Advertisement

அத்தியாயம் – 10

ஆத்ரேயன் சொன்னதைக் கேட்டு திகைப்புடன் அவனை நோக்கிய நியதி, “என்ன…?” என்றாள் குழப்பத்துடன்.

“இப்பதானே சாப்பிட்டோம், உடனே கிளம்பணுமா…? கொஞ்சம் கழிச்சு போகலாமேன்னு பரஞ்சதா…?”

“ஓ…! நீங்க வேணும்னா ரெஸ்ட் எடுங்க மாஸ்டர், நான் மெதுவா நடந்து போயிக்கறேன்…”

“ப்ச்… நானே கொண்டு விடறேன்…” என்றவன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள அவள் புரியாமல் பார்த்தாள்.

அவனது அன்னையிடம் சென்றவள் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு, “நீங்க செய்த உதவியை எப்பவும் மறக்க மாட்டேன் ஆன்ட்டி, ரொம்ப தாங்க்ஸ்… இந்த சேலையை நான் அப்புறம் வாஷ் பண்ணிட்டு தர்றேன்…” எனவும் அவள் கையில் தட்டிக் கொடுத்தார் ஷோபனா.

“அதொண்ணும் சாரமில்ல மோளே… சமயம் கிட்டும்போது என்னைக் காணான் வா, அதுதான் எனிக்கு சந்தோஷம்… ஆதி, நோக்கிக் கூட்டிட்டுப் போ…” என்றார் மகனிடம்.

“ம்ம்…” என்றவன் வண்டி சாவியுடன் வெளியேற அவளும் தொடர்ந்து வாசலுக்கு வந்தாள். அவன் காரை எடுப்பான் என்று நினைக்க, அவனோ புல்லட்டில் அமர்ந்திருந்தான்.

“இதுலயா…?”

“ம்ம்… ஏன் பயமாருக்கா…?” அவன் கேள்விக்கு பதிலாய் காரில் போகலாம் என்று சொல்ல முடியாமல், “இ..இல்ல கேட்டேன்…” என சமாளித்தவள் வண்டியில் ஏற வந்தாள்.

அவள் புல்லட்டில் ஏறுவதற்கு சற்றுத் தடுமாற, “விழுந்துடாம ஆதியை கெட்டியாப் பிடிச்சுக்க மோளே…” ஷோபனா சொல்ல, “அதே என்னைப் பிடிச்சோ, நான் கோபிக்காது…” என்றான் ஆத்ரேயன் குறும்புடன் தனது தாடியைத் தடவிக் கொண்டு.

“இவன் ஒரு மார்க்கமாவே பேசறானே… கடவுளே…! மறுபடியும் வண்டில இருந்து விழுந்து வைக்காம என்னை நல்லபடியா ரூம்ல சேர்த்திருப்பா…” என வேண்டியபடி புல்லட்டில் ஏறி அமர்ந்தவள் கம்பியை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“போலாமா…?” அவன் கேட்க, “ம்ம்…” என்றாள்.

“அம்மே…! ஞான் ராத்திரியே வருள்ளு…” அன்னையிடம் சொல்லிவிட்டு வண்டியைத் தடதடக்க விட்டு கிளப்பியவன் மெதுவாகவே ஓட்டினான்.

“ரொம்ப தேங்க்ஸ் மாஸ்டர்…”

“எத்தர பிராவஸ்யம் தேங்க்ஸ் பறயும், இட்ஸ் ஓகே…” வண்டியின் கண்ணாடியை சரி செய்து பின்னில் அவளை நோக்கிப் புன்னகைத்துக் கொண்டே சொன்னான்.

“ம்ம்… நீங்க மட்டும் அப்ப வரலேன்னா என்னாயிருக்கும்…?”

“அதெப்படி வராதிருப்பேன்…? ஜான்ஸி நினக்கு கால் பண்ணி நீ எடுக்கலேன்னு எனக்குக் கால் பண்ணினா, உன்னை பஸ் ஏத்தி விட்டதையும் சொல்லி மழை அதிகமா இருக்கு, கால் பண்ணினா எடுக்கல, பயமா இருக்குன்னு சொன்னா… நான் அப்போதான் வீட்டுக்கு வந்திட்டு இருந்தேன்… அதான், பஸ் ஸ்டாப்பில் நீ இருக்கியான்னு பார்க்க அங்கே வந்தேன்… இப்படி தான் மழை டைம்ல எங்காச்சும் மாட்டிக்கறதா…?” சற்றே கோபம் கலந்த அக்கறையுடன் கேட்டான் ஆத்ரேயன்.

“அதுவந்து… நான் வேணும்னு பண்ணலியே, பஸ் இறங்கிட்டு பார்த்தா குடை எடுக்கலை, ஆட்டோவும் கிடைக்கல… அதான் கொஞ்சம் மழை கம்மியானதும் போகலாம்னு பஸ் ஸ்டாப்புல நின்னுட்டு இருந்தேன்… அந்தாளு சரியில்லன்னு புரியவும் தான் மழைனும் பார்க்காம இறங்கி ஓடினேன்… நல்லவேளை, நீங்க வந்துட்டிங்க…” தன்னிலை விளக்கம் கொடுப்பதற்காய் சற்று அவனை நெருங்கி அமர்ந்திருப்பது புரிய மீண்டும் நீங்கி அமர்ந்து கொண்டாள் நியதி.

சிறிது மௌனித்தவள், “என்னைத் துரத்திட்டு வந்தவன் என்ன ஆனான்…?” என்றாள் யோசனையுடன்.

“என்ன ஆவான்…? நீ என்மேல மயங்கி விழுந்ததும் உனக்கு ஏதோ ஆயிருச்சுன்னு பயந்துட்டான், கார்ல எப்பவும் சேப்டிக்கு வச்சிருக்கிற தடியை எடுத்து அவன் மேல வீசினேன்… அப்படியே திரும்பி ஓடிப் போயிட்டான்…”

“ச்சே… அவ்ளோ தானா…?” பொசுக்கென்று போக கேட்டாள்.

“பின்ன, நான் என்ன ஜிம் மாஸ்டரா, கராட்டே மாஸ்டரா…? நான் யோகா மாஸ்டர் மா… என்னால ஸ்டன்ட் எல்லாம் பண்ண முடியாது… ஏதோ, என்னை சார்ந்தவங்களை காப்பாத்த கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் அவ்ளோ தான்…”

“அப்படியே இருந்தாலும் சம்மந்தமே இல்லாத எனக்காகவும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கீங்களே…? ஒருவேளை அவன் உங்களை ஏதாவது பண்ணியிருந்தா…?” என்றவளின் விழிகளில் உண்மையான கலக்கம் இருந்தது.

“நீ சரின்னு சொன்னா இப்பவே உன்னையும் என் சம்மந்தம் ஆக்கிக்க நான் ரெடி…” என்றான் அவன் முணுமுணுப்புடன்.

“என்னது…?” அவள் புரியாமல் கேட்க அபார்ட்மென்ட் வளைவில் வண்டியை நிறுத்தினான் ஆத்ரேயன்.

“மலர் டீச்சர், ஒரு நிமிஷம் இறங்கு…” அவன் சொல்லவும் அதே குழப்பத்துடன் கீழே இறங்கினாள் நியதி. சுற்றிலும் பார்த்த ஆத்ரேயன் ஒரு வீட்டில் வெளியே பூத்து நின்ற செம்பருத்தி செடியைக் கண்டதும் மலர்ந்தான்.

சென்று அதில் மூன்று பூக்களைப் பறித்து வந்தவன், சுற்றிலும் பார்க்க வேறு யாரையும் காணவில்லை. அவன் சட்டென்று அவள் முன்னில் மண்டியிட அவள் அதிர்ந்தாள்.

“ஹேய், என்ன பண்ணறிங்க மாஸ்டர்…?”

“நான் சுற்றி வளைக்க விரும்பல, இந்த மலர் டீச்சரை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, நம்ம பயணம் இந்த புல்லட்டோட நிக்காம வாழ்நாள் முழுதும் தொடரணும்னு நினைக்கிறேன்… ஞான் நின்னே பிரேமிக்குனு, ஐ லவ் யூ லாட் நிதி…” என்றவனின் விழிகளிலும், குரலிலும் காதல் வழிய பூக்களை அவளிடம் நீட்ட, அதிர்ந்து போன நியதி கண்கள் சிவக்க அப்படியே நின்றாள்.

“நிதி… ப்ளீஸ் என் லவ்வை அக்சப்ட் பண்ணு…” என்றவன் அப்படியே மண்டியிட்டு அமர்ந்திருக்க கோபத்துடன் அவனைப் பார்த்தவள்,

“U Fool…! என்ன தைரியம் இருந்தா இப்படி சொல்லுவ…? உனக்கும், நேத்து மழைல என்னைத் துரத்துன ரவுடிக்கும் என்ன வித்தியாசம்…? பெண் என்றாலே உங்களுக்கு காதலும், காமமும் மட்டும் தானா…?” என்றவள் அவன் கையிலிருந்த பூவைப் பிடுங்கி கசக்கி எறிந்துவிட்டு தனது அபார்ட்மெண்டை நோக்கி நடக்க, அதை எதிர்பார்த்ததால் உலக வரலாற்றிலேயே செம்பருத்தியைக் கொடுத்து காதலை சொன்ன அந்தக் காதல் மன்னன் புன்னகையுடன் அவள் செல்லுவதைப் பார்த்து நின்றான்.

அறைக்குள் வந்த நியதி கோபத்துடன் கைகளில் இருந்த பொருட்களைக் கட்டிலில் வீசிவிட்டு அப்படியே அமர்ந்தாள்.

மனம் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்க, மீண்டும் மீண்டும் ஆத்ரேயன் சொன்ன ‘ஐ லவ் யூ லாட் நிதி’ என்ற வார்த்தைகள் காதிலேயே சுற்றிக் கொண்டிருந்தன.

“நிதியாம் நிதி… ச்சே…” என்றவளின் உதடுகள் துடிக்க கண்கள் கரகரவென்று நீரைப் பொழிய கட்டிலில் கமழ்ந்தவள் தேம்பி அழத் தொடங்கினாள். மனது சூறாவளியில் சிக்கிய காகிதம் போல் படபடத்து சுழன்று கொண்டிருந்தது.

“ச்சே… ஏன் இப்படி…? அவனுக்கு ஏன் இப்படித் தோணுச்சு…? நான் அப்படியா அவன்கிட்ட நடந்துகிட்டேன்… எல்லார் கிட்டயும் விலகி இருந்தவ அப்படியே இருந்திருக்கணுமோ…? ஜான்ஸி, இந்த ஆத்ரேயன்னு யாரோடவும் பழகத் தொடங்காம பழைய போலவே இருந்திருக்கணும், அம்மா சொல்லுறாங்க, அத்தை சொல்லுறாங்கன்னு விலகி இருக்காம எல்லார் கிட்டயும் இயல்பாப் பழக நினைச்சது தான் என் தப்பா…? என்னைப் பார்த்து சட்டுன்னு இப்படி சொல்ல அந்த வாரியருக்கு எப்படி தைரியம் வந்தது… ஆபத்தான நேரத்துல உதவி செய்ததற்கு நன்றியை எதிர் பார்க்கலாம்… காதலை எதிர்பார்க்க அவனுக்கு எப்படித் தோணுச்சு…? என்னோட பேச்சும், செயலும் அவனை அப்படி யோசிக்க வைக்கிற போலவா இருந்துச்சு…? கடவுளே…! ஏன் எனக்கு இந்த சோதனை…” சுய கழிவிரக்கத்தில் அரற்றிக் கொண்டே வெகு நேரம் அழுது கொண்டிருந்தாள் நியதி.

“நியதி, நீ எனக்கு கிடைச்ச நிதிடி…! உன்னை என் கண்ணுக்குள்ள வச்சு பொக்கிஷம் மாதிரிப் பார்த்துப்பேன்…” காதுக்குள் அபிமன்யு சொன்ன வார்த்தைகள் காதலோடு ஒலிக்க அழுகையை அவளால் அடக்கவே முடியவில்லை.

வெகுநேரம் அழுததில் கண்கள் சின்ன சைஸ் பல்பு போல் வீங்கிக் கிடக்க, மூக்கும் முகமும் கொவ்வைப் பழமாய் சிவந்து கிடந்தது. உடை மாற்றவோ, பாத்ரூம் செல்லவோ கூட எழாமல் படுத்திருந்தவள் கதவு தட்டப்பட நிமிர்ந்தாள்.

வெறுப்புடன் கதவைப் பார்த்தவளுக்கு எழுந்து திறக்கக் கூடப் பிடிக்கவில்லை. மீண்டும் கதவு தட்டப்பட எழுந்து பாத்ரூமுக்கு சென்று முகத்தைக் கழுவிக் கொண்டு கதவைத் திறக்க நிஷா நின்று கொண்டிருந்தாள். இவளைக் கண்டவள் திகைத்து முகம் சுருங்கினாள்.

“நியதி…! என்னாச்சு, ஏன் அழுதிருக்க…? சுகமில்லையா…?” அவள் முகத்தைப் பார்த்து அதிர்ந்து கேட்டவளுக்கு பதில் சொல்லாமல், “எதுக்கு வந்த நிஷா…?” என்றாள் நியதி.

“அது..வந்து… நான் வந்தது இரிக்கட்டும், உனக்கு என்ன பிரஸ்னம் பறயு…”

“நான்லாம் இந்த உலகத்துல பிறந்ததே பிரச்சனை தான்… என்னை விடு, விஷயத்தை சொல்லு…”

“நான் அவசரமா ஊருக்குப் போகணும் நியதி… தங்கச்சி கொஞ்சம் சீரியஸா ஹாஸ்பிடல்ல இருக்கு, உன்கிட்ட கொஞ்சம் பணம் இருக்குமா…? வந்ததும் ஹாஸ்பிடல்ல வாங்கித் தந்துடறேன்…” என்றாள் நிஷா தயக்கத்துடன்.

Advertisement