Advertisement

“நியாயமா நான்தான் கோபப்படணும், இவன் ஏன் மௌன சாமியார் போல வர்றான்.. தாடி, மீசை எடுத்திட்டா பேசக் கூடாதுன்னு யாராச்சும் சொல்லிட்டாங்களா…?” மனதுள் பொருமியவள் பொறுக்க முடியாமல் கேட்டே விட்டாள்.

“என்ன பிரச்சனை உங்களுக்கு…? நியாயமா நான்தான் கோபமா இருக்கணும், நீங்க ஏன் பேச மாட்டிங்கறிங்க…?” இதற்கு முன் பழகிய நட்பின் உரிமையில் கேட்டாள்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லவில்லை.

“இது என்ன வேஷம்…? ஏன் தாடி, மீசையை எடுத்திட்டிங்க…? இது நல்லாவே இல்லை…”

மீண்டும் அவளை ஒரு பார்வை பார்த்தவன் அமைதியாகவே இருந்தான். அதில் கடுப்பானவள் முகத்தைத் தூக்கி வைத்து பார்வையை வெளியே திருப்பி அமர்ந்து கொண்டாள்.

காலையிலிருந்து சாப்பிடாததில் பசித்தது. இவன் மேலுள்ள கோபமும் சேர்ந்து கொள்ள தலை வலிக்கும் போலிருக்க அமைதியாய் வெளியே பார்த்திருந்தாள். பத்து நிமிடம் கழிந்து மீண்டும் கார் நிற்க கேள்வியாய் அவனை நோக்கித் திரும்ப, “இறங்கு…” என்றான் ஆத்ரேயன்.

“ப்ச்… இப்ப என்ன…?” என்றவளின் கதவைத் திறந்தவன்,

“பிரேக்பாஸ்ட் கழிக்காம்…” என்று எதிர்ப்புறம் கண்ணைக் காட்ட அங்கே ஒரு ஹோட்டல் கம்பீரமாய் நின்றது. பசியில் அரை மயக்கமாய் அமர்ந்திருந்தவள் அதற்கு மேல் கேள்வி கேட்காமல் இறங்கினாள். நல்ல பசியில் இருந்தவள் புட்டு, ஆப்பம் என்று சாப்பிட்டாள்.

அவன் இட்லியுடன் முடித்துக் கொண்டான். அவள் வேகமாய் சாப்பிடுவதைப் பார்த்தவன், “ரொம்ப பசிச்சிருச்சா…?” என்று கேட்க அவள் நிமிர்ந்து பார்த்தாலும் பதில் சொல்லவில்லை.

கை கழுவிவிட்டு பாத்ரூம் சென்று வந்தவளின் முகம் ஒரு மாதிரி இருக்க ஆத்ரேயன் கவனித்திருந்தான். இருவரும் காரில் அமர காரை எடுத்தான். அப்போதும் அவள் முகம் சற்று பதட்டமாகவே இருக்க, “வீட்டுக்குப் போக எவ்ளோ நேரம் ஆகும்…?” என்றாள் நியதி. யோசனையுடன் அவளைப் பார்த்தவன், “ஏன்…? என்ன அவசரம்…?” என்றான்.

“அது… எனக்கு டயர்டா இருக்கு, சீக்கிரம் போகணும்…”

“ம்ம்…” என்றவன் வழியில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வண்டியை நிறுத்தி, “வந்துடறேன்…” என இறங்கினான்.

“ப்ச்… இவனுக்கு இந்த நேரம் தான் மெடிக்கல் ஷாப் போகணுமா…?” என முகத்தை சுளித்தாள் நியதி. கையில் ஒரு கவருடன் வந்தவன் அவளிடம் நீட்டினான்.

“இந்தா…”

“என்ன இது…?”

“உனக்குத் தேவையானது தான்… அந்த மெடிக்கல் ஷாப் பில்டிங் பின்னாடி பாத்ரூம் இருக்கு, போயிட்டு வா…” என்றவனை அதிர்ச்சியுடன் நோக்கினாள்.

“உ…உங்களுக்கு எப்படி தெரியும்…?” அவள் திணறலாய் கேட்க, “என் வீட்டுலயும் லேடீஸ் இருக்காங்க, போ…” என்றவனை நன்றியுடன் பார்த்தவள் இறங்கி சென்றாள். சில நிமிடங்களில் திரும்ப வந்தவள் முகம் மழையை இறக்கி வைத்த மேகம் போல் தெளிந்திருந்தது.

“தேங்க்ஸ்…” என்றாள் நெகிழ்வுடன்.

“தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம், மூணாறில் நிறைய டூரிஸ்ட் ஸ்பாட் உண்டு, சைலன்ட்வேலி இங்கிருந்து பக்கம் தான்… நினக்கு என்னோடு வரான் ஓகே ன்னா ஒரு திவசம் எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போறேன், வருவியா…?” அவன் கேட்கவும் சற்று யோசித்தவள்,

“ம்ம்…” எனவும் அவன் முகத்திலும் புன்னகை வந்திருந்தது.

“சரி, இப்பவாச்சும் சொல்லுங்க, ஏன் இந்த புது கெட்டப்…?”

“பெருசா ஒண்ணுமில்ல, வெளியூர் போனப்போ புது சலூனில் தாடி, மீசை ட்ரிம் செய்ய போனேன், அவன் அதை டேமேஜ் செய்துட்டான்… அதான் முழுசா எடுத்துட்டேன், இந்த கெட்டப் மலர் டீச்சருக்கு இஷ்டமாயில்லே…” என்றான்.

“உங்களுக்கு இஷ்டமாச்சா…? இதான் ஆளையே காணமா…?”

“ராக்கி பாய்க்கு டப் கொடுக்க ஆசையா கிரீம் போட்டு வளர்த்துன தாடி, என் அம்மா எவ்வளவோ சொல்லியும் எடுக்காம ஆசையா வச்சிருந்த தாடி… எல்லாம் அந்த சலூன் பையனால் நாசமா போயி, என்டே ஹான்ட்சம் ஒக்கே அந்தத் தாடியில் போய பின்னே நான் எங்கனே மலர் டீச்சர்டே முன்னில் வரும்…?”

அவன் சோகமாய் சொல்ல அவளுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.

“ஹாஹா… அப்போ தாடி தான் உங்க அழகின் ரகசியம்னு நினைச்சுட்டு இருந்திருக்கிங்க…?”

“பின்னே இல்லியா…? உனக்கு இந்த வேஷம் பிடிச்சிருக்கா…?”

“தாடி, மீசையோட இருந்தப்ப ஒரு கம்பீரம் இருந்துச்சு… இது கொஞ்சம் சின்னப் பையன் போல இருக்கு…” என்றாள் அவள்.

“ஹூம்… இனி நான் எப்ப பெரிய பையனாகி என்டே மலர் டீச்சரைப் பிரேமிக்கும்…?” என்றான் வருத்தமாய்.

அன்று சொன்ன அதே விஷயம் தான் என்றாலும் இன்று நியதிக்கு பெரிதாய் கோபம் வரவில்லை. அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல், “இவனிடம் சீக்கிரமே பேச வேண்டியதை பேசிவிட வேண்டும்… அப்போதுதான் பிதற்றலை நிறுத்துவான்…” என நினைத்தாள். அவனும் அமைதியாய் பாதையை நோக்கி வண்டியை விட்டான். அவள் இருப்பிடத்தை நெருங்கியிருக்க, “மாஸ்டர், எனக்கு உங்ககிட்ட சில விஷயங்கள் ஓப்பனா பேசணும்னு தோணுது…” என்றாள் சட்டென்று.

சிரித்தவன், “ஐ ஆம் வெயிட்டிங்…” என்றான்.

“மாஸ்டர், கொஞ்சம் வண்டியை நிறுத்த முடியுமா…?”

“ஷ்யூர், ஒன் ரிக்வஸ்ட், மலர் டீச்சர் என்னை மாஸ்டர்னு விளிக்கண்டா… ஆதி ஏட்டா விளிச்சா மதி…!” என்றான்.

“ஏட்டான்னா அண்ணன் தானே, இதுக்கு வேற ஏதாவது அர்த்தம் இருக்குமோ…?” யோசித்தவளுக்கு ஆதிரா, கணவன் அபிநந்தனை ‘அபியேட்டா’ விளித்தது நினைவில் வர, “சரியான கேடி…! என்னமா பிளான் பண்ணறான்…” என நினைத்தவள் கவனமாய் ஏட்டாவைத் தவிர்த்தாள்.

“ஆத்ரேயன்…! உங்களுக்கு ஏன் என்மேல இப்படி ஒரு பீல் வந்ததுன்னு தெரியல, ஆனா அது அர்த்தமில்லாதது… தயவுசெய்து உங்க மனசை மாத்திக்கங்க… இல்லேன்னா, நான் இந்த வேலையை விட்டே போக வேண்டி வரும்…”

“ஓஹோ…! அப்ப சாவித்திரி அம்மைக்கு நீ செய்து கொடுத்த சத்தியம்…?” அவன் கேள்வியில் அவள் உறைந்து போனாள்.

“அ..அது எப்படி உங்களுக்குத் தெரியும்…? உண்மைல நீங்க யாரு…? என்னைப் பத்தின விஷயங்கள் உங்களுக்கு எப்படித் தெரியும்…? தெரிஞ்சுதான் வேலைக்கு சேர்த்துனிங்களா…? தயவுசெய்து சொல்லுங்க…” என்றாள் அவள்.

“எல்லாம் சொல்லறேன், ஆனா இப்ப நீயும் டயர்ட், நானும் டயர்ட்… சோ வீட்டில் போயி ரெஸ்ட் எடுக்காம், இன்னொரு திவசம் நமக்கு இதைப் பற்றி டீடைலாயி சம்சாரிக்காம்…” சொன்னவன் வண்டியை எடுக்க சில நிமிடங்களில் அவள் இறங்க வேண்டிய இடம் வந்திருக்க, அப்படியே அதிர்ந்து  அமர்ந்திருந்தவளின் கையைப் பற்றினான் ஆத்ரேயன்.

சட்டென்று சுதாரித்து அவனது கையைத் தட்டப் போக, அந்தத் தொடலில் விகல்பமில்லாத பாதுகாப்பு உணர்வு மட்டுமே உள்ளது புரிய அமைதியானாள். மழையில் நனைந்து பயந்த குருவி போல் நடுங்கிக் கொண்டிருந்த அவள் விரல்கள் அவனது வெதுவெதுப்பான கைகளுக்குள் அடங்க அதை அழுத்தி ஆசுவாசப்படுத்தினான்.

“ஆதி…!” அவளது கலங்கிய முகம் கண்டவன், “ஹேய், ஒண்ணுமில்ல நிதி… ஜஸ்ட் கூல்…! ரொம்ப யோசிக்காம ரெஸ்ட் எடு, டைம் வரும்போது எல்லாம் சொல்லுவேன்…” அவளது கன்னத்திலும் மெல்லத் தட்டினான்.

அவள் கதவைத் திறந்து இறங்க, “இங்க வா…! டிரைவர் சீட்டிலிருந்து அவன் அழைக்கவும் அருகே வந்தாள்.

“லுக் நிதி… என்னோட அமைதியோ, மௌனமோ உன்னை விட்டு விலகறதுக்கான அடையாளம் இல்லை… உன்னை விட்டு நான் எவ்வளவு நாள் விலகி இருந்தாலும் என் நேசம் குறையாது… நான் ஒண்ணும் எதையும் யோசிக்காம காதலிக்க, இளம் வயசுப் பையன் கிடையாது… எல்லாம் தெரிஞ்சு, புரிஞ்சு தான் உன்னை நேசிக்கிறேன்… என் வாழ்க்கைல எனக்கு மனைவின்னு ஒருத்தி வந்தா அது நிச்சயம் நியதி ஆத்ரேயனா மட்டும் தான் இருக்க முடியும்… உன்னோட வளையத்தை விட்டு வெளிய வா, என்னோட கூட்டுக்குள்ள உன்னை பத்திரமா வச்சுப் பார்த்துக்கறேன்… இப்ப கிளம்பறேன், டேக் கேர் பை…” என்றவன் காரை எடுத்துக் கொண்டு போயே விட்டான்.

அவள் அப்போதும் அங்கேயே சிலை போல் நின்றிருந்தாள்.

அவன் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் காதுக்குள் ரீங்கரிக்க, அதன் முழுமையான அர்த்தம் புரியாமல் அவள் தவித்துப் போனாள்.

“அப்படியானால் இவனுக்கு என்னைப் பற்றி எல்லாமும் தெரியுமா…? அம்பிகை அம்மா, சாவித்திரி அத்தை எல்லாருக்கும் இவனை முன்னமே தெரிந்திருக்குமா…? தவிப்பில் சிவந்த உதடுகள் துடிக்க கண்கள் கலங்கியது.

பிரியங்கள் மட்டுமே

எப்பொழுதும் நமைத்

தேடி வரும்… நாம்

மறந்தால் தொலைந்து

போகத் துடிக்கும்…

வாழ்க்கையில் மறுக்க

முடியா கசப்புகளை

முழுமையாய்

மறந்திடலே நலம்…

Advertisement