Advertisement

இவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த புதிய வீட்டில் ராஜம்மாவும், பூச்சியும் காத்திருக்க, குமரன் கார்த்திகாவோடு உள்ளே நுழைந்தான் இப்போது.

யாரும் எதுவும் சொல்வதற்குள் அவனே, “விளக்கை ஏத்து.” என, கார்த்திகா மறுப்பதற்குள் பார்வையால் மீண்டும் பயம் காட்டினான்.

அவன் எதிர்பார்த்ததுப் போலவே பயந்து போனவள் அமைதியாக விளக்கை ஏற்ற, ஒருநிமிடம் கண்களை மூடி வேண்டிக்கொண்டான் குமரகுரு.

‘இதயெல்லாம் சரி பண்ணிக்குடு முருகா.’ என்று வேண்டுதல் வைத்தவன் “போய் சாப்பிட எதையாவது வாங்கினு வாடா.” என்றான் பூச்சியிடம்.

பூச்சி வெளியேறவும், “நானும் கெளம்புறேன் குமரா. பூக்கடைக்கு போவணும். நாளைக்கு வியாபாரத்த பார்க்கணுமே.” என்று தானும் வெளியேறினார் ராஜம்மா.

இரண்டு நாட்களாக ஓடிக் கொண்டேயிருந்த உடல் ஓய்வு கேட்க, அந்த வீட்டின் ஒருமூலையில் பாய், தலையணை என்று எதுவுமில்லாமல் கைகளைத் தலைக்கு வைத்து படுத்துவிட்டான் குமரன்.

“என்ன மனுஷன் இவன்.” என்று கார்த்திகைச்செல்வி பார்த்திருக்க, ‘அதெல்லாம் என்னைப் பாதிக்காது’ என்று அறிவிப்பவன் போல் அடுத்த சில நிமிடங்களில் உறங்கிவிட்டான் குமரன்.

அரைமணி நேரம் கழித்து, பூச்சி உணவுப் பார்சலுடன் வர, “உட்காருடா.” என்றான் குமரன்.

“நான் சாப்ட்டுதான் வாங்கினு வந்தேன்டா. நீங்க சாப்புடுங்க.” என்று ஓடிவிட்டான் பூச்சி.

இவர்கள் வீடு இருந்த தளத்தில் இன்னும் ஐந்து வீடுகள் இருக்க, அவர்களின் கவனம் முழுதும் இங்கேதான் இருந்தது. இரண்டு மூன்று முறை யாரோ எட்டிப் பார்த்தது போல் வேறு தோன்ற, பூச்சி கிளம்பிய நிமிடமே கதவை மூடி தாழிட்டு விட்டான் குமரன்.

  கார்த்திகா அவன் செயலில் லேசாக நிமிர்ந்தமர, அவள் பதட்டத்தைக் கண்டுகொள்ளாமல் முன்பு அமர்ந்திருந்த இடத்தில் சென்று அமர்ந்தவன் உணவுப் பார்சலைப் பிரித்துக்கொண்டே, “இங்கே வா.” என்றழைத்தான் அவளை.

கார்த்திகா மறுப்பாக தலையை ஆட்ட, “ஏன்… நான் ஊட்டிவிடவா?” என்றான் கிண்டலாக.

கார்த்தி பதிலில்லாமல் முகம் திருப்ப, “நீயா எழுந்து வரலன்னா, அதான் நடக்கும். வா.” என்றான் மீண்டும்.

கார்த்தி இப்போது அவன் முகம் பார்க்க, “பார்க்கவே பாவமா இருக்க நீ. வந்து சாப்பிடு வா.” என்றான் மீண்டுமொருமுறை.

கார்த்திக்கு அப்போதும் எழுந்துச் செல்லும் எண்ணமில்லை போல. அவள் அமைதியைக் கண்டு, ‘அவள் அசையமாட்டாள்’ என்று புரிந்தவன் தானே எழ, அவனுக்கு முன்பே எழுந்து நின்றுவிட்டாள் கார்த்திகா.

வந்த புன்னகையை அடக்கிக்கொண்டு அவளுக்கான உணவை குமரன் அவளருகில் நகர்த்தி வைக்க, அமைதியாக அமர்ந்து சிறுபிள்ளையைப் போல் கொறிக்கத் தொடங்கினாள் அவள்.

இருவரும் உணவை முடிக்கவும், குமரன் தானே அதன் இடத்தை சுத்தம் செய்ய, அவனை ஆவெனப் பார்த்திருந்தாள் கார்த்திகா.

அவள் பார்வையை கவனிக்காமல் மீண்டும் பழையபடி படுத்தவன், “கொஞ்சநேரம் தூங்கு. நேத்துல இருந்து அழுதுனே இருக்க. தூங்கி எழுந்து பொறுமையா அழு.” என்று கண்களை மூடிக்கொள்ள, ‘நான் ஏன் அழணும். என்ன தப்பு செஞ்சேன்.?’ என்று சிந்திக்கத் தொடங்கினாள் கார்த்திகா.

 ————————————

இங்கு கார்த்திகைச்செல்வியின் வீட்டிலோ, மகாலட்சுமி தன் மகளை நினைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, அவரை கண்டபடி பேசிக் கொண்டிருந்தார் தங்கராஜ்.

“என்னடி.. ஆத்தாளும், மவளும் சேர்ந்துதான் பிளான் போட்டிங்களா. நீதான் உன் பொண்ணை கூட்டிக் கொடுத்தியா. அதான் நேக்கா அவளை அவனோட அனுப்பி வச்சிட்டு, ஒன்னும் தெரியாத பாப்பா மாறி வந்துட்டியா.” என்று வார்த்தைகளால் வதைத்துக் கொண்டிருந்தார் அவர்.

மகள் காணாமல் போனதில் இருந்தே இதே பேச்சுக்கள் தான். என்னவோ மகாலட்சுமிக்கு மொத்தமாக எதிலும் பிடித்தமில்லாமல் போனது. அனைத்தும் முடிந்துபோன நிலையில் இருந்தார் அவர்.

மகளுக்காக மட்டுமே என்று ஓடிக் கொண்டிருந்தவரின் உடலும், உள்ளமும் அவள் இல்லையென்று ஆகவும், மொத்தமாக சோர்ந்து போனது.

 எப்போதும் தங்கராஜ் பேசுவதற்கு பதிலுக்கு பதில் பேசுபவர் இன்று அதையும் செய்யாமல் எதையோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

‘வீட்டிற்கு வந்த மருமகள் முன் மனைவியை இப்படிப் பேசி வைக்கிறோமே’ என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல், தங்கராஜ் பேசிக் கொண்டிருக்க, தாயை முறைத்தபடி நின்றிருந்தான் கதிர்வேல்.

‘தலைல தூக்கி வச்சு ஆடுனா இல்ல. தேவைதான்.’ என்று கொஞ்சமும் மரியாதையில்லாமல் மனதிற்குள் அன்னையை திட்டிக் கொண்டிருந்தான் அவன்.

பிரியதர்ஷினி கதிர்வேலை ஒட்டிக்கொண்டு நின்றிருந்தவள் மாமியாரை பாவமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அண்ணன் கதிர்வேலின் தங்கையை இழுத்துச் சென்றது பெருத்த அதிர்ச்சி அவளுக்கு.

‘நிச்சயம் காதலெல்லாம் இருக்காது.’ என்று தெரிந்தாலும், தன் கணவனை மீறி பேசும் எண்ணமில்லாமல் அமைதியாகவே நின்றிருந்தாள்.

 ‘உன்னால்தான் என்று தன்மீது திருப்பாமல், அவர்களுக்குள் அடித்துக் கொள்கிறார்களே. அதுவரை நிம்மதி’ எனத்தான் நினைக்க முடிந்தது அவளால்.

தங்கராஜ் தொடர்ந்து எகிறிக்கொண்டே இருக்க, ஒருநிலைக்கு மேல் ஆத்திரமிகுதியில் ஓங்கி உதைத்துவிட்டார் மனைவியை. மகாலட்சுமி சுவற்றில் சாய்ந்து அமர்ந்து இருந்தவர் படாரென ஒருபக்கமாக விழ, கையில் பயங்கர வலி.

அந்த வலி அவரை சூழல் உணரச் செய்ய, வலியைத் தாங்கிக்கொண்டு எழுந்து அமர்ந்தார் அவர். கணவன் மீண்டும் அடிப்பதற்கு பாய, “இதுக்குமேல மரியாதை இல்ல உனக்கு. என்மேல கையை வச்ச.” என்றபடி எழுந்து நின்றார் மகாலட்சுமி.

கீழே விழுந்ததில் அவிழ்ந்துவிட்ட கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு அவர் நிற்க, ‘அடித்தால் நிச்சயம் திருப்பி அடித்துவிடுவாள்.’ என்று புரிந்துபோனது தங்கராஜுக்கு.

‘வந்த புது மருமகள் முன் தன் மானம் கப்பலேற வேண்டாம்’ என்று எண்ணம் கொண்டவர், “என்னமோ… ஆம்பளைப்பேச்சுக்கு மரியாதை இல்லாம போச்சு இந்த வூட்ல. பொண்ணை ஒழுங்கா வளர்க்க தெரியல. என்கிட்டே சவடால் கொடுக்குறா. பார்த்துக்கமா மருமகளே… உன் மாமியார் லட்சணம் இதான்.” என்று ப்ரியதர்ஷினியிடம் கூறிவிட்டு வேகமாக வெளியேச் சென்றுவிட்டார்.

மகாலட்சுமி முகத்தைத் துடைத்துக்கொண்டு கழிவறைக்குள் நுழைந்து வெளியேறியவர் சமையல்கட்டில் சென்று நின்றுகொண்டார். தலைவலி வேறு படுத்தி எடுக்க, அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் வீட்டில் இருந்த காபிப்பொடியை போட்டு, சிறிது சர்க்கரை சேர்த்து வடிகட்டிக்கொண்டு வந்து அமர்ந்துவிட்டார்.

ஓரமாக ஒதுங்கி நின்றிருந்த இருவரையும் மனிதர்களாகவே மதிக்கவில்லை அவர். அவர்போக்கில் காஃபியைக் குடித்துமுடித்து சுவற்றின் பக்கம் திரும்பி படுத்துவிட்டார். சில நிமிடங்களில் அவர் உறங்கியும் போக, அதே வீட்டின் மற்றொரு சுவற்றில் சாய்ந்து அமர்ந்தபடி மனைவியிடம் அத்துமீறிக் கொண்டிருந்தான் கதிர்வேல்.

அவளும் அவன் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக அவனுடன் அமர்ந்திருக்க, மாலை வேளையில் உறங்கத் தொடங்கிய மகாலட்சுமி மீண்டும் எழுந்தபோது நேரம் இரவு ஒன்பது மணியைக் கடந்திருந்தது.

மகனும், மருமகளும் கடையில் வாங்கி உண்டு முடித்திருந்தனர் இதற்குள். போனால் போகிறதென்று அவருக்கும் ஒரு பார்சல் வாங்கி வைத்திருக்க, கையால்கூட தொட்டுப் பார்க்கவில்லை அவர்.

வீட்டில் இருந்த அரிசியை உலையில் ஏற்றியவர் அதையே கஞ்சியாக குழைய வடித்து, உப்பு சேர்த்து இறக்கிவிட்டார். சமையலுக்குப் போக, மீதமிருந்த ஒரு வெங்காயத்தை வைத்துக்கொண்டு கஞ்சியைக் குடித்து முடித்தவர் கையில் ஒரு பாயும், தலையணையும் எடுத்துக்கொண்டு கீழிறங்கிவிட்டார்.

மகனும், மருமகளும் பேச்சுக்குக்கூட மறுப்பு தெரிவிக்காமல் அழுத்தமாக அமர்ந்திருக்க, அவர் வீட்டின் கீழே இருந்த  காலி இடத்தில் ஒருபுறம் பாயை விரித்துப் படுத்துவிட்டார் மகாலட்சுமி.

அதுவரை அழுத்தமாக இருந்தவருக்கு என்ன முயன்றும் கண்ணீர் பெருகிவிட, சத்தமில்லாமல் தன் துயரங்களை கண்ணீரில் கரைத்தபடி இரவெல்லாம் படுத்துக் கிடந்தவர், அடுத்தநாள் காலையில் எழும்போது புது அவதாரம் எடுத்திருந்தார்.

அவர் ஐந்து மணிக்கே எழுந்துகொண்டாலும், ஏழுமணி வரை  அப்படியே படுத்திருந்தவர் அதன்பின்தான் எழுந்து வீடு நோக்கிச் சென்றார். வீட்டின் கதவைத் தட்டிவிட்டு அவர் காத்திருக்க, நான்கைந்து முறை தட்டியபின் கதிர்வேல் எழுந்து வந்து கதவைத் திறந்திருந்தான்.

அவர் வீட்டிற்குள் நுழைய, அவர் உள்ளே நுழைந்தது கூட தெரியாமல், அரைகுறை ஆடையுடன் அசந்து உறங்கி கொண்டிருந்தாள் மருமகள். மகாலட்சுமி இவர்களை கவனிக்காதவராக குளித்து முடித்து வேகமாக வெளியில் கிளம்பிவிட, பத்துமணி அளவில் தான் எழுந்து அமர்ந்தாள் கதிர்வேலின் மனைவி.

இவர்கள் உறங்கி எழும் நேரம், மகாலட்சுமி மீண்டும் வீடு வந்தவர் தன் கையில் வைத்திருந்த காகிதக்கவரில் இருந்து நாற்பதாயிரம் பணத்தை எடுத்து வெளியே வைத்தார்.

கதிர்வேல் அன்னையை புரியாதவனாகப் பார்க்க, “இதுல நாற்பதாயிரம் இருக்கு. கீழ கீதா வூட்டுக்கு பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுத்துட்டேன். இத வச்சு உனக்கு குடும்பம் பண்ண தேவையானத வாங்கிக்க. இன்னிக்கே ரெண்டுபேரும் அந்த வூட்டுக்கு கிளம்பிடனும். சாயங்காலம் நான் திரும்ப வர்றப்ப, ரெண்டுபேரும் இங்கே இருக்கக்கூடாது.” என்றவர் அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பிவிட்டார்.

Advertisement