Advertisement

தித்திக்கும் முத்தங்கள் 09

கார்த்திகா வீசியெறிந்த தட்டில் இருந்த உணவுப்பருக்கைகள் குமரன் மீதும், தரையிலும் இறைந்து கிடக்க, அசையாமல் அமர்ந்து கொண்டிருந்தான் குமரன். அவன் கண்கள் கலங்கி சிவந்திருந்ததன் காரணம் கோபமா, அல்லது உணவில் இருந்த அதிகப்படி காரமா என்று அறியமுடியவில்லை.

ஆனால், கார்த்திகா அவன் முகத்தை நிமிர்ந்தும் பாராமல் அழுகையில் கரைய, சில நிமிடங்கள் பொறுத்துப் பார்த்தவன் அதற்குமேல் முடியாமல் வெளியில் கிளம்பிவிட்டான். ‘இருந்த கோபத்திற்கு மீண்டும் கையை நீட்டி விடுவோமோ’ என்று தோன்றிவிட்டது அவனுக்கு.

கீழே வாசலில் நின்ற ஆட்டோவை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டவனின் மனம் முரண்டு பிடிக்க, ‘அவ சாப்பிட்டாளா இல்லையா தெரியலையே’ என்பதே பெரிய தலைவலியாக இருந்தது. ‘நிச்சயமா அதை வாயில் வைக்க முடியாது, வேற என்ன செய்வா’ என்று சிந்தித்துக் கொண்டே அவன் முக்கியசாலைக்கு வர, அந்த சாலையில் அமைந்திருந்த பிரியாணி கடையைப் பார்க்கவும், ஆட்டோவை அந்த கடைவாசலில் நிறுத்திவிட்டான்.

அந்த கடையில் ஒரு பிரியாணி வாங்கிகொண்டவன் மீண்டும் வீடு வர, சாதம் இறைந்திருந்த இடம் சுத்தமாக துடைத்தெடுக்கப்பட்டிருந்தது. கார்த்திகா ராஜம்மாவின் மடியில் படுத்து இன்னமும் அழுது கொண்டிருக்க, கண்களில் கண்ணீர் வற்றிப்போனதோ என்னவோ, சத்தமில்லாமல் தேம்பிக் கொண்டிருந்தாள்.

குமரன் கையிலிருந்த பார்சலை ராஜம்மாவிடம் கொடுத்தவன், “சாப்பிட வைக்கா.” என,

“நீ சாப்பிடாம போயிட்டன்னு உன் பொண்டாட்டி அழுதுட்டு இருக்கா.. நீ அவளுக்கு பிரியாணி வாங்கியாந்தியா.?” என்று சிரித்தார் அவர்.

கார்த்திகாவும் எழுந்து அமர்ந்துவிட, “சாப்பிட சொல்லு.” என்று மீண்டும் வந்தபடியே திரும்பிவிட்டான் குமரன்.

அவன்  கிளம்பும்வரை பொறுத்திருந்த ராஜம்மா, “பார்த்தியா… இதான் உன் புருஷன் குணம். உனக்கு அவன்மேல கோவம் இருக்கும், நியாயம்தான். உனக்கு அவன் செஞ்சது அநியாயம் தான். ஆனா, அவன் கெட்டவன் இல்ல கண்ணு”

“உன்கிட்ட சொல்றதுக்கு என்ன? அவன் ஆத்தாக்காரி அவனுக்கு ஒரு வேளை சோறு கூட ஒளுங்கா போட்டது இல்ல. அம்மா, தங்கச்சின்னு பாசம் வச்சே வீணா போனவன் அவன். அவன் காசுக்கு மட்டும்தான் அந்த வூட்ல மரியாத. அவன் நெஜத்துக்கும் ரொம்ப பாவம் கண்ணு.?”

“சம்பாதிக்க தெரியும், அதை வச்சு என்ன பண்றது? எப்படி ஒரு ரூபாய் சேர்த்து வைக்கிறது எதுவும் தெரியாது அவனுக்கு. அன்னைக்கு பார்த்தியே அவன் ஆத்தாக்காரி இன்னாப் பேச்சு பேசுனா. வேற ஒருத்தனா இருந்தா, அவ பேச்சை கேட்டுகிட்டே உன்னை விரட்டி விட்ருக்கலாம்ல.”

“செஞ்ச தப்பு உறுத்தவும் தான் உன்கூட வந்துட்டான். அவன் கோவத்துல உனக்கு அநியாயம் பண்ணிட்டான்தான். ஆனா, அவன் நல்லவன் கண்ணு. உன் ஆத்தா உனக்கு பார்த்திருந்தா கூட, அவனை மாறி ஒரு பிள்ளை கிடைக்காது சாமி.”

“நான் அவன்கூட சேர்ந்து குடும்பம் பண்ணுன்னு சொல்லல. ஆனா, நீயும் அவனை பட்டினியா போடாத சாமி. அவனுக்கு பெத்தவதான் சரியா இல்ல. நீயாச்சும் அவன் வயிறு வாடாம பார்த்துக்க ராஜாத்தி. நீ அவனுக்கு சோறு மட்டும் போடு.”

“பின்னாடி உன் மனசு மாறுனா, அவங்கூட குடித்தனம் பண்ணு. இல்ல, அப்போ என்ன வழியோ அதை பார்த்துக்கங்க.. ஆனா, இருக்கிற வரைக்கும் அவனுக்கு ஒருவாய் சோறு போடு கண்ணு. நீயும் நிம்மதியா இரு. இப்படி அழுது அழுது உடம்புக்கு நோவ இழுத்துக்காத சாமி.” என்று கார்த்திகாவின் கன்னம் தொட்டு கொஞ்சலாக கூறி முடிக்க, கார்த்திகாவின் இளகிய மனம் குமரனுக்கும் இரங்கியது.

ஆனால், ராஜம்மாவிடம் எதுவும் காட்டிக்கொள்ளாமல் அவள் அமர்ந்திருக்க, ஒரு தட்டில் அந்த பார்சலைப் பிரித்துக் கொட்டியவர், “சாப்புடு கண்ணு.” என்றார்.

கார்த்திகா மறுக்காமல் உணவைக் கையில் வாங்கிக்கொண்டு, “நீங்களும் சாப்பிடுங்க.” என்று பாதியை அவருக்கும் கொடுக்க, “நீ சாப்புடு. எனக்கு வேலை கெடக்குது.” என்றபடியே எழுந்து வெளியே சென்றுவிட்டார் ராஜம்மா.

கார்த்திகாவின் மனதில் ராஜம்மா கூறிய விஷயங்களே ஓடிக்கொண்டிருக்க, ஒவ்வொரு வாய் உணவை எடுத்து வைக்கும்போதும் தானாகவே மனம் குமரனை நினைத்துக் கொண்டது.

தான் அப்படி ஒரு காரியத்தை செய்தபின்னும் அவன் தன்னை ஒருவார்த்தைக் கூட  கடிந்து கொள்ளாமல் சென்றதே பெரிய குற்றவுணர்வை கொடுத்தது அவளுக்கு. பொதுவாகவே, எந்த விதத்திலும் அடுத்தவர்களை காயப்படுத்தமாட்டாள் அவள்.

ஏன். அவள் வீட்டிலேயே கூட, கதிர்வேல் தங்கையைப் பற்றி அத்தனை குறை படித்தாலும், அவளைப் போட்டியாக நினைத்தாலும், ஒருநாள் கூட, அவனுக்கு எதிர்வினையாற்றியது இல்லையே.

அவள் அன்னை திட்டும்போதும், அடிக்கும்போதும் கூட அவனுக்காக இரக்கம் கொள்பவள் அவள்.

ஆனால், இன்று குமரனை தண்டிக்க துணிந்து விட்டதை நினைத்து அவளுக்கே அவமானமாக இருந்தது. அதுவும், ‘ஒருவர் உணவில் கையை வைக்கையில், அவரை சாப்பிடவிடாமல் செய்வது எத்தனைப் பெரியப் பாவம்’ என்று அவள் உள்ளம் குற்றம் சுமத்த, தன்னையே கீழாக உணர்ந்தாள் கார்த்திகா.

ஆனாலும், ‘இது எல்லாமே அவனால் தான். அவன் என்னை தூக்கி வந்ததால் தான் இது அத்தனையும்.’ என்று அறிவு குரல் கொடுக்க, ‘என்னவா வேணா இருக்கட்டும். இது உன் குணம் இல்லையே.’ என்று மீண்டும் குறுக்கிட்டது மனது.

இதே யோசனையில் தலைவலி தொடங்கிவிட, எப்போதும் போல் வேலையில் தன்னைத் தொலைத்துவிட முடிவெடுத்தாள் அவள். காலையில் சமைத்த பாத்திரங்கள் அடுப்படியில் கிடக்க, அதை எடுத்து கழுவும் இடத்தில் போட்டு, அடுப்படியைத் துடைத்து முடித்தவள் குளியலறையில் இருந்த ஒரு வாளியில் நீரை எடுத்துவந்து வீட்டையும் பெருக்கி துடைத்து முடித்தாள்.

குளியலறையில் போட்டிருந்த பாத்திரங்களை கழுவி  சமையலறை அலமாரியில் அடுக்கி வைத்து விட்டு குளியலறையை சுத்தமாக கழுவி விட்டவள் ராஜம்மா வாங்கி வைத்திருந்த பினாயிலை கொஞ்சமாக தெளித்துவிட, அப்போதுதான் வீடு சுத்தமானது போல் தோன்றியது அவளுக்கு.

இன்னும் குளியலறையில் இருந்த ஜன்னல் வேறு மனத்தை உறுத்திக்கொண்டே இருக்க, சமையல் மேடையின் கீழே ராஜம்மா மடித்து வைத்திருந்த பழைய பேப்பர்களை பந்துபோல் சுருட்டி அந்த ஜன்னல் துளைகளில் வைத்து அடைத்துவிட்டாள்.

அதன்பின்னரே மனம் நிம்மதிக்கொள்ள, நேற்று குமரன் வாங்கி வந்திருந்த உடைகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றாள். குளித்து முடித்து அணிந்திருந்த உடையையும் துவைத்து குளியலறைக்கதவின் மீது ஈரம் வடியும்படி போட்டு விட்டாள்.

நேரம் அப்போதுதான் ஆறாகியிருக்க, வேறு வேலை எதுவும் இல்லாமல் போகவும், மீண்டும் சமையலில் இறங்கிவிட்டாள்.

——————————-

இங்கு கையிலிருந்த பணம் கரைந்து போகவும், தன் தந்தையைத் தேடி வந்திருந்தான் கதிர்வேல்.

தங்கராஜ் அவனைத் திட்டிக்கொண்டே கட்சி அலுவலகத்தின் உள்ளேச் சென்றிருக்க, கதிர்வேல் வாசலில் நின்றிருந்தான். சில நிமிடங்களில் கையில் பணத்துடன் வந்தவர் “ஒழுங்கா பார்த்து செலவு பண்ணுடா. சும்மா இங்க வந்து நிக்காத. கல்யாணம் பண்ணினு வேலைக்கு போவாம பொண்டாட்டியை சுத்தினு இருந்தா, சோறு வந்துடுமா. ஒழுங்கா பொழப்பை பாரு.” என்று அதட்டியே பணத்தை கையில் கொடுத்தார்.

அவர் நகரவும் கையில் இருந்த பணத்தை எண்ணிப்பார்த்தவன் ‘இந்த அஞ்சாயிரத்துக்கு அட்வைஸ் வேற’ என்று தந்தையை நக்கலடித்தபடி வீடு வந்துசேர, அவன் மனைவி அப்போதும் உறக்கத்தில் தான் இருந்தாள்.

‘இவளுக்கு மட்டும் எப்படி தூக்கம் வருது.’ என்று எண்ணியபடியே, அவள் அருகில் அமர்ந்தவன், “ப்ரியா…” என்று அவளை எழுப்ப,

“தூங்கவிடு மாமா” என்று மீண்டும் திரும்பி படுத்தாள் அவள்.

தூக்கத்தில் அவள் உடைகள் கலைந்திருக்க, அவளை எழுப்பவென்று அவள் அருகில் அமர்ந்து அவளை சீண்டிக் கொண்டிருந்தான் கதிர்வேல். ஒருகட்டத்தில் ப்ரியா எழுந்துவிட்டாலும், அவளை எழ விடாமல் தன்னுடன் இணைத்துக் கொண்டான்.

அதன்பின்னான நேரங்கள் கூடலில் கரைய, நேற்று புது வீட்டிற்கு வந்திருந்தாலும் இந்தநிமிடம் வரை சமைக்க என்று சமையலறைக்குச் செல்லவே இல்லை பிரியா.

கதிரும் நேரம் காலமில்லாமல் நினைத்த நேரமெல்லாம் அவளை அணைத்தபடி கிடக்க, இயல்பிலேயே சோம்பேறியான பிரியா இன்னும் சோர்ந்து போய் கிடந்தாள். ஆனால், தன்னையே சுற்றிவரும் கணவனை நினைத்து பெருமிதமாகவும் இருக்க, முழுதாக தான் நினைக்கும்படி அவனை வளைக்கத் தொடங்கினாள் பிரியா.

இப்போதும் கூடல் முடிந்து இருவரும் களைத்து சாய்ந்திருக்க, “பசிக்குது மாமா” என்று கொஞ்சலாக கூறியபடி அவள் விலகிப்படுக்க,

“நான் கடைக்கு போய் ஏதாவது வாங்கிட்டு வரேன்டி.” என்று பட்டென சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான் கதிர். அவன் படிகளில் இறங்கிச்செல்லவும், மகாலட்சுமி வேலை முடித்து வந்தவர் படிகளில் ஏறவும் சரியாக இருக்க, அன்னையை நிமிர்ந்தும் பாராமல் தலையைக் குனிந்தபடியே வேகமாக இறங்கிச் சென்றுவிட்டான் மகன்.

‘இவன் வேலைக்கு போகலையா.’ என்ற யோசனையில் அவர் படியேற, அடுத்த தளத்தில் இருந்த பால்கனியில் உடலை ஒட்டிய நைட்டியுடன் நின்று கீழே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பிரியா.

 தலைமுடியை மொத்தமாக சேர்த்து உச்சியில் கொண்டையிட்டிருக்க, தலையில் வால் முளைத்ததைப் போல் வத்தக்குழம்பின் நிறத்தில் மின்னியது அவளின் கூந்தல். மணி ஆறைக் கடந்து நெடுநேரம் ஆகியிருக்க, இன்னும் முகத்தைக்கூட கழுவாமல் நைட்டியை அணிந்துகொண்டு அவள் நின்றிருந்த விதம், கண்டதுமே முகத்தை சுளிக்கச் செய்தது மகாலட்சுமியை.

தலையிலடித்துக் கொண்டு அவளிடம் எதுவும் பேசாமல் அவர் தன் வீட்டிற்கு சென்றுவிட, பிரியாவும் அவரைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவர் வருவதை பார்த்திருந்தாலும், பார்க்காதது போலவே நின்றுகொண்டாள் அவள்.

அவளைப் பொறுத்தவரை இது தேவையற்ற தலைவலி. அவரிடம் பேசப்போய் அவர் மாமியார் என்று அதிகாரம் செலுத்தினால் தன்னால் தணிந்து போகமுடியாது என்பது ஒருபுறம் இருக்க, கதிர்வேல் அவன் அன்னையை மதிக்காமல் போனது மற்றொரு காரணம்.

‘அவரே பெருசா கண்டுக்கல. நாம ஏன் ஒட்டணும்.’ என்ற எண்ணத்தில் மகாவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை அவள்.

அரைமணி நேரத்தில் கதிர்வேல் உணவு வாங்கி வந்து விட, இருவரும் உண்டு முடித்தநேரம், “நாளைக்கு வேலைக்கு போகணும் பிரியா.” என்றான் கதிர்வேல்.

அவனைத் திரும்பி பார்த்தவள் “என்ன மாமா. இப்போதான கல்யாணம் பண்ணோம். என்ன அவசரம், ஒருவாரம் என்னோட இரு.” என்றாள் அவன் கையைக் கட்டிக்கொண்டு.

“கல்யாணம் பண்ணதெல்லாம் சரிதான். உனக்கு ஒழுங்கா சோறு போடணும் இல்ல. அதுக்கு வேலைக்கு போயாவணும். என் அப்பனும், ஆத்தாளும் நம்மளை உக்காரவச்சு சோறு போடுவாங்கன்னு நினைக்காத. அதுங்க இதுவரைக்கும் செஞ்சதே அதிகம்.”

“நாளைக்கு நான் வேலைக்கு போறேன். நீ தனியா இருந்துக்கோ..” என்றான் அலட்சியமாக.

பிரியா அவன் பேச்சைப் பெரிதாக எடுக்காமல் தலையாட்டி வைக்க, கதிர்வேல் அவளை அணைத்தபடி படுத்துவிட்டான். அதற்குமேல் பேச்சு வார்த்தையும் இல்லை அவர்களுக்குள்.

———————

கார்த்திகா இரவு சமையலை முடித்துவிட்டவள் அதற்குமேல் என்ன செய்வதென புரியாமல் அமர்ந்துவிட, சரியாக பத்து மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்தான் குமரன். கார்த்திகாவின் மீது இருந்த நம்பிக்கையில் வரும்போதே இரவு உணவையும் அவன் வாங்கி வந்திருக்க, அவன் கையிலிருந்த பாலிதீன் கவரைப் பார்க்கவும் முகம் சுருங்கிவிட்டது கார்த்திகாவுக்கு.

குமரன் உணவுப்பையை தரையில் வைத்தவன் அமைதியாக சென்று குளித்து வர, அதற்குள் தான் சமைத்த உணவை எடுத்து கீழே தரையில் அடுக்கிவிட்டு ஓரமாகச் சென்று அமர்ந்து கொண்டாள் கார்த்திகா. ‘நான் சமைச்சுட்டேன், வேணும்ன்னா சாப்பிடட்டும்.’ என்று தனக்குள் பேசிக்கொண்டு அவள் அமர்ந்திருக்க, குளித்து வந்தவனோ ஒரு நிமிடம் அலறிப்போனான்.

சற்று கோபமாகவே, “இப்போ என்ன மூக்குப் பொடியா.” என்று கார்த்திகாவிடமே கேட்டுவைக்க, கண்கள் கலங்கிவிடும் போல் இருந்தது கார்த்திகாவுக்கு.

“ஏய்… நான் ஒண்ணுமே பண்ணல, சும்மா அழுது ஊரைக்கூட்டாத. இப்போ இன்னா, இந்த மொளகாத்தூள் சோத்தை நான் திங்கணும் அவ்ளோதான. திங்கறேன்… உன்னை தூக்கிட்டுப் போன பாவத்துக்கு தின்னு தொலைக்கிறன்.” என்றவன் தானே தனக்கு பரிமாறிக் கொண்டு அமர்ந்துவிட்டான்.

“நீ ஏன் உக்காந்துட்டு இருக்க. நல்ல சோறு வாங்கிட்டு வந்திருக்கேன். போய் கொட்டிக்க.” என்றவன் கண்களை இறுக மூடியபடியே முதல்வாய் உணவை எடுத்து வைக்க, ம்ஹூம்… அவன் எதிர்பார்த்தபடி காரம் அவன் மண்டைக்கு ஏறவில்லை.

மாறாக, ஒரு நல்ல சுவையும், மணமும் அவன் தொண்டையில் இறங்க, “என்னடா நடக்குது.” என்றபடியே மீண்டும் ஒரு வாய் எடுத்து உண்டுப் பார்த்தான். அப்போதும் உணவு சுவையாகவே இருக்க, சட்டென கார்த்திகாவின் முகம் பார்த்தான் அவன்.

அவனுக்கு முகம் காட்ட மறுத்து, வேறுபுறம் திரும்பிகொண்டவள் “மதியம் கோபத்துல பண்ணிட்டேன். எங்கம்மா சொல்வாங்க… எதிரியா இருந்தாலும் பசின்னு வந்தா சோறு போடணும். ஆனா, உன்னை சாப்பிட விடாம பண்ணிட்டேன் சாரி..” என்றாள் தன்மையாக.

‘அவ்ளோ நல்லவளா இவ’ என்று குமரன் சந்தேகத்துடன் கார்த்திகாவைப் பார்த்தாலும், உணவின் சுவை அவனை இழுக்க வேறெதையும் யோசிக்காமல் வேகமாக உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான்.

அவன் முகம் பார்த்த கார்த்திக்கு ராஜம்மா கூறியதெல்லாம் உண்மைதானோ என்று நினைக்கத் தோன்றியது அந்த நிமிடம்.

Advertisement