Advertisement

அத்தியாயம் – 13

மனம் மிகவும் விசித்திரமானது…! அதற்கு எப்போது எது பிடிக்கும், பிடிக்காமல் போதும் என்று கணிக்க முடியாது… அது ஒருவித மாய உணர்வு…! மனதுக்குப் பிடித்த ஒரு விஷயத்தை மூளை வேண்டாமென்று சொன்னால் உடனே ஏற்றுக் கொள்ளாது. சிலநேரம் அதைப் பற்றியே யோசித்து மூளைக்கும் பிடிக்குமாறு செய்துவிடும்.

வேண்டாமென்று உதடுகள் சொல்லுவது மூளையின் கட்டளை என்றால் மனது அப்படியே ஏற்காது. அதன் போக்கு வித்தியாசமானது. மனதை அடக்கி ஆளும் கலைதான் யோகா… மன அழுத்தம், படபடப்பு மற்றும் பயத்திலிருந்து விடுவிக்கிறது… உள்நிலையில் அமைதி, ஆனந்தம் மற்றும் நிறைவை வழங்குகிறது… அப்படிப்பட்ட யோகாவை முறைப்படி கற்றுத் தேர்ந்து மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் நியதியின் மனம் இன்று பல கேள்விகளால் கட்டுப்படுத்த முடியாமல் அலை பாய்ந்திருந்தது.

“ஆதிக்கு எப்படி அத்தையைத் தெரியும்…? அவருக்கு நான் கொடுத்த சத்தியத்தைப் பற்றித் தெரியும்…? இருவருக்கும் என்ன தொடர்பு…? ஒருவேளை, அம்மாவுக்கும் இவனைப் பற்றித் தெரியுமா…? தெரிந்து தான் என்னை இங்கே வேலைக்கு அனுப்பினார்களா…? இவர்களை மட்டும் தான் தெரியுமா…? அபியைப் பற்றியும் தெரியுமா…?” வரிசையாய் பல கேள்விகள் மனதைக் குடைந்து கொண்டிருந்தன.

அப்படியே ஸ்தம்பித்து அமர்ந்திருந்தவள் அம்பிகைக்கு போன் செய்ய அது நாட் ரீச்சபிள் எனவும், முன்தினம் அவர் எங்கோ வெளியூர் செல்வதாய் சொன்னது நினைவு வந்தது. மதிய உணவை மறந்து வெளியே சென்ற அதே உடையில் படுக்கையில் கிடந்தவளின் மனது எல்லாரைப் பற்றியும் யோசித்து குழம்பியது.

“அம்மாவுக்கும், அத்தைக்கும் ஆதியைத் தெரியுமென்றால் நானும் முன்னமே இவனைப் பார்த்திருக்கிறேனா…?” நினைவடுக்கில் தேடிப் பார்க்க நினைவில் இல்லை.

என்ன யோசிக்கிறோம் என்றே புரியாமல் குழப்பத்தில் இருந்தவள் ஆத்ரேயன் ஆதி ஆனதைக் கூட உணரவில்லை. அவனுக்கு எப்படித் தெரியுமென்ற தேடலில் அபிமன்யுவின் ஞாபகங்களும் சேர்ந்து கொண்டன.

கண்ணில் நிறைந்த நீருடன் படுக்கையில் கிடந்தவள், மதியம் சாப்பிடாததால் தலை பயங்கரமாய் வலிக்க எழுந்து குளித்து இரவு உடைக்கு மாறினாள். எதுவும் சாப்பிடப் பிடிக்காமல் ஒரு கட்டஞ் சாயா வைத்துக் குடித்தாள்.

ஆத்ரேயனிடம் பேசி தெளிவு படுத்திக் கொள்ளாவிட்டால் உறக்கம் வராது எனப் புரிய தயக்கத்துடன் அவனுக்கு மொபைலில் அழைத்தாள்.

அங்கே இரவு உணவுக்காய் அனைவரும் உணவு மேஜையில் இருக்க, ஆத்ரேயனின் அலைபேசி நவீன் கையில் இருந்தது. மும்முரமாய் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தவன் அதில் வந்த அழைப்பைக் கட்டாக்கிவிட்டு தொடர்ந்தான்.

அழைப்பு துண்டிக்கப்படவும் குழம்பிய நியதி, “ஒருவேளை, ஆதி இப்போது என்னுடன் பேச விரும்பவில்லையோ…?” என யோசித்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தாள்.

தலைக்குள் இடி வெட்டுவது போல் பயங்கரமாய் வலிக்க, தலையைப் பிடித்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தாள்.

அங்கே வீட்டில் சாப்பிட்டு முடித்த ஆத்ரேயன் அண்ணன் பிள்ளைகளுடன் சிறிது நேரம் விளையாட அமர்ந்தான்.

“ஆதி…! குட்ட மாமா விளிச்சிருந்து… நினக்கும், அப்பெண்ணு சாதனாவுக்கும் ஜாதகப் பொருத்தம் நோக்கியப்போ ஒன்பது பொருத்தம் உண்டுன்னு பணிக்கர் சொல்லிருக்கார்… நமக்கு அக்குட்டியை ஒண்ணு ஆலோயிச்சாலோ…?” மகனிடம் மெல்ல விஷயத்தைத் தொடங்கினார் ஷோபனா.

“ப்ச்… இந்த குட்ட மாமாவுக்கு வேற பணி இல்லே, எனிக்கு இப்ப கல்யாணம் வேண்டம் மா…” என்றான் மகன்.

“அதுசரி…! தாடியும் மீசையும் நீட்டி சந்நியாசி போல நடந்தப்போ நினக்கு வேகம் கல்யாணம் செய்து வைக்கான் பறஞ்சு… இப்ப அதொக்கே எடுத்து நல்ல சந்தக்காரன் (அழகான பையன்) ஆயப்போ கல்யாணம் வேண்டான்னு பறயுனு, இது நல்ல கத…?” என்றார் அவர் முறைப்புடன்.

ஆத்ரேயன் அன்னைக்கு எதுவும் பதில் சொல்லாமல் இருக்க அண்ணன் அபிநந்தன் கேட்டான்.

“ஆதி…! எந்தாடா…? இப்ப கல்யாணம் கழிக்காதே அறுபதாம் கல்யாணம் கழிக்கான் ஆனோ தீர்மானம்… இந்தப் பெண்ணு வேண்டாம்னா வேற பெண்ணு நோக்காம், எந்தா நின்டே மனசிலே பிளான், துறந்து பறயு…” என்றான் மூத்தவனாய்.

“அதன்னே… நினக்கு இந்த சாதனா வேண்டெங்கில் வேண்டா, என்டே செரியச்சனு ஒரு மோளுண்டு… மிஸ் எர்ணாகுளம் ஆனு மோனே… அவங்க நம்முடே குடும்பத்தில் பெண்ணு தருமோ என்னவோ, அபியேட்டன் சோதிச்சால் மறுக்கில்லா, அவளை நினக்கு ஆலோயிச்சாலோ…?” என்றாள் ஆதிரா.

“அதெந்தா, அக்குட்டி மிஸ் எர்ணாகுளம்னா நமக்கு பெண்ணு தரில்லே… என்டே மோனும் அழகில் குறைஞ்சவன் அல்ல, அவனும் போட்டிக்கு போனா மிஸ்டர் மூணார் ஆயிரிக்கும்…” மகனை விட்டுக் கொடுக்காமல் பேசினார் ஷோபனா.

“அம்மே…! நிங்கள் ரெண்டு பேரும் தர்க்கம் (வாக்குவாதம்) செய்யல்லே, அவனுக்கு எந்தா இஷ்டம்னு கேக்கலாம்…” சொன்ன அபிநந்தன் தம்பியின் முகத்தைப் பார்க்க அவன் யோசனையில் இருந்தான்.

“சாரி ஏடத்தி…! மிஸ் எர்ணாகுளம், மிஸ் சென்னை பொண்ணுகளைக் கல்யாணம் பண்ணிட்டு வந்து நான் என்ன அழகுப்போட்டி நடத்தவா போறேன்… அதில் ஒண்ணும் எனிக்கு இஷ்டமில்லா…” என்றான் தெளிவாக.

“ஹா… அப்போ மாமன் பறஞ்ச பெண்ணினு சம்மதம் பற, சாதனா ஆவஸ்யத்தினு சவுந்தர்யவும், படிப்பும், பணவும், தரவாடித்துவம் (குலப்பெருமை) உள்ள குட்டியானு…”

“இதா… அவளுடே போட்டோ நோக்கு, கண்டிட்டு எனிக்கு இஷ்டாயி…” ஷோபனா சொல்ல, “அப்ப அம்ம தன்னே அவளைக் கல்யாணம் கயிச்சா மதி…” என்றபடி எழுந்து கொள்ள அபிநந்தன் தம்பியை யோசனையாய் பார்த்தான்.

“எடோ ஆதி, தமாச இரிக்கட்டே… நினக்கு வேற ஏதெங்கிலும் பிரஸ்னம்  உண்டோ…? யாரோடெங்கிலும் இஷ்டம்…?”

சரியாய் தனது மனதை நூல் பிடித்துவிட்ட அண்ணனை புன்னகையுடன் நோக்கியவன், “எனிக்கு குறச்சு சமயம் வேணம் ஏட்டா… நாளே முதல் பில்டிங் வொர்க் ஸ்டார்ட் செய்யான் போவுந்து… குறச்சு கழியட்டே, பரயாம்…”

“ஹூம்… ஆயிக்கோட்டே, எந்தாயாலும் நினக்கு ஒரு மூணு மாசம் கூடி டைம் தரும்… அப்பலேக்கும் நீ ஒரு முடிவு பரயணம்…” என்றவன் அத்தோடு சபை கலைந்தது என்பது போல் எழுந்து கொள்ள ஆதிராவும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள்.

இப்போது மகனும், அன்னையும் மட்டுமே அங்கிருக்க ஒரு கவரை அவனிடம் நீட்டினார் ஷோபனா.

“ஆதி…! ஒரு விஷயம் நோக்காமலே வேண்டா பறயனது சீத்த (மோச) சுபாவம்… நீ சாதனாவின் போட்டோ நோக்கிட்டு பற…” என்றவர் போட்டோவை எடுத்து நீட்ட வாங்கினான்.

அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்ப நீட்டியவன், “ஹா, நோக்கி, வேண்டாந்து இப்பப் பரயால்லோ…” என்றவன் கிண்டலாய் சொல்லிச் செல்ல ஷோபனா கடுப்பானார்.

“இவனை இங்கனே விட்டால் பற்றில்ல, எங்கனே வழிக்கு கொண்டு வரும்…?” யோசித்தவருக்கு ஒரு ஐடியா தோன்ற,

“ம்ம்… கொச்சு கள்ளா…! அம்மா கிட்டயா நின்டே களி, காணிச்சு தராம்…” என்றவர் மொபைலில் தம்பிக்கு அழைத்து,

“எடா குட்டா…” என்று ஏதோ சொல்லியவாறே நகர்ந்தார்.

அடுத்தநாள் காலையில் முதல் பாட்சுக்கே ஆத்ரேயன் சென்டருக்கு வந்துவிட்டான். நியதியைக் காணாமல் விசாரிக்க, அவள் இன்னும் வரவில்லை… போன் செய்தாலும் சுவிட்ச் ஆப்… என்று ஜான்ஸி சொல்ல யோசனையானான்.

“சரி, நான் நோக்கிட்டு வராம்…” என்றவன் கிளம்பினான்.

நியதியின் பிளாட்டுக்கு வந்து கதவைத் தட்ட வெகுநேரம் கழித்துத் திறந்தவளைக் கண்டவன் அதிர்ந்து போனான்.

கண்ணும், முகமும் சிவந்து வீங்கியிருக்க, தலைமுடி எல்லாம் கலைந்து நிற்கக் கூடத் தெம்பில்லாதது போல் நைந்த துணியாய் சோர்வுடன் நின்றிருந்தாள் நியதி.

“முத்தே…! எந்து மா…? எந்து பற்றி நினக்கு…” தடுமாறியபடி நின்றவளை அவன் வேகமாய்த் தாங்கிக் கொள்ள அவளது உடலின் சூடு அவனைச் சுட்டது. அப்படியே கட்டிலில் படுக்க வைத்தவன் இதமாய் தலையை வருடிக் கொடுக்க, அந்த இதத்தில் கண்ணை மூடினாள் நியதி.

போனில் நிஷாவை அழைத்து விவரம் சொல்ல அவள் உதவிக்கு ஓடி வந்தாள்.

“எந்தா மாஸ்டர், நியதிக்கு எந்து பற்றி…?”

“ராவிலே கிளாஸில் வரலேன்னு நோக்கான் வந்ததா…? அவளுக்கு நல்ல பனி (காய்ச்சல்)…”

நியதியைப் பரிசோதித்தவள், “என்டே ரூமில் காய்ச்சல் மருந்து இருக்கு, எடுத்திட்டு வராம்…” என்று சென்றாள். இருவருமாய் ஆயுர்வேத காய்ச்சல் மருந்தை நியதிக்குக் கொடுத்து படுக்க வைத்தனர்.

“பாவம் நல்ல ஷீணம் (டயர்டு) உண்டு, எந்தெங்கிலும் சாப்பிட கொடுத்து அடுத்திருந்து நோக்கான் பற்றுமோ…?”

“எனிக்கு இன்னைக்கு உச்ச (மதியம்) ஷிப்ட் ஆனு மாஸ்டரே, நான் இருந்து நோக்கிக் கொள்ளாம்…” என்றாள் நிஷா.

“ம்ம்… நான் உச்சைக்கு வராம், எதாவது ஆவஸ்யம் இருந்தா போனில் விளிக்கு… பனி குறையலேன்னா ஹாஸ்பிடல் கூட்டிப் போகாம்…”

“ஓகே மாஸ்டர், நீங்க போங்க…” நிஷா சொல்லவும் அரை மனதுடனே அங்கிருந்து நகர்ந்தான் ஆத்ரேயன்.

Advertisement