Advertisement

“நீ கொடுத்தா வாங்கணுமா, வாங்க மாட்டேன்…” என்று பரிசை வாங்க மறுத்தவளிடம் வேறென்ன வேண்டுமென்று கேட்க, எரியும் மெழுகுவர்த்தியைக் கையால் அணைக்க சொல்ல, “அவ்ளோதானே…” என்றவன் எதுவும் யோசிக்காமல் அப்படியே செய்யவும் செய்ய அதிர்ந்து போனாள்.

சூடான மெழுகு கையில் ஒட்டி காயமாக்க, அவள் பதற அவனோ சந்தோஷமாய் கண்ணில் நீர் வர சிரித்தான்.

“வெள்ளக்கோழி, முதன்முறையா நீ பிறந்தநாள் அன்னைக்கு கேட்டதை நிறைவேத்திட்டேன்… நான் ரொம்ப ஹாப்பி…” என்றவனின் கையைப் பதட்டமாய் பற்றி வேதனையுடன் பார்த்தவள் ஊதிக் கொண்டே முறைத்தாள்.

“டேய் லூசுக் கருப்பா, நான் சொன்னதுக்காக பொசுக்குன்னு இப்படிப் பண்ணுவியா…? பாரு, கை வெந்து போச்சு…”

“என்னது, டேய் ஆ, லூஸா, கருப்பனா…?” என்றவன் சந்தோஷமாய் அவளைச் சுற்ற முறைத்தாள்.

“யோவ், உனக்கென்ன கிறுக்குப் பிடிச்சுகிச்சா…?”

“உன் மேல கிறுக்கு தான்…” என்றவன் அவள் கையைப் பற்றி தன்னிடம் இழுக்க, வெகு அருகாமையில் கண்ட அவனது முகம் இன்று ஏனோ பயப்படுத்தவில்லை. அக்கண்களில் நிறைந்திருந்த காதலும், அவனது செயலில் தெரிந்த மென்மையும் அவளுக்குள் ஒரு மாற்றத்தைக் கொடுக்க அவன் முகத்தைக் கண்ணெடுக்காமல் பார்த்தாள் நியதி. அவளிடம் ஒரு தடுமாற்றம் இருந்ததைப் புரிந்து கொண்டவன், “லவ் யூ வெள்ளக்கோழி…” என்றான் மீண்டும்.

பதில் சொல்லாமல் அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டவளின் உடல் சிலிர்ப்பதை இதயத்தில் உணர்ந்தான் அபிமன்யு. அதன் பிறகு பெரியவர்களுக்கு விஷயம் சொல்ல, சந்தோஷமாய் கல்யாணத்துக்கு நாள் குறித்தனர்.

அபிமன்யுவின் சொந்தங்களும், நியதியின் ஆஸ்ரமத்து சொந்தங்களும், நட்பும் வாழ்த்த நியதிக்குப் பிடித்த முருகன் இருக்கும் மருதமலையில் அவர்களின் கல்யாணம் இனிதாய் நடந்து முடிந்தது. அதன் பின் வந்த ஒவ்வொரு நிமிடமும் நியதிக்கு தனது காதலை உணர்த்திக் கொண்டே இருந்தான் அபிமன்யு. எப்பேர்ப்பட்ட காதலை தான் மறுத்திருக்கிறோம் எனப் புரிந்தவளும் அவனிடம் இறுக ஒட்டிக் கொண்டாள்.

பூமியிலேயே சொர்கத்தை உணர்ந்த இரு இளம் நெஞ்சங்களும் காதலில் திளைத்திருக்க, அவர்களைக் கண்ட அன்னையரின் மனமும் சந்தோஷத்தில் நிறைந்திருந்தது. விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்பவளை காலையில் பள்ளியில் இறக்கி விட்டு மதியம் வீட்டுக்கு உணவுக்கு அழைத்துச் செல்ல வந்துவிடுவான்.

அவள் ஆஸ்ரமத்தில் யோகா வகுப்பு எடுக்கையில் அனைவரும் தியானத்தில் இருக்கும் போது அவன் செய்யும் சிலுமிஷங்கள் இன்னும் ஏராளம். அனைவரும் அவர்கள் காதலை சந்தோஷத்துடன் ரசிக்க, விதியின் பார்வை மட்டும் வேறாக இருந்தது. வாழ்வில் இணைந்த ஒவ்வொரு நிமிடமும் தாம்பத்ய சங்கீதத்தை ரசித்து இசைத்துக் கொண்டிருந்தவர்களின் வாழ்கையில் அன்றைய விடியல் கறுப்பு நாளுக்கு அச்சாரமிட்டது.

கணவனின் கையைத் தலையணையாக்கி சுகமாய் உறங்கிக் கொண்டிருந்த நியதியின் காதில் அவனது இதழ்கள் உரச கூச்சத்தில் நெளிந்தவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

“வெள்ளக்கோழி…!”

“ம்ம்…” சிணுங்கியவளின் விரல்கள் அவனது மார்பு ரோமத்தில் விளையாடிக் கொண்டிருக்க, “இன்னிக்கு ஒரு ஸ்பெஷல் டே, என்னன்னு சொல்லு பார்ப்போம்…” என்றான்.

“உங்க பர்த்டே இல்ல, அத்தையோட பர்த்டேவும் இல்ல… வேறென்ன ஸ்பெஷல் டே… ஒருவேளை…” யோசித்தவள், “நீங்க பெரிய பையன் ஆன டே வா…” என்றாள் கிண்டலுடன்.

அவள் தலையில் செல்லமாய் தனது தலையால் முட்டியவன், “அடியே வெள்ளக்கோழி, கொழுப்புடி உனக்கு…” என்றபடி அவளை இடுப்பில் கிள்ள, நெளிந்து அவனிடமே ஒட்டிக் கொண்டவளை ரசித்தபடி, “இன்னைக்கு நமக்கு கல்யாணமாகி ஒரு மாசம் ஆகுது, இதை நாம கொண்டாட வேண்டாமா…?” அவள் மூக்கில் உரசியபடி கேட்டான்.

“என்னது…? அதுக்குள்ள ஒரு மாசம் ஆகிருச்சா…?”

“ம்ம்… இந்த ஒரு மாசத்துல என்னோட வாழ்ந்த வாழ்க்கைல நீ எதுவும் குறையா உணர்ந்திருக்கியா நிதி மா…?”

அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் அப்படியே அமைதியாய் கண் மூடிக் கிடக்க, “உன்கிட்ட தானடி கேக்கறேன்…” என்றவன் அவளை ஆர்வமாய் பார்க்க, கண்ணைத் திறந்தவள் அவன் முகமெங்கும் முத்தமிட்டாள்.

“ஏய்ய்…! என்னடி இன்னைக்கு செம பார்ம்ல இருக்க…? நானா கேட்டாலும் கொடுக்காம பிகு பண்ணுவ…? என்னாச்சு என் நிதிக் குட்டிக்கு…” அவன் அவள் முத்தத்தில் திளைத்தபடி புன்னகையோடு கேட்டான்.

“சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதுடா, என் செல்லக் கருப்பா… நீ…நீ எனக்குக் கிடைச்ச பொக்கிஷம் டா, உன்னை பத்திரமா வச்சுக்கணும்னு கவலையா இருக்கு…”

“ம்ம்… பத்திரமா உன் முந்தானைல முடிஞ்சு வச்சுக்க…” என்றவன் அவளை இழுத்து மேலே போட்டுக் கொண்டான்.

“ப்ச்… அத்தை இன்னும் என்னைக் காணம்னு நினைப்பாங்க…” சிணுங்கி விலக முயல, மேலும் இறுக்கிக் கொண்டவன், “அம்மாக்கு எல்லாம் தெரியும்…” என்றான் சிரிப்புடன்.

“அத்தைக்கு என்ன தெரியும்…? என்ன சொல்லி வச்சிங்க…” என்றவளின் காதில் ஏதோ கிசுகிசுத்தான் அபிமன்யு.

“ச்சீ… நீ ரொம்ப மோசம்டா கறுப்பா, அம்மாட்ட இப்படி எல்லாமா சொல்லுவாங்க…” அவள் சிணுங்க சிரித்தான்.

“ஆமா, அவங்க தான் சீக்கிரமே நம்ம குடும்பத்துக்கு ஒரு வாரிசை ரெடி பண்ணிக் கொடுங்கன்னு சொல்லிட்டு இருந்தாங்க, அதான்… அதுக்கான பிராசஸ்ல இருக்கோம், தினம் காலைல எழுந்து வர முன்னப் பின்ன ஆகலாம், கதவைத் தட்டி எழுப்பிடாதிங்கனு சொல்லி வச்சிருக்கேன்…”

“லூசுக் கறுப்பா…” என்றவள் அவனது அடர்ந்த மீசையை உதட்டில் கடித்து மெல்ல இழுக்க அவன் அலறினான்.

“ஆ… வலிக்குதுடி…!” அவன் முகத்தை சுளிக்க சட்டென்று மீசையைப் பற்றியிருந்த இதழ்கள் அவன் இதழைக் கவ்வி ஒத்தடம் கொடுக்க சமாதானமானான்.

இருவரும் ஒரு வழியாய் எழுந்து குளித்து வெளியே வர சாவித்திரி டிபன் தயாரித்து வைத்திருந்தார். தயக்கமும், கூச்சமுமாய் நியதி நோக்க, அவர் புன்னகையுடன், “ரெண்டு பேரும் டிபன் சாப்பிடுங்க, நான் கோவிலுக்குப் போயிட்டு வந்துடறேன்…” எனக் கிளம்பினார்.

சீண்டலும் சிணுங்கலுமாய் காலை உணவு முடிய, எங்காவது வெளியே கிளம்பலாம் என நினைத்த அபிமன்யுவின் பிளானை ஒரு கஸ்டமர் அழைத்து மாற்றி விட்டார்.

அன்னைக்கு சுகமில்லை, அவசரமாய் ஊருக்குக் கிளம்ப வேண்டும், கார் ஸ்டார்ட் ஆகவில்லை… உடனே சரி செய்து தருமாறு கேட்க, அவனால் மறுக்க முடியவில்லை. மாலை போகலாம் என நியதியும் சொல்ல கிளம்பினான்.

அந்த வேலையை முடித்து மதியம் உணவுக்கு வீட்டுக்கு வந்தவன் மாலை ஷாப்பிங் போய்விட்டு இரவு உணவை ஹோட்டலில் முடித்துக் கொண்டு சினிமாவுக்குப் போகலாம்…” என பிளான் செய்ய நியதிக்கும் சந்தோஷமே.

அபிமன்யுவின் காரை ஒர்க் ஷாப்பில் ஒருவர் வேறு வேலைக்காய் எடுத்துச் சென்றிருக்க, கம்ப்ளெயின்ட் ஆகி சர்வீஸ்க்கு வந்த காரில் வேலை நடந்து கொண்டிருக்க, நேரமானதால் அதை எடுத்துச் சென்றான் அபிமன்யு. நேரம் ஆனது அவனது விதிக்கும் தான் என அப்போது தெரிந்திருக்கவில்லை. பிரேக்கில் கம்ப்ளெயின்ட் இருக்க அவனுக்கு சமாளிக்க முடிந்ததால் நினைத்தது போல் ஷாப்பிங், டின்னர், சினிமா எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

நைட் ஷோ முடிந்து கிளம்ப வழியில் குடியானவர் ஒருவர் தள்ளாடிக் கொண்டே நடந்து வர இந்தப் பக்கம் இரவு நேரம் ஆனதால் சரக்கு லாரிகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க வண்டியை சமாளித்து திருப்பி விட்ட அபிமன்யுவுக்கு அதுவரை ஓரளவுக்கு வேலை செய்த பிரேக் சுத்தமாய் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது புரிய அதிர்ந்தான். அந்தக் குடிகாரன் தள்ளாடியபடி செல்லுவதை வருத்தப்பட்டு பேசிய நியதியிடம் எதும் சொல்லாமல் சிறிது நேரம் சமாளித்தவன் எதிரே சற்று தூரத்தில் வேகமாய் வரும் டிராவல்ஸ் பஸ்ஸைக் கண்டதும் அவள் பக்கக் கதவைத் திறக்க சொல்ல, அவளும் என்னவென்று கேட்காமல் செய்தாள்.

அடுத்த நிமிடம் அவளுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. காரை சற்று சாலை ஓரமாய் செலுத்தியவன் அவளை வெளியே தள்ளி விட்டிருக்க, வேகமாய் ஓடும் காரிலிருந்து விழுந்ததால் அதிர்ச்சியும், காயமுமாய், வலியுடன் இடுப்பைப் பிடித்துக் கொண்டு அலறியவள், அடுத்து கேட்ட சத்தத்தில் அதிர்ந்து நோக்க அபிமன்யுவின் கார் நின்று கொண்டிருந்த சரக்கு லாரியில் வேகமாய் மோத, அவனது தலை இரத்தத்தில் தோய்ந்து கவிழ்ந்திருந்தது.

விழிகள் அதிர்ச்சியில் உறைந்து போக, இறுக்கமாய் மூடிக் கொண்ட இதழ்கள் பிரிய மறுக்க கத்தக் கூட மறந்து உடலும், உயிரும் துடிக்க மயங்கி சரிந்தாள் நியதி. அடுத்து வந்த நாட்கள் எல்லாம் சொல்ல முடியாத் துயரத்திலும், கண்ணீரும், வேதனையிலும் மட்டுமே கழிய, மயக்கத்திலும், உணர்வு வந்தால் அலறித் துடித்து மீண்டும் மயங்கி என்று வாழ்க்கையே போர்க்களமாய் மாறிப் போனது.

பழைய நினைவுகளின் வலியோடு பாத்ரூமில் நின்ற நியதி வாய்விட்டுக் கதறி அழுது கொண்டிருந்தாள்.

இழப்பு என்னும்

ஒற்றை வார்த்தையில்

இருந்து தேர்வதற்கு

ஆயிரம் ஆறுதல்

வார்த்தைகளோடு

வலிகளையும் கடக்க

வேண்டியிருக்கிறது…

Advertisement