Advertisement

தித்திக்கும் முத்தங்கள் 32

கார்த்திகைச்செல்வி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, அவள் இருந்த அறைக்கு வெளியே இருந்த படியில் அமர்ந்திருந்தனர் ராஜம்மாவும், குமரனும். அரசு மருத்துவமனை என்பதால் கார்த்தி இருந்த அறைக்குள் எல்லாம் அனுமதி கிடையாது. இவர்களையே அவ்வபோது விரட்டிக்கொண்டு தான் இருந்தனர்.

குமரன் எத்தனையோ முறை எடுத்து சொல்லியும் கேட்காமல், கார்த்தி தனது கர்ப்பகால பரிசோதனைகளை அரசு மருத்துவமனையிலேயே பார்த்துக்கொள்ள, இதோ இப்போது பிரசவமும் அரசு மருத்துவமனையில் தான். நடு இரவில் அவளுக்கு வலியெடுத்திருக்க, இப்போது நேரம் காலை நான்கு மணியைக் கடந்து இருந்தது.

ஆனால், இன்னமும் அவர்களின் பிள்ளை வெளியே வராமல் தாயைப் படுத்திக் கொண்டிருந்தது. அந்த காலை நேரத்தில் பூச்சியும் அவசரமாக வந்து சேர, அடுத்த பத்து நிமிடங்களில் மகாலட்சுமி வந்துவிட்டார்.

“என் பொண்ணு எங்கே?” என்று வந்ததும் வராததுமாக தவிப்புடன் கேட்டு நின்றவர் மீது கோபத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை. குமரன் கார்த்தி ருந்த பிரசவ வார்டை கைகாட்ட, வாசலில் நின்றிருந்த காவலரிடம் போராடி உள்ளே சென்றுவிட்டார் மகா.

வலியில் கத்திக் கொண்டிருந்த மகளைக் கண்டவரின் மனம் துடிக்க, வேகமாக நெருங்கி மகளை அணைத்துக்கொண்டார் மகா.

“கார்த்திம்மா…” என்று அவர் மகளின் கையைப் பற்றிக்கொள்ள,

“வலிக்குதும்மா…” என்று அலறினாள் மகள்.

“ஒன்னும் இல்ல… கொஞ்ச நேரம் சரியாகிடும். பயந்துக்காத.” என்றவருக்கு சீக்கிரத்தில் பிள்ளை பிறந்துவிடும் என்று தான் தோன்றியது.

அவர் நினைத்தது போலவே, சில நிமிடங்களில் கார்த்தியின் வலி இன்னும் அதிகரிக்க, அடுத்த அரைமணி நேரத்தில் பிறந்துவிட்டான் கார்த்திகைச்செல்வியின் மகன். தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர் கூறவும்தான் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது மகாலட்சுமியால்.

தனது பேரனை கையில் வாங்கி கொண்டவருக்கு அப்படி ஒரு பெருமிதம். தானே பெற்றது போல், குழந்தையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு முத்தமிட்டவாறு அவர் வெளியே தூக்கி வர, அவரிடம் இருந்து குமரனின் கைகளுக்கு மாறினான் கார்த்திகையின் மகன்.

குமரனின் கவனம் கையிலிருந்த மகனிடம் லயிக்கவே இல்லை. அவனது மனம் மொத்தமும் அவன் மனைவியிடம் இருக்க, “கார்த்தி நல்லா இருக்கா தம்பி.” என்று அவனை உயிர்ப்பித்தார் மகா.

பின்னே, நான்குமணி நேர போராட்டம் அவனுடையது. வந்தவுடன் கேட்ட முதல் கேள்வியே, “பொம்பளைங்க யாரும் கூட இல்லையா” என்பது தான். தனது அந்த நிலையை அறவே வெறுத்தவனாக அவன் நின்ற நிமிடம், “ஏன் என்னைப் பார்த்தா பொம்பளையாட்டம் தெரியலையா உனக்கு… உள்ளே இருக்கறது என் பொண்ணு. நான் கூட இருப்பேன். நீ உன் வேலையை ஒழுங்கா செய்யு..” என்று அந்த செவிலியை மிரட்டியது ராஜம்மா தான்.

மகாலட்சுமி வரவில்லை என்றாலும், அவரே கார்த்திகாவிற்கு துணை நின்றிருப்பார். ஆனால், யாருமில்லாமல் தனித்து நின்ற நிமிடங்களும், கார்த்தியின் ஜீவ மரண போராட்டமும் குமரனை கதிகலங்கச் செய்திருந்தது என்பது உண்மை.

அருகில் நின்றிருந்த ராஜம்மாவிடம் தன் பிள்ளையை கொடுத்தவன், “அக்கா…” என்று அவரை அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, ‘அப்படியே என் பொண்ணாட்டம் தான் இருக்கான்’ என்றவர் குழந்தையை நெட்டி முறித்து கண்களில் ஒற்றிக் கொண்டார்.

அதற்குள் செவிலி பிள்ளையைக் கேட்டு வந்துவிட, டீக்கடைக்கு சென்றிருந்த பூச்சி பிள்ளையை பார்க்கவே இல்லை. பத்து நிமிடம் கழித்து வந்தவன் பிள்ளையை அப்போதே  பார்க்கவேண்டும் என்று நிற்க, அப்போதுதான் வந்த கதிரும் அவனோடு சேர்ந்து குதித்தான்.

தங்கையை கண்டுகொள்ளாமல் இருந்தவன் தங்கை மகனை, மருமகன் என்று கொண்டாடியது குமரனுக்கே அதிசயமாக இருந்தது. ஆனால், இதெல்லாம் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்ற தெளிவும் இருந்தது அவனுக்கு.

அவனுக்குத்தான் அனுபவம் சிறந்த ஆசானாக அனைத்தையும் கற்பித்து இருந்ததே.

இன்னும் உள்ளே பிள்ளை பெற்று படுத்திருப்பவள் எழுந்து வந்தால், அவள் என்னென்ன செய்வாளோ என்று அதுவேறு.

“என் பிள்ளையை யாரும் பார்க்க வேண்டாம்.” என்று அத்தனைப் பேரையும் விரட்டிவிடவும் கூட வாய்ப்பிருந்தது. ஆனால், மகாவின் பதட்டத்தையும், கவலையையும் நேரில் பார்த்தவன் என்பதால் அவர்களை எதுவும் சொல்ல முடியாமல் நின்றிருந்தான் குமரன்.

வரிசையாக இவர்கள் கொடுத்த அன்புத்தொல்லை தாங்காமல் அன்று மதியமே கார்த்தியை வார்டுக்கு மாற்றிவிட, அப்போதுதான் மனைவியைக் கண்ணார பார்த்தான் குமரன். அவள் கையை விலக்க மனம் வராமல், அவள் கைகளைப் பிடித்தபடியே அவன் நடந்துவர, அவளுக்கான தடுப்புக்குள் இருந்த கட்டிலில் அவளை கிடத்திவிட்டு அந்த மருத்துவமனை பணியாளர்கள் விலகிச் சென்ற பின்பும் கூட, மனைவியின் கையை விடாமல் அவள் அருகில் அமர்ந்திருந்தான் குமரன்.

மகாவும், ராஜம்மாவும் பிள்ளையை கவனித்துக் கொண்டிருக்க, கார்த்தி கண்விழித்த நேரம் குழந்தையை தொட்டிலில் கிடத்திவிட்டு வெளியே இருந்த வராந்தாவில் சென்று அமர்ந்து கொண்டனர் இருவரும்.

கார்த்தி பார்க்கவே அசந்து போனவளாக தெரிய, மனைவியின் கையைப் பிடித்திருந்தவன் அவள் நெற்றியில் முத்தமிட, “என்ன சொல்றான் உங்க பையன்?” என்றவள் குரல் சோர்ந்து போயிருந்தது.

“பயந்துட்டேன் கார்த்தி.” என்று குமரன் அவளுக்குமேல் பயந்தவனாக கூற, அவனை அப்படி பார்க்க சிரிப்பு வந்தது கார்த்திக்கு.

கணவனை தலையசைத்து அருகில் அழைத்தவள் தானாகவே அவனுக்கு முத்தமிட்டாள். குமரன் கண்ணீருடன் மனைவியைப் பார்த்திருக்க, “உங்களை விட்டு எங்கேயும் போகமாட்டேன்.” என்றவள் சிறுபிள்ளையாக வலியை மறைத்துக் கொண்டு சிரித்து வைத்தாள்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே ராணியும், சேகரும் அந்த அறைக்குள் நுழைய, குமரன் சட்டென கட்டிலில் இருந்து எழுந்து நின்றுவிட்டான்.

ராணி தயக்கமில்லாமல் உள்ளே நுழைந்தவர் தொட்டிலில் கிடந்த பேரனைத்தான் பார்த்தார். பிள்ளையை கையில் தூக்கி கொண்டவர் அங்கேயே ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டார். மகனையோ, மருமகளையோ திரும்பிக்கூட பார்க்கவில்லை அவர்.

குமரனும் அவர் ஒருவர் அங்கிருப்பதை உணராதவன் போல் விருட்டென வெளியில் நடந்துவிட, கார்த்திகா சேகரிடம் பேசிக் கொண்டிருந்தாள். பத்து நிமிடங்கள் இருந்தவர்கள் கார்த்தியிடம் விடைபெற்றுக்கொள்ள, குழந்தையின் கையில் ஒரு ஐநூறு ரூபாய் தாளை கொடுத்துச் சென்றிருந்தார் ராணி.

கார்த்திகாவிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. என்னவோ, கார்த்திகாவும், குமரனும் தவறு செய்தவர்கள் போல் அவரது நடவடிக்கைகள் இருக்க, பெரிதாக கண்டுகொள்ளவில்லை கார்த்திகா. அவர்களை அப்படியே கடந்துவிட பழகிக் கொண்டாள்.

அவர்கள் சென்றபின்பு மகாவும், கதிர்வேலும் வர, அவர்களுக்கு பின்னால் கையில் உணவுக்கூடையுடன் வந்தாள் பிரியா. அந்த பிரசவ அரங்கிற்குள் தவித்த நொடிகள் நினைவு வர, அவர்களை தவிர்க்கும் எண்ணம் வரவில்லை.

அதற்காக, அவர்களுடன் சிரித்துப் பேசி பழையபடி ஒட்டிக்கொண்டாளா என்றால் அதுவுமில்லை. கேட்ட கேள்விக்கு பதில் வந்தது அவ்வளவே. மகாவுக்கும் மகள் அன்றுபோல துரத்தி விடாமல், இந்த அளவுக்கு பேசுவதே பெரியதாகத் தெரிய, அதற்குமேல் எதையும் எதிர்பாராமல் பேரனுடன் அமர்ந்து கொண்டார் அவர்.

மருத்துவமனையில் இருந்த மூன்று நாட்களும் பிரியாவும், ராஜம்மாவும் மாற்றி மாற்றி சமைத்துக் கொண்டு வந்து கொடுக்க, மூன்றாம் நாள் காலையில் கணவனின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டாள் கார்த்திகா.

மகா அதிர்ந்து போனவராக, “நம்ம வீட்டுக்கு வா கார்த்தி. எல்லாம் முறையா பண்ணனும். உனக்கும், பிள்ளைக்கும் பக்குவம் பார்க்கணும். உன் இஷ்டத்துக்கு எல்லாம் விட முடியாது.” என்று மீண்டும் அவர் தன் பழைய பல்லவியைத் தொடங்கிவிட,

“இங்கே எல்லாம் முறையா தான் நடந்ததா?” என்று முறைத்துவிட்டாள் கார்த்தி.

“என்னால உங்க வீட்டுக்கு வர முடியாது. எப்பவும் நான் அங்கே வரமாட்டேன். அதுதான் ரெண்டு நாள் கூட இருந்து பார்த்தீங்களே. அதுவே போதும். அதுக்கும் ரொம்ப நன்றி.” என்றவள் விலக,

“அப்படியே வாயிலேயே போடுவேன் கார்த்தி.” என்று மகா முன்னேற,

“இந்தாம்மா தள்ளி போ.” என்று நடுவில் வந்து நின்றுவிட்டார் ராஜம்மா.

“இன்னாம்மா… பச்ச உடம்புக்காரி.. அத்தை போய் அடிக்க போற. அறிவு கிரிவு இருக்குதா உனக்கு?” என்று அவர் நிற்க,

“வண்டில ஏறு கார்த்தி.” என்று அவளை ஆட்டோவில் அமர வைத்துவிட்டான் குமரன். அவன் முகம் ஏகத்திற்கும் இறுகியிருக்க, இனி என்னவானாலும் கார்த்தியைத் தங்களுடன் அனுப்பமாட்டான் என்று புரிந்துவிட்டது மகாவுக்கு.

கதிர், “குமரா…” என்று அவனை நெருங்க,

“எதுவும் பேசிடாத கதிர். இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் உங்கம்மா மாறமாட்டாங்க. அதுக்காக என் பொண்டாட்டியை இவங்க எப்படி வேணாலும் நடத்தட்டும்ன்னு என்னால விட முடியாது. இப்போ என்ன? பத்து மாசம் நான்தானே பார்த்தேன். இனியும் நானே என் பொண்டாட்டி புள்ளையை பார்த்துக்கறேன். வரேன்.” என்றவன் ஆட்டோவின் முன்பக்கம் பூச்சியின் அருகில் அமர்ந்துவிட, கார்த்திக்கு அருகில் ராஜம்மா அமர்ந்துகொண்டார்.

மகாவையும், கதிர்வேலையும் கடந்து பூச்சியின் ஆட்டோ சென்றுவிட, அதன்பின்னும் கூட மகா தெளியவில்லை.

“உனக்கு என்னம்மா கை அவ்ளோ நீட்டா இருக்கு. அந்தம்மா பேசினதுல என்ன தப்பு. புள்ள பெத்துட்டு வர்றவளை அடிக்க போற.” என்று கதிர்வேலும் பேசிவிட, தன் தவறு புரிந்தாலும், ஏற்றுக்கொள்ள முடியவில்லை மகாவால்.

செய்வது தவறு என்று தெரிந்தாலும், நான் அப்படித்தான் என்று சப்பைக்கட்டு கட்டும் ரகம் மகாலட்சுமி. குடிகார கணவன், ஊதாரி மகன், பயந்தான்கொள்ளி மகள் என்று அத்தனைப் பேரையும் அடக்கி வைத்தே வாழ்ந்து பழகிவிட்டவர் அவர்.

இப்போது கார்த்தி சட்டென மாற்றத்தை எதிர்பார்த்தால், அவரால் மாற முடியவில்லை என்பதைவிட, அவர் மாற்றிக் கொள்ள எந்த முயற்சியும் செய்வதாக கூட இல்லை. ஆனால், குமரனும், கார்த்திகாவும் அதற்கெல்லாம் கவலைப்படுவதாகவும் இல்லையே.

கார்த்தியையும், அவள் மகனையும் ராஜம்மாவும், குமரனும் கையில் வைத்து தாங்கி கொள்ள, வேறு எதையும் யோசிக்கக்கூட தயாராக இல்லை கார்த்திகா. ராஜம்மாவின் அறிவுரைப்படி, பிள்ளைக்கு பெயர் வைக்கும் நிகழ்வையும் குமரன் வீட்டோடு முடித்துக்கொள்ள, மகாவும், ராணியும் அப்போதும் பெயருக்குத் தான் வந்து நின்றனர்.

எப்போதும்போல, அவர்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், தங்கள் வேலையை கவனித்தனர் குமரனும் கார்த்தியும். குமரன் பிள்ளைக்கும், “கார்த்திக்.” என்றே பெயர் சூட்டிவிட, இனி அந்த வீட்டில் இரண்டு கார்த்தி.

Advertisement