ராஜம்மா தன் வீட்டில் இருந்த சில பாத்திரங்களை குமரகுரு – கார்த்திகைச்செல்வியின் உபயோகத்திற்காக பிரித்துக் கொடுக்க, அதுபோக இன்னும் என்னென்ன வாங்க வேண்டும் என்பதையும் அவரே குமரனுக்கு பட்டியலிட்டுக் கொடுத்தார் .
குமரன் தன் ஆட்டோவின் ஆர்சி புத்தகத்தை சேட்டிடம் கொடுத்து அதன் பெயரில் இருபதாயிரம் பணம் வாங்கியவன் அவர் எழுதியிருந்த பொருட்களை மட்டும் வாங்கிக்கொள்ள, ராஜம்மாவின் அளவான பட்டியலால் இன்னும் ஐந்தாயிரம் மீதம் இருந்தது.
அருகிலிருந்த ஒரு துணிக்கடைக்குச் சென்றவன் தனக்கு தெரிந்த அளவில் சில உடைகளை எடுத்துவந்து கார்த்திகைச் செல்வியிடம் நீட்ட, அவள் திரும்பிக்கூட பார்க்கவில்லை. கண்களில் இன்னமும் சில துளி கண்ணீர் மிச்சமிருந்தது.
ராஜம் இருவரையும் வந்தது முதலாக பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார். ‘என்னதான் சண்டை, சச்சரவுகள் இருந்தாலும் காதலித்து மணந்து கொண்டவர்கள் இப்படியா இருப்பார்கள்?’ என்று அவரே சிந்தித்துக் கொண்டு தான் இருந்தார். இப்போது கார்த்திகைச்செல்வி உடைகளை வாங்கிக் கொள்ள மறுக்க, ‘என்னவோ இருக்குது.’ என்று அடித்துக் கூறியது அவர் மனது.
ஆனால், ‘குமரன் அவர் மகனைப் போன்றவன். அவனிடம் என்ன கேட்பது?’ என்று தயங்கி நின்றவர், பின் தயக்கம் விடுத்து, “குமரா.. இந்த பொண்ணு என்னமோ சரியில்லையே. ஓயாம அழுதுனே இருக்காளே. இன்னா விஷியம்.” என்றார் குமரனிடம்.
குமரனுக்கும் அவரிடம் மறைக்கும் எண்ணமெல்லாம் இல்லை. ஆனால், ‘எப்படி சொல்வது, என்னவென்று சொல்வது’ என ஏகக் குழப்பத்தில் இருந்தான் அவன். சில நிமிடங்கள் தயங்கி நின்றவன், “எதை சொல்றது தெரியலக்கா.. எங்கம்மா கத்திட்டு போற மாறி, அவ என்னை லவ் பண்ணிலாம் என்கூட வரல. நான்தான் அவ அண்ணன் மேல இருந்த கடுப்புல, இவளை தூக்கிட்டு போய்ட்டேன்.”
“தப்பு இல்லையா குமரா.. நீ இப்படி ஒரு கொடுமைய பண்லாமா.. இந்த ஏரியால இருந்தாலும், நல்ல புள்ளையா இருக்கியேன்னு பெருமையா நெனைச்சுட்டு இருந்தேனே.. பொட்டச்சி பாவத்துல கைய வைக்கலாமா?” என்று பெரிதாக வருத்தப்பட்டார் ராஜம்மா.
குமரன் அவருக்கு பதில்கூற முடியாமல் நிற்க, “சரிப்பா.. நீ தாலிய கட்டிட்ட. ஆனா, அது மனசுல என்ன நினைக்குதோ? அதுக்கு வேற எதுவும் நெனைப்பிருந்தா…” என்றார் மீண்டும்.
குமரன் இப்போது கார்த்திகாவை திரும்பிப் பார்க்க, ‘நீங்கள் பேசும் விஷயத்திற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை’ என அமர்ந்திருந்தாள் அவள்.
“நடக்கறது நடக்கட்டும்க்கா.. செஞ்ச தப்பை சரி பண்ணத்தான் நெனைக்கிறேன். அவ தண்டனை தான் குடுப்பான்னா, அதுக்கும் ரெடி தான்.” என்றவன் “நீ இதெல்லாம் சரியா இருக்கா பாரு. ஏதாவது வாங்கணும்ன்னா சொல்லு.” என்று அவரின் கவனத்தை அந்த பொருட்களின் மீது திருப்ப, அவன் செய்த தவறுக்காக வருந்துவது ராஜம்மாவுக்கும் புரிந்தது.
ஆனால், அதற்காக கார்த்திகாவிடம் குமாரனைச் சார்ந்து பேசவும் மனம் இடம் கொடுக்கவில்லை. அவளின் கல்போன்ற முகம் அவளை நெருங்கவிடாமல் செய்ய, அப்போதைக்கு விஷயத்தை ஆறப்போட நினைத்தவர் தன் பாட்டிற்கு வீட்டை கழுவிவிட்டு, பொருட்களை அடுக்கி, ஒரு சாமிப்படத்தையும் மாட்டி, பொட்டிட்டு, பூவைத்து பூஜைக்கு தயாராக அலமாரியில் வைத்துவிட்டார்.
அத்தனையும் முடித்து அவர் தன்வீடு வந்து பார்க்க, அப்போதும் அசைவில்லாமல் தான் அமர்ந்திருந்தாள் கார்த்திகைச்செல்வி. அவளைப் பார்க்கவும் பாவமாக இருக்க, “கண்ணு.” என்றபடியே ராஜம்மா அவள் அருகில் அமர, சட்டென பயந்தவளாக பின்வாங்கினாள் கார்த்திகா.
அதன்பின்பே தன் செய்கையை உணர்ந்து அவள் குன்ற, அவள் தலையில் கைவைத்தார் ராஜம்மா. அவரின் அந்த செயலில் மீண்டும் கண்ணீர் ஊற்றெடுக்க, “அழாதம்மா. என் தங்கம் இல்ல. ராஜாத்தி அழாதம்மா. அந்த நேர ஆத்திரத்துல என்னமோ பண்ணிட்டான்மா. மன்னிச்சுக்க சாமி. அவனும் பாவம்தான்யா. மன்னிச்சுடும்மா.” என்று அவசரமாக பேசினார் ராஜம்மா.
அவரின் அத்தனை வார்த்தைக்கும் ஒற்றைப் பதிலாக, “என்னை விட்டுட சொல்லுங்கம்மா.” என்றாள் கார்த்திகா.
“எங்கே போவ அம்மாடி.” என்று அவள் தாடையைப் பிடித்து சிறுபிள்ளையிடம் கேட்பதுபோல் ராஜம்மா கேட்க,
“எங்கேயோ போறேன். எங்கம்மாவே என்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நான் ஏன் வாழனும். செத்துப் போறேன். என்னை விட்டுட சொல்லுங்க. நீங்க சொன்னா கேட்பாங்க போல. என்னை விடச் சொல்லுங்க ப்ளீஸ்.” என்றவள் அவரை கையெடுத்துக் கும்பிட, “என்ன வார்த்தை சொல்றடி. வாயில அடி. சாவுற வயசா உனக்கு.” என்று பதறினார் ராஜம்மா.
கார்த்திகா அவர் பேச்சைக் காதில் வாங்காதவளாக அழுது கொண்டேயிருக்க, “அழாதம்மா. உன் அம்மா மாறி சொல்றேண்டா. அழாத.” என்று ராஜம்மா போராடிக் கொண்டிருந்தார் அவளிடம்.
“அப்போ என்னை விட சொல்லுங்க.” என்றவள் அதிலேயே நிற்க,
“ஏன் ஏற்கனவே பண்ண பாவம் போதாதுன்னு, நீ செத்து அதையும் என் தலையில சேர்த்துக்கவா.” என்றபடியே வீட்டிற்குள் வந்து நின்றான் குமரன்.
ராஜம்மா “குமரா. வெடுக்குன்னு பேசாத சாமி. சின்னப்புள்ள…” என்று இழுக்க,
“நீ போ.” என்று அவரை விரட்டிவிட்டான் குமரன்.
அவர் எழுந்து செல்லவும், கார்த்திகைச்செல்வியின் அருகில் அமர்ந்தவன், “ஏன்டி சும்மா அழுது ஊரைக்கூட்டுற.” என்றான் அதட்டலாக.
கார்த்தி நடுக்கம் கொள்ள, “அழுவாம பேசவே தெரியாதா உனக்கு. என்னமோ தெரியாம நடந்து போச்சு. ஏன் உன் அண்ணங்காரன் என் தங்கச்சிய இழுத்துன்னு போல. அவன் லவ் பண்ணி இழுத்துட்டு போனான். நான் உன்னை இழுத்துட்டு வந்து தாலி கட்டி இருக்கேன் அவ்ளோதான.”
“நேத்துல இருந்து என்கூட இருக்க. உன்கிட்ட தப்பா ஏதாவது நடந்தேனா. இல்ல, தாலி கட்டிட்டேன்… என்கூட குடும்பம் பண்ணுடின்னு கூப்ட்டேனா. ஒன்னும் இல்லல்ல.”
“இன்னிக்கு நெலைமைக்கு உனக்கும் போவ இடமில்ல. எனக்கும் போவ எடமில்ல. அதுக்குதான் வீடு பார்த்தது. ஒளுங்கா மூஞ்சிய திருப்பாம எழுந்து வா.” என்றான் குமரன்.
“நான் ஏன் உன்கூட வரணும். நேத்தே என்னை அனுப்பிடுவேன்னு சொல்லிட்டு ஏமாத்தின தானே நீ. உன்னை நம்பி எப்படி வரமுடியும். நான் உன்னோட வரமாட்டேன்.” என்று முதல்முறையாக கார்த்திகா கோபம் கொள்ள,
“என்கூட வராம.. வேற எவனையாவது புடிச்சிருக்கா? சொல்லு. அவன் கால்ல விழுந்துகூட கட்டி வைக்கிறேன்” எனும்போதே அவள் முகத்தை சுளிக்க,
“இல்லல்ல. அப்போ எழுந்து வா. எப்ப உன்னை அனுப்பி வைக்கணும்னு தோணுதோ, அப்பா அனுப்பி வைக்கிறேன்.” என்றபடியே எழுந்து கொண்டான் குமரன்.
“உன்னால எப்பவும் என்னை பிடிச்சு வைக்க முடியாது. நான் கண்டிப்பா உன்னை விட்டு போய்டுவேன்.” என்ற கார்த்திகாவின் குரலில் இருந்த உறுதி பயம் கொடுத்தாலும்,
“சூப்பரு.. என்னை விட்டுட்டு மட்டும் போவியா. இல்ல, மொத்தமா போய்டுவியா?” என்றான் ஏளனமாக.
“ரெண்டும் தான். நான் செத்துப்போனா உன்னை போலீஸ் பிடிக்கும்ல. நீ உள்ளே போவ இல்ல. அது போதும் எனக்கு.” என்றவள் முகம் கோபத்திலும், அழுகையிலும் சிவந்து போயிருந்தது.
“நல்ல ஐடியா தான். ஆனா, நான் உள்ளே போறதுக்கு முன்னாடி உன் அம்மாவும் உன் பின்னாடியே வந்துடும். எனக்கு தெரிஞ்சு, உனக்கும் உன் அம்மாவை ரொம்ப புடிக்கும் போல.. அதையும் கூட்டினு போ.” என்று அசராமல் குமரன் பதில் கொடுக்க, “அய்யோ..” என்று காதை மூடிக் கொண்டாள் கார்த்திகா.
“இப்டியே வாயையும் மூடிக்கோ. அதான் ரெண்டு பேருக்கும் நல்லது.” என்றவன் “லூசுத்தனமா எதையாவது யோசிக்காம, உருப்படற வழியைப் பாப்போம். எழுந்து வா.” என்று அவள் கைப்பிடிக்கப் பார்க்க, பட்டென கரங்களை பின்னால் மறைத்துக் கொண்டாள் கார்த்திகா.
“ஏய். ரொம்ப பண்ணாத வாடி.” என்று பொறுமையிழந்தவனாக அவளது இடது கையைப் பற்றியவன் “நான் சொல்றதை செய்ற. தேவ இல்லாத வேலை பார்த்த, காதைத் திருப்பிடுவேன்.” என்று மிரட்டி, இழுத்துச் சென்றான் கார்த்திகாவை.