Advertisement

அத்தியாயம் – 15

கையில் ஸ்வீட் பாக்ஸுடன் வீட்டுக்கு வந்த அபிமன்யு அன்னை சாவித்திரியை வீடெங்கும் தேட அவரை அங்கே காணாததால் மொபைலில் அழைத்தான்.

“ஹலோ, சொல்லுடா அபி…”

“அம்மா எங்கிருக்கீங்க…?”

“நான் அம்பியைப் பார்க்க வந்திருக்கேன் டா…” என்றார் அவர்.

“ஓ…! சரி, அங்கயே இருங்க, நான் வந்துடறேன்…” சொன்னவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு அந்த ஸ்வீட் பாக்ஸை அங்கேயே வைத்துவிட்டு வெளியே வந்தான்.

அருகில் இருந்த மாடர்ன் பாக்கரிக்கு சென்றவன், “சேட்டா, ரெண்டு கிலோ நேந்திரம் சிப்ஸ், ஒரு கிலோ குட்டி ஜிலேபி பாக் பண்ணுங்க…” எனவும் அவர் சிரித்தார்.

“எந்தாப்பா அபி… இப்ப தன்னே அம்மாக்கு பால்கோவா வாங்கிட்டு போனது, இப்ப மறுபடி வாங்க வந்திருக்க…”

“இது ஆஸ்ரமத்துக்கு கொடுக்கறதுக்கு சேட்டா…” அவன் சொல்லவும் அவர் எடை முள்ளை சற்று தாராளமாகவே சாய்த்து அளந்து பாக் செய்து கொடுத்தார்.

“இதா… இந்த மிட்டாயும் கூடி என் வகையா கொடுத்திரு…” என ஒரு உடைக்காத சாக்கலேட் பாக்கெட்டையும் நீட்டியவருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பினான்.

ஆஸ்ரமத்தின் கேட்டுக்குள் நுழைந்து பைக்கை ஆப் செய்தவன் அம்பிகையின் அறையை நோக்கி பைக் சாவியை மேலே தூக்கிப் போட்டுக் கொண்டே நடக்க, சிறு பிள்ளைகள் சிலரைத் துரத்திக் கொண்டு மாடிப் படியில் இறங்கி வந்து கொண்டிருந்தாள் நியதி. அபிமன்யு பைக் சாவியை மேலே வீசிக் கொண்டே வளைவில் திரும்ப அவள் மேல் மோதிக் கொண்டான்.

“ஏய்ய்ய்…” கத்திக் கொண்டே விழப் போனவளை இடுப்பில் கை வைத்துத் தாங்கிக் கொள்ள முகத்தை சுளித்து கையைத் தட்டி விட்டவள் திரும்பினாள்.

“நீயா…?”

“ஏன் உன்னைத் தாங்க அமெரிக்கால இருந்து ஆள் வருவாங்களா என்ன…? வந்தாலும் விட்டிருவமா…?”

“ச்சீ… மேல வந்து மோதினதும் இல்லாம பேச்சைப் பாரு…”

“ஏன்…? என் பேச்சுக்கென்ன குறைச்சல்…? சரி, இனியாச்சும் இப்படி ஓடிவந்து யாரு மேலயும் விழுந்து வைக்காம மாமா வர்ற நேரம் மட்டும் வந்து மேல விழுந்துக்கோ…” என்றவனைக் கோபத்துடன் முறைத்தாள் நியதி.

“ச்சீ, இடியட்…” என்றவள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு நகர, அவளையே பார்த்து நின்றான் அபிமன்யு. அவளது தலை கொண்டையை நோக்கியவன் பின்னாடியே ஓடினான்.

“ஹேய் வெள்ளக்கோழி…! ஒரு நிமிஷம் நில்லு…”

“என்ன…?” என்றாள் கோபத்துடன்.

“கொஞ்சம் குனி, அதை எடுத்துக்கறேன்…”

“எதை எடுத்துக்கற…?” என்றவளின் முகம் பேயறைந்த போல் இருக்க, “அட இருமா, வில்லங்கமா யோசிச்சு என்னை வில்லனாக்கறதே உன் வேலையாப் போயிருச்சு…” என்றவன் அவள் தூக்கிக் கட்டிய கொண்டையில் சொருகிக் கொண்டிருந்த பைக் சாவியை எடுத்துக் காட்டினான்.

“ஹூம்…” என முகத்தைத் திருப்பிக் கொண்டு முறைப்புடன் நகர்ந்தவளைப் புன்னகையுடன் பார்த்துவிட்டு அம்பிகையின் அறை நோக்கி நடந்தான் அபிமன்யு.

“அடடே…! அபி, வாப்பா… ஒர்க் ஷாப்புக்கு உனக்கு லோன் சரியாகிருச்சுன்னு இப்ப தான் சாவி சொல்லிட்டு இருந்தா…” என்றார் அம்பிகை.

“அதை ஒர்க் ஷாப்னு சொல்லாதீங்க ஆன்ட்டி… காருக்கு வைத்தியம் பார்க்கற கார் ஹெல்த் சென்டர்னு அழகா சொல்லுங்க…” என்றவனை நோக்கிப் புன்னகைத்தார்.

“ஹூக்கும்… எப்படியோ, அங்கயும் ஒர்க் ஷாப்புல பண்ணுற பட்டி, டிங்கரிங் வேலையைத் தானே பண்ணப் போற, ஆசையா உன்னை எஞ்சினியரிங் படிக்க வச்சா நீ இப்பவும் ஸ்பேனரும், கையுமாவே நடக்கணும்னு அடம் பிடிக்கற… இதுல 24 HRS கார் ஹெல்த் சென்டர்னு பில்டப் வேற…” அவனது அன்னை சாவித்திரி அலுத்துக் கொண்டார்.

“விடு சாவி, எந்தத் தொழிலா இருந்தா என்ன, மனசுக்குப் பிடிச்சதை செய்யணும்னு பிள்ளை நினைக்கிறான்… எனிவே, என் மனமார்ந்த வாழ்த்துகள் அபி…” என்றார் அம்பிகை.

“தேங்க்ஸ் ஆன்ட்டி… லோன் சாங்க்ஷன் ஆனதுக்கு இங்க எல்லாருக்கும் ஸ்வீட் கொண்டு வந்தேன்…” சொன்னவன் கையிலிருந்த கவர்களை மேசை மீது வைத்தான்.

“எல்லாருக்கும் ஸ்வீட் கொடுக்க வந்தியா… இல்ல, நியதிக்கு கொடுக்கறதுக்காக எல்லாருக்கும் வாங்கிட்டு வந்தியா…?”

“ஹிஹி… எப்படி வேணாலும் எடுத்துக்கங்க ஆன்ட்டி…”

“ஹூம்… நீயும் அவளை எப்படில்லாமோ கரக்ட் பண்ணப் பார்க்கற, ஆனா அவ உன்னைக் கண்டாலே எலியைப் பார்த்த பூனை போல ஆயிடுறா…”

“அதெல்லாம் நான் சரி பண்ணிடுவேன் ஆன்ட்டி… எப்பவோ நடந்த விஷயத்தை இப்பவும் மனசுல வச்சுட்டு என்னை விரோதியாவே பார்த்திட்டு இருக்கா…”

“ம்ம்… சரி, உனக்கு இப்ப தொழிலும் ஆச்சு… இனி அடுத்து கல்யாணத்தை யோசிக்கற நேரமாச்சே…”

“சீக்கிரமே யோசிப்போம் ஆன்ட்டி… எல்லாருக்கும் ஸ்வீட் கொடுங்க, நாங்க கிளம்பறோம்…” என்றவன் அன்னையை நோக்க அவரும் எழுந்து கொண்டார்.

“ஹூம், அபி நல்ல புள்ளையா தான் இருக்கான்… நியதி தான் இன்னும் சின்ன வயசுல நடந்ததை மனசுல வச்சுட்டு அவன் மேல கோபமாவே இருக்கா…” என நினைத்தவர் ஒரு பெண்ணை அழைத்து எல்லாருக்கும் அதைப் பகிர்ந்து கொடுக்கும்படி சொல்ல நியதிக்கு இனிப்போடு விஷயமும் காதில் பகிரப்பட்டது.

“அதானே, எஞ்சினியரிங் படிச்சாலும் அவன் புத்தி கரடு முரடா ஒர்க் ஷாப் காரன் போல தான் யோசிக்கும் போல…” என நினைத்தவளின் அபிமன்யுவின் மீதான கோபத்திற்கு அப்படியொன்றும் பிரதான காரணமெல்லாம் இல்லை.

இருவரும் ஒரே வீதியில் குடி இருந்ததோடு, அம்பிகையும், சாவித்திரியும் நெருங்கிய தோழியர் என்பதால் அபிமன்யுவும் அந்த ஆஸ்ரமத்தில் ஒருவனாகவே பழகினான். நியதி உட்பட தன்னை விட சிறியவர்கள் அனைவருக்கும் உபதேசம் சொல்வது, அவர்களை பத்திரமாய் பார்த்துக் கொள்வது என பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

நியதி சிறுவயதில் எதைக் கண்டாலும் பயந்து கொண்டே இருப்பாள். இருட்டில் அவளது நிழலைக் கண்டாலும் கூட பேயென்று அலறுவாள். அப்படிப்பட்டவளை ஒரு நாள் இரவு முழுதும் விளக்கில்லாத தனி அறையில் அடைத்து வைத்தான் அபி. அப்படி செய்தால் அவளுக்கு பயம் போய்விடும் என அவன் நினைக்க இரவு முழுதும் தனிமையில் பயந்து அழுதழுது ஒரு சமயத்தில் அலுத்துப் போனவளுக்கு இருட்டின் மீதுள்ள பயம் மாறி அவன் மீது வெறுப்பு வந்துவிட்டது.

அதன் பின் அவனைக் கண்டாலே அலறி எங்காவது ஒளிந்து கொள்ளத் தொடங்கினாள். பொதுவாகவே அபிமன்யுவுக்கு சற்று அடாவடியான சுபாவம் என்பதால் அவனும் வேண்டுமென்றே அவளை மிரட்டி பயமுறுத்தி சீண்டிக் கொண்டே இருப்பான். நல்ல விஷயங்களைக் கூட அவனுக்கு அன்பாக சொல்லத் தெரியாது. அங்குள்ள பிள்ளைகளையும் எப்போதும் அதட்டிக் கொண்டே இருப்பான். வயது ஏற பருவம் மாற, அழகான கொடியாய் வளர்ந்து நின்றாள் நியதி. பருவத்தின் மெருகேறி பளிங்கு சிலை போல் வெளுத்து பளபளப்புடன் நின்றவள் மீது ஆர்வத்துடன் படிந்தது அபிமன்யுவின் பார்வை. கண்ணெடுக்காமல் தன்னையே பார்ப்பவனை வெறுப்புடன் முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவாள் நியதி.

அவன் மாநிறத்துக்கும் சற்று அதிகம் கறுப்பு என்பதால்  வெண்ணையில் செய்தது போல் வெளுத்த தோலினைக் கொண்ட நியதியின் மேல் அவனுக்கு ஈர்ப்பும் கூடுதலாகவே இருந்தது. அவளது மென்மையான சுபாவமும், அழகும் அவனது இளம் நெஞ்சை இம்சை செய்ய இயல்பாய் அவள்மேல் அபிமன்யுவிற்கு காதல் துளிர்த்தது.

அன்னையின் காதில் தனது விருப்பத்தை சொல்ல நியதியின் மீது அவருக்கும் பிரியம் என்பதால் சம்மதித்த சாவித்திரி அம்பிகையிடமும் விஷயத்தை சொன்னார். அவருக்கும் இதில் சந்தோஷம் என்றாலும் அபிமன்யுவைக் கண்டாலே பதறி ஓடும் நியதி சம்மதிப்பாளா என யோசித்தார்.

நியதிக்கு இறுதி செமஸ்டர் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் இந்த விஷயத்தை சொன்ன அபிமன்யு, “இப்போது நியதியிடம் சொல்ல வேண்டாம், நல்லபடியாய் எக்ஸாம் எழுதட்டும், அதற்குள் தனது லோனும் கிடைத்து விட்டால்  ஒர்க் ஷாப்பை விரிவு படுத்திவிட்டு கல்யாணத்தைப் பற்றிப் பேசிக் கொள்ளலாம்…” என்று சொல்லி விட்டான். இப்போது லோனும் கிடைத்து அதற்கான வேலைகளில் இறங்கியவன் ஒரு மாதத்தில் கார் ஹெல்த் சென்டருக்கான திறப்பு விழா அழைப்பிதழுடன் வந்தான்.

“ஆன்ட்டி… திறப்பு விழாவுக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு, நியதி தான் விளக்கேத்தி வைக்கணும்னு ஆசைப்படறேன்… இனி அவகிட்ட என் விருப்பத்தை சொல்லலாம்னு நினைக்கறேன், நீங்கதான் சமயம் பார்த்து பக்குவமா அவளுக்கு எடுத்து சொல்லணும்…” அபிமன்யு சொல்ல அம்பிகை சம்மதித்தார். திறப்பு விழாவிற்கு வரவில்லை என்றவளை வற்புறுத்தி அழைத்துச் சென்று அபிமன்யுவின் ஆசைப்படி அவள் கையால் விளக்கேற்றவும் வைத்தார்.

“அம்மா, என்னை எதுக்கு விளக்கேத்த சொல்லறீங்க, அந்தக் கருப்பனோட பார்வையும், அவனும்…! ஆளைப் பார்த்தாலே கடுப்பாகுது…” என்று நின்றவளை, “அம்மா சொன்னா கேப்பல்ல, போ டா…” என்று வற்புறுத்தி அனுப்பினார்.

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் யோகா ஆசிரியர் பயிற்சிக்கு முறையாய் படித்து சர்டிபிகேட்டும் வாங்கினாள் நியதி. அதுவரை காலை, மாலை என்று இருநேரம் மட்டும் தவணை முறையில் குழந்தைகளுக்கு யோகா சொல்லிக் கொடுத்தவள், சர்டிபிகேட் கிடைத்து விட்டதால் முழு நேர யோகா டீச்சராய் இரண்டு ஸ்டாப் தள்ளி இருந்த பள்ளி ஒன்றில் ஆசிரியையாய் சேர்ந்திருந்தாள்.

Advertisement