Advertisement

நிஷா நியதியின் அருகே இருந்து அடிக்கடி உடம்பு சூடு குறைகிறதா எனப் பார்த்துக் கொண்டாள். மருந்து கொடுத்த பிறகு ஒன்பது மணி வரை நன்றாக உறங்கிய நியதியின் உடல் மெல்ல வியர்க்கத் தொடங்க, கண்ணைத் திறந்தவள் நிஷாவைக் கண்டதும் திகைத்தாள்.

“நிஷா…! நீ எப்படி…?” எனக் கேட்டவளுக்கு நடந்தது நிழல் போல நினைவில் வர, மெல்ல எழுந்து அமர்ந்தாள்.

“நினக்கு பீவர்னு ஆதி மாஸ்டர் போன் செய்து என்னை விளிச்சு, இப்ப எங்கனே உண்டு…?” என்றாள் ஆறுதலாக.

“ம்ம்… எனக்கு பாத்ரூம் போகணும் நிஷா…” சொன்னவள் கட்டிலில் இருந்து இறங்க, “ம்ம்… போயிட்டு வா…” என்றவள் அவள் வருவதற்குள் சூடாய் கான்டீனில் இருந்து இட்லியை வரவழைத்திருந்தாள். நியதி வந்ததும் அவளை இரண்டு இட்லி சாப்பிட வைத்தவள் மீண்டும் ஆயுர்வேத மருந்துப் பொடியை நீரில் கலக்கி அவளுக்கு குடிக்கக் கொடுத்தாள்.

இப்போது நியதிக்கு சற்றே தெம்பு வந்திருந்தது.

“தேங்க்ஸ் நிஷா, என்னால உனக்கும் சிரமம்…”

“ஹேய்…! இதில் என்ன சிரமம், இதல்லே என்ட டியூட்டி… நீ குறச்சும் கூடி நல்லோணம் உறங்கு… எனிக்கும் போது நின்டே பனி பம்பை கடந்திருக்கும்…” ஆறுதலாய் சொன்னவளை நோக்கிப் புன்னகைத்தவள் மீண்டும் படுத்துக் கொண்டாள். இப்போது தலைவலி குறைந்திருந்தது.

மதியம் ஆவதற்குள் நியதிக்கு உடல் நன்றாய் வியர்க்கத் தொடங்கியிருக்க, ஜான்ஸி கிளாஸ் முடிந்து வந்தாள்.

நிஷாவிடம், “இப்ப எங்கனே உண்டு…” எனக் கேட்க, “நல்லா பனி குறைஞ்சிருக்கு, தூங்கி எழுந்தா சரியாகிடும்…” என்றாள்.

“நீ போயிக்கோ நிஷா, நான் நோக்கிக் கொள்ளாம்…” என்றாள் ஜான்ஸி. நிஷா பல வருடங்களாய் அங்கே இருப்பதால் எல்லாருக்கும் நல்ல பரிச்சயம் இருந்தது. நிஷா அவளிடம் அடுத்து மதியம் சாப்பிட்ட பிறகு எப்படி மருந்து கொடுக்க வேண்டுமென்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

அன்று காலையில் யோகா சென்டரை விரிவாக்க, கட்டிடப் பணிக்கான சாதனங்கள் வந்து இறங்கியதால் ஆத்ரேயன் அவ்வேளையில் அங்கே இருக்க வேண்டியதாயிற்று. நியதி ஒரு மணிக்கு கண் விழிக்கும்போது காய்ச்சல் உண்மையிலேயே காணாமல் போயிருக்க அதன் அசதி மட்டுமே மிச்சமிருந்தது.

ஜான்ஸியைக் கண்டவள், “அடுத்து உன்னோட ஷிப்டா ஜான்ஸி…” என புன்னகைத்தாள்.

நிஷா செல்லும்போது கான்டீனில் நியதிக்கு கஞ்சிக்கு சொல்லி இருக்க மதியம் கஞ்சியைக் குடித்து மருந்தைக் குடித்தவள், “நீ இங்கே இருந்தா ஜெஸிக்குட்டி உன்னைத் தேட மாட்டாளா ஜான்ஸி, எனக்கு இப்போ பரவால்லை… நீ வீட்டுக்குக் கிளம்பு…” என்றாள்.

“ஹூம்… அதொண்ணும் முடியாது மோளே, ஆதி மாஸ்டர் நின்னே பிரத்யேகமாயி கவனிக்க சொல்லிருக்கு… இப்ப கொஞ்ச நாளாவே உன்மேல மாஸ்டரோட கவனிப்பு குறச்சு கூடிருக்கோன்னு எனக்கொரு சம்சயம்…” குறும்புடன் சொன்ன ஜான்ஸி நியதியை அடிக்கண்ணால் பார்க்க, அவள் சொல்லுவது என்னவென்று புரிந்தாலும் புரியாதது போல் பேச்சை மாற்றினாள் நியதி.

“இனி ஈவனிங் கிளாசுக்கும் நீ போகணும்ல, கிளம்பு ஜான்ஸி… நான் தூங்கிக்கறேன், இப்ப ரொம்பவே பெட்டரா இருக்கு…” விடாப் பிடியாய் நியதி சொல்லவும், பத்திரமாய் இருக்க சொல்லிவிட்டு ஜான்ஸி வீட்டுக்குக் கிளம்பினாள்.

அவள் சென்றதும் கதவைத் தாளிட்டுவிட்டு உறங்க முயல, நேற்று இரவிலிருந்து உறங்கியே கழித்ததால், இப்போது உறக்கம் வருவேனா என்றது. வெறுமனே படுத்திருந்தவளின் மனது காலையிலிருந்து நடந்த சம்பவங்களை ரீவைண்ட் பண்ணிக் கொண்டிருக்க கதவு தட்டப்பட்டது.

எழுந்து சென்று கதவைத் திறக்க, ஆத்ரேயன் நின்றிருந்தான்.

“இப்ப பனி எங்கனே உண்டு…?” கேட்டதோடு நில்லாமல் அவள் நெற்றியிலும் அவன் கை வைத்துப் பார்க்க அவளுக்கு ஒரு மாதிரி குறுகுறுத்தது. காலையில் காய்ச்சலின் பாதிப்பில் உணராத தொடுகை இப்போது ஒருமாதிரி சுட்டது.

“ம்ம்… பரவால்ல…” என்றவள் பின்னே நகர்ந்து கொள்ள உள்ளே வந்தான் ஆத்ரேயன்.

“நீ எந்தெங்கிலும் கழிச்சோ…?” என்றவனிடம், “கஞ்சி குடிச்சேன், நீங்க சாப்பிட்டிங்களா…?” என்றாள் எதார்த்தமாய்.

அவளைக் கனிவோடு நோக்கியவன், “இன்னும் இல்ல மா, எந்தினானு முத்தே…! நீ தேவையில்லாத ஒவ்வொண்ணும் யோசிக்கனது… அது கொண்டல்லே இக்குட்டி தலையும், தேகமும் சூடாகி பனி வந்தது…” அவன் பரிவாய் பேசவும் சட்டென்று உருகியவள் விழிகள் கலங்கியது.

அதைக் கண்டவன் புன்னகையுடன் அவள் கையைப் பற்ற, மாத்திரையின் தயவில் வியர்த்து குளிர்ந்திருந்த அவளது நீண்ட விரல்கள் அவனது கைகளின் வெம்மையான ஸ்பரிசத்தில் பாதுகாப்பாய் அடங்கின.

கைகளை அவனிடமிருந்து மீட்டுக் கொள்ளும்படி மூளை உத்தரவிட மனமோ, அந்தக் கைகளுக்குள் இருக்கையில் உணர்ந்த பாதுகாப்பு உணர்வை ஒதுக்க மறுத்துத் தவித்தது. ஒருவழியாய் தன் மனதைக் கட்டுப்படுத்தி கையை அவனிடமிருந்து விடுவித்துக் குனிந்து கொண்டவளின் முகத்தை தனது ஒரு விரலால் நிமிர்த்தினான் ஆத்ரேயன்.

“முத்தே…! என்னை நோக்கு…” அவன் குரலில் கட்டுப் பட்டவள் போல அவள் நிமிர்ந்து நோக்க அவ்விழிகளில் தேங்கி நின்ற காதலும், பரிவும் அவளைத் தளர்த்தின. அவன் முகத்தைக் காணும் விழிகள் அதிலேயே புதைந்து போய் விடுமோ என்ற அச்சம் தோன்ற, அது தவறோ என்றெண்ணி சட்டென்று பார்வையை விலக்கி குனிந்து கொண்டவளை ஆறுதலாய் தோளில் தட்டினான் ஆத்ரேயன்.

“கயிக்கான் (சாப்பிட) எந்தெங்கிலும் உண்டோ…? எனிக்கு விஷக்குனு (பசிக்குது)…” அவன் சொல்ல திகைத்தவள்,

“அச்சோ, நீங்க இன்னும் சாப்பிடலன்னு சொன்னிங்களே, கான்டீன்ல இப்ப எதுவும் இருக்காதே…” யோசித்தவளுக்கு ஜான்ஸி கொண்டு வந்த ப்ரூட்ஸ் நினைவில் வர, “ப்ரூட்ஸ் இருக்கு, தரட்டுமா…?” என்றாள் பரபரப்புடன்.

“ஹேய்…! கூல், நானே எடுத்துக்கறேன்…” சொன்னவன் உரிமையுடன் எழுந்து சென்று ஆப்பிளை நறுக்கி ஒரு பிளேட்டில் வைத்துக் கொண்டு வந்தான்.

அவனோடு அந்த ஒரே அறையில் இருக்க சந்தோஷமாகவும், அதே நேரம் மூச்சு முட்டுவது போலவும், இருவித அவஸ்தையை உணர்ந்தவளுக்கு தவிப்பாகவும் இருந்தது.

“ஆப்பிள் எடுத்தோ…” அவன் சொல்ல ஒரு துண்டை எடுத்துக் கொண்டாள். ஆப்பிளைப் பிடித்திருந்த அவனது நீளமான கோதுமை நிற விரல்கள் ஆரோக்கியமாய் இருக்க, அவனது நிறத்திற்கு அதிலிருந்த பூனை முடிகள் பளிச்சென்று தெரிந்தது. இளம் ரோஸ் வண்ண நகங்கள் சீராய் வெட்டப்பட்டு அழகாய் இருக்க அதையே பார்த்தாள் நியதி. அவளது கட்டிலில் சிறிது இடைவெளிவிட்டு அமர்ந்தான் ஆத்ரேயன். அவன் ஆப்பிள் நறுக்க சென்ற இடைவெளியில் கட்டில் விரியை சீராக்கி இருந்தாள் நியதி.

“என் முகம் கண்டா பேடி (பயம்) தோணுந்தோ…?” சட்டென்று கேட்டவனைப் புரியாமல் பார்த்தவள் மனதுள், “இந்த பச்சப்புள்ள போலருக்க முகத்தைப் பார்த்து பயம் எப்படி வரும்…” என மனதுக்குள் சொல்லவும் செய்து கொண்டாள்.

“இ..இல்ல, ஏன் அப்படி கேக்கறிங்க…?”

மெதுவாய் ஆப்பிள் துண்டு ஒன்றை எடுத்துக் கடித்தான். சீரான பளிச்சென்ற பல்வரிசை கவர்ந்தது.

“பின்னே எந்தா குட்டி…? என் முகம் நோக்காதே கையும், காலும் ஒக்கே நோக்கியிட்டு இரிக்கனது…?” அவனது கேள்வியில் சட்டென்று நாணமும், ஒரு கூச்சமும் வந்தது அவளிடம். கள்ளன், எல்லாத்தையும் கவனித்திருக்கிறான் என மனதுக்குள் ஆச்சர்யப் பட்டாள்.

ஆப்பிளை சாப்பிட்டு முடித்தவன், “ஒரு சாய கிட்டியால் சுகமாயிரிக்கும், நினக்கு வேணோ…?” என்றான். அவளுக்கும் ஒரு சாயா குடித்தால் தேவலாம் போலிருக்க தலையாட்ட, எழுந்து சென்றவன் பிளாக் டீயில் லேசாய் இஞ்சி, ஏலக்காய் தட்டிப் போட்டு அருமையாய் ஒரு டீ கொண்டு வந்தான். அந்த குட்டி அடுக்களைக்குள் பொருட்களைக் கண்டுபிடிக்க அவனுக்கு பெரும் சிரமம் இல்லாமலிருந்தது.

“தேங்க்ஸ்… டீ ரொம்ப நல்லாருக்கு, உங்களுக்கு சமையலும் தெரியுமா…?” என்றாள் நியதி புத்துணர்ச்சியுடன்.

“சமையல் அறயுமான்னு சோதிச்சா பிராப்பராய் அறயில்ல, பட்சே, சமாளிக்கான் அறயாம்…” என்றான் புன்னகையுடன்.

“ம்ம்…” என்றவள் மனது மீண்டும் முன்தினம் யோசித்த கேள்விகளில் வந்து நிற்க, எப்படித் தொடங்குவது எனத் தயங்கியவள் அமைதியாய் இருந்தாள்.

“நினக்கு பாஜகம் (சமையல்) அறயுமோ…?”

“ம்ம்… பெரிசாய் தெரியாது, ஓரளவுக்கு…”

“இந்த உலகில் எல்லாம் தெரிஞ்சதாயி ஆருமில்ல, சந்தர்பமும், ஆவஸ்யங்களும் ஆனு எல்லாத்தையும் மனுஷனுக்கு கத்துத் தரனது…”

“ம்ம்…”

“முத்தே…! நினக்கு எந்தானு குழப்பம்…? என்னோடு சோதிக்கு, பரயாம்… இனியும் அது யோஜிச்சு நீ பீல் செய்யண்டா…” அவனது வார்த்தைகள் நிம்மதியைத் தர தயக்கமாய்  நிமிர்ந்தவள் விழிகள் நன்றியைக் காட்டின.

“உ..உங்களுக்கு நா..ன் விதவைன்னு தெரியுமா…?” குரல் கலங்கிஇருக்க வலியுடன் ஆமென்று தலையாட்டினான்.

மனம் ஒரு

சொல் பேச்சு கேளா

பிள்ளையென்று

உணர்த்தும் சில

பிரியங்கள்…

அன்பு ஒன்றே

என்றும் மனதை

அடிமையாக்கும்

வலிமையான ஆயுதம்…

Advertisement