Advertisement

“அவ்ளோ தானே, நான் உரிச்சுத் தரேன்…” சொன்னவன் அவள் மறுப்பை சட்டை செய்யாமல் கீழே இறங்கி பத்து நுங்கை விலை கேட்டு வாங்கினான்.

காரில் அமர்ந்தவன் ஒரு நுங்கை அழகாய் தோலுரித்து அவளிடம் நீட்ட வியப்புடன் வாங்கிக் கொண்டாள்.

“பரவால்லியே, இதெல்லாம் கூட நல்லா செய்யறிங்க…”

“என் வெள்ளக்கோழிக்கு பிடிச்சதை செய்ய எனக்கு கசக்குமா என்ன…?” அவனது கேள்வியில் அவள் அமைதியானாள். அடுத்தடுத்து அவன் வேகமாய் நுங்கை தோலுரித்துக் கொடுக்க ஐந்தை உள்ளே தள்ளியவள், “போதும், இனி நீங்க சாப்பிடுங்க..” என்றாள் பெரிய மனதுடன்.

மீதியிருந்ததை அவளிடம் நீட்டியவன், “இப்படி அங்கங்கே நிறுத்தினா மதுரை போக லேட்டாகிரும், இதை நீ மெதுவா உரிச்சு எனக்குக் கொடு, சாப்பிடறேன்…” சொன்னவன் பாட்டிலில் இருந்த தண்ணீரில் கையைக் கழுவிக் கொண்டு வண்டியை எடுத்தான்.

அதை மறுக்க முடியாமல் மெல்ல நுங்கைத் தோலுரித்து அவனிடம் நீட்ட, “அச்சோ, என் கைல ஆனா மறுபடி நான் கை கழுவணுமே… அப்படியே நீயே என் வாயில போடேன்…” அவன் சொல்லவும் முறைத்தவள்,

“கருப்பனுக்கு கொழுப்பு தான், நல்லா வாயிலயே நாலு போடணும்…” மனதுள் சொல்லிக் கொண்டாலும் அவன் வாயருகே நுங்கைக் கொண்டு செல்ல அழகாய் விரல் படாமல் வாங்கிக் கொண்டான். அது அவளது தயக்கத்தைப் போக்க மீதியும் உரித்துக் கொடுத்தாள்.

கையைக் கழுவி தண்ணியைக் குடித்தவளுக்கு சிறிது நேரம் வெளியே வேடிக்கை பார்ப்பதற்குள் கண்கள் சொருகியது.

அப்படியே சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொள்ள, “வெள்ளக்கோழி, சீட் பெல்ட் போட்டுட்டு, தூக்கம் வந்தாத் தூங்கு…” என்றான் அபிமன்யு.

“இல்ல, சும்மா ஒரு அஞ்சு நிமிஷம் இப்படிப் படுக்கறேன்…” சொன்னவள் சீட்டில் தலை சாய்த்து மெல்ல கண்களை மூட உறங்கிப் போனாள். மீண்டும் கண்ணைத் திறக்கையில் அந்தி சாயத் தொடங்கியிருந்தது. சுற்றிலும் பார்த்தபடி சோம்பல் முறிக்க சீட் பெல்ட் போடப் பட்டிருந்ததில் திகைத்தாள்.

“என்ன வெள்ளக்கோழி, தூக்கம் தெளிஞ்சிருச்சா…? காபி ஏதாவது குடிக்கறியா…?” அபிமன்யு கேட்டான்.

“எ..எனக்கு நீங்களா சீட் பெல்ட் போட்டு விட்டிங்க…?”

“ஆமா, இதுக்காக வேற யாரையும் கூட்டிட்டு வர முடியுமா, நீ தூக்கத்துல சரிஞ்சு என் தோள்ல விழுந்து வைப்ப… அப்புறம் கண்ணைத் திறந்து பார்த்திட்டு நானே உன்னை என் தோள்ல சரிச்சுகிட்ட போல சீன் கிரியேட் பண்ணி என்னை வில்லன் லுக் உடுவ, எதுக்கு வம்புன்னு தான் நானே சீட் பெல்ட் போட்டு விட்டேன்…” அவன் சொல்ல அதை யோசித்தவள் முகம் நாணத்தில் சிவந்தது.

அவள் அமைதியாய் குனிந்திருக்க, “இந்த மாதிரி லாங் டிரைவ்ல எப்பவும் சீட் பெல்ட் போடணும் வெள்ளக்கோழி, அதான் பாதுகாப்பு…! தலை ஒரு மாதிரி இருக்கு, காபி குடிச்சிட்டுப் போகலாம்…” சொன்னவன் அடுத்து வந்த ஹோட்டலில் வண்டியை நிறுத்தினான்.

சூடாய் வடை, பஜ்ஜி போட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட அபிமன்யு, “ஏதாவது சாப்பிடறியா…? என்றான்.

“இல்ல, காபி மட்டும் போதும்…”

“ப்ச்… ஒரு வடை சாப்பிட வயித்துல இடம் இருக்காதா…?” கேட்டுக் கொண்டே ரெண்டு மசால் வடை, ரெண்டு காபி…” என ஆர்டரும் கொடுத்தான்.

“இந்த மாதிரி ஆயிலி புட் எடுத்துக்கிறதில்லை…” அவள் மறுக்க, “ஓகே, உன்னோடதும் நான் சாப்பிட்டுக்கறேன்…” என்றவன் அவளது வடையையும் சுவாகா செய்துவிட்டு காபியைக் குடித்து எழ கிளம்பினர்.

அவள் அமைதியாகவே இருக்க அவன் கேட்டான்.

“ஏன் வெள்ளக்கோழி, உனக்கு இன்னுமா கோபம் போகல…”

“என்ன கோபம்…? கோபமிருந்தா உங்களோட வருவனா…?”

“அப்புறம் ஏன் எப்பவும் என்னோட எல்லாருகிட்டயும் பேசற போல இயல்பா பேசாம சிடுசிடுன்னு பேசிட்டிருக்க…”

“அதென்னவோ, உங்ககிட்ட அப்படி தான் பேச வருது…” என்ற அவளுக்குமே அதை யோசிக்கையில் கஷ்டமாய் இருந்தது.

“ம்ம் வரும்டி வரும், வெள்ளக்கோழி…” முணுமுணுக்க அவள் காதிலும் அது விழ உதடுகள் புன்னகையில் நெளிய முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“நல்லாருக்கு…”

“எது…?”

“நீங்க சொன்னது…”

“நான் என்ன சொன்னேன்…?” யோசித்தவனுக்கு ‘வெள்ளைக் கோழி…’ என்று எப்போதும் தானே அழைக்கிறோம் எனத் தோன்றியது. அவர்கள் மதுரை மண்டபத்தை அடைகையில் நிச்சதார்த்த விழா தொடங்கியிருந்தது.

கல்லூரி நண்பர்கள் நிறைய பேர் வந்திருக்க, நியதியுடன் படித்த நண்பர்கள் சிலர் முன்னில் பேசிக் கொண்டிருக்க, இவளைக் கண்டதும் புன்னகைத்து அருகே வந்தனர்.

“ஹேய் நியதி… ஹவ் ஆர் யூ…?” அவர்கள் நலம் விசாரித்து பேச்சைத் தொடங்க, அபிமன்யு காரை நிறுத்திவிட்டு பாவமாய் நின்றிருந்தான். சிறிது நேரம் காத்திருந்தவன் அவளிடம் சொல்லாமல் கிளம்ப மனமில்லாமல் அவளிடம் வந்தான்.

“நியதி…! நான் கிளம்பட்டுமா…?” அவன் கேட்கவும், நியதியின் தோழியர் அப்போதுதான் அவனை கவனித்தனர்.

“ஹேய்…! ஹூ ஈஸ் திஸ் ஹாண்ட்சம்…?” ஒருத்தி நியதியின் காதில் கிசுகிசுப்பாய் கேட்டாள்.

“அபி…! வாங்க…” என்றவள், “இது கீதா, ஸ்வாதி, இவர் மதி… வெங்கட், இது ரீனா…” என அறிமுகப் படுத்தினாள்.

“இவர் அபிமன்யு… எ..எங்க பாமிலி பிரண்ட்…” என அவனையும் நண்பர்களுக்கு அறிமுகம் செய்தாள்.

“ஹலோ சார், உள்ள வாங்க…” அவர்கள் அழைக்க, “இல்ல, நான் நாளைக்கு வரேன், கிளம்பறேன்…” மறுக்கவும், அவன் கிளம்பப் போகிறான் என நினைக்கவே நியதிக்கு கஷ்டமாய் இருக்க தயக்கத்துடன் அவனை நோக்கி நின்றாள்.

அவளை ஆறுதலாய் பார்த்தவன், “நியதி, பத்திரமா இரு, நான் காலைல வந்துடறேன்…” என்றான்.

“அபி, மீனாக்கு உங்களை அறிமுகப்படுத்தணும், இங்க சாப்பிட்டே கிளம்பலாமே…” என்றாள் அக்கறையுடன்.

“இல்ல மா, நான் பார்த்துக்கறேன்… யூ என்ஜாய் அண்ட் டேக் கேர்…” சொன்னவன் காரை நோக்கி நடக்க, அவனைத் தடுத்து தன்னுடனே இருக்க சொல்ல, அரற்றிய மனதின்  துடிப்பை முதன் முறையாய் நியதி உணர்ந்தாள்.

என்னதான் நண்பர்களுடன் பழைய விஷயம் பேசி இனிக்க இனிக்க அரட்டை அடித்தாலும், “அபி எங்கே சாப்பிடுவான், எங்க ரூம் எடுத்து தங்குவான், ஐயையோ எதுவும் கேக்காம விட்டுட்டோமே…” என்று அவனைச் சுற்றியே எண்ணங்கள் செல்ல அவனது அருகாமையை மனம் மிஸ் பண்ணுவதை வியப்புடன் உணர்ந்தாள்.

நிகழ்ச்சி முடிந்து மீனாவும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள, அறிமுகப்படுத்தலும், உபசரிப்பும், கலகலப்புமாய் நேரம் சிறப்பாகவே கடந்தாலும் ஒரு குறை போல் அபிமன்யு இல்லாத உணர்வு மனதை அரித்துக் கொண்டே இருந்தது.

அடுத்தநாள் காலையில் அம்பிகை ஆசையாய் வாங்கிக் கொடுத்த மயில்ப் பச்சை வண்ண சாப்ட் பட்டில், கான்ட்ரஸ்டாய் ஆகாசநீல பார்டருடன் கழுத்தை இறுகப் பிடித்த ஆன்டிக் நெக்லஸில் தோழியின் வற்புறுத்தலில் அழகு நிலையப் பெண்ணின் கைங்கர்யத்தில் செய்த இதமான மேக்கப்பில் தேவதையாய் மின்னினாள் நியதி.

“வாவ் நியதி…! யூ லுக் கார்ஜியஸ்…! இத்தனை அழகை எங்களுக்கு காட்டாம இவ்ளோ நாளா ஒளிச்சு வச்சிருக்க… இப்படி லட்சணமா புறப்படறதை விட்டுட்டு நெத்தில ஒரு ஸ்டிக்கர் பொட்டை மட்டும் தொட்டுட்டு உன் அழகை கவனிச்சுக்கவே மாட்டேங்கற… எல்லாருக்கும் நான் கல்யாணப் பொண்ணா, நீயான்னு டவுட்டே வரப் போகுது பாரேன் …” நிறைந்த மனதுடன் சொல்லி தோழியின் கன்னம் வழித்த மீனாவைக் கண் நிறையப் பார்த்தாள் நியதி.

“உன் மனசு பேரழகு மீனா, அதான் என்னை இப்படிப் பார்க்க சந்தோஷப்படற…” என்றவளின் குரல் நெகிழ்ந்திருந்தது.

“அதெல்லாம் இருக்கட்டும், என்னாச்சு உன்னோட பழைய கிரஷ் விஷயம், இப்பவும் டாம் அண்ட் ஜெரியா தான் இருக்கிங்களா, இல்ல ராசியாகிட்டிங்களா…?”

“ப்ச்… அப்படியே தான் இருக்கோம்…” என்றவளின் குரல் மெலிந்து முகம் தவிப்புடன் குனிந்தது.

“என்னடி, உனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்னு சொல்லுவ…” மீனாவுக்கும் அபிமன்யு பற்றிய விஷயங்கள் ஓரளவு தெரியுமென்பதால் நியதி ஓப்பனாக பேசினாள்.

“பிடிக்கும், ஆனா அவனைப் பக்கத்துல பார்த்தாலே எனக்கு கோபம் வந்திருது, எரிஞ்சு விழுந்துட்டே இருக்கேன்… அவனோட இயல்பா பேச முடியல, ஆனா அவன் பக்கத்துல இல்லாதப்ப மனசு அவனையே தேடுது…”

நியதியின் கையை ஆதரவாய்ப் பற்றிக் கொண்ட மீனா, “ஹாஹா, மண்டு, அதுக்குப் பேரு தான் காதல்… உன்னையும் அறியாம உன் உள் மனசு அவரை விரும்பிட்டு இருக்கு, இந்த வாய்தான் அதைப் புரிஞ்சுக்காம சும்மா சண்டை போட்டுட்டு இருக்குன்னு நினைக்கறேன்…” என்றவளை வியப்புடன் விழிகள் விரியப் பார்த்தாள் நியதி. அந்தப் பார்வை அவளும் அதை உணரத் தொடங்கி இருந்ததை மீனாவுக்கு உணர்த்த, “சீக்கிரமே மனம் விட்டுப் பேசுங்க, எல்லாம் சரியாகும்…” என்றாள்.

அதற்குள் கதவு தட்டப்பட அவர்கள் பேச்சு நின்றது. கல்யாண மேடைக்கு மீனாவை அழைத்துச் சென்றனர். நியதியின் உடல் அங்கே இருந்தாலும் அபிமன்யு எப்போது வருவான் என உள்ளம் தவித்துக் கொண்டிருந்தது.

“ஏய்…! அங்க பாரு, அந்த ப்ளூ ஷர்ட், ஆளு கறுப்பா இருந்தாலும் களையா இருக்கான்ல…” பின்னில் இரு பெண்கள் யாரையோ சைட் அடித்துக் கொண்டிருப்பது புரிய எதார்த்தமாய் திரும்பியவள் இனிதாய் அதிர்ந்தாள்.

பெண்மையின்

பலவீனங்கள் புரிந்தும்

பயன்படுத்தாமல்

புரிதலுக்காய்

காத்திருக்கும்

ஆண்மகனின் அன்பில்

தாய்மையின்

பாசப் பேரூற்று

நிறைந்துள்ளது…

Advertisement