ஆனாலும் மனதுக்குள் நீங்காமல் அந்த துக்கம் கனமாய் அடைத்துக் கொண்டிருந்தது. எத்தனை தான் விலக்கி வைத்தாலும் தனிமையான பொழுதுகளில் அதன் சுவடுகளின் தாக்கம் அதிகமிருந்தது.
இயல்பாய் சிரிக்க முடியவில்லை…
இயல்பாய் யாருடனும் பேச முடியவில்லை…
ஏன், அவளது இயல்பே காணாமல் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும்…
ஓட்டுக்குள் சுருண்டிடும் நத்தை போல் மனம் எல்லாரிடமிருந்தும், எல்லாற்றிடமிருந்தும் விலகி சுருண்டு கொள்ளவே துடித்தது. யாருமில்லா ஒரு உலகத்தில் தான் மட்டும் தனியே நிற்பது போல் தோன்ற அந்தத் தனிமையைத் தாண்டி மனம் எதையும் ஏற்க மறுத்தது. அவளது அழகான குண்டு முகம் களையிழந்து, உணவு விஷமானதில் உடல் சிறுத்துப் போயிருந்தது.
மிகவும் சின்னப் பெண் போலத் தோன்றினாள்.
“ஏய், வெள்ளக் கோழி…!”
இப்படிதான் அபிமன்யு அவளை அழைப்பான்.
“நான் ஒண்ணும் அவ்ளோ வெள்ளை இல்ல…” சிணுங்குவாள்.
“கண்ணாடி பார்க்குற வழக்கம் எல்லாம் இல்லியோ…? என் கை பக்கத்துல உன் கையை வச்சுப் பாரு…” என்று அவள் கையருகே தன் கறுப்புக் கையை வைத்துக் காட்டுவான் அவன். அது பிளாக் அண்ட் ஒயிட் ஆகத் தெரியும்.
“நான் உங்களை விடக் கொஞ்சம் கலரு, அவ்ளோ தான்…” அவனை விட்டுக் கொடுக்காமல் சொல்லுவாள் நியதி.
“உனக்கு கண் டெஸ்ட் பண்ணனும்னு நினைக்கறேன்… நான் சரியான பேரு தான் வச்சிருக்கேன், வெள்ளக்கோழி…!”
“ப்ச்… நியதிங்கிற பேருக்கு என்னவாம், நல்லா தானே இருக்கு…” அவள் சிணுங்கினால் இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டு சொல்லுவான்.
“நீ நியதி இல்லை, எனக்குக் கிடைச்ச நிதி…! ஆனாலும் உன்னை வெள்ளைக் கோழின்னு தான் சொல்லுவேன்… எப்படி வெண்ணைல செய்த மாதிரி வெள்ளையா, வழுவழுன்னு இருக்க…” கேட்டுக் கொண்டே அவள் கைகளைத் தடவுவான். சிலிர்த்துக் கொண்டு அவன் கழுத்தைக் குழந்தை போல் கட்டிக் கொள்வாள் நியதி.
இப்போது சற்றே நிறம் மங்கியிருந்தாள். உடம்பைப் பற்றிய கவனமில்லாததால் கண்களுக்குக்கீழே கருமை வந்திருந்தது. வெண்ணை தடவியது போல் ரோஜா நிறத்தில் சதா மின்னும் இதழ்கள் வறண்டு வெளிர்த்திருந்தன. ஆனால் எதைப் பற்றியும் நியதிக்கு இப்போது கவலையில்லை. யோசனையில் ஆழ்ந்திருந்தவளை கீழிருந்து கேட்ட மலையாளக் குரல் கலைத்தது.
“குட் மோர்னிங் நியதி…”
அவளது பிளாட்டுக்கு நேர் கீழே இருந்த நிஷா இவளைக் கண்டதும் பளிச்சென்ற புன்னகையுடன் நின்றிருந்தாள். அழகாய் சேலை உடுத்து வெள்ளை நிற ஓவர் கோட் அணிந்திருந்தாள். அதுதான் அவள் நர்ஸாக வேலை செய்யும் ஆரோக்கியா ஆயுர்வேத ஹாஸ்பிடலின் சீருடை. முப்பதை நெருங்கிக் கொண்டிருந்தவளுக்கு ஏதேதோ குடும்ப சுமைகளின் காரணமாய் கல்யாணம் ஆகியிருக்கவில்லை.
“ஹா… நிஷா, கிளம்பியாச்சா…?”
“அதே… நினக்கு டியூட்டியில்லே…?”
“இன்னிக்கு எனக்கு லீவ்…”
“ஓகே, ரெஸ்ட் எடுக்கு… எனிக்கு உச்ச வரே டியூட்டியானு, குறச்சு சாதனங்கள் வாங்கான் உண்டு, ஈவனிங் என்டே கூடே புறத்து வருந்துவோ…” (என்னோட வெளிய வர்றியா)
“நான் எங்கயும் வரலை, நீ போயிட்டு வா…”
“ஹேய்…! எப்பழும் இங்கனே ரூமில் தன்னே குத்திருந்தா பிராந்து பிடிக்கில்லே, (ரூம்லயே உக்கார்ந்திருந்தா பைத்தியம் பிடிக்காதா..) ஜஸ்ட் ஒரு சேஞ்ச்சினு கூடே வந்தூடே…” நிஷாவும் நியதி இங்கே வந்த ஒரு வாரமாய் வெளியே கூப்பிடுகிறாள். இதுவரை அவளுக்கு எங்கேயும் போகத் தோன்றவில்லை. அத்தியாவசியப் பொருட்களுக்கு அந்த அபார்ட்மென்ட் முன்னே சின்னதாய் இருந்த கேசவன் நாயர் மளிகைக் கடையே போதுமாய் இருந்தது.
“இல்ல நிஷா, நீ போயிட்டு வா… இன்னொரு நாள் பார்க்கலாம்…” மறுத்தாள் நியதி.