Advertisement

கார்த்திகா கூட முதலில் மறுத்துப் பார்த்தவள் குமரனின் பிடிவாதத்தால் அவன் போக்கிற்கே விட்டிருந்தாள். பெயர் வைக்கும் நிகழ்வு நல்லபடியாக முடிந்த, அடுத்த இரண்டு வாரங்களில் முதுநிலை படிப்புக்கு விண்ணப்பித்து விட்டாள் கார்த்திகா.

மகன் பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அவள் இளநிலைப் படிப்பு முடிந்திருக்க, ராஜம்மா கூட, “ஒருவருஷம் கழிச்சு பாரேன் கண்ணு.” என்று எடுத்து சொல்ல, குமரன் அவளை வற்புறுத்தி விண்ணப்பிக்க வைத்திருந்தான்.

அவள் படிப்பு முடித்து வேலைக்கு கிளம்பி விடுவாள் என்று குமரன் எதிர்பார்த்திருக்க, “என்னை மேல படிக்க வைக்கறீங்களா?” என்று எப்போதும்போல் நடுங்கிக்கொண்டே தன் முன்னே நின்ற மனைவியை அள்ளி அணைத்துக்கொள்ள கைகள் பரபரத்தாலும், அவள் உடல்நிலையை கருத்தில் கொண்டு மென்மையாக அணைத்து விடுவித்தவன் அவள் விருப்பத்திற்கு தலையசைத்து இருந்தான்.

ஆனால், அதன்பின் கார்த்திக்கே தன்னால் முடியுமா என்று சந்தேகம் வந்துவிட, “உன்னால கண்டிப்பா முடியும்.” என்று எப்போதும் போல் அவளை அதட்டி அவள் நினைத்த காரியத்தை செய்து முடிக்க வைத்தான் குமரன்.

இன்னும் கல்லூரி திறப்பிற்கு இரண்டு மாதங்கள் இருந்ததால், நிம்மதியாக தன் பொழுதுகளை பிள்ளையுடன் கழித்தாள் கார்த்திகா. குமரனும் இரவு நேரத்தோடு வீடு வந்துவிட, அவன் வந்தவுடன் தன் வீட்டிற்கு கிளம்பிச் சென்றுவிடுவார் ராஜம்மா.

தனிமை காதலர்களுக்கான பிரத்யேக உணர்வுகளைத் தூண்டினாலும், அழகாக அதைக் கடந்து வர பழகியிருந்தனர் இருவரும். எப்போதுமே சுயக்கட்டுப்பாடு அதிகம் தானே. ஏற்கனவே ஒருமுறை அவர்களை அறியாமல் தவற விட்டிருக்க, இனி அந்த தவறை செய்து விடுவதில்லை என்று உறுதி கொண்டிருந்தான் குமரன்.

இரவு நேரங்களில் தனது அருகில் அமர்ந்து பரிமாறும் மனைவியை கண்களில் நிறைத்துக் கொள்வதோடு சரி. அதற்குமேல் எதையும் எதிர்பார்ப்பது இல்லை. அதுவும் என்று கார்த்தி மேலே படிக்கவேண்டும் என்றாளோ, அன்று தொடங்கி சற்று அதிகப்படி கவனம் தான்.

கார்த்திகா சில நேரங்களில் கிண்டலாக சிரித்தாலும் கூட, “போடி.” என்பதோடு விலகி சென்று விடுவான் குமரன்.

கார்த்திகாவின் படிப்பு தொடங்கிய நேரம் குமரனின் பொறுப்புகளும் கூடிவிட்டதாக ஒரு எண்ணம் அவனுக்குள். கதிர்வேல் ஆட்டோவிற்கு கொடுத்த மாத வாடகை தனியாக சேர்ந்திருக்க, அதை முன்பணமாக கட்டி, இன்னொரு ஆட்டோ வாங்கி வாடகைக்கு விட்டிருந்தான்.

வருமானம் பெருகியதில் அவன் செய்த முதல் செலவு தங்களுக்காக ஒரு கட்டில் வாங்கியது தான். அதுவரை அவனும் மனைவியும் தரையில் படுத்துக் கிடந்ததெல்லாம் மறந்துவிட, குட்டி கார்த்தி தரையில் உறங்குவதை தாங்க முடியாமல் மகனுக்காக கட்டில் ஒன்று வாங்கினான் குமரன்.

கார்த்திக்கூட முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள். ஆனால், குமரன் அவளை எப்போதும்போல் வாய்மூடச் செய்து விட, அதற்குமேல் எங்கே அவள் முகத்தை திருப்புவது.

ராஜம்மாவிடம் பிள்ளையை விட்டு கல்லூரிக்கு செல்பவள் மதியம் குமரனோடு வீடு வருகையில் ராஜம்மா மதிய சமையலை முடித்திருப்பார். உண்டு முடித்து மகனுடன் விளையாடி களைத்துப் போய் உறங்கி விடுபவள் ஆறு மணிக்கு எழுந்தால் இரவு உணவு வேலைகளை கவனிப்பாள்.

ராஜம்மா அவர்களுடன் எப்போதும் இருந்தாலும், குமரன் அவருக்கென ஒரு தொகையை கொடுத்து வந்தாலும், அதற்காக வெல்லாம் அவரை செய்ய வைத்து வேடிக்கை பார்க்கமாட்டாள் கார்த்திகா. எப்போதும் போல் ஏதாவது ஒரு வேலையை செய்துகொண்டே தான் இருப்பாள்.

அப்படித்தான் இரவு உணவு சமைக்கும் வேலையை தனதாக்கி கொண்டதும். இரவு ராஜம்மாவிற்கும் சேர்த்தே அவள் சமைத்து விடுவதால், அவரும் அங்கேயே உண்டு முடித்து தான் அவர் வீட்டிற்கு செல்வார்.

மகனும் கொஞ்சமாக வளர்ந்து வர, அவன் வளர வளரத்தான் கார்த்திக்கு வேலைகள் அதிகமானது. அந்த குட்டி வீட்டில் அவன் கைக்கு அகப்படாமல் எத்தனை பொருட்களை உயரத்தில் எடுத்து வைக்க முடியும்.

அதையும் மீறி கைக்கு எதுவும் அகப்படாமல் போனால், சமையலுக்கு காய் நறுக்கும் ராஜம்மாவின் அருகில் அமர்ந்திருப்பவன் அவர் வைத்திருக்கும் தக்காளியை கடித்து முகத்திலெல்லாம் பூசிக்கொள்வான்.

அதென்னவோ தக்காளியின் மீது அப்படி ஒரு பிரியம்  கார்த்தியின் மகனுக்கு. சிவப்பு நிறத்தில் பந்து போல உருட்டி விளையாடுபவன் விளையாடி களைத்து போகும் நேரம் அதே தக்காளியை வாயில் வைத்துக் கொள்வான்.

எட்டு மாதத்திலேயே கால் முளைத்துவிட, தட்டு தடுமாறித் தான் என்றாலும் அவன் நடக்க தொடங்கிவிட, அவன் உயரத்திற்கு இருக்கும் எதையும் பிடித்துக்கொண்டு எழுந்து நின்றுவிடுவான். சில நேரங்களில் கார்த்திகாவுக்கே கோபம் வந்துவிடும்.

ஆனால், ராஜம்மா சலித்து கொள்ளவே மாட்டார். அவனை இடுப்பில் வைத்துக்கொண்டே அத்தனை வேலைகளையும் கவனிக்க அவர் ஒருவரால் மட்டுமே முடியும்.

அவனது இரண்டு பாட்டிகளும் மாதத்திற்கு ஒரு முறை வந்து பார்த்து சென்றாலும், எப்போதும் உடன் இருக்கும் ராஜம்மாவிடம் தான் நெருக்கம் அதிகம்.

நாள் தவறாமல் அவனைக் காண வரும் சேகரையும், பூச்சியையும் கூட நன்கு அடையாளம் தெரிந்தது கார்த்திக்கு. அதுவும் பூச்சி வந்துவிட்டால், யார் கையில் இருந்தாலும் கைகளை நீட்டிக்கொண்டு அவனிடம் பாய்ந்து விடுவான்.

பூச்சி ஆட்டோவில் முன்னே அவனை அமர்த்திக்கொண்டு சுற்றிவர, ஆட்டோவை விட்டு வெளியே வரவே மனம் வராது அவனுக்கு.

குமரனும், கார்த்தியும் அனுபவித்த வேதனைகள் எல்லாம் முன்ஜென்மத்தில் நடந்ததோ என்று ஐயுறும் அளவிற்கு, அழகாக மாறியிருந்தது அவர்கள் வாழ்வு.

கார்த்தியின் மகனுக்கு ஒரு வயதானபோது பிரியாவும் கருவை சுமந்து நிற்க, மகாவும், ராணியும் போட்டி போட்டுகொண்டு கவனித்துக் கொண்டனர் அவளை. கார்த்தி தன் பங்குக்கு அவ்வபோது கணவனோடு சென்று பார்த்துவிட்டு வருவாள்.

குமரனும் பிரியாவுக்கு வேண்டியது என்று அவன் நினைத்ததையெல்லாம் வாங்கி கொடுக்க, எதற்குமே அலட்டிக் கொள்ளவில்லை கார்த்திகா. தன் அன்னை பிரியாவைத் தாங்குவதை காணுகையில், லேசாக ஒரு ஏக்கம் எட்டிப்பார்த்தாலும், அடுத்தநிமிடமே குமரனின் காதல் அதை விரட்டிவிடும்.

கார்த்திகாவின் படிப்பும், அவள் கணவனும் அவளை இன்னும் இன்னும் மெருகேற்ற, இந்த வேடிக்கை மனிதர்களின் விந்தையான செயல்களை கண்டு வேதனை கொள்வதாக இல்லை அவள்.

கிடைத்ததை பெற்றுக்கொண்டு மகிழ்ந்து கடலன்னைக்கு நன்றி சொல்லும் கடலோடியைப் போல், குமரனை தனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி கூறிக் கொள்பவள் அவனையே தன் வாழ்வின் வரமாக மாற்றிக் கொண்டிருந்தாள்.

நிச்சயம் குமரன் வரம் தான். மகா எங்கு தேடியிருந்தாலும், குமரன் போன்ற ஒருவன் கிடைத்திருக்க மாட்டான்  என்பது திண்ணமாக தெரிந்தது அவளுக்கு. அதுவும் அவள் மேற்படிப்பு படிக்க விருப்பம் தெரிவித்த நொடியில், சிறு குழந்தையாக அவன் மகிழ்ந்து நின்றதும், அவனது வார்த்தைகளும் வாழ்நாள் வரை மறக்காது கார்த்திகாவிற்கு.

“நான் படிக்கவே இல்ல கார்த்தி. என் தங்கச்சியை படிக்க வச்சு பார்க்க ஆசைப்பட்டேன். ஆனா, அவளும் எப்படியோ போய்ட்டா. இதுல உன் படிப்பையும் கெடுத்துடுவேனோன்னு பயத்துலதான் உன்னை படிக்க அனுப்புனேன். நீ வேலைக்கு அனுப்புவியான்னு கேட்கும்போது கூட, மேல படின்னு தான் சொல்ல தோணுச்சு. ஆனா, உன் விருப்பம்ன்னு ஒன்னு இருக்குல்ல.”

“அதான் வாயை மூடிக்கிட்டேன். இப்போ நீ படிக்கிறது எனக்கு சந்தோஷம் தான். எவ்ளோ வேணாலும் படி. நீ என்ன படிக்க ஆசைப்பட்டாலும் நான் படிக்க வைக்கிறேன்.” என்று அவன் பேசிக்கொண்டே செல்ல,

“நான் அதிகமா படிச்சுட்டு ஒருவேளை உங்களை மதிக்கலன்னா என்ன செய்விங்க. படிச்சு முடிச்சுட்டு பெரிய வேலைக்கு போய்ட்டா..’ என்று கார்த்தி விளையாட்டாக கேட்டுவிட்டாலும், அந்தநேரம் உள்ளுக்குள் உதைப்பு தான்.

“என் கார்த்தி எங்கே போனாலும் என் கார்த்தியாதான் இருப்பா எனக்கு தெரியும்.” என்று அவளை அணைத்து கொண்டவன், “அதோட நீ படிச்சா நான் படிச்ச மாறி தான.. நீதான் எதுல கையெழுத்து போட்டாலும் கார்த்திகைச்செல்வி குமரகுருன்னு ரெண்டு முழத்துக்கு எழுதி வைக்கிறியே. அப்போ உன் பேருக்கு பின்னாடி இருக்க டிகிரி எல்லாம் என் பேருக்கு பின்னாடி வந்திடும் இல்ல.” என்று சிரித்தான்.

“இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா?” என்றவள் போலியாக கோபம் கொள்ள,

“காலேஜ்ல கூட படிக்கிற பசங்க தொடங்கி டீச்சர் வரைக்கும் இவன்தான் என் புருஷன்னு ஈன்னு இளிச்சுக்கிட்டே சொல்லி வைக்கிற என் பொண்டாட்டி பெரிய வேலை கிடைச்சா உடனே மாறிடுவாளா என்ன?”

“அப்படியே ஆட்டோ ஓட்டுறது அசிங்கமா இருந்தாலும் சொல்லு. ஆட்டோ ஓனர்ன்னு வீட்டுல உட்கார்ந்துடறேன். நீ சம்பாதிச்சு எனக்கு சோறு போடு.” என்று இலகுவாகவே முடித்திருந்தான்.

அவனின் எதார்த்தமான பேச்சில், கார்த்திகாதான் பேச்சு வராமல் வாயடைத்து நின்றிருந்தாள். அப்படி ஒரு கணவனும், அவள் கேட்காமலே கிடைத்துவிட்ட சில உறவுகளும் உடன் இருக்கையில் அவளுக்கு வேறெதுவும் பெரிதாக தோன்றவில்லை.

தனது விருப்பத்திற்காக படிக்கத் தொடங்கியவள் குமரனுக்காக என்று முழுமூச்சாக படித்து முடிக்கையில், அவள் கல்லூரியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்தாள். எப்போதுமே நன்றாக படிப்பவள் தானே. இப்போது குமரனுக்காக என்ற உத்வேகமும் சேர்ந்துகொள்ள, இன்னும் சற்று சிரத்தை எடுத்து படித்திருந்தாள்.

கார்த்தியை விட குமரன் அதிகம் மகிழ்ந்து போக, அத்தனைப் பேர் நிறைந்திருந்த அந்த கல்லூரி வளாகத்திலேயே தூக்கி சுற்றிவிட்டான் தன் மனைவியை. பூர்ணியும், தர்ஷினியும் அவளுடன் மேற்படிப்பிலும் இனைந்து கொண்டிருக்க, அவர்களும் பார்க்கத்தான் நடந்தது இந்த கூத்து.

பூர்ணி அவனது செயல்களை ஒன்றுவிடாமல் அலைபேசியில் காட்சிப்பதிவாக படம் பிடித்துக் கொண்டவள் அதை கார்த்திக்கும் அனுப்பி வைத்தாள். குமரனையும் அவள் விடாமல் கேலி செய்ய, அவளை சமாளிக்க முடியாமல் கல்லூரி வளாகத்தில் இருந்து வேகமாக கிளம்பிவிட்டனர் இருவரும்.

அவர்கள் வீடு வரவும், பூச்சியும், ராஜம்மாவும் அவர்களின் அளப்பறையைத் தொடங்கிவிட்டனர். பூச்சி சரத்தை பற்ற வைத்து தெருவில் வீச, ராஜம்மா பூசணிக்காய், தேங்காய், ஆரத்தி என்று வரிசையாக சுற்றிக் கொண்டிருந்தார்.

ராஜம்மாவின் கையில் இருந்த கார்த்திக் இப்போது தந்தையின் கைகளுக்கு மாறியிருக்க, மூவரையும் ஒன்றாக நிற்க வைத்து சுற்றி முடித்தவர் கைகளாலும் கார்த்திக்கு திருஷ்டி கழித்து, “என் ராஜாத்தி கண்ணு… இன்னும் நல்லா வருவீங்க பாரு.” என்று இருவரையும் வாழ்த்த, கார்த்தியின் கண்கள் கலங்கியது.

“அட… நல்ல நாளும் அதுவுமா அழுவாத கண்ணு.” என்று அதட்டி அவளை குமரனுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் ராஜம்மா.

பூச்சியும் கிளம்பிவிட, தங்களின் வீட்டிற்குள் நுழைந்த நிமிடம் மகனை கட்டிலில் இறக்கி விட்டான் குமரன். கார்த்தியின் மகன் கட்டிலில் தவழ்ந்து சென்றவன் ஜன்னல் கம்பிகளில் ஏறி நின்றுகொண்டு, கீழே நடந்து செல்பவர்களைக் கண்டு சத்தம் கொடுக்க, எப்போதும் போல் அவனுக்கு பாதுகாப்பாக அவன் பின்னால் அமர்ந்து கொண்டான் குமரன்.

கார்த்தி அணிந்திருந்த சேலையை மாற்றுவதற்காக மாற்று உடையை கையில் எடுக்க, “கார்த்தி…” என்று குமரன் குரல் கொடுக்கவும், நின்று திரும்பினாள்.

ஆனால், அவளைவிட வேகமாக அவள் மகன் தந்தையின் மடியில் வந்து அமர்ந்து கொள்ள, சற்றே கடுப்புடன் அவர்களைப் பார்த்தாள் கார்த்திகா.

“கார்த்தி என் பேருடா…” என்று அவள் மிரட்ட,

“ப்பா…” என்று தந்தையை துணைக்கு அழைத்தான் மகன்.

“அப்பா… உன்னைதான் கூப்பிட்டேன்டா கார்த்திம்மா..” என்று மகனின் கன்னத்தில் முத்தம் வைத்தான் குமரன்.

குட்டி கார்த்தி இப்போது மிதப்பாக தன் அன்னையைப் பார்த்து வைக்க,  இருவரையும் முறைத்த கார்த்திகை கையிலிருந்த நைட்டியை தோளில் போட்டுகொண்டு அவள் குளியலறைக்குள் நுழைய முயன்றபோது, “ப்ச்…” என்று தன் அதிருப்தியைக் குரலில் காட்டினான் குமரன்.

“இப்போ என்ன வேணும் உங்களுக்கு?” என்று கார்த்தி அதட்ட,

“இவன் வந்ததுல இருந்து என்னையும் சேர்த்து மிரட்ட ஆரம்பிசுட்டடி நீ.” என்று குமரன் பாவமாக சொல்லி வைக்க, அதற்கும் முறைப்பு தான் பதில்.

“இங்கே வா…” என்று குமரன் அழைக்க,

“நான் குளிக்கணும்.” என்று சிணுங்கினாள் மனைவி.

“பொறுமையா குளிக்கலாம் வாடி.” என்றவன் இடதுகையை நீட்ட,, மறுக்காமல் அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் கார்த்தி.

சேலை இடைவெளியில் தெரிந்த அவளது வெண்ணிற இடையில் கைபோட்டு அவன் தழுவிக் கொள்ள, “இதுக்குதான் கூப்பிட்டிங்களா…” என்று போலியாக கோபம் கொண்டாள் மனைவி.

மகன் தந்தையின் அலைபேசியில் எதையோ தேடிக் கொண்டிருக்க, குமரன் மனைவியின் தோளில் மென்மையாக முத்தமிட்டு இருந்தான்.

“பாப்பா இருக்கான்.” என்றவள் விலக முற்பட,

“எதுவும் பண்ணமாட்டேன் கார்த்தி.” என்றவன் அணைப்பை விலக்கவில்லை.

“என்ன வேணும் உங்களுக்கு?” என்று மீண்டுமொருமுறை கார்த்தி கேட்க,

“இந்த புடவை தான் வேணும்… கேட்டா கழட்டிக் கொடுத்துடுவியா?” என்று முறைத்தான் குமரன்.

“நீங்க குளிக்கவிடாம கூப்பிடும்போதே யோசிச்சு இருக்கணும் நான்.” என்றவள் தன்னைமீறி சிரிக்க, அந்த அடர் குங்கும நிற சேலையை மீறி சிவந்திருந்தது அவள் முகம்.

அது முதன்முதலில் குமரன் அவளுக்கு வாங்கிக் கொடுத்த புடவை. “எனக்காக கட்டிக்கோ.” என்று குமரன் வாங்கி கொடுத்தது. பலமுறை போராடி, அலைபேசியில் ஐம்பது முறைக்கும் மேல் பார்த்து, அதைவிட அதிகமாக கட்டிப் பார்த்து ஒருவழியாக சேலை கட்ட கற்றுக் கொண்டிருந்தாள் கார்த்திகா.

கார்த்தி சேலையில் இருக்கும் நேரங்களில் எல்லாம் குமரனின் பார்வை ஒருவித மயக்கத்திலேயே இருக்கும். அதற்காகவே வெளியில் செல்லும் நேரங்களில் பெரும்பாலும் சேலையைத் தவிர்துவிடுவாள் கார்த்தி.

இன்று கல்லுரி விழா என்று சேலை கட்டியிருக்க, இதோ வசமாக அவனிடம் மாட்டிக் கொண்டிருந்தாள்.

அவன் கைகள் சும்மா இராமல் அவள் இடைப்பகுதியில் அலைந்து கொண்டே இருக்க, “இது வேலையாகாது. விடுங்க.” என்றவள் வேகமாக எழுந்து விட்டாள்.

இந்த இரண்டு வருடங்களில் அந்த வீட்டின் தரம் ஓரளவு உயர்ந்திருக்க, ஒரு குளிர்சாதன பெட்டி, சுவற்றில் மாட்டியிருந்த ஒரு தொலைக்காட்சி என்று சில பொருட்கள் புதிதாக அவர்கள் வீட்டிற்கு குடிவந்திருந்தது. இப்போதும் குளிர்சாதன பெட்டியில் இருந்து ஒரு பால் பாக்கெட்டை எடுத்தவள் மகனுக்கு பாலைக் காய்ச்சி ஆறவைத்து, கணவனுக்கும் டீ வைத்து கொடுக்க, கையில் பால் சிப்பரை பிடித்துக்கொண்டே தந்தையின் மீது சாய்ந்தபடி படுத்துகொண்டான் கார்த்திக்.

அரைமணி நேரத்தில் சிப்பரை கையில் பிடித்தபடியே மகன் உறங்கிப்போக, அவனுக்கும் முன்னதாக உறங்கியிருந்தான் குமரன். கார்த்தி சிரித்தபடி கணவனின் கையில் பட்டென்று ஒரு அடி வைக்க, பதறியவனாக எழுந்து அமர்ந்தான் குமரன்.

மனைவி இடுப்பில் கையை வைத்து முறைத்தபடி நிற்க, அருகில் உறங்கிக் கொண்டிருந்த மகனை ஜன்னலோரம் நகர்த்தி படுக்க வைத்தவன் மனைவியை தன்மீது இழுத்துக் கொண்டான்.

“கட்டிபிடிக்க கூட சுதந்திரம் இல்லாம போச்சுடி.” என்று கார்த்தியின் காதோரம் குமரன் அலுத்துக்கொள்ள,

“ம்ம்ம்.” என்று தானும் சோககீதம் பாடினாள் கார்த்திகா.

“ரொம்ப சேட்டை பண்றான் இல்ல?” என்றவன் கரம் மகனது தலையை வருடிக் கொடுக்க,

“ம்ம்ம். அவன் அப்பாவை போல.” என்றவள் கரங்கள் கணவனது கன்னத்தில் பதிய, அவள் கரத்தில் மென்மையாக முத்தமிட்டவன் “தேங்க்ஸ்டி.” என, அவன் வாயில் பட்டென ஒரு அடி வைத்தாள் கார்த்தி.

இன்னும் சேலையை மாற்றாமல் இருந்தவள் கணவனின் மீது மொத்தமாக சாய்ந்திருக்க, “கை நீளமா போச்சுடி.” என்றவன் அவள் கையிலும் முத்தம் பதித்தான்.

“இப்போ வேலைக்கு போகட்டுமா?” என்று மீண்டும் கார்த்தி தொடங்க,

“உனக்கு என்ன தோணுதோ அதை செய்.” என்றவன் எப்போதும் போல அவள் சேலையில் இருந்த பின்னை எடுக்க முயற்சிக்க, சட்டென சிணுங்கி அழுதான் கார்த்திக்.

குமரன் பதறியவனாக கார்த்தியை விலக்கிவிட, சில நொடிகளில் மகன் தானாகவே உறங்கிப்போகவும் சத்தம் போட்டு கார்த்தி சிரித்துவிட, அதிவேகமாக மனைவியை நெருங்கியவன் அவள் வாயைக் கையால் மூட, கார்த்தி சிரிப்புடன் கட்டிலில் விழவும், தானும் அவள்மீதே விழுந்தவன் அவள் இதழ்களை பூட்டி சிறை செய்ய, கார்த்தியின் சிரிப்பொலி அவனுக்குள் அழகாக இறங்கியது.

கார்த்தியின் சிணுங்கல்களும், சீண்டல்களும் எப்போதும் போல் அவனை மயக்க, அந்த மயக்கத்திலிருந்து மீளவே விரும்பாதவனாக அவளுள் தொலைந்து கொண்டிருந்தான் குமரன்.

Advertisement