Advertisement

 அத்தியாயம் – 17

மதுரையிலிருந்து கோவை நோக்கி அபிமன்யுவின் கார் ஹைவேயில் பறந்து கொண்டிருக்க அவனருகே அமர்ந்திருந்த நியதியின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் சுழல மனம் நிலையில்லாமல் தவித்தது.

அபிமன்யுவின் மேலுள்ள நேசத்தை உணரத் தொடங்கி இருந்தவளுக்கு தோழி மீனாவின் வார்த்தைகள் மேலும் உரமூட்ட அவனைப் பற்றிய யோசனையில் இருந்தாள்.

“கொஞ்சம் முரட்டுத் தனமான ஆண்களின் அன்பும் முரட்டுத் தனமா இருக்கும்னு கேள்விப் பட்டிருக்கேன்… அபிமன்யுவை உனக்குப் பிடிச்சிருக்கு, அவரும் உயிரா இருக்கார், அப்படி இருக்க முரடன்னு நினைச்சு நீ விலகி இருக்க அவசியமே இல்லை… கோபம் இருக்கிற இடத்துல தான் குணம் இருக்கும்னு என் அம்மாவும் சொல்லுவாங்க, இனியும் லேட் பண்ணாம உன் மனசை அவர்கிட்ட சொல்லிடு…”

“ம்ம்… எனக்கும் புரியுது மீனா, ஆனா கொஞ்சம் தயக்கமா இருக்கு…” குழப்பத்துடன் சொன்னவளை,

“அதுக்கான சந்தர்ப்பம் அமையும் போது தயங்காம சொல்லிடு, சீக்கிரமே உங்க கல்யாண இன்விடேஷன் வரணும்…” மிரட்டலாய் அன்புக் கட்டளை விடுத்திருந்தாள்.

கல்யாண மண்டபத்தில் இளம் பெண்களின் கண்கள் ஆர்வமாய் அபிமன்யுவை நோக்க, இளம் நீல நிற முழுக்கை ஷர்ட்டும், அடர் நீலத்தில் ஜீன்ஸும் அணிந்து தாடியை வழித்து, அளவான மீசையோடு கம்பீரமாய் வந்தவனைக் கண்ட நியதியின் விழிகளும் வியப்பில் விரிந்தன.

“ஏய் வெள்ளக்கோழி…! என்ன அப்படிப் பார்க்கற…? இப்படில்லாம் பார்த்தா இப்பவே உன்னைத் தூக்கிட்டுப் போயிடணும் போலத் தோணுது…” அவனே சிரிப்புடன் கேட்கவும் நாணத்துடன் பார்வையை விலக்கிக் கொண்டாள். கல்யாணம் நல்லபடியாய் முடிய தோழிக்கு அவனை அறிமுகப்படுத்த மேடைக்கு அழைத்துச் சென்றாள் நியதி.

அபிமன்யு மணமக்களுக்கு வாழ்த்துக் கூறி கையிலிருந்த பரிசுப் பொருளைக் கொடுக்க நன்றி கூறி வாங்கிக் கொண்ட மீனா, “சீக்கிரமே நீங்களும் இப்படி மணமேடையில் நிக்கறதைப் பார்க்க ஆசையா இருக்கு நியதி, அபி அண்ணா ரொம்ப ஹான்ட்சமா உனக்குப் பொருத்தமா இருக்கார்…” என்றாள் நிறைந்த மனதுடன்.

அவளது தோழியர் சிலர் அபிமன்யுவிடம் ஆர்வமாய் பேச நியதிக்கு ஏனோ வயிற்றில் புகை வந்தது. அவள் காதில் ஒருத்தி சார் சிங்கிளா எனக் கேட்க முறைக்கவும் செய்தாள். அவனை விட்டு விலகினால் யாரும் கொத்திக் கொண்டு போய் விடுவார்களோ என்பது போல் கூடவே இருந்தாள். விருந்து சாப்பிட்டதும் விடை பெற்று கிளம்பினர்.

“வெள்ளக்கோழி…!”

“ம்ம்…”

“இன்னைக்கு நல்ல முகூர்த்த நாள் போலருக்கு…”

“ம்ம்…”

“நீ வேற இந்த சேலைலயும், அலங்காரத்துலயும் ரொம்பவே அழகா கல்யாணப் பொண்ணு போலருக்க…”

“சரி, அதுக்கு…”

“இல்ல, மீனாட்சி அம்மன் கோவில் கூட பக்கத்துல தான்… அப்படியே அங்க போயி…”

“அங்க போயி…” என்றாள் புருவம் சுருங்க.

“இப்பவே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லவா முடியும், சாமி கும்பிட்டு போகலாமான்னு கேக்க வந்தேன்…”

“ம்ம் போகலாம்…” அவள் சம்மதிக்கவும் முகம் மலர்ந்தான். கோவிலுக்கு சென்று மதுரையை ஆளும் மீனாட்சி அன்னையை மனதாரப் பிரார்த்தித்து சீக்கிரமே இருவரும் தம்பதியராய் வந்து வணங்க அருள் புரியும்படி வேண்டிக் கொண்டு கிளம்பினர். வழியில் மதுரையின் சிறப்பான ஜிகர் தண்டாவை அபிமன்யு வாங்கிக் கொடுக்க சிறிது குடித்தவள் போதுமென்று சொல்லிவிட, சிறிதும் கூச்சமின்றி அவள் மீதியைக் குடித்தவனை கண்களில் திகைப்பும், மனதில் காதலுமாய் அவள் கவனிக்கவே செய்தாள்.

காரில் கிடைத்த தனிமையில் அவனிடம் பேசிவிடலாமா என யோசித்தாலும் தயக்கமும், கூச்சமும் அணை போட அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

ஹைவேயில் சீரான வேகத்தில் கார் ஓட இதமாய் ஒலித்த இளையராஜாவின் பாடல்களில் மனம் மயங்க, மனதுக்குப் பிடித்தவனின் அருகாமையும் சேர அந்த சூழ்நிலை மிகவும் ரம்மியமாய் இருப்பதாய் உணர்ந்தாள்.

“வெள்ளக்கோழி…”

“ம்ம்…”

“தேங்க்ஸ்…” என்றவனைப் புரியாமல் பார்த்தாள்.

“எதுக்கு…”

“நேற்றும், இன்றும் என் வாழ்வில் மறக்க முடியாத நாளா மாத்தினதுக்கு…” அவன் சொல்ல சட்டென்று சிவந்தவள் மறுக்கத் தோன்றாமல் பார்வையை வெளியே ஓட்டினாள்.   அவன் கவனிக்காதபோது அருகே அமர்ந்திருந்தவனை அடிக்கண்ணால் ரசிக்கவும் செய்தாள்.

“வெள்ளக்கோழி…! எவ்ளோ நேரம் தான் வெளில பார்த்திட்டு இருப்ப, தூக்கம் வந்தா தூங்கு…” என்றான் அபிமன்யு.

“இல்ல, தூக்கம் வரல…” என்றவள் அவனைப் பற்றி தனக்குள் இருந்த தயக்கங்களை அலசி தெளிவு படுத்திக் கொண்டே வர, சுகமான காற்றும், உண்ட விருந்தும், முன்தினம் தூங்கா இரவும் அப்படியே அவளைக் கண்ணயர வைக்க தன்னை மீறி உறங்கிப் போயிருந்தாள்.

சேலை கட்டிய பொம்மை ஒன்று அழகாய் தலை சாய்த்து உறங்குவது போல் தன்னருகே சீட்டில் சாய்ந்து, லேசாய் இதழ் விரித்து உறங்குபவளை மென்மையாய் பார்த்த அபிமன்யுவின் இதழ்கள் மலர்ந்தன.

“இவ்ளோ தூக்கத்தை வச்சிட்டு தூக்கம் வரலேன்னா சொல்லுற, வெள்ளக்கோழி…” இனிதாய் திட்டியவன் வண்டியை ஓரமாய் நிறுத்தி அவளுக்கு சீட் பெல்ட்டை அணிவித்துவிட்டு வண்டியை எடுத்தான்.

ஒர்க் ஷாப்புக்கு விற்பனைக்கு வந்த கார் ஒன்றை விலை பேசவே அபி அதன் ஓனரைக் காண மதுரை வந்திருந்தான். அவன் எதிர்பார்த்த விலைக்கு அந்தக் காரைத் தர அவர் ஒத்துக் கொள்ள அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தான்.

“வெள்ளக்கோழி…! நீ என்னோட ஒருநாள் வந்ததுக்கே நல்ல கார் நான் கேட்ட விலைக்குக் கிடைச்சிருக்கு, நீ எப்பவும் என்னோட இருந்தா நான் என்னெல்லாம் சாதிப்பேன்…”

யோசித்தவன் புன்னகையுடன் அவள் முகத்தைப் பார்த்தான். கள்ளம் கபடமில்லாமல் இதழில் சிறு மென்னகையுடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை அப்படியே அள்ளி நெஞ்சோடு போட்டுக் கொள்ள மனம் துடித்தது.

“வெள்ளக்கோழி…! எப்படி டி எனக்குள்ள இப்படி பதிஞ்சிருக்க, எப்ப என் மேல உனக்குள்ள காதலை ஒத்துக்கப் போற…” சீக்கிரம் சொல்லுடி, மாமா வெயிட்டிங்ல இருக்கேன்…” தானே யோசித்து சிரித்தபடி வண்டியை விட்டான்.

“வெள்ளக்கோழி…” குகைக்குள் இருந்து பேசுவது போல் காதுக்குள் கிசுகிசுப்பாய் கேட்ட குரலில் கண்ணைக் கஷ்டப்பட்டுத் திறந்தவள் மலங்க விழித்தாள்.

சூழ்நிலை புரிய இருட்டத் தொடங்கியதைப் பார்த்தவள், “இது என்ன இடம்…” எனக் கேட்க, “கோவை ரீச் பண்ணியாச்சு…” அவன் சிரிப்புடன் சொல்ல, திகைத்தாள். “அவ்ளோ நேரமா தூங்கிட்டோம்…” யோசிக்கவே கூச்சமாய் இருந்தது.

“ப்ச்… அசதில தூங்கிட்டேன் போல, எழுப்பி இருக்கலாம்ல…”

“அசதில தூங்கறன்னு தான் எழுப்பலை, காபி எதுவும் வேணுமா…?” என்றான் கனிவுடன்.

“ம்ம்…” என்றாள் மறுக்காமல். ஒரு சின்ன ஹோட்டலில் நிறுத்தி இரண்டு பேப்பர் கப்பில் காபியும், அவனுக்கு இரண்டு வடையுடனும் வந்தான்.

“எனக்கும் வடை வேணும்…” என்றவளைத் திகைப்புடன் பார்த்து தோளைக் குலுக்கியவன் ஒரு வடையை நீட்டினான். எடுத்து சாப்பிட்டு காபியும் குடிக்க உற்சாகமாய் இருந்தது.

அவள் “தேங்க்ஸ்…” என, “வடைக்கா…?” என்றவனிடம்,

“இல்ல உங்களுக்கு…” துடுக்குடன் சொன்னவள் மேலே பேசாமல் அமைதியானாள். அவளது பதில் அவனுக்குப் புன்னகையைக் கொடுக்க மனம் சந்தோஷமாய் இருந்தது.

அவளை ஆஸ்ரமத்தில் இறக்கி விட்டு வீட்டுக்கு சென்றான் அபிமன்யு. அவன் சென்ற பின்னும் அவனது அருகாமையை, மனம் பாதுகாப்பாய் உணர்வதை வெகு நேரம் உணர்ந்தவள் அம்பிகை வரவும் எழுந்து அவரைக் கட்டிக் கொண்டாள்.

“அம்மா…!”

“என்னடா… பயணம் எப்படி இருந்துச்சு…? மீனா கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா…?”

“ம்ம்… சூப்பரா முடிஞ்சுது மா, பயணமும் நல்லாருந்துச்சு…”

“ஆஹா…! அபியோட போயிருக்க, வந்ததும் வண்டி வண்டியா குற்ற அறிக்கை வாசிக்கப் போறேன்னு நினைச்சேன்…”

“ப்ச்… அவன் சரியா இருந்தா நான் ஏன் குத்தம் சொல்லப் போறேன், இந்த முறை எந்த வம்பும் பண்ணலை…” என்றவள் முகத்திலிருந்த மென்மை அந்த அன்னையின் கண்ணுக்குத் தெரியாமலில்லை. புன்னகையுடன் நகர்ந்தார்.

அடுத்து வந்த நாட்கள் அபி அவள் கண்ணில் படவில்லை. குடும்பத்தில் ஏதோ விசேஷத்துக்கு சாவித்திரியை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்றிருப்பதாய் அம்பிகை சொல்ல, “கருப்பன்…! என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாமப் போயிருக்கான்…” என பொருமவும் செய்தாள்.

அந்த வார இறுதியில் வந்த அவளது பிறந்த நாள் அன்று இரவு தான் அபி அவளது அறைக்கு சென்று அறையெங்கும் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து, கேக் கட் பண்ண வைத்து அவளுக்குப் பரிசாய் ஆசையுடன் ஒரு தங்க சங்கிலியை பரிசளித்தான். ஒரு வாரம் காணாத பிரிவின் ஏக்கத்தில் அவளைக் கண்டதும் காதில் லவ் யூ சொல்லி மெல்ல அணைக்கவும் செய்ய மனதுள் ரசித்தாலும் விலக்கினாள்.

Advertisement