Advertisement

அத்தியாயம் – 12

நல்லபடியாய் ஸ்டுடியோவில் யோகா டான்ஸை ஷூட் செய்து முடிக்க அனைவரும் கிளம்பினர். நியதி, ஜான்ஸி இருவருக்கும் நடுவில் ஆத்ரேயனும் நின்று டான்ஸ் செய்திருந்தான். முதலில் அவனைக் கண்டு அதிர்ந்து நோக்கிய நியதி சீக்கிரமே சுதாரித்துக் கொண்டு நல்லபடியாய் டான்ஸ் ஆடி முடித்தாள்.

“மாஸ்டர், நீங்களும் எங்களோட ஆடப் போறிங்கன்னு சொல்லவே இல்ல, இட்ஸ் ரியலி சர்ப்ரைஸ்…” ஜான்ஸி சந்தோஷமாய் சொல்ல நியதி அமைதியாய் நின்றாள்.

“எஸ் மாஸ்டர்… லேடீஸ் மட்டும் டான்ஸ் பண்ணிருந்தா கூட இவ்ளோ நல்லா வந்திருக்காது… நடுவே நீங்களும் நின்னு ஆடினது பார்க்கவே அழகா இருந்துச்சு, கொஞ்சம் எடிட்டிங் எல்லாம் முடிச்சிட்டு உங்களுக்கு அனுப்பறேன்…” அதை ஷூட் பண்ணின காமெரா மேனும் சொன்னான்.

“ஹலோ மாஸ்டர், இந்த நியூ லுக்ல சட்டுன்னு காலேஜ் டேஸ்க்குப் போயிட்ட போல இருக்கீங்க… புரோகிராம் சூப்பர்…” ராபர்ட் ஆத்ரேயனிடம் சொல்ல அவன் கை பற்றிக் குலுக்கியவன், தோளில் சந்தோஷமாய் தட்டிக் கொடுத்தான்.

அவர்களுக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுக்கப்பட குடித்துவிட்டு வெளியே வந்தனர். ஆத்ரேயனின் புதிய அவதாரத்தை ராபர்ட்டும், நியதியும் தவிர மற்றவர்கள் முன்பே கண்டிருந்ததால் அது அவளுக்கு மட்டுமே திகைப்பைக் கொடுக்க, அவன் எப்படி இருந்தால் நமக்கென்ன… என்று சட்டென்று சுதாரிக்கவும் செய்தாள்.

அவளைக் கண்டதும் இயல்பாய் நோக்கிப் புன்னகைத்த ஆதி பிறகு டான்ஸ் முடியும் வரை கண்டு கொள்ளவே இல்லை. இப்போதும் அங்கே அவள் இருப்பது நினைவிலேயே இல்லாதது போல் மற்றவர்களுடன் மட்டுமே பேசி சிரித்துக் கொண்டிருந்தான் ஆத்ரேயன். நியதிக்கு ஏனோ எதிலும் கலக்க முடியாமல் ஒரு மாதிரி எரிச்சலாக இருந்தது.

“ஓகே மாஸ்டர், நாங்க அப்படியே கிளம்பறோம்…” ஜான்ஸி சொல்ல, “ஹோட்டல்ல பிரேக்பாஸ்ட் முடிச்சிட்டுப் போகலாமே…” என்றான் ஆத்ரேயன்.

“நோ மாஸ்டர், பள்ளியில் (சர்ச்) போவான் அம்ம வீட்டில் காத்திருக்கும்… யூ கேரியான்…” என்றவள் நியதியிடமும் சொல்லி விடை பெற்றாள்.

“நாம கிளம்பலாமா மாஸ்டர்…?” என்றாள் சுரேந்தரிடம் நியதி.

“நியதி…! எனிக்கு ஒரு பங்க்ஷன் போகான் உண்டு, பாஸ் வீட்டில் போகும்போது நின்னே டிராப் செய்யும்…” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு அவள் முகம் சுருங்க, அதை கவனிக்காமல் சுரேந்தர் ஆத்ரேயனிடம் பேசிக் கொண்டே கார் பார்க்கிங்கிற்கு நடக்க, அவனும் இவளைத் திரும்பியும் பார்த்தானில்லை. கடுப்புடன் பின்தொடர்ந்த நியதியின் முகம் சந்தனத்தில் குங்குமம் கலக்கியபோல் சிவந்திருந்தது.

இருவரும் தங்களின் காரை எடுத்துக் கொண்டு வர, சுரேந்தர் கையை அசைத்து பை சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார்.

அவளருகே இன்னோவாவை நிறுத்திய ஆத்ரேயன், எதுவும் சொல்லாமல் முன்பக்கக் கதவைத் திறந்து கொடுக்க, இவள் அங்கே ஏறாமல் பின் இருக்கையின் கதவைத் திறந்து ஏறினாள். தோளை அலட்சியமாய் குலுக்கிக் கொண்டு காரை எடுத்தவன் டிரைவிங்கில் கவனமானான்.

இவள் பக்கம் திரும்பவோ, எதும் பேசவோ செய்யாமல் மியூசிக் பிளேயரைத் தட்டினான்.

அது, ‘மலரே நின்னே காணாதிருந்தால்… மிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே…’ என்று விஜய் ஏசுதாஸின் குரலில் காதல் உருகப் பாட, சட்டென்று அவனைப் பார்த்தாள் நியதி. அவன் என்னடாவென்றால் வண்டி ஓட்டுவதே பெரும் தவம் என்பது போல் அதிலே கவனமாயிருக்க கடுப்பானவள்,

“ப்ளீஸ், அந்தப் பாட்டைக் கொஞ்சம் நிறுத்தறீங்களா…?” என்றாள் எரிச்சலாய் அவனைப் பார்த்துக் கொண்டு.

கண்ணாடியில் அவளை ஒரு பார்வை பார்த்தவன் பாட்டை நிறுத்தாமல் சத்தத்தை இன்னும் கூட்டி வைக்க எரிச்சலுடன் முறைத்தவளை நோக்கிப் புருவத்தை மேலே தூக்கி, ‘எப்படி…’ என்பது போல் கேட்டுவிட்டு மீண்டும் பாதையில் கவனமானான்.

“ச்சே… வேணும்னே பழி வாங்கறானே…” உதட்டுக்குள் முனங்கியவள் காதைப் பொத்திக் கொள்ள, இப்போது ஆத்ரேயனும் சேர்ந்து அப்பாடலைப் பாடத் தொடங்கினான்.

“ப்ச், போதும்… பாட்டை நிறுத்துங்க, இல்லேன்னா வண்டியை நிறுத்துங்க… நான் ஆட்டோல வந்துக்கறேன்…” அவள் சிடுசிடுக்கவும் திரும்பிப் பார்த்தவன் தோளைக் குலுக்கிக் கொண்டு பாட்டை ஆப் செய்தான்.

எப்போதும் வெளியே பராக்குப் பார்த்துக் கொண்டு வருபவளுக்கு இன்று எதுவுமே பார்க்கப் பிடிக்கவில்லை. இறங்கி ஓடி விடலாம் போல் தோன்றியது. அவன் அருகாமை எப்போதும் போலில்லாமல் மூச்சு முட்டுவது போல் தோன்றியது.

என்றும் புன்னகையுடன் பேசிக் கொண்டே இருப்பவனின் மௌனம் அவளை மிகவும் பாதித்தது. எதையும் பார்க்கப் பிடிக்காமல் கண்ணை மூடி அமர்ந்து கொண்டாள்.

“இன்று அந்த டான்ஸ் புரோகிராமில் ஆட சம்மதிக்காமலே இருந்திருக்கலாமோ…? கள்ளன்…! இவனும் எங்களுடன் ஆடுவது தெரிந்தால் நான் மறுத்துவிடுவேனோ என்று தான் கடைசி வரை சொல்லாமல் இருந்திருக்கிறான்… ஆனாலும் இந்த புது வேஷம் சகிக்கவில்லை… சாமியாராய் திரிந்தவன் சட்டென்று சாக்கலேட் பாய் கெட்டப்பில் வந்து நின்றால் மயங்கி விடுவேன் என நினைத்தானோ…? பாவம், இதற்கு அந்த முந்தைய வேஷமே பரவாயில்லை என்று அவனுக்குப் புரியவில்லை…” சோடா பாட்டிலுக்குள் உருளும் கோலி குண்டு போல் கருவிழிகள் அங்குமிங்கும் உருள மனதுள் யோசித்துக் கொண்டிருந்தாள் நியதி.

சிறிது நேரப் பயணத்தில் வண்டி சற்றே உயரமாய் ஏறுவது புரிய, அங்கே நிறைய பாதைகள் ஏற்ற இறக்கத்துடனே இருப்பதால் நியதி அதை கவனத்தில் கொள்ளவில்லை. கார் சட்டென்று நிற்க, நிமிர்ந்து வெளியே பார்த்தாள். சின்னதாய் தேயிலைத் தோட்டத்துக்கு நடுவே இருந்த குன்றுப் பிரதேசத்தின் பாதையில் கார் நின்றது. அங்கே நிறைய கார்கள் வரிசையாய் நிற்க புரியாமல் அவனைப் பார்த்தாள்.

காரிலிருந்து இறங்கியவன் அவள் பக்கமாய் வந்து கதவைத் திறந்து, “இறங்கு…” என்றான்.

“இது என்ன இடம், என்னை எதுக்கு இங்கே அழைச்சிட்டு வந்திருக்கிங்க…?” அவள் படபடக்க, “ப்ச்… வா…” என்றவன் அவள் கையைப் பற்றி உரிமையுடன் அழைக்க கோபத்தில் வேகமாய் உதறினாள் நியதி.

“அங்கே பார்…” என்றவனின் பார்வை சென்ற திசையில் திரும்பிப் பார்க்க, அந்தக் குன்றின் மேல் ‘ஓம் முருகா…’ என சுவரில் எழுதியிருக்க ஒரு முருகன் கோவில் தெரிந்தது.

திகைப்புடன் அவனை ஏறிட, “சுப்பிரமணிய சாமி நின்டே இஷ்ட தெய்வமல்லே… வா, தொழுதிட்டு போகாம்…” என்றவனிடம் அவளால் மறுக்க முடியவில்லை.

“இவனுக்கு எப்படி எனக்கு முருகன் பிடிக்கும்னு தெரியும்…?” என்ற ஆச்சர்யம் விழிகளில் தேங்கி நிற்க இறங்கினாள். முன்னில் நடந்தவனைப் பின் தொடர்ந்தாள் நியதி. அந்தக் கோவில் இருந்த குன்றைச் சுற்றிலும் பசுமையாய் இருக்க அழகான சூழலில் இருந்தது. கோவிலுக்கு சற்றுத் தள்ளி அங்கேயே முஸ்லிம் மசூதி ஒன்றும் தெரிந்தது.

வியப்புடன் பார்த்தபடி படிக்கட்டுகளில் லாவகமாய் ஏறிய ஆத்ரேயன் பின்னில் இவளும் ஏறினாள். சுமார் நூறு படிக்கட்டுகளைக் கடந்து பிரகாரத்தை அடைந்தனர். நடை அடைக்கும் நேரமாகியிருக்க, வேகமாய் சென்று வணங்கினர். முருகன் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்க அவரை வணங்கி தனித்தனியே இருந்த கணபதி, துர்கா தேவியையும் வணங்கிவிட்டு முருகனை மீண்டும் வணங்கினர். வெகு நாளுக்குப் பிறகு கோவிலுக்கு வந்ததில் மனம் அமைதியாக கண் மூடி நின்றிருந்தாள் நியதி.

நம்பூதிரி கொடுத்த விபூதி, குங்குமம் பிரசாதத்தை வாங்கிக் கொண்ட ஆத்ரேயன், தனது நெற்றியில் அதைத் தொட்டுக் கொண்டான். அவள் அப்போதும் கண் மூடி நிற்க அவனே தனது கையிலிருந்த குங்குமத்தையும், விபூதியையும் எடுத்து அவள் நெற்றியில் வைத்தான்.

சட்டென்று கண்ணைத் திறந்தவள் அதிர்ந்து நோக்க, “நம்பூதிரி பிரசாதம் கொடுத்து… நீ கண் மூடி நின்னது கொண்டு வாங்கல, அதான் நானே வச்சேன்…” இயல்பாய் சொன்னான் ஆத்ரேயன். அவள் எதுவும் பேசாமல் திகைப்புடன் நிற்க, “நடை அடைக்கப் போறாங்க, சீக்கிரம் பிரகாரத்தை சுத்திடலாம்…” என்றவன் முன்னே நடந்தான்.

தன்னை நிதானப்படுத்தி அவளும் பிரகாரத்தை சுற்றத் தொடங்க குன்றின் மேலிருந்து பார்க்க அந்தப் பிரதேசமே மிகவும் பசுமையாய், அழகாய் இருந்தது. வேடிக்கை பார்த்தபடியே வந்தவளிடம், “போகலாம்…” என்ற ஆத்ரேயன் இரண்டிரண்டு படியாய் தாண்டி இறங்கினான். அவளும் வந்ததும் கார் நிறுத்திய இடத்தை நோக்கி நடந்தனர்.

இப்போதும் அவன் கார் முன் கதவைத் திறந்து கொடுக்க, சற்றுத் தயங்கியபடியே ஏறி அமர்ந்தாள் நியதி. அவன் இதழ்களில் ஒரு புன்னகை உதயமாக அதைக் கவனித்து விட்ட நியதியின் இதழ்களும் புன்னகைத்தன. அதன் பின் எதுவும் பேசாமல் அவன் மீண்டும் மௌன முகமூடி அணிந்து கொள்ள அவளுக்கு தான் கோபமாய் வந்தது.

Advertisement