Advertisement

நிஷாவின் தங்கை சீரியஸாய் ஹாஸ்பிடலில் எனவும் சட்டென்று தனது சோகம் பின்னுக்குப் போக, பதட்டத்துடன் அவளைப் பார்த்தாள் நியதி.

“தங்கைக்கு என்னாச்சு நிஷா…? எதுக்கு சீரியஸ்…?” நியதி கவலையுடன் கேட்க, நிஷாவின் கண்களில் கண்ணீர்.

“சூஸைட் அட்டம்ப்ட்… எப்படியோ அம்மா பார்த்திட்டு கடைசி நேரத்துல காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டாங்க…”

“ஐயோ…! ஏன் இப்படிப் பண்ணாங்க…?” பதறினாள் நியதி.

“அவள் லவ் பண்ணின பையனுக்கு தான் நாங்க மேரேஜ் பண்ணி வச்சோம், ஆனா அவன் கொஞ்சம் சரியில்லை… எப்பவும் ரெண்டு பேருக்கும் சண்டை… இவளால் அவனை விட்டுட்டு வரவும் முடியல, நேத்து ரெண்டு பேருக்கும் சண்டை வந்து இவள் கிளம்பி எங்க வீட்டுக்கு வந்திட்டா… அழுதுட்டே இருந்தவ அம்மாவோட தூக்க மாத்திரையைக் குடிச்சிட்டா… இந்த நேரத்துல தூங்க மாட்டாளேன்னு அம்மாவுக்கு டவுட் வர மாத்திரை குடிச்சது கண்டு பிடிச்சு ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க… அம்மா உடனே என்னைக் கிளம்பி வர சொல்லி அழுகை… நான் இப்பதான் ஷிப்ட் முடிஞ்சு வந்தது, மறுபடி ஹாஸ்பிடல் போயி பணம் வாங்க சமயமில்ல… அதான் உன்கிட்ட கேக்க வந்தேன்…”

“ஹோ…! எந்த பிரச்சனையா இருந்தாலும் அதை சரி பண்ண முயற்சி பண்ணாம, தற்கொலை பண்ணிக்க நினைக்கறது எப்படி தீர்வாகும்…” என்ற நியதி,

“சரி, நீ சீக்கிரம் கிளம்பு நிஷா, நான் பணம் தர்றேன்…” சொன்னவள் எடுத்து வந்து கொடுத்தாள்.

“ரொம்ப தேங்க்ஸ் நியதி… நான் ரெண்டு நாள்ல வந்திருவேன், வந்ததும் உனக்கு திருப்பித் தந்துடறேன்…” சொன்னவள், அவள் முகத்தைப் பார்த்து நின்றாள்.

“நீ சொன்னது ரொம்ப சரி நியதி, எந்தப் பிரச்சனையா இருந்தாலும் பேஸ் பண்ணனும், அதான் வாழ்க்கை… அதுக்கு தற்கொலையோ, அழுகையோ தீர்வைத் தராது… நம்ம பிரச்சனையை நாம தான் சரி பண்ணப் பார்க்கணும், நான் வரேன்…” என்றவள் கிளம்ப அவள் தனக்கு தான் அதை சொல்லிச் செல்கிறாள் என நியதிக்கும் புரிந்தது.

“சரிதான்…! ஆத்ரேயன் எதுவோ சொன்னதற்கு நான் எதற்கு இப்படி அழுது புலம்ப வேண்டும்… அவன் விருப்பத்தை அவன் எப்படி சொன்னானோ, அதே போல் எனது விருப்பமின்மையை சொல்லி விட்டால் பிரச்சனை முடிந்து விடுமே…” என நினைத்தவளுக்கு சற்று சமாதானமானது.

“ஆத்ரேயனுக்கு என்னைப் பற்றி எதுவும் தெரியாததால் சாதாரணமாய் ஒரு ஈர்ப்பு தோன்றியிருக்கலாம்… அதைக் காதலென்று பிதற்றி இருக்கிறான், தெளிவு படுத்திவிட்டால் சரியாகி விடுவான்…” பிரச்சனைக்கு தீர்வு கண்டதில் மனம் லேசாக, ஒரு காபி கலந்து கொண்டு பால்கனிக்கு வந்தாள்.

மாலை நேரக் குளிர் காற்று இதமாய் வருட, சுகமாய் காபி இறங்கியது. நேற்றும், இன்றுமாய் இந்த இரண்டு நாட்களில் மட்டும் எத்தனை அனுபவங்கள்… யோசித்தபடி நின்றாள்.

நிறைய அழுததில் கண்கள் ரொம்பவும் எரிந்தது. குளித்தால் தேவலாமென்று தோன்ற மேலுக்குக் குளித்துவிட்டு வந்தவளின் அலைபேசியில் அம்பிகையின் அழைப்பு வர எடுத்துப் பேசினாள்.

“அம்மா…!”

“என்னடா நியதி, என்ன பண்ணற…?”

“ம்ம்… ரூம்ல இருக்கேன் மா…”

“ம்ம்…” என்றவர் சற்று மௌனித்து, “அழுதியா…?” என்றார்.

“ப்ச்… அது..வந்து…” இழுத்தவள் அவரிடம் பொய் சொல்ல முடியாமல் நடந்த எல்லாவற்றையும் சொல்லி விட்டாள்.

“அந்த ஆத்ரேயன் ஆபத்துல உதவி பண்ணார்தான், ஆனா ஏன் என்கிட்ட இப்படி சொன்னார்னு தெரியலை மா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…” மீண்டும் அவள் குரல் கமறியது.

பொறுமையாய் அவள் சொன்னதைக் கேட்டுக் கொண்டவர், “இதில் உன்னோட தப்போ, அந்த ஆத்ரேயன் தப்போ என்ன இருக்கு நியதி மா…?” எனவும் திகைத்தாள்.

“அந்த ஆத்ரேயன் யோகா சென்டருக்கு வர்ற பொண்ணுங்க எல்லார் கிட்டவும் நெருங்கிப் பழகறானா…? உன்கிட்ட எதுவும் தப்பா நடந்துக்கவோ, இல்ல… வேற ஏதாச்சும் அசிங்கமான நோக்கத்தோட பழகவோ செய்தானா…?”

“ச்சே… அதெல்லாம் இல்ல மா, அவர் இயல்பா நல்லவர் தான்… ஆனா, என்கிட்டே இப்படி சொன்னது தான் பிடிக்கல…”

“ஒரு ஆணுக்கு அழகான பொண்ணைப் பார்த்துப் பிடிச்சுப் போயி காதல் சொல்லறது ஒண்ணும் தப்பில்லையே…”

அம்பிகை கேட்க அவள் திகைத்தாள்.

“அம்மா…!” என சற்று குரலை உயர்த்தியவள், “மத்த பொண்ணுங்களும் நானும் ஒண்ணா…?” என்றாள் சீறலுடன்.

“ஏன் என்ன தப்பு… நீ ஒரு அழகான பொண்ணு தானே, உன்மேல ஒருத்தன் இஷ்டப்படறது தப்பு கிடையாதே…”

“அம்மா…! என்ன பேசறீங்க, எல்லாம் தெரிஞ்சும், புரிஞ்ச நீங்களே இப்படி சொல்லலாமா…?” என்றாள் கோபத்துடன்.

“புரிஞ்சதனால தான் சொல்லறேன் நியதி மா… நான் ஒரு அம்மா, என் பொண்ணு லைப் இப்படியே முடிஞ்சு போயிடணும்னு நினைப்பேனா…? நீயும் புருஷன், குழந்தை, குடும்பம்னு சந்தோஷமா வாழறதைப் பார்க்க எனக்கு ஆசையிருக்காதா…? நடந்து முடிஞ்சதை நினைச்சு புலம்பிட்டே இருக்காம, அடுத்து நம்ம வாழ்க்கையை எப்படி சந்தோஷமா அமைச்சுக்கலாம்னு நீ நினைக்கணும், எல்லாப் பொண்ணுங்களை போல குடும்பமா இருக்கணும்…”

“ம்மா… போதும், இதுக்கு மேல எதுவும் சொல்லாதீங்க, நான் அப்புறம் பேசறேன்…” சொன்னவள் சட்டென்று அழைப்பைத் துண்டித்துவிட்டு பெரிய மூச்சுகளை விட்டு சுர்ரென்று கிளம்பிய கோபத்தை தணிக்க முயன்றாள்.

நெஞ்சு படபடத்தது. சிறுவயது முதல் அம்பிகையிடம் நடக்கும் எதையும் மறைக்காமல், தோழியைப் போல பகிர்ந்து கொள்வது வழக்கம் என்பதால், சற்று சமாதானமாக இருக்குமென்று நினைத்து எல்லாவற்றையும் சொன்னால் அவர் என்ன இப்படி சொல்லுகிறார் மனம் துணுக்குற்றது.

“எப்படி அம்மாவால் இப்படி சொல்ல முடிகிறது…? என் விதியை கடவுள் வேறு விதமாய் எழுதி இருக்கும்போது மற்ற பெண்களைப் போல் என் வாழ்க்கை எப்படி சந்தோஷமாய் அமையும்…? அந்த ஆத்ரேயன் செய்தது சரி என்பது போல் பேசுகிறாரே… கண்டு, பழகி சிறிது நாட்களே ஆன பெண்ணிடம் என்ன காதல் வந்துவிடப் போகிறது…?” அவள் மனம் ஏதேதோ யோசித்து ஊஞ்சலாடியது.

மறுநாள் காலையில் வழக்கம் போல் எழுந்தவள் சிறிது நேரம் யோகாசனமும், தியானமும் செய்ய மனம் அமைதி ஆனது. கால்விரலில் காயம் சற்று வலித்தாலும் பொறுக்கும் அளவே இருக்க, ஆத்ரேயனைக் கண்டால் என்ன பேச வேண்டுமென்ற தீர்மானத்துடன் சென்டருக்கு கிளம்பினாள்.

ஆனால் அவள் எதிர்பார்த்தது போல் அன்று ஆத்ரேயன் யோகா சென்டருக்கு வரவில்லை. ஜான்ஸி அன்புடன் அவள் கையைப் பற்றிக் கொண்டு நலம் விசாரித்தாள்.

“மாஸ்டர் நடந்த எல்லாத்தையும் சொன்னார், ஸாரி நியதி…! நீ வீட்டுல இருந்து கிளம்பறேன்னு சொன்னாலும் நான் விட்டிருக்கக் கூடாது, மழை நின்னதும் நானே கொண்டு வந்து விட்டிருக்கணும்… எவ்ளோ பிரச்சனை…? உனக்கு ஏதாவது ஆகியிருந்தா குற்றவுணர்வுலயே நான் செத்திருப்பேன்…” உண்மையான அக்கறையும், கவலையும் அவளது விசாரிப்பில் வெளிப்பட்டது.

“ஹேய்..! இட்ஸ் ஓகே, ஜான்ஸி… விடு…! என் லைப்ல என்ன நடக்கணும்னு எழுதி இருக்கோ, அதெல்லாம் நடக்கணும்ல… இதுல உன் தப்பு என்ன இருக்கு…” சமாதானம் சொன்னாள்.

இரண்டு வகுப்புகள் முடிந்து ஓய்வு நேரத்தில் தோட்டத்தில் வழக்கமாய் அமரும் இடத்துக்கு வந்து அமர்ந்தாள்.

“இன்னிக்கு ஆத்ரேயன் கிட்ட எல்லாத்தையும் பேசி தெளிவு படுத்திடலாம்னு நினைச்சா அவனை ஆளையே காணோம்… அடுத்த பாட்சுக்கு வருவானா, இல்ல ஒருவேளை, நான் அவரைத் திட்டுனதுல ஹர்ட் ஆகி என் முகத்தை எப்படிப் பார்க்கறதுன்னு வராம இருந்திருப்பாரோ…?” பத்மாசனத்தில் கண் மூடி தியானத்தில் அமர்ந்திருந்தவளின் எண்ணம் முழுதும் அதில் லயிக்க முடியாதபடி ஆத்ரேயனையே சுற்றிக் கொண்டிருந்தது.

சட்டென்று தன் முன்னில் யாரோ நிற்பது போல் உணர்ந்து கண்ணைத் திறக்க, ஒரு சின்னப் பையன் ஓடுவது தெரிந்தது.

அவள் முன்னில் சிவப்பு ரோஜா ஒன்று வைக்கப்பட்டிருக்க, அதைப் பார்த்தவள் ஆச்சர்யமாய் கையில் எடுத்தாள்.

“யார் இதை இங்கே வைத்தது, அந்தக் குட்டிப் பையன் தான் வச்சிட்டு ஓடிட்டானோ..? எதுக்கு வச்சிருப்பான்…?” என நினைத்தவள், “இங்குள்ள குட்டீஸ் கூட சின்ன வயசுலயே பொண்ணுங்களுக்கு பூ கொடுத்துட்டுத் திரியுதுங்களே…” எனப் புன்னகைத்துக் கொண்டே ரோஸுடன் நடந்தாள்.

அடுத்து வந்த நாட்களும் ஆத்ரேயனை அந்தப் பக்கமே காணவில்லை. நியதிக்கு அவன் வராதது ஒரு பக்கம் சந்தோஷத்தைக் கொடுத்தாலும், ஏன் வரவில்லை என்ற கேள்வி இன்னொரு பக்கம் அழுத்திக் கொண்டிருந்தது.

“சரி, அன்னைக்கு அவசரப்பட்டு லவ் சொல்லிட்டோம்னு அவருக்கே புரிஞ்சிடுச்சு போலிருக்கு… அதான் ஆளைக் காணோம்…” என நினைத்துக் கொண்டவள் இயல்பாய் சென்டருக்கு சென்று வந்தாள்.

ஒரு வாரம் அப்படியே முடிந்திருக்க வழக்கம் போல் காலையில் சென்டருக்குள் நுழைந்தவள், காதில் ஆத்ரேயனின் அறைக்குள் இருந்து கேட்ட குரல் அவன் அங்கே இருப்பதை சொல்ல, சற்றுத் தடுமாற்றமாய் அவனை எதிர்கொள்ளத் தயாரானாள் நியதி.

ஆனால் ஆத்ரேயன் ஏனோ வகுப்பு முடியும் வரை வெளியே வரவேயில்லை. வழக்கம் போல் தோட்டத்துக்கு சென்று மரத்தடியில் அமர்ந்தவளின் மனம் குழப்பத்தில் இருக்க கண்மூடி தியானத்தில் அமர்ந்தாள்.

நில்லென்றால் நின்றிடுமோ

நெஞ்சத்தின் நினைவுகள்…

நெருஞ்சி முள்ளாய் குத்தும்

நேசத்தின் வேர்கள்…

வீசும் காற்றைப் போல்

இந்த நினைவுகளும்

சுகமும் சுமையுமானதோ…

Advertisement