Advertisement

 அத்தியாயம் – 11

“உள்ள வா நிஷா, தங்கச்சிக்கு சரியாகிடுச்சா…? இப்ப எப்படி இருக்காங்க…?” என்றாள் நியதி.

“இனி பிராப்ளம் இல்லன்னு டாக்டர் சொன்னார், ஆனாலும் ரெண்டு நாள் ஹாஸ்பிடல்ல இருக்க சொல்லிருக்கு…” என்றபடி கட்டிலில் அமர்ந்தாள் நிஷா.

“ஹூம்… கூட அம்மா இருக்காங்களா…?”

“இல்ல இன்னொரு தங்கை இருக்கா, அம்மா வீட்டுக்குப் போயாச்சு… வீட்டுல தம்பியைத் தனியே விட முடியாது…”

“ஏன்…? தம்பி ரொம்ப சின்னப் பையனா…?” நியதியின் கேள்விக்கு வலியோடு சிரித்தாள் நிஷா.

“நாங்க மூணு பொண்ணுங்க… நாலாவதா ஒரு பையன் பிறக்கவும் அச்சன், அம்மாக்கு ரொம்ப சந்தோஷம்… எனக்குப் பிறகு அவன்தான் உங்களுக்குத் துணையா இருந்து பார்த்துப்பான்னு அச்சன் சொல்லிட்டே இருப்பார்… ஆனா விதி அப்படி இருக்கல, பத்து வயசுல மூளைக்காய்ச்சல் வந்து படுத்தவனுக்கு கண்ணு தெரியாமப் போயிருச்சு… அதை சரி பண்ண அச்சன் ரொம்ப கஷ்டப்பட்டுச்சு, முடியாம அந்த துக்கத்துல அவரும் போயிடுச்சு… இப்ப அவனையே அவனால பார்த்துக்க முடியல…” கலங்கிய விழிகளுடன் நிஷா சொல்ல அதிர்ச்சியுடன் கேட்டிருந்தாள் நியதி.

“நான் எப்படியோ படிச்சு இந்த வேலைக்கு வந்தேன்… ஒரு தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வச்சேன், அடுத்த தங்கைக்கு வரன் பார்த்திட்டு இருக்கு…”

“ம்ம்… உனக்கும் ஒரு வாழ்க்கை வேண்டாமா நிஷா…?”

“நானும் வாழ்ந்திட்டு தானே இருக்கேன், முடிக்க வேண்டிய என் கடமையோட லிஸ்ட் கொஞ்சம் பெரிசா இருக்கே… என் தம்பி, தங்கைக்கும் ஒரு வாழ்க்கை அமைச்சுக் கொடுத்திட்டு தான் என்னைப் பத்தி யோசிக்கணும், அதுக்குள்ள நான் பாட்டியாகிடும்… அப்புறம் இனி எதுக்கு கல்யாணம்னு தோணும், பகவான் எப்படி எழுதிருக்கோ அது போல எல்லாம் நடக்கட்டும்… சரி, நீ ரெஸ்ட் எடு என் கதையைக் கேட்டா உனக்கும் சங்கடமாகும்…”

“ஹேய்…! பரவால்ல நிஷா…”

“நியதி…! உனக்குள்ளேயும் நிறைய விஷமம் (வருத்தம்) இருக்குன்னு உன்னைப் பார்க்கும்போது எனக்குத் தோணும்… ஆனாலும், அதைப் பத்திக் கேட்டு உன்னை வேதனைப் படுத்த விரும்பல… எந்த வருத்தமும், வார்த்தைகளும் வலிக்கு மருந்தாகாது… கடவுள் நமக்கு என்ன தருதோ, அதை ஏத்துகிட்டு வாழ்கையை அதன் போக்கில் போயி வாழ வேண்டியது தான், நான் வரட்டே…” என்றவள் எழுந்து செல்ல வேதனையுடன் அவளைப் பார்த்தாள் நியதி.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எத்தனை பிரச்சனைகள்… எல்லாம் நிறைந்த மனிதரென்று இந்த உலகத்தில் யாருமே கிடையாது… பணக்காரனுக்கு பசிக்காதது பிரச்சனை என்றால், ஏழைக்கு பசியே பிரச்சனை… ஒவ்வொரு நாளும் வாழ்க்கை புதிய படிப்பினையைத் தந்து கொண்டிருக்கிறது. அடுத்து இரண்டு நாட்களும் நியதியும், ஜான்சியும் யோகா டான்ஸ் பயிற்சி செய்ய சனிக்கிழமையன்று மாலை, வகுப்பு முடிந்து கிளம்பும்போது அவர்களிடம் வந்தார் சுரேந்தர்.

“நாளை காலைல ரெண்டு பேரும் எப்பவும் போல இங்கே வந்திருங்க… நான் உங்களை ஸ்டுடியோவுக்கு அழைச்சிட்டுப் போவேன், பாஸ் அங்கே வந்திருவார்…”

“வாவ், சூப்பர் மாஸ்டர்… பாஸ் வருவாரா…?” ஜான்ஸி சந்தோஷமாய் கேட்க, நியதிக்கு சற்று தவிப்பாய் இருந்தது.

“ச்சே… இத்தனை நாள் வராமல் கண்ணாமூச்சி ஆடிவிட்டு நாளைக்கு எதற்கு வருகிறான்…? பேசாமல் என்னால் நாளை புரோகிராம்க்கு வர முடியாதென்று சொல்லி விடலாமா…?” யோசித்தவள் உடனே முடிவை மாற்றிக் கொண்டாள்.

“ச்சே… வேலை செய்யற இடத்துக்கு துரோகம் செய்யக் கூடாது… அவன் வந்தா வந்திட்டுப் போகட்டும், டீவி சானல்ல முகம் தெரிஞ்சா விளம்பரம்னு நினைச்சு வருவானா இருக்கும்… கடவுளே…! அவனைப் பார்த்ததும் டென்ஷன்ல சொதப்பாம ஒழுங்கா ஆடணும்…” தனக்குள்ளே பேசிக் கொண்டிருந்தவளை ஜான்ஸி உலுக்கினாள்.

“என்ன நியதி, காலைல அந்த ஸ்டுடியோல உள்ள டான்ஸ் புளோர் போனதும் ஒரு முறை ரிகர்ஸல் பண்ணிப் பார்த்துக்கலாம்… அப்போதான் காமிரா முன்னாடி ஆட வசதியா இருக்கும், கிளம்பலாமா…?” என்றாள்.

“ம்ம்… போகலாம்…” என்றவள் வீட்டுக்கு கிளம்பினாள். மனம் ஒருவிதத் தடுமாற்றத்துடனே இருந்தது. ஆத்ரேயனிடம் அடுத்த நாளே பேசியிருந்தால் கூட மனது ரிலாக்ஸாகி இருக்குமோ என்னவோ, அவன் இப்படி அவள் கண் முன்னில் வாராமல் கண்ணாமூச்சி ஆடியதில் அவள் மனது அடிக்கடி அவனை நினைத்துக் கொண்டிருந்தது.

“நாளை அவனைக் காண்கையில் அவனது ரியாக்சன் எப்படி இருக்கும்… எப்போதும் போல பேசுவானா…? இல்லாவிட்டால் பாஸ் என்ற தோரணையைக் காட்டி இன்சல்ட் செய்வானா…?” யோசித்தவள் அலைபேசி சிணுங்கவும் எடுத்தாள்.

அம்பிகை தான் அழைத்திருந்தார்.

“நியதி மா…! நாளைக்கு தானே நீ சொன்ன புரோகிராம், தயாரா இருக்கியா…?”

“ம்ம்… பண்ணிருக்கேன் மா…” என்றவளின் குரல் ஒரு சுரத்தில்லாமல் ஒலிக்க அம்பிகை சிரித்தார்.

“என்ன… குரல்ல எனர்ஜி குறையுது…”

“ப்ச்… ஒண்ணுமில்ல மா, அந்த ஆத்ரேயன் இவ்ளோ நாளா கண்ணுல படவே இல்ல, சரி நிம்மதின்னு இருந்தா நாளைக்கு இந்த புரோகிராம்க்கு அவனும் ஸ்டுடியோ வருவானாம்… அதான் கொஞ்சம் டென்ஷனா இருக்கு…”

“இதுல உனக்கு என்னடா டென்ஷன்…? அவனோட சென்டரோட புரோகிராம்க்கு அவன் வரணும் தானே…”

“இருந்தாலும் அவனை எப்படிப் பார்க்கறதுன்னு கொஞ்சம் தயக்கமா இருக்கு மா…”

“நியதி மா…! உனக்கு என்னாச்சு… எதுக்கு இந்த தடுமாற்றம்…? நீ கிளாஸ்ல செய்யுற யோகா ஸ்டெப்ஸ அங்கே டான்ஸ் ஆடப் போற, அவ்ளோ தானே… இடம் தானே வேற, செயல் எப்பவும் செய்யுறது தானே…”

“அதெல்லாம் சரிதான் மா, இருந்தாலும் அவன் ஏதாவது சொல்லிடுவானோன்னு கொஞ்சம் டென்ஷன்…”

“எனக்கென்னமோ நீ அவனை நினைச்சு டென்ஷன் ஆன போலத் தோணல, நீ உன்னை நினைச்சு தான் டென்ஷன் ஆகற போல இருக்கு…” அவர் சொல்லவும் குழம்பினாள்.

“இங்க பாரு நியதி மா…! அவர் ஒண்ணும் உனக்கு விரோதி இல்ல, உனக்கு சம்பளம் கொடுக்கிற பாஸ்… தன்னோட விருப்பத்தை ஓப்பனா உன்கிட்ட சொன்னார், உனக்குப் பிடிக்கலன்னு அமைதியாகிட்டார் போலருக்கு… நீ அதிகம் யோசிக்காம இயல்பா இரு…” என்றார் அம்பிகை.

“ம்ம்… சரிம்மா…”

“ஓகே டா, ஆல் தி பெஸ்ட்…!” என்றவர் அழைப்பைத் துண்டிக்க நியதி யோசித்தாள்.

“ஒருவேளை, ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு நானாதான் அதிகமா யோசிக்கறனோ…” என நினைத்தவள் கையில் ஒரு புத்தகத்துடன் அமர்ந்தாள். அதில் ஆழ்ந்தவள் சிறிது நேரத்தில் கண்கள் சொருக உறங்கத் தொடங்கினாள்.

அடுத்த நாள் காலை நேரமே எழுந்து வழமையான ஆசனத்திற்கு பதிலாக அந்தப் பாடலை ஒலிக்க விட்டு நான்கைந்து முறை பிராக்டிஸ் செய்தவள் டைம் ஆகவும் யோகா செய்வதற்கான பொருட்களை பாகில் எடுத்துக் கொண்டு கிளம்பினாள். ஸ்டுடியோவுக்கு சென்று உடை மாற்றுவதாய் இருந்ததால் ஜீன்ஸ் அணிந்திருந்தாள்.

ஜான்ஸியின் கணவன் ராபர்ட்டும் புரோகிராம் காண ஆசைப்பட்டதால் அவனோடு பைக்கில் வந்திருந்தாள் ஜான்ஸி. அவர்கள் நியதிக்கு முன்னரே வந்து காத்திருந்தனர். சரியாய் ஏழு மணிக்கெல்லாம் சுரேந்திரன் வந்துவிட அவரது காரில் நியதி ஏறிக் கொண்டாள்.

காலை நேரக் குளுமையும், கண்களுக்கு இதமளித்த பசுமையும் சுகமாய் இருக்க வேறு எதையும் யோசிக்கக் கூடாது என்ற தீர்மானத்துடன் கவனத்தை அதை ரசிப்பதில் பதித்திருந்தாள் நியதி. அந்த ஏரியாவைக் கடந்து டவுனில் நீந்தி சற்று அவுட்டரில், சானலின் பெயரோடு கம்பீரமாய் நின்ற பெரிய கட்டிடத்தின் உள்ளே அவர்கள் நுழையும் போது ஒரு மணி நேரம் முடிந்திருந்தது. சுரேந்தர் கார் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு புரோகிராம் கோ ஆர்டினேட்டருக்கு போன் செய்ய அவன் வந்து டான்ஸ் புளோர்க்கு அழைத்துச் சென்றான். நியதி, ஆத்ரேயன் வந்துவிட்டானா என்று தேட அவனைக் காணவில்லை.

“நியதி…! நமக்கு ஒரு ரிகர்ஸல் நோக்காம்…” என்ற ஜான்ஸி பாட்டை ஒலிக்க விட இருவரும் பயிற்சி செய்யத் தொடங்க, சட்டென்று ஜீன்ஸ், டீஷர்ட்டில் உள்ளே நுழைந்தவனைக் கண்டவளின் விழிகள் அகல விரிய, அப்படியே நின்றவளை புன்னகையுடன் நோக்கியபடி வந்தான் ஆத்ரேயன்.

தாடி, மீசை இல்லாமல் கிளீன் ஷேவில் சாக்கலேட் பாய் போல் உள்ளே நுழைந்தவனைக் கண்ட நியதியின் முகம் அஷ்டகோணலாய் மாற கையசைத்தவன் முன்னே வந்து நின்று அந்த ஹிந்திப் பாடலுக்கு ஏற்ப ஆடத் தொடங்கினான். நியதி அப்படியே சிலை போல் நிற்க, அவள் கையில் இயல்பாய் தட்டியவன் ஆடச் சொன்னான்.

நாம் வெறுப்பதாய்

நினைக்கும் ஒன்று

மனதை நெருங்குகிறது

என்பதை மறுப்பதற்கில்லை…

நம் விருப்பங்கள்

மட்டுமே நடந்திடுமானால்

வாழ்வில் பிடித்தங்களும்

குறைந்தே போகும்…

Advertisement