Advertisement

அத்தியாயம் – 16

நியதி அபிமன்யுவை வீட்டில் சென்று கண்டு வந்த பின்னர் மேலும் சில சம்பவங்கள் அவள் மனதில் அவன் இருப்பதை தெளிவாய் அவளுக்கு உணர்த்தி விட்டன.

அம்பிகைக்குப் பின்னர் நியதி தான் ஆஸ்ரமத்தின் எல்லா வேலைகளிலும் அவருக்கு உதவி செய்து வந்திருந்தாள். ஒரு முறை அம்பிகைக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆசுபத்திரியில் அட்மிட் ஆனபோது தனக்கு நிறைய வேலைகள் இருந்தாலும் நியதியைத் தனியே தவிக்க விடாமல் ஆஸ்ரமத்திலும், ஆசுபத்திரியிலுமாய் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுப் பார்த்துக் கொண்டது அபிமன்யு தான். அவனது அன்னை சாவித்திரிக்கு மூட்டு வலி இருப்பதால் அவரால் அதிகம் உதவ முடியாது.

“எனக்கு கடவுள் கொடுத்த பரிசுதான் நீயும், அபியும்… என் பிள்ளைங்களா எல்லாத்தையும் பொறுப்பா பார்த்துகிட்டீங்க…”

அம்பிகை மனம் நெகிழ சொல்கையில் நியதிக்குமே அவன் மேல் ஒரு கரிசனமும் அன்பும் தோன்றியது. அவனது உருட்டுக்கும், மிரட்டுக்கும் பயந்து ஆஸ்ரமத்திலும், ஒர்க்ஷாப்பிலும் எல்லாரும் அவரவர் பணிகளை சிறப்பாகவே செய்ய அவன் எங்கு இருந்தாலும் வேலை நடந்தது.

“கருப்பனைக் கண்டா எல்லாருக்கும் பயம் தான் போல… போன்லயே விரட்டுறானே…” நியதி நினைத்துக் கொள்வாள்.

இன்னொரு முறை நியதி ஆசையாய் வளர்த்திய ரோஜாப் பூ பட்டுப் போக அதைக் கண்டு வருந்தியவளின் முகம் மலரும் வகையில் நான்கைந்து வண்ணங்களில் அடுத்த நாளே ரோஜாச் செடிகள் பூக்களுடன் தொட்டியில் நின்றது. அது அவள் மேல் கொண்ட அன்பால் அவன் செய்தது என்று தெரிந்தாலும் தேங்க்ஸ் மட்டும் சொல்லி நகர்ந்து விட்டாள்.

“கருப்பனும் இந்த ரோஜாச் செடி போலத்தானோ… மென்மையான பூவும், குத்துற முள்ளுமா ரெண்டு குணம்…” தனக்குள் நினைத்துக் கொண்டு குழம்புவாள் நியதி.

ஒரு முறை நியதியுடன் படித்த கல்லூரித் தோழி மீனா திருமணத்திற்கு நிச்சயம் வர வேண்டுமென்று நேரில் வந்து அழைத்திருந்தாள். நியதிக்கு அவளை மிகவும் பிடிக்கும்.

சிறு வயது முதலே சில மாணவிகள் நியதி யாருமில்லாமல் ஆஸ்ரமத்தில் இருந்து மெரிட்டில் படிப்பதை இளக்காரமாய்  பேசுவது புரிய இவள் பொதுவாகவே எல்லாரிடமும் ஒதுங்கியே இருந்தாள். ஆனால் கல்லூரி வாழ்க்கையில் அவளுக்குக் கிடைத்த நல்ல ஒரு தோழிதான் மீனா.

நியதியை வாய் நிறைய பெருமையாய் எல்லாரிடமும் சொல்லுவதோடு அவளுக்குத் தேவையான சின்னச் சின்ன உதவிகளையும் செய்து கொடுப்பாள். பணக்கார வீட்டுப் பெண்ணான மீனாவே நியதியிடம் தோழமையோடு பழக மேலும் சிலரின் நட்பும் கல்லூரியில் கிடைத்தது.

நியதியின் கல்லூரி வாழ்க்கையை வண்ணமயமாக்கியதில் மீனாவுக்கும் நிறையப் பங்குண்டு. எனவே அவளது திருமணத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டுமென்று நியதி நினைத்தாலும் கல்யாணம் நடப்பது அவளது பூர்வீகமான மதுரையில் என்பதால் யோசனையாய் இருந்தது.

அம்பிகையிடம் தயக்கத்துடனே அனுமதி கேட்க, “அட… மீனாப் பொண்ணு நேர்லயே வந்து அழைச்சிருக்கா, போகலனா நல்லாருக்காது… இப்பதான் நம்ம அபி மதுரைல ஏதோ வேலையாப் போகப் போறதா சாவித்திரி சொல்லிட்டு இருந்தா… உனக்குத் துணையுமாச்சு, நீயும் அவனோடவே போயிட்டு வந்திரு நியதி மா…” என்றார் அம்பிகை.

அன்னை மறுப்பார் என்று அவள் நினைத்திருக்க அவர் உடனே சம்மதித்ததில் மகிழ்ந்தாலும், “அந்தக் கருப்பனோடு எப்படிப் போறது…” என யோசிக்கவும் செய்தாள்.

“என்னடா நியதி யோசிக்கற…? அபி கூடப் போக உனக்கு பயமா இருக்கா…? எனக்கும் இங்க நிறைய வேலை இருக்கு கூட வர முடியாது… பழக்கம் இல்லாத ஊருக்கு உன்னைத் தனியா அனுப்பவும் முடியாதே…”

அவர் சொல்லவும் யோசித்தவள், “அவனோட போக மாட்டேன்னு சொன்னா அம்மா தனியா போக வேண்டாம்னு சொல்லிடுவாங்க… அவன் என்ன..? என்னைக் கடிச்சா தின்னுடப் போறான், சரின்னு சொல்லிடலாம்…” யோசித்தவள் சம்மதமென்று தலையாட்டினாள்.

அபிமன்யுவிடம் அம்பிகை சொல்ல அவன் முகம் மலர்ந்தது.

“நீங்க கவலையே படாதீங்க ஆன்ட்டி… நியதியை பத்திரமா அழைச்சிட்டுப் போயிட்டு வர்றது என் பொறுப்பு…” என்றவனை நோக்கிப் புன்னகைத்தார் அம்பிகை.

“டேய் அபி, இது ஒரு நல்ல சந்தர்ப்பம்… உன்னை நம்பி பொண்ணை அனுப்பறேன்… இப்பதான் அவளுக்கு உன் மேல கொஞ்சம் சாப்ட்னஸ் வரத் தொடங்கிருக்கு, லவ்வைப் புரிய வைக்கிறேன்னு ஏதாச்சும் எக்குத் தப்பா பண்ணி உள்ளதும் போச்சுடானு வெறுப்பை வளர்த்தி விட்டுடாத… பார்த்து மென்மையா நடந்துக்க…” என்றார் அம்பிகை.

“ஆன்ட்டி… நீங்க தெய்வம்…! என் லவ்வை அவளுக்குப் புரிய வைக்கறனோ இல்லையோ, என்  மேல உள்ள வெறுப்பை இல்லாமப் பண்ணற போல பக்குவமா நடந்துக்கறேன்… உங்க நம்பிக்கை போல அவளை பத்திரமா கூட்டிட்டுப் போயிட்டு வர்றேன்…” என்றான் அவன் நம்பிக்கையுடன்.

அடுத்த நாள் மதிய உணவு முடிந்து இருவரும் மதுரை கிளம்ப, தயக்கத்துடனே அபிமன்யு கொண்டு வந்த காரில் பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள் நியதி. இரவு மீனாவின் நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்டு அவளுடன் மண்டபத்திலேயே தங்க நியதி நினைத்திருந்தாள். மறுநாள் காலை கல்யாணம் முடிந்து அபிமன்யுவும் வேலை முடிந்து வந்ததும் இருவரும் திரும்ப நினைத்திருந்தனர்.

“பத்திரமா போயிட்டு வாடா, அபி இல்லாம எங்கயும் போயிட வேண்டாம்…” அம்பிகை சொல்ல முறைத்தவள், “பாத்ரூம் போகணும்னாலும் உங்க அபிகிட்ட சொல்லிட்டே போறேன், போதுமா…?” என்றாள் புன்னகையுடன்.

“அபி…! நியதியைப் பார்த்து பத்திரமா கூட்டிட்டுப் போடா… வண்டியை மெதுவா ஓட்டு…” என்ற சாவித்திரியிடம்,

“நான் வேணும்னா இறங்கித் தள்ளிட்டுப் போகட்டுமா மா, எத்தனை தடவ தான் சொல்லுவிங்க… நான் என் நியதியைப் பார்த்துக்க மாட்டேனா…?” என்றவனின் பார்வை காதலுடன் அவளைத் தழுவ அவளோ கண்டு கொள்ளாமல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்னையரிடம் விடைபெற்று காரை எடுத்த அபிமன்யு நடுவில் இருந்த கண்ணாடியை சரி செய்து வைக்க அதை கவனித்தவள் கடுப்புடன் திரும்பிக் கொண்டாள்.

எப்போதும் கண்ணுக்கு உறுத்தாமல் வெளிர் நிறங்களையே அதிகம் அணியும் நியதி இன்று கருஞ்சிவப்பில் சின்ன மஞ்சள் பூக்கள் எம்பிராய்டரி செய்யப்பட்ட காட்டன் சுரிதாரை அணிந்திருக்க அந்தக் கலர் அவளுக்கு பளிச் லுக்கைக் கொடுத்திருந்தது.

சீரான வேகத்தில் காரை செலுத்தி பிரதான சாலையில் கலந்தவன் அவ்வப்போது கண்ணாடி வழியே அவளைப் பார்ப்பது புரிய எரிச்சலுடன் கேட்டாள்.

“எதுக்கு இப்படி கண்ணாடில என்னைப் பார்த்துட்டே இருக்கீங்க, ரோட்டைப் பார்த்து வண்டியை ஓட்டுங்க…” பெண் புலியாய் சீறியவளை நோக்கி சிரித்தான்.

“இந்த கலர் உனக்கு ரொம்ப நல்லாருக்கு வெள்ளக் கோழி, கண்ணாடில இருந்து என் கண்ணை எடுக்க முடியலையே…”

“ப்ச்… சகிக்கல, உங்களைப் பத்தி தெரிஞ்சும் உங்களோட வர அம்மாட்ட சம்மதிச்சனே… என்னைச் சொல்லணும்…”

“என்ன வெள்ளக்கோழி, இப்படி சலிச்சுக்கற…? அழகை ரசிக்கிறது அவ்ளோ பெரிய தப்பா…?”

திகைத்தவள் “பொண்ணை வெறிக்க வெறிக்கப் பார்க்கறது தான் உங்க ஊருல ரசிக்கறதா…?” என்றாள்.

“சேச்சே…! தப்பு தப்பு…! நான் என்னவோ எல்லாப் பொண்ணுங்களையும் ரசிக்கிற போல அபாண்டமா சொல்லறியே வெள்ளக்கோழி, நான் எனக்கு சொந்தமான என் வெள்ளக்கோழியை மட்டும் தான் ரசிப்பேன்…”

“ப்ச்… என்னை யாரும் உங்களுக்கு எழுதித் தரலை… சொந்தமாம், சொந்தம்…” அவள் வெடுக்கென்று சொல்ல அவன் முகம் வாடியது.

“உனக்கு நிஜமாலுமே என் மேல பிரியம் இல்லியா, நியதி…” அவன் வார்த்தைகள் சீரியஸாய் ஒலிக்க, அழைப்பும் நியதியாய் மாறியிருந்தது. அது ஏனோ அவளால் உள்கொள்ள முடியாமல் பதில் சொல்லாமல் அமைதியாய் இருக்க அவன் கண்ணாடியில் பதிலுக்காய் பார்த்தான்.

“என்ன…? எதுவும் சொல்ல மாட்டேங்கற… இந்த மௌனத்தை நான் சம்மதம்னு எடுத்துக்கவா, இல்லை பதில் சொல்லப் பிடிக்கலைன்னு எடுத்துக்கவா…”

“ப்ச்… ஒரு நிமிஷம் வண்டியை ஓரமா நிறுத்துங்க…”

“ஏன்…? என் தொல்லை தாங்காம இறங்கி தனியாப் போகலாம்னு நினைக்கறியா…?”

“ப்ச்… அதெல்லாம் இல்லை, வண்டியை நிறுத்துங்க அபி…” அவள் அதிகாரமாய் சொல்ல ஓரமாய் நிறுத்தினான். காரிலிருந்து அவள் இறங்கவும், பதறி அவனும் இறங்க அவள் முன் சீட்டில் வந்து அமர திகைத்தான்.

“என்ன முழிக்கறீங்க…? நீங்க கண்ணாடி பார்த்துட்டே வண்டி ஓட்டினா நாம மதுரை போக மாட்டோம், ஒரேயடியா மேல போயிருவோம், இங்க உக்கார்ந்தா கண்ணாடில பார்க்க மாட்டீங்கல்ல…” குழந்தைத் தனமாய் அவள் கேட்க, அவனுக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.

“அச்சோ, என் அப்பாவி செல்லமே…” என அதைக் காட்டிக் கொள்ளாமல் அடக்கியவன் டிரைவிங் சீட்டில் அமர்ந்தான்.

முன்னில் அமர்ந்தவள் வெளியே பார்வையைப் பதிக்க, சிறிது நேரம் ஆவலுடன் நீங்கிய காட்சிகள் போகப் போக சலிக்கத் தொடங்கியது. அவளை இயல்பாய் ரசித்தபடி வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான் அபிமன்யு.

வழியில் நுங்கு விற்பதைக் கண்டவன், “வெள்ளக்கோழி, உனக்கு நுங்கு பிடிக்குமே, சாப்பிடறியா…?” என்றான்.

“ப்ச்… பிடிக்கும் தான்…! ஆனா, அந்தத் தோலை உரிச்சு சாப்பிடறதுக்குள்ள கையெல்லாம் நசநசன்னு ஆகுமே…” என்றாள் சலிப்புடன்.

Advertisement