Advertisement

 அத்தியாயம் – 14

ஜூன் 21, சர்வதேச யோகா தினம்.

அந்த பெரிய ஆடிட்டோரியத்தில் கல்லூரி மாணவர்களின் கூட்டம் நிறைந்திருந்தது. YWCA நடத்தும் இண்டர் காலேஜ் யோகா காம்படிஷனில் பங்கு பெறும் மாணவர்களும், அவர்களுக்குத் துணையாய் வந்த நண்பர்களும், கோச்சும், பார்வையாளர்களுமாய் உற்சாகம் நிறைந்திருந்தது.

வரிசையாய் ஒவ்வொரு காலேஜிலிருந்து வந்த மாணவ, மாணவிகள் குழுவாகவும், தனியாகவுமாய் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி முடித்திருந்தனர்.

சூர்ய நமஸ்கார் முதல் ஒரு மூக்கு துவாரத்தில் தண்ணீர் ஊற்றி மறு மூக்கு துவாரத்தில் வெளிவிடுவது, நூலை ஒரு மூக்கு துவாரத்தில் விட்டு மறு துவாரத்தில் வெளியே இழுப்பது வரை பல விதத்திலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி போட்டி முடிவுக்காய் காத்திருந்தனர்.

நிறைய யோகா மாஸ்டர்ஸ், டீச்சர்ஸ் போட்டியாளர்களைக் கண்காணித்து மதிப்பெண் அளிக்க பல இடத்திலுமிருந்து அழைக்கப்பட்டிருந்தனர். அதில் நமது ஆத்ரேயனும் சிறப்பு கண்காணிப்பாளராக அழைக்கப்பட்டு வந்திருந்தான்.

அவனுக்கு முன்னே ஒரு பெண்மணி கைக் குழந்தையுடன் அமர்ந்திருந்தார். குழந்தைக்கு ஒரு வயது இருக்கலாம், கொழுகொழுவென்று குண்டு கன்னமும், திராட்சை விழிகளுமாய் புன்னகையுடன் சிரித்துக் கொண்டிருந்தது. அதைக் கவனித்த ஆத்ரேயன் தன்னைப் பார்த்து தான் குழந்தை சிரிக்கிறதோ என நினைத்து அதை நோக்கி சைகை செய்து சிரித்தான். ஆனால் குழந்தையின் பார்வை அவனைத் தாண்டி பின்னில் இருப்பது புரிய திரும்பிப் பார்த்தான்.

அங்கே யோகா உடையில் பளிச்சென்ற அழகுடன் ஒரு வளர்ந்த பெண் குழந்தை இக்குழந்தையை நோக்கி ஏதேதோ ஆக்ஷன் காட்டிக் கொண்டிருக்க இக்குழந்தை பொக்கை வாயுடன் கெக்கே பெக்கே என சிரித்துக் கொண்டிருந்தது.

அவள் முகத்தில் இருந்த புன்னகையும், குழந்தைத்தனமும் இக்குழந்தைக்கு சற்றும் சளைத்திருக்கவில்லை. அழகிய நீள் வட்ட முகத்தில், கண்மை இல்லாத நீண்ட கரிய விழிகள். சிவந்த சின்ன உதடுகளைக் குவித்து இரு கன்னத்திலும் கையால், “உப்ப்…” என குத்தி விளையாடிக் கொண்டிருந்தாள்.

குழந்தையின் புன்னகை என்பது ஒரு இனிய தொற்று… காண்பவரின் மனதையும் லேசாக்கி புன்னகை மலரச் செய்யும் அழகிய தருணம். அக்குழந்தையின் சிரிப்பு நியதியைத் தொற்றியதொடு அவர்களின் சிரிப்பு இப்போது ஆத்ரேயனுக்கும் தொற்றிக் கொண்டிருந்தது.

மாசில்லா அழகான அவளது முகமும், செய்கையும் அவன் மனதில் பச்சக் என்று பசையில்லாமல் ஒட்டிக் கொள்ள தோழியருடன் நின்றிருந்தவளை ஆர்வமாய் பார்த்தான்.

போட்டி முடிந்து நடுவர் மூன்றாவது, இரண்டாவது பரிசை அறிவித்ததும் மாணவர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடத் தொடங்க இறுதியாய், ‘அண்ட் தி பர்ஸ்ட் பிரைஸ் வின்னர் ஈஸ் நியதி, கிருஷ்ணமாள் காலேஜ், கோயம்பத்தூர்’ என்றதும் அவளது கல்லூரி மாணவர்கள் கைதட்டி ஆர்ப்பரிக்க, நியதி கம்பீரமாய் மேடைக்கு நடந்து வந்தாள்.

முதல் பரிசுக்கான பதக்கம், சர்டிபிகேட்டுடன் பரிசுத் தொகையான ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையும் அவளுக்கு வழங்கப்பட்டது. எந்தவித அலங்காரமும் இல்லாமல் யோகா உடையில் ஒரு மெழுகு பொம்மை போல் மேடையில் நின்றவளை கவனித்த ஆத்ரேயனின் விழிகள் ஆர்வத்துடன் விரிந்தன.

நியதிக்கு மைக் கொடுக்கப்பட சிறு சங்கோஜத்துடன் பேசினாள். கடவுள், அவளது கோச், வாய்ப்பளித்த காலேஜ், போட்டி நடத்திய YWCA உட்பட அனைவருக்கும் நன்றி சொன்னவள், தான் வளர்ந்த ஆஸ்ரமத்தைப் பற்றி சொல்லி அந்த பரிசுப் பணத்தை அந்த ஆஸ்ரமத்தில் இருக்கும் சிறு பிள்ளைகளின் படிப்புக்காய் கொடுப்பதாய் கூற அனைவரும் கை தட்ட, ஆத்ரேயனின் விழிகள் வியப்பில் விரிந்தன.

அவளைக் கண்டதுமே பிடித்துவிட கண்களை இமைக்காமல் அந்த அழகிய பெண்ணைப் பார்த்து நின்றவனுக்கு அவள் பேச்சைக் கேட்டதும் இன்னும் பிடித்தம் அதிகமானது. அவன் அந்தக் கூட்டத்தில் யோகா மாஸ்டர்களுடன் வேறு பக்கம் அமர்ந்திருந்ததால் நியதி கவனித்திருக்க வாய்ப்பில்லை.

பார்த்ததும் பிடிப்பதில்

தவறு இல்லை…

காரண காரியம் கேட்டு

காதல் வருவதில்லை…

அவள் நன்றி கூறிக் கீழே இறங்கவும் கல்லூரிப் பட்டாளம் அவளைச் சூழ்ந்து கொள்ள வாழ்த்து சொல்ல சென்றவன் அருகே செல்ல முடியாமல் அமைதியாய் பார்த்து நின்றான்.

அவனும் யோகா மாஸ்டர் என்பதால் அவளைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வது ஒன்றும் சிரமமாயில்லை. யாருமில்லாமல் அம்பிகையின் பொறுப்பில் ஆஸ்ரமத்தில் வளர்ந்த நியதி இறுதி வருட கல்லூரிப் படிப்பில் இருக்கிறாள் எனத் தெரிந்து கொண்டான்.

கண்டதும் காதலில் அதுவரை நம்பிக்கை இல்லாதிருந்தவன் அவளைக் கண்டது முதல் அவள்தான் தனக்கானவள் என நினைக்கத் தொடங்கியதோடு அவளிடம் உடனே பேசத் தவித்த மனதைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றான்.

இயற்கை, காதலை மனிதர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி இருக்கிறது. மனிதர்களின் உள்ளங்களை மென்மையாக்கி பக்குவப்படுத்தும் சக்தி காதலுக்கு உண்டு. ஜாதி, மதம், மொழி, இனம் ஆகியவை அன்றும், என்றும் காதலுக்கு எதிரிதான்… அத்தனைக்கு மத்தியிலும் எதையும் யோசித்து பெரிதுபடுத்திப் பார்க்கத் தெரியாத முதல் காதல் தெய்வீகமானது என்பதே காதலர்களின் வாதம்.

அவள் படிக்கும் பெண், இப்போது தனது விருப்பத்தை சொன்னால் படிப்பும் பாதிக்கப்படும், எனவே அவளது படிப்பு முடிந்ததும் தனது விருப்பத்தை சொல்லுவோம் என நினைத்தவனை மனது அமைதியாய் இருக்கவிடவில்லை.

கண்ணுக்குள் நுழைந்தவள் மனதுக்குள் அமர்ந்து கொண்டு அன்று முழுதும் இம்சை செய்ய தாள முடியாமல் மறுநாள் காலை அவளைக் காண்பதற்காய் ஆஸ்ரமத்திற்கு சென்றான்.

அன்று ஆஸ்ரமத்தில் பெரியவர் யாருக்கோ உடல்நிலை சரியில்லாமல் போயிருக்க நியதியும், அம்பிகையும் அவரை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றிருக்க, காணாமல் ஏமாற்றத்துடன் திரும்பினான் ஆத்ரேயன்.

அன்று மதியம் அவனுக்கு டெல்லி செல்ல பிளைட்டில் டிக்கட் போட்டிருந்தான். YWCA வில் அவன் மிகவும் மதிக்கும் யோகா மாஸ்டர் ஒருவரின் வேண்டுகோளுக்காகத் தான் கோவை வந்தவன் காம்படிஷனைக் காண வந்திருந்தான்.

யோகாவில் போஸ்ட் கிராடுவேட் முடித்து, முறையாய் பயிற்சியாளர் சர்டிபிகேட்டும் வாங்கியிருந்த ஆத்ரேயன், மூணாறில் யோகா சென்டரை நடத்தினாலும், ரிஷிகேஷில் உள்ள யோகா ஆஸ்ரமத்தில் பணிபுரிய வேண்டுமென்பது அவனது பெரும் ஆவலாயிருந்தது. நிறைய முயற்சிக்குப் பின் ஒரு வருட சிறப்புப் பயிற்சியாளர் படிப்புக்காய் ரிஷிகேஷ் செல்ல இப்போதுதான் அனுமதி கிடைத்திருந்தது. இதைத் தவிர்க்க முடியாதென்பதால் யோசித்தான்.

இது கண்டதும் காதலா, இல்லை வெறும் இனக்கவர்ச்சியா எனத் தெரியாமல் படிப்பை விடவும் விருப்பமில்லை. படிக்கும் பெண்ணை இதைச் சொல்லி தொல்லை செய்யவும் விரும்பாமல் ஒரு முடிவுக்கு வந்தான்.

எந்த ஒரு விஷயத்தையும் உறுதியாய் முடிவெடுத்து விட்டால் பிறகு தாமதிக்கக் கூடாது. இன்றே செய், நன்றே செய் என பெரியவர்களின் வார்த்தைக்கு ஏற்ப முடிவெடுத்த காரியத்தை உடனே செய்ய முயல வேண்டும். எந்தக் காரியத்தையும் பிறகு என்று தள்ளி வைத்தால் சில நேரம் அது நம் கை விட்டுப் போகவும் வாய்ப்பாகும். ஆத்ரேயன் பிறகு என்று நினைத்த நியதி விஷயமும் அப்படித்தான்.

இந்த ஒரு வருடம் அவளை மறக்காமல் இருந்தால் மீண்டும் வந்து பேசுவது, இல்லாவிட்டால் இது வெறும் இனக்கவர்ச்சி என அமைதியாய் இருப்பது என்று ஆத்ரேயன் அவனுக்கே ஒரு பரிசோதனை வைக்கத் துணிந்து டெல்லி விமானத்தில் ரிஷிகேஷ் கிளம்பி விட்டான்.

இமாலய மலைத்தொடர்களின் நுழைவாயிலும், தேவ பூமியுமான உத்தர்காண்டில் உள்ள ரிஷிகேஷ் இயற்கை எழில் கொஞ்சும் பனியும், பசுமையுமான பிரசித்தி பெற்ற சுற்றுலா நகரம். எழில் கொஞ்சும் மலைக்குன்றுகளும், அதன் ஊடே பாய்ந்தோடும் கங்கையின் அமைதியான, அழகிய தோற்றமும் காண்போரின் கண்களுக்கு மகிழ்வையும், மனதுக்கு அமைதியையும் தரத் தவறுவதில்லை.  இலங்கையின் அரசன் இராவணனைக் கொன்றதற்காய் ராமர் இங்கே கங்கையில் பிராயச்சித்தம் செய்து கொண்டதாய் வரலாறு கூறுகிறது. கங்கை மேல் கட்டப்பட்டிருக்கும் ராம் ஜூலா பாலம், லட்சுமன் ஜூலா பாலம் எல்லாம் பிரசித்தி பெற்றவை.

கங்கை ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கும் பிரம்மாண்ட சிவன் சிலையைக் காணவும், புராதனம் நிறைந்த பல கோவில்களைக் காணவும், கங்கையில் வெள்ளைத் தண்ணீர் படகுப் பயணத்திற்காகவும் உலகத்தின் பல இடங்களில் இருந்தும் பயணிகள் அங்கே வருகின்றனர். மலை, நதி, காற்று என இயற்கை அழகோடு அமைதியான சூழலில் அமைந்த ஆஸ்ரமங்கள் தியானம் செய்ய மிகவும் ஏற்றவை. எனவே அங்கே நடைபெறும் யோகா விழாவில் பங்கு பெற பல ஆர்வலர்கள் உலகின் பல இடங்களில் இருந்தும் ஆர்வத்துடன் வருகின்றனர்.

அங்கு ஆஸ்ரமத்தில் சேர்ந்த ஆத்ரேயன் அந்தச் சூழலில் ஒன்றி பயிற்சி முடித்து திரும்பும்போது தான் தாடியும், மீசையுமாய் சந்நியாசி போல் வந்து சேர்ந்தான். அவனது தோற்றத்தில் மாற்றம் வந்திருந்தாலும் மனதில் எந்த மாற்றமும் இல்லாமல் நியதிக்கான இடத்தில் அவள் எப்போதும் இருக்க, மறக்காததால் அவள் மேல் உள்ளது காதல்தான் என்று மறுப்பதற்கும் இல்லாமல் போனது.

வாழ்க்கையில் மனிதர்கள் எத்தனையோ திருப்பங்களையும், வெற்றி, தோல்விகளையும் சந்திக்கிறார்கள். அதில் பல அப்படியே அழிந்து போய் விடுகின்றன. சிரமப்பட்டு முயற்சித்தால் கூட சில விஷயங்கள் நினைவில் வருவதே இல்லை. ஆனால் இந்த முதல் காதல் மட்டும் நினைவுகளாக அம்மனிதனின் மரணம் வரை அவனுடன் வாழ்கிறது என்பது அனுபவம் நிறைந்த மன வல்லுனர்களின் கணிப்பு. என்றோ மலையாளப் புத்தகத்தில் வாசித்ததை நினைத்த ஆத்ரேயனின் இதழ்கள் புன்னகைத்தன.

ஆனால்… அவன் மாறாமல் அப்படியே இருந்து என்ன, அதற்குள் நியதியின் விதி எப்படி எல்லாமோ மாறியிருந்தது.

ஒரு வருடம் முடிந்து டெல்லி விமானத்தில் ஏறி கோவை வந்திறங்கியவன் நேரே சென்றது ஆஸ்ரமத்திற்கு தான்.

அம்பிகையை சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன் ஆஸ்ரமத்தில் வளர்ந்த பெண் ஒருத்தியை மனதார விரும்புவதாகவும், கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் சொல்ல அவரும் சந்தோஷத்துடன் யாரந்தப் பெண் என்றே கேட்டார்… அது நியதி என்று தெரிந்ததும் அவர் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி அவனைக் குழப்ப அவசரமாய் கேட்டான்.

Advertisement