Advertisement

நியதி முன்தினம் தான் ஜான்ஸியிடம் ஆத்ரேயன் சென்டருக்கு வராததைப் பற்றி விசாரித்திருந்தாள்.

“ஜான்ஸி…! எங்கே பாஸ் சில நாளா ஆளையே காணோம்…?” எதார்த்தமாய் கேட்பது போல் கேட்டிருந்தாள்.

“அவர் ஏதோ முக்கிய வேலையா வெளியூர் போயிருக்காராம் நியதி…” என்று ஜான்ஸியும் சொல்லியிருக்க, இன்று ஆத்ரேயன் ரூமிலிருந்து கேட்ட குரல் அவன் வந்துவிட்டதை சொல்ல, கிளாஸ் நடக்கும்போதும், முடிந்தும் கூட ஏன் அவன் வெளியே வரவில்லை என நியதி யோசித்தாள். இந்த ஒரு வார இடைவெளி ஆத்ரேயன் மீதிருந்த கோபத்தைத் தணித்து அவளை இயல்பாக்கி இருந்தது.

இயல்பாய் இருவருக்குள்ளும் நட்பு மலரத் தொடங்கிய வேளையில் அவனிடமிருந்து இப்படி ஒரு புரபோசல் அவள் கொஞ்சமும் எதிர்பாராதது. அவனைக் கண்டு தனது மனநிலையை விளக்கினால் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் இயல்பாய் இருக்க முயற்சி செய்தாள். வழக்கம் போல் வகுப்பு முடிந்து தோட்டத்தில் தியானத்தில் அமர்ந்தவளின் முன்னே நிழலாட, கண்ணைத் திறந்தவள் முன் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் நயனா.

“ஹேய் குட்டி…! இங்கே எப்படி வந்த…?” ஆவலுடன் அவளைத் தூக்கிக் கொண்டவளிடம் கேட்க, சிரிப்புடன் பின்னில் கை காட்டினாள் குழந்தை. அங்கே ஷோபனா இவளை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

“ஆன்ட்டி…! நீங்க இங்கே…?” புன்னகையுடன் அவரை நெருங்க பதிலுக்கு அவரும் புன்னகைத்தார்.

“எல்லா மாசமும் சில பைலில் நான் கையெழுத்து போட இங்கே வரும், இன்னைக்கு வந்தப்போ நின்னையும் கண்டிட்டு போகலாம்னு நினைச்சேன்… காலில் காயம் எல்லாம் ஆறிடுச்சா மோளே…?” அன்போடு கேட்டார்.

அப்போதுதான் அந்த ஹாஸ்பிடலுக்கும், அங்கே உள்ள உடமைகளுக்கும் சொந்தக்காரி அவர்தானே என்ற நினைவே அவளுக்கு வந்தது. பணம், பதவிக்கான எந்த அலட்டலும் இல்லாமல் எத்தனை இயல்பாய் தன்னைத் தேடி வந்து நலம் விசாரிக்கிறார்…” நினைக்கையில் மனம் நெகிழ்ந்தது.

“அதெல்லாம் சரியாகிடுச்சு ஆன்ட்டி… கால் பண்ணி இருந்தா நானே உங்களைப் பார்க்க வந்திருப்பனே, உங்க சேலையைக் கொடுக்க வீட்டுக்கு வரணும்னு நானும் நினைச்சுட்டே இருந்தேன்… நவீன் வரலியா…?” என்றாள்.

“ஹேய்..! அதொண்ணும் சாரமில்ல மோளே, நவீன் அவன் அம்மாகிட்ட இருக்கான்… உனக்கு இப்ப ப்ரீ டைம் தானே…”

“ஆமா ஆன்ட்டி, இனி பத்தரைக்கு தான் நெக்ஸ்ட் கிளாஸ்…” அவர்கள் பேசிக் கொண்டிருக்க, தோட்டத்தைப் பராமரிக்கும் சோமு ஷோபனாவைக் கண்டதும் தோளில் கிடந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு ஓடி வந்தார்.

“எந்தா சோமு, சுகமல்லே…”

“நல்ல சுகமானு அம்மே…”

“தெச்சி (வெட்சிப் பூ) பூக்கான் துடங்கியோ…?”

“மொக்கு விட்டிருக்கு மா, இன்னும் மலரத் தொடங்கலை…”

“ம்ம்… பூத்தால் வீட்டுக்குக் கொண்டு வந்து தா…”

“சரி அம்மே…!”

“குறச்சு மந்தாரப் பூவும் சேர்த்து கொண்டு வா, குருவாயூரப்பனு வைக்கான் வேணம்…”

“சரி அம்மே…!”

“சரி, நீ போயி பணி நோக்கு…” என்றவர் திரும்பினார்.

“ஆன்ட்டி… அதென்ன தெச்சிப் பூ, சாமிக்கு வைப்பாங்களா…! எனக்கு பிச்சிப்பூ தான் தெரியும்…” என்றாள் புன்னகையுடன்.

“தெச்சி, மந்தாரம், துளசி, பிச்சகம் சேர்த்து கட்டின மாலை குருவாயூரப்பனுக்கு ரொம்பப் பிடிச்சதுன்னு சொல்லுவாங்க… வீட்டில் மந்தாரம், துளசி, பிச்சிப்பூ எல்லாம் இருக்கு… தெச்சி மாத்திரம் இல்ல, அதானு கொண்டு வர சொன்னது…” அவளுக்கு விளக்கியவர்,

“சிஞ்சு மோளே, நமக்கு போகாம்…” என்று குழந்தையிடம் கேட்க அது நியதியின் தோளைக் கட்டிக் கொண்டது.

“வா…! ஆன்ட்டிக்கு ஜோலி உண்டாகும்…” என்றவர் அவளை வாங்கிக் கொண்டு, “நின்னே குட்டிகள்க்கு ரொம்ப இஷ்டாயி, சமயம் கிட்டும்போது வீட்டில் வா மோளே…” என்றார்.

“சரி ஆன்ட்டி…!” என்றவளின் மனதில்,

“எத்தனை அழகான அன்பான பாமிலி…” என்ற எண்ணம் தோன்ற மனம் தனக்கு கிடைக்காத சொந்தங்களுக்காய் ஏங்கியது.

சிலருடைய வாழ்வில் மட்டுமே இப்படி அழகான, அன்பான சொந்தங்கள் கிடைக்கிறது… பலருடைய வாழ்க்கை பாலை வனம் போல் பாசம் கிடைக்காமல் வறண்டே கிடக்கிறது… அதில் எப்போதாவது சிலர் காட்டும் அன்பே அவர்கள் வாழ்விலும் பாலைவனத்தில் பெய்திட்ட பன்னீர் மழை போல் சந்தோஷத்தை விதைத்துச் செல்கிறது.

“என் வாழ்வும் அப்படிதானே… பாலையாய் இருந்த வாழ்வில் சோலையின் குளிர்மையும், சந்தோஷமும் எப்படி இருக்குமென்று காட்டி அதை முழுமையாய் உணரும் முன் நொடியில் எல்லாம் கானலாய் கலைந்து போனது எதனால்…? இதை என் விதி என்பதைத் தவிர வேறென்ன சொல்லுவது…? தாய், தந்தை இல்லாத எனக்கு வாழ்வில் புதிதாய் எந்த பந்தமும் வரவே கூடாதென்று எழுதி இருக்கையில் எதுதான் எனக்கென நிலைத்திடப் போகிறது…” எண்ணத்தை அதன் போக்கில் அலையவிட்டு அமர்ந்திருந்தவள் ஜான்ஸியின் அழைப்பில் திரும்பினாள்.

“நியதி வா…!” கை காட்டி ஜான்ஸி அழைக்க எழுந்தாள்.

“இன்னும் கிளாஸுக்கு டைம் ஆகலியே…” யோசித்தபடி மொபைலில் டைம் பார்க்க, பத்தை நெருங்கியிருந்தது.

“நியதி…! நெக்ஸ்ட் கிளாஸ் நம்ம தான் பார்த்துக்கணும்…”

“ஏன், சுரேந்தர் மாஸ்டர் எடுக்கலியா…?”

“அவரும், பாஸும் வெளியே கிளம்பிட்டது…”

“ஓ…!” என்று உதடுகள் சொல்ல, “ஆத்ரேயன் வேண்டுமென்றே என்னைப் பார்க்காமல் தவிர்க்கிறானோ…?” என்ற எண்ணம் மனதில் வந்தது.

அடுத்த வகுப்பில் எந்த முத்திரை சொல்லிக் கொடுக்க வேண்டுமென்று டிஸ்கஸ் செய்தவர்கள், ஸ்டூடன்ட்ஸ் வரவும் வகுப்பைத் தொடங்கினர். இரண்டு வகுப்புகளும் முடியும் நேரம் சுரேந்தரும் வந்துவிட்டார். ஸ்டூடன்ட்ஸ் கிளம்பவும் இவர்களிடம் வந்தார் சுரேந்தர்.

“ஜான்ஸி, ஒரு பிரைவேட் சானல்ல இருந்து நம்ம கிட்ட ஒரு யோகா டான்ஸ் புரோகிராம் பண்ண கேட்டிருக்காங்க… நீங்க ரெண்டு பேரும் நான் சொல்லுற ஆசனங்களை எல்லாம் பிராக்டிஸ் பண்ணி தயாரா இருங்க, அவங்க ஸ்டுடியோக்கு சன்டே போக வேண்டி வரும்…”

“நானுமா மாஸ்டர்…” என்றாள் நியதி அதிர்ச்சியுடன்.

“எஸ்…”

“இ…இல்ல, நான் செய்யல…”

“ஒய்…? இது ஒரு நல்ல ஆப்பர்ச்சுனிட்டி, இன்னும் நம்ம யோகா சென்ட்டர் பத்தி நிறையப் பேருக்கு ரீச் ஆகும்…”

“நியதி…! ஏன் வேண்டாம்னு சொல்லற… இங்கே செய்யுற ஆசனத்தை ஸ்டுடியோல செய்யப் போறோம், அவ்ளோ தானே… இதுல என்ன, உனக்குத் தயக்கம்…?” ஜான்ஸி அவளிடம் கேட்க பதில் சொல்லாமல் முழித்தாள் நியதி.

“அ..து வந்து… எனக்கு இதுல விருப்பமில்ல…”

“என்னாச்சு நியதி…? கேமரான்னதும் பயமாருக்கா…?”

“அப்படியில்ல மாஸ்டர், ஏனோ பிடிக்கல…”

“ஹேய்…! இதெல்லாம் நம்ம சென்டருக்கு மட்டும் கிடைச்ச ஆப்பர்ச்சனுட்டி மட்டும் இல்லை, நம்மைப் போல யோகா டீச்சர்ஸ்க்கு கிடைச்ச வாய்ப்பும் தான்… நீ பிராக்டிஸ் பண்ணு, உங்க ரெண்டு பேரையும் தான் பாஸ் சூஸ் பண்ணி இருக்கார்… சோ, விருப்பம் இல்லேன்னா அவர்கிட்ட தான் நீ இன்பார்ம் பண்ணணும்…” சுரேந்தர் சொல்லிவிட்டு நகர அவள் திகைப்புடன் நின்றாள்.

“ஹேய் நியதி…! வாட்ஸ் யுவர் பிராப்ளம்…? எனக்கு இப்பவே டீவில நாம வரப் போறதை நினைச்சு எக்சைட்டடா இருக்கு, ராபர்ட், அம்மாட்ட சொன்னா ரொம்ப சந்தோஷப் படுவாங்க…” பரபரப்புடன் சொன்ன ஜான்ஸி, போனை எடுத்துக் கொண்டு நகர, நியதி யோசனையுடன் நின்றாள்.

“ஆத்ரேயன் தான் எங்களைத் தேர்வு செய்தானா…? விருப்பம் இல்லாவிட்டால் அவனிடம் சொல்ல வேண்டுமா…? அதற்கு அவனைத்தான் கண்ணிலேயே காணவில்லையே, இப்ப என்ன செய்யறது…?” யோசித்தவள், “அம்மாட்ட கேட்டுப் பார்ப்போம்…” என நினைத்து அம்பிகைக்கு அழைக்க, அவர் சந்தோஷமாய் அதற்கு ஒத்துக் கொள்ளுமாறு கூறினார்.

“சரி, இங்கே செய்யற போல நினைச்சு அங்கே செய்துட்டுப் போக வேண்டியது தான்…” என அவளும் மனதைத் தேற்றிக் கொண்டு தயாரானாள்.

அரை மணி நேரத்திற்கான புரோகிராம் அது. அந்த டான்ஸில் உட்படுத்தும் ஆசனங்களின் லிஸ்ட் கொடுத்தனர். அதை ஒரு ஹிந்திப் பாடலுக்கு ஏற்ற வகையில் சுரேந்தர் கோரியோகிராபி செய்து தருவதாய் சொன்னார்.

அன்று மாலை யோகா வகுப்பு முடிந்ததுமே சுரேந்தர் அப்பாடலுக்கு ஏற்ற வகையில் யோக முத்திரைகளை வைத்து ஸ்டெப்ஸ் சொல்ல, இவர்களும் சேர்ந்து பிராக்டிஸ் செய்தனர். அதை மொபைலில் வீடியோ எடுத்து அதைப் பார்த்து இருவரும் பிராக்டிஸ் செய்யவும் தொடங்கினர். ஆத்ரேயன் பிறகும் தலைமறைவாகிவிட, நியதிக்கே சற்று வருத்தமாய் இருந்தது.

“ச்சே… என்ன இருந்தாலும் அவர் என் பாஸ்… அன்னைக்கு நான் முட்டாள்னு உணர்ச்சி வசப்பட்டு திட்டி இருக்கக் கூடாது, என்னை பேஸ் பண்ணத் தயங்கிட்டு தான் இங்கே வரவே இல்லையோ…? ஹூம், இவ்ளோ தான் இவனோட நேசம், காதல் எல்லாம்…” என அவனுக்காக வருந்தவும், அவனையே கிண்டல் செய்யவும் செய்தாள். ஊருக்கு சென்றிருந்த நிஷாவின் தங்கை உடல்நிலை சற்றுத் தேறியதும் நிஷா திரும்பி இருந்தாள். இவளைக் கண்டு நன்றி சொல்லி பணத்தை திருப்பித் தந்தவள், மிகவும் சோர்ந்திருந்தாள்.

Advertisement