Advertisement

அவள் நிலை புரிந்தவன், “இதெல்லாம் ஒரு விஷயமாடி. போன்ல பார்த்து கத்துக்கோ. பிரியா எல்லாம் எல்லாத்தையும் போன்ல தான் பார்ப்பா. இதை கையில வச்சுட்டு தெரியாதுன்னு சொல்ற.” என்ற குமரன், “ராஜம்மா கிட்ட கேளு. ஜாக்கெட் தைக்க கூட்டிட்டு போவாங்க. தச்சு போட்டுக் காட்டு எனக்கு.” என்றவன் அவளை இடையோடு கட்டிக்கொண்டு அவள் வயிற்றில் முகத்தை புதைக்க, “இன்னிக்கு திங்கள்கிழமை தான்” என்று நினைவூட்டினாள் மனைவி.

“ஞாபகம் இருக்கு… புல் மீல்ஸ் இல்லைன்னு ஆனாலும், டீ, காஃபி போல தொட்டுக்கறேன்…” என்றவன் பேச்சில் முகம் சிவந்தவள் அவன் தலைமுடியைப் பற்றி இழுக்க, சிரிப்புடன் அவள் இழுப்புக்கு உடன்பட்டவன் அவள் கன்னத்தில் முத்தம் வைத்து வேகமாக எழுந்து குளிக்க ஓடிவிட்டான். கார்த்தி சிரித்துக்கொண்டே, அவள் வேலைகளை கவனிக்க, அதன்பின் இருவரும் உண்டுமுடித்து அவரவர் இடத்தில் படுத்தனர்.

உடல் இரண்டும் விலகி இருந்தாலும், விடிய விடிய பேசிக்கொள்ளும் அளவுக்கு விஷயங்கள் இருந்தது இருவருக்கும். “ஸ்வீட் நத்திங்ஸ்…” என்பார்களே அதைப்போல்… இடையிடையே “ஸ்வீட் கிஸ்ஸிங்ஸ்..” கூட நடக்கும்.

ஆனால், இந்த அழகான உரையாடல்களும், தித்திப்பான முத்தங்களும் இருவரின் நெருக்கத்தை கூட்டியதே தவிர, எங்குமே சலிக்கவில்லை.

————-

கதிர்வேல் இரவு பதினோரு மணிக்கு மேல் கதிர்வேல் வீடு திரும்ப, மகாலட்சுமி மகனுக்கு உணவை எடுத்து வைத்தார். பிரியா அவன் வீட்டிற்குள் நுழைந்த நிமிடமே, சுவரோடு சுவராக ஒண்டிக்கொண்டு வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து விட்டிருந்தாள்.

கதிர்வேல் அவள் பக்கம் திரும்பாமல், உணவில் கவனம் செலுத்த பிரியாவின் பார்வை அவன்மீது தான் இருந்தது. அவனோடு இருந்த அந்த பத்து நாட்களும் அவளைக் கேட்காமலே நினைவு வந்தது.

கதிர்வேல் உண்டு முடித்தவன், “நீ இங்கே படுத்துக்கோம்மா. நான் அவளைக் கூட்டிட்டு கீழ அந்த வீட்ல படுத்துக்கறேன். அந்த வீட்ல இருக்க பொருளையெல்லாம் காலைல அவளையே எடுத்துட்டு வந்து இங்கே போடச் சொல்லு. எல்லாம் ஒன்னாவே இருக்கட்டும். அந்த வீட்டை தூங்குறதுக்கு மட்டும் வச்சுக்கலாம்.”

“மத்தபடி எல்லாம் ஒன்னா இருக்கட்டும். நீ தனியா இருப்பியா.?” என்று மகன் கேட்க,

“எனக்கு என்னடா.?” என்று சிரித்தார் மகா.

“சும்மா இல்லாம அந்த ஆளையும் அடிச்சு துரத்திட்டேன். இப்போ உன்னை தனியா விட யோசனையா இருக்கு. இல்ல, இங்கேயே படுத்துக்கவா.?” என்று மகன் கேட்க, அவன் இந்தளவு தனக்காக பார்ப்பதே நிறைவாக இருந்தது மகாலட்சுமிக்கு.

“போடா… என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்.” என்று சிரித்தார் அவர்.

கதிர் எழுந்து நின்றவன் பிரியாவைப் பார்க்க, அவன் பார்வையில் தெரிந்த கோபத்தில் பட்டென எழுந்து நின்றுவிட்டாள் அவள்.

“வா…” என்றவன் முன்னே நடக்க, மகாவிடம் தலையசைத்து அவன் பின்னே நடந்தாள் பிரியா.

கீழே பூட்டிக்கிடந்த வீட்டை திறந்து விட்டவன், பிரியாவிடம் தலையசைக்க இருட்டாக இருந்த அந்த வீட்டுக்குள் நுழையவே அச்சமாக இருந்தது அவளுக்கு. அவள் தயங்கி நிற்க, அவள் கையைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் வந்தவன் அங்கிருந்த சுவிச்சை அழுத்த, மின்விளக்கு ஒளிர்ந்தது.

பிரியா அதன்பின்பே உயிர் வந்தவளாக கதிரைத் திரும்பி பார்க்க, “வீட்டை முதல்ல பெருக்கியெடு… ஒருமாசமா பூட்டியே கிடக்குது.” என்றவன் சென்று பால்கனியில் நின்றுகொண்டான்.

பிரியா அவன் பேச்சை மீறாமல் வீட்டை சுத்தப்படுத்தி முடிக்கவும், கதிர்வேல் கையில் வைத்திருந்த தண்ணீர் கேனுடன் வீட்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது.

பிரியா ‘அடுத்து என்ன’ என்று புரியாமல் நின்றிருந்தாள். ஆனால், நிச்சயம் அவன் அருகில் செல்லும் துணிச்சல் இல்லை. ‘அடித்துவிடுவானோ’ என்று அதுவேறு பயம்.

ஆனால், அவள் அளவுக்கு எல்லாம் பதறவே இல்லை கதிர்வேல். கையில் இருந்ததை அருகில் இருந்த அலமாரியில் வைத்தவன் கதவைத் தாழிட்டு விட்டு மெதுவாக அவளை நெருங்கினான். பிரியா சுவற்றில் ஒண்டியபடி நிற்க, “அவள் அருகில் வந்து நின்றவன், “யாரைக் கேட்டு நீ வேலைக்கு போன?” என்று பிரியாவின் இடையில் அழுத்தமாக கிள்ள, “ஸ்ஸ்ஸ்… ஆஆ..” என்று கத்திவிட்டாள் அவள்.

“கத்துன… கொன்னுடுவேன்.” என்றவன் பிடியில் அழுத்தத்தைக் கூட்ட, பிரியாவுக்கு கண்கள் கலங்கிவிட்டது.

அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, “உனக்கு ரொம்ப இடம் கொடுத்துட்டேன் இல்ல. அதான் என் தலையில ஏறி உட்கார்ந்துட்ட…இனி கதிர் யாருன்னு காட்றேன்.” என்றான் மிரட்டலாக.

பிரியா அழுகையில் தேம்பிவிட, “ஏய் சும்மா நடிக்காத. வாயை மூடுடி.” என்றான் மீண்டும்.

பிரியா அவன் அதட்டியதில் இன்னும் சத்தமாக அழ, அவள் அழுவது பொறுக்காமல் மொத்தமாக அவள்மீது சாய்ந்தான் அவன்.

பிரியா அதிர்ந்து விழிக்க, “என் பொண்டாட்டி தானே நீ.” என்றான் இப்போது.

பிரியா பதில் இல்லாமல் அமைதி காக்க, அவள் இதழ்களைத் தீண்டி விடுவித்தவன் சட்டென விலகிவிட்டான்.

அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் பிரியா நிற்க, “போய்ப் படு.” என்றவன் அறையின் விளக்கை அணைத்துவிட்டு அவள் அருகில் படுத்துக்கொள்ள, இரண்டு நிமிடத்திற்கெல்லாம் அவன் மார்பில் கிடந்தாள் பிரியா.

கதிரின் கரங்கள் மொத்தமாக அவளை வளைத்திருக்க, பிரியாவால் அவனிடம் இருந்து விடுபட முடியாமல் போனது. நீண்ட நாட்களுக்கு பிறகான கூடல் மௌனமாகவே நடந்து முடிய, கதிர் விலகவும் தலையணையில் புதைந்து கொண்டு சத்தமில்லாமல் கண்ணீர் வடித்தாள் மனைவி.

கதிர் அதில் கடுப்பாகி எழுந்து அமர்ந்தவன், “ஏய் என்ன இப்போ.?” என, அவள் கண்டு கொள்ளாமல் அழுகையைத் தொடரவும், எழுந்து அறையின் விளக்கை உயிர்பித்தான்.

பிரியா வேகமாக அங்கிருந்த போர்வையால் தன்னை மறைத்துக் கொள்ள, “ஆமா… நான் பார்த்ததே இல்ல. அடச்சீ.. எதுக்கு அழுவுற சொல்லி தொலைடி.” என்றான் கடுப்புடன்.

“இப்படி பேசியே சாகடிக்கத்தான் என்னை கூட்டிட்டு வந்திங்களா.” என்று அழுகையுடன் பிரியா கேட்க,

“நீ என்னை சாவடிக்கல… ரோட்ல வச்சு அசிங்கம் பண்ணல. கல்யாணத்துக்கு முன்னாடியே உன்கூட பண்ணவேண்டியது மொத்தமும் பண்ணிட்டேன் நான். கெட்டவனா இருந்தா அப்படியே போயிருப்பேன்ல. எதுக்குடி உன் பின்னாடி வந்தேன். உனக்காக… உன் ஒருத்திக்காகத் தான் வந்தேன்.”

“கல்யாணம் பண்ணி கூட எல்லாம் உன் இஷ்டத்துக்கு தானே ஆடின்னு இருந்தேன். நீ இன்னா பண்ண பதிலுக்கு. என்னை அசிங்கப்படுத்தி, என் அம்மாவை அடிக்க வந்து… கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டிங்க ஆத்தாளும், மகளும்…” என்று கத்தியவன்,

“பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்போ நான் சாவடிக்கிறேனா… நீதான் சாவுகிராக்கி. உன்னை என்னைக்கு பார்த்தேனோ… அன்னைக்கு பிடிச்சது சனி. வச்சுக்கவும் முடியாம, விடவும் முடியாம நீதான் சாவடிக்கிற என்னை. தள்ளிப் போடி. ” என்றவன் அருகில் அமர்ந்திருந்தவளைப் பிடித்து தள்ளிவிட, தலையணை மீதே விழுந்தாள் பிரியா.

கணவனின் வார்த்தைகளில் இருந்த வலி இப்போது புரிந்தது பெண்ணுக்கு. சில கெட்ட பழக்கங்கள் இருந்தாலும், மொத்தமாக கெட்டவன் இல்லையே. தன்னை எப்போதும் ஏமாற்ற நினைக்கவில்லையே… என்று மனம் அவனுக்காக வாதிட, மெல்ல நகர்ந்தவள் கணவனின் மடியில் தலைவைத்து படுத்துக் கொள்ள,

“எழுந்து போடி.” என்று அவளை உதறித் தள்ளினான் கதிர்.

“சாரி மாமா..” என்று கதறியவள் எழுந்து அவனை அணைத்து கொள்ள, அவளது அழுகையில் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தது அவனது கோபம்.

வெகுநேரம் அழுதபடி இருந்தவளை சமாதானம் செய்து உறங்க வைத்தவன் அடுத்தநாள் காலை ஆறுமணிக்கெல்லாம் அவளை எழுப்பிவிட்டான்.

பிரியா எழுந்து அமர்ந்த நிமிடம், “ட்ரெஸ்ஸ எல்லாம் ஒழுங்கா போடு.” என்று அதட்டியவன் அவள் உடையை சரிசெய்து முடிக்கவும், அவளை அழைத்துக்கொண்டு மேலே தன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டான்.

அங்கேயே குளித்துமுடித்து அவன் தொழிலுக்கு கிளம்ப, பிரியா மகாவுடன் இருந்து கொண்டாள். மகா வீட்டு வேலைகளை பார்த்திருக்க, அவரிடம் கேட்டு ஓரிரு வேலைகள் செய்து கொடுத்தவளுக்கு அப்படியே நேரம் ஓடியது.

அன்று மதிய உணவு நேரத்திற்கு கதிர் உணவுக்காக வீட்டிற்கு வர, அந்தநேரம் ராணி மகளைத் தேடி வந்திருந்தார். அவர் குரல் கேட்டு பிரியா வெளியே வர, “உள்ளே போ.” என்றான் ஆணையாக.

“மாமா…” என்று அவள் தயங்க, கதிர் கடுமையுடன் ஒரு பார்வை பார்க்க, அதற்குமேல் அங்கு நிற்கவில்லை அவள்.

ராணி, “என்னடா. என் பொண்ணை இழுத்துட்டு வந்துட்டு எனக்கே ஆட்டம் காட்டுறியா. என்ன வேலைக்கு போறா. உட்கார்ந்து திங்கலாம்னு கூட்டினு வந்துட்டியா?” என,

“ஏன்… பொண்ணை வேலைக்கு அனுப்பி நீ உட்கார்ந்து தின்றதை கெடுத்துட்டேன்ன்னு கோவம் வருதா உனக்கு… கீழே இறங்கு.” என்றான் கதிர்.

“என் பொண்ணை அனுப்புடா.”

“உன் பொண்ணெல்லாம் இங்கே யாரும் இல்ல. என் பொண்டாட்டி உன்கூட வரமாட்டா. கீழே இறங்கு.” என்றவன் பேசிக்கொண்டே படிக்கட்டு வரை வந்துவிட, ராணியும் பின்னடைந்தார்.

“கிளம்பு… இனி என் வீட்டுப்பக்கம் வரவே கூடாது நீ.” என்று அவரைத் துரத்திவிட்டவன் அதன்பிறகே உணவை முடித்துக்கொண்டு கிளம்பினான்.

Advertisement