Advertisement

அவருக்கு அடுத்தபடியாக பூச்சி… கார்த்தியின் அழைப்புக்கு ஏற்ப, அண்ணனாகவே மாறி உடன் நின்றான் அவன். அவனும் பார்ப்பதையெல்லாம் வாங்கி வந்து கார்த்தியின் கையில் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்க, கார்த்திகா தான் திணறிப் போவாள்.

கார்த்திகா பரிசோதனைக்கு செல்லும் நேரமெல்லாம் குமரன் உடன் வந்தாலும், இருவருக்கும் ஓட்டுநர் வேலை பார்ப்பது பூச்சி தான். குமரன் கூட சொல்லிப் பார்த்துவிட்டான். ஆனால், பூச்சி கேட்பதே இல்லை. என்னவோ, உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லாமல் வளர்ந்தவனுக்கு, வாய் நிறைய “அண்ணா” என்று அழைக்கும் கார்த்தியை முதல் பார்வையிலிருந்து பிடிக்கும்.

இந்த ஆறேழு மாதங்களில் அந்த அன்பு பன்மடங்காக பெருகியிருக்க, அந்த வகையில் அதிர்ஷ்டசாலி தான் கார்த்திகா.

பெற்றவளிடம் கிட்டாத அன்பும், பாசமும் மற்றவர்களிடம் கிட்ட, அவர்களைவிட பலமடங்கு அதிகமாக காதலையும், நேசத்தையும் அவள் காலடியில் கொட்டிவிட காத்து கிடக்கும் கணவன். அதற்குமேல் எதுவும் தேவையாக இருக்கவில்லை பெண்ணுக்கு.

குமரனின் கையைப் பிடித்துக் கொண்டு எட்டி நடைபோட ஆரம்பித்துவிட்டாள் அவள்.

இந்த நிலையில் தான் மகா மீண்டும் தன் மகளை காண வந்தது. ஐந்தாம் மாதம் வளையடுக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு அவர் வந்து நிற்க, அப்போதும், “எதுவும் வேண்டாம்.” என்று முகத்திலடித்ததுப் போல் பேசிவிட்டாள் கார்த்திகா.

“என்னடி பேசற நீ. குழந்தைக்கும் நான் எதுவும் செய்யக்கூடாதா?” என்று இந்த முறை அவர் கோபம் கொள்ள,

“என் பிள்ளைக்கு எல்லாமே செய்ய நான் இருக்கேன். என் குழந்தையை நிச்சயமா நல்ல முறையில நான் வளர்ப்பேன். உங்களோட உதவி எனக்கு தேவையில்ல. அதோட, நீங்க என் பிள்ளையை இன்னொரு கார்த்திகாவா வளர்க்கிறதுல எனக்கு விருப்பம் இல்ல.”

“ஏன் என் வளர்ப்புக்கு என்ன குறை?”

“உங்க வளர்ப்புல எந்த குறையும் இல்ல. ஆனா, எப்பவுமே என் விருப்பம்ன்னு ஒன்னை நீங்க கேட்டதே இல்ல. அப்படி என்னம்மா நான் பெருசா ஆசைப்பட்டு உங்ககிட்ட அடம் பிடிச்சு இருக்கேன். இதுவரைக்கும் எனக்கு இதுதான் வேணும்னு நான் உறுதியா இருந்ததே இல்லையே.”

“எல்லாமே நீங்க என்ன சொல்றிங்களோ, அதுக்கு சரி சரின்னு தலையாட்டிட்டு தானே போயிருக்கேன். ஆனா, நீங்க பதிலுக்கு என்ன செஞ்சீங்க? என் புருஷன் அவர் தங்கச்சி மேல வச்ச நம்பிக்கையை கூட நீங்க என்மேல வைக்கலையே. உங்க வளர்ப்பை நீங்களே நம்பாம போய்ட்டிங்களே?”

“பெரிய மனுஷி மாதிரி பேசாத கார்த்தி.” என்று மகா அதட்ட,

“அவ சின்னப்பிள்ளை கிடையாது அத்த..” என்று அழுத்தமாக கூறினான் குமரன்.

“நானும் பேசக்கூடாதுன்னு தான் அமைதியா இருக்கேன். அதுக்காக அவளை அதட்டி, மிரட்டுற வேலையெல்லாம் வேண்டாம். என்னவோ அவ மனசு கஷ்டம், அவ பேசுறா… அவ்ளோதான். விட்டுட்டு போங்க.” என்று அவன் முடிக்க பார்க்க,

“அப்போ இவ என்ன பேசுனாலும் நான் கேட்டுட்டு போய்டணுமா… என் பொண்ணு தான இவ?” என்று அவனிடமும் அவர் வாய் கொடுக்க,

“அன்னைக்கு ஸ்டேஷன்ல அம்போன்னு விட்டுட்டு போனீங்களே அப்பவும் அவ உங்க பொண்ணு தான். அப்போ எங்க போயிருந்திங்க? அடுத்து இவனை சேர்த்துக்கிட்டிங்க இல்ல… அப்போ உங்க பொண்ணை தேடுனீங்களா… இல்லையே. இப்ப மட்டும் என்ன?”

“அவன் ஆம்பளை பையன். அவனும் இவளும் ஒண்ணா?”

“நான்கூட என் பொண்டாட்டி கோபத்துல பேசுறான்னு நினைச்சுட்டேன். இப்போதான் புரியுது. அவ பேசுறதுல ஒரு தப்பும் இல்ல. முதல்ல வெளியே போங்க. என் பொண்டாட்டிக்கு என்ன செய்யணும்னு எனக்கு தெரியும். நீங்க யாரும் அவளைப்பத்தி கவலைப்பட வேணாம்.”

“இனி இங்கே வராதீங்க. நீங்க எப்ப வந்தாலும், என் பொண்டாட்டி அழுத முகமா தான் நிற்கிறா. என் வீட்டு வாசலுக்கு யாரும் வராதீங்க.” என்று பட்டென முகத்தில் அடித்ததுப் போல் பேசிவிட்டான் குமரன்.

கார்த்தி சமையலறையின் சுவற்றைப் பிடித்துக் கொண்டு நின்றவள் அசையாமல் அங்கேயே நின்றுவிட, “நல்ல மரியாதை பண்ணிட்டீங்கடி நீயும் உன் புருஷனும்.” என்று பெண்ணிடம் நொடித்துக்கொண்டு தான் கிளம்பினார் மகாலட்சுமி.

“இவரிடம் என்ன பாடு பட்டாளோ” என்று வருத்தம் தான் மிஞ்சியது குமரனுக்கு.

மனைவியின் கைபிடித்து தரையில் அமர வைத்தவன் அப்படியே அவளைத் தன் மடியில் சாய்த்துக் கொள்ள, கார்த்திகாவின் கண்ணீர் அவன் மடியை நனைத்தது.

மென்மையாக அவள் கண்ணீரை துடைத்துவிட்டவன், “உன் அழுகைக்கு எல்லாம் அவங்க தகுதியானவங்க இல்ல கார்த்தி. அதான் வேண்டாம்ன்னு சொல்லிட்ட இல்ல. அதோட விடு.”

“ஆனா, எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்குமே…” என்று அதற்கும் அழுதாள் அவள்.

குமரன் இப்போது குழம்பியவனாக, “அப்புறம் ஏன் இவ்ளோ பேச்சு? ஒழுங்கா அவங்ககிட்ட பேசி இருக்கலாம்ல.” என்று அதட்ட,

“எனக்கு அவங்க வேண்டாம்.” என்றாள் மீண்டும்.

“உன்னை புரிஞ்சிக்கவே முடியலடி..” என்று குமரன் விழிபிதுங்க,

“எனக்கு அவங்களை பிடிக்கும்தான். ஆனா, அதுக்காக கூட பழசை எல்லாம் மறந்து அவங்களை ஏத்துக்க முடியல. இப்போகூட அவங்களுக்கு வருத்தம் எல்லாம் இல்ல. நான் நல்லா இருக்கேன்ற எண்ணம் தான். ஒருவேளை நான் அடியும், உதையும் வாங்கி கஷ்டப்பட்டுட்டு இருந்திருந்தா, என்மேல இரக்கப்பட்டு இருப்பாங்களோ என்னவோ.?”

“இந்த நிமிஷம் வரைக்கும் என் வலி அவங்களுக்கு புரியல. நான் எப்படிப்பட்ட நிலைமையில இருந்தேன்னு நினைச்சு கூட பார்க்கலையே அவங்க.”

“நீங்க கெட்டவரா இருந்திருந்தா என் நிலைமை என்ன ஆகி இருக்கும். ஒருவேளை என்னை புதைச்ச இடத்துல புல்லு கூட முளைச்சிருக்கலாம்.” என்று கண்ணீர் வழியும் கண்களோடு கூறியவளின் வாயில் பட்டென அடித்துவிட்டான் குமரன்.

“அறிவிருக்கா உனக்கு?” என்று அவன் கத்த,

“இங்கே வலிக்குது.” என்று தன் வாயை தொட்டுக் காட்டினாள் கார்த்தி.

“நல்லா வலிக்கட்டும்.. இன்னும் ரெண்டு போடறேன் பாரு.” என்று முறுக்கினான் அவன்.

“போடுங்க…” என்று கார்த்தி தன் இதழ்களை அவன் முகத்திற்கு அருகாமையில் கொண்டு செல்ல,

“கார்த்தி.” என்று அதட்டியவன் அவள் இதழ்கள் வலிக்கும்படி கையால் பிடித்து அழுத்தி இருந்தான்.

“ஆஆ..” என்று கார்த்தி சத்தமிட, அவள் சத்தத்தை குறைக்கும் பொருட்டு அழுத்தமாக முத்தமிட்டவன் அவள் சத்தம் குறையவும், “இனி இப்படி பேசிப் பாரு..” என்றான் மிரட்டலாக.

கார்த்தியின் முகம் சிவந்துவிட, வழக்கம்போல் அதில் மயங்கியவன், “இங்கே வா.” என, அவன் எதிரில் அமர்ந்திருந்தவள்  மெதுவாக நகர்ந்து அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

குமரன் அவள் வலக்கையுடன் தன் கையை சேர்த்துக் கொண்டு, “யோசிக்காம எதையாவது பேசி வைக்காத கார்த்தி. பயமா இருக்கு… நீயில்லாம வாழ முடியும்னு தோணல எனக்கு. செத்துப் போறதா இருந்தாலும், என்னையும் கூடவே கூட்டிட்டுப் போயிடு.” என்று என்றுமில்லாமல் உணர்ச்சிவசப்பட்டவனாக குமரன் பேசி வைக்க,

“விட்டுட்டு போற எண்ணமெல்லாம் இப்போதைக்கு இல்ல.” என்று அவன் கையை இறுக்கிக்கொண்டாள் மனைவி.

“அப்புறம் ஏண்டி வாய்க்கு வந்ததைப் பேசி வைக்கிற.” என்று குமரன் கத்திவிட,

“அது தெரியாம சொல்லிட்டேன் விடுங்க…” என்று இலகுவாக ஒதுக்கியவள், “இவங்களை எல்லாம் நம்பி என்னால உங்களை விட்டுட்டு போக முடியாது. நமக்கு யாரும் வேண்டாம். நீங்க என்னையும், என் பிள்ளையையும் பார்த்துக்கோங்க. நான் என் புருஷனை பார்த்துக்கறேன். நமக்கு நாம போதும்.” என்றவள் கண்களில் மீண்டும் கண்ணீர் துளிர்க்க,

“நல்லாதானே பேசிட்டு இருக்கோம். நடுவுல எதுக்குடி அழற.” என்று மீண்டும் அவன் கோபம் கொள்ள,

“நீங்க இப்படியெல்லாம் கத்தினா, உங்க பொண்ணு பயப்படுவா…” என்று அவன் பலவீனம் தெரிந்து அடித்தாள் கார்த்திகா.

அவ்வளவுதான். அவள் எதிர்பார்த்ததுப் போலவே அவளை மறந்து மக்களிடம் ஐக்கியமாகி விட்டான் குமரன்.

“ஒன்னும் இல்ல குட்டிமா… அப்பா அம்மாகிட்ட கோபப்படல.. அம்மா பொய் சொல்றா… நீ நம்பாதடா.” என்று மக்களிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டான்.

“இல்லடா குட்டி… அப்பா பொய் சொல்றாங்க. அம்மாவை அடிச்சுட்டாங்க.” என்று கார்த்தி வயிற்றில் கைவைத்து கதை சொல்ல,

“சும்மாயிரு கார்த்தி. என் பொண்ணுகிட்ட என்னை போட்டுக் கொடுக்காத.” என்றான் குமரன்.

“பாரு குட்டி.. இப்பவும் அம்மாவை மிரட்டுறாரு.” என, அவள் பேச முடியாதபடி அவள் வாயை அடைத்தவன் சிலபல நிமிடங்களுக்கு பிறகே விடுவித்தான் அவளை.

கார்த்தி அதற்குமேல் எங்கே பேசுவது.? வார்த்தை வராமல் அவள் மௌனமாக, “சீக்கிரம் வாடா குட்டிமா..” என்று கார்த்தியின் வயிற்றின் மீதும் ஒரு முத்தம் வைத்தான் அவன்.

அவன் முத்தத்தில் கார்த்தியின் உடல் மொத்தமாக சிலிர்க்க, முத்தமிட்டு நிமிர்ந்தவனை பார்க்க முடியாமல் அவள் வேறெங்கோ பார்க்க, அவள் கன்னத்தில் முத்தமிட்டு அவளை அணைத்துக் கொண்டான் கணவன்.

அன்று முழுவதும் நடந்த அத்தனை கலவரங்களும் இருவருக்குமே மறந்து போனது அந்த நிமிடங்களில்.

அடுத்த ஒரு வாரத்தில் குமரனே அவன் வீட்டில் வைத்து எளிமையாக கார்த்திக்கு வளையடுக்க, அன்னையாக முன்னின்று அத்தனையும் செய்தவர் ராஜம்மா. பூச்சி, சேகர், ராஜம்மா, பூர்ணி, தர்ஷி, காவ்யா என்று மிகச்சிலர் மட்டுமே கலந்து கொண்ட அந்த நிகழ்வு, கார்த்திக்கு மிகப்பெரிய பொக்கிஷமாக தோன்றியது.

அவள் அன்னையோ, மாமியாரோ முன்னின்று செய்து இருந்தாலும், இந்த அளவிற்கு மகிழ்ந்திருக்கமாட்டாள் என்றுதான் தோன்றியது கார்த்திக்கு.

பின்னே, அவள் கணவன் அவளுக்காக யோசித்து, அவளிடமே சொல்லாமல் அத்தனையும் ஏற்பாடு செய்து, அவளுக்கான புடவை, மற்ற பொருட்களையும் அவன் பணத்திலேயே வாங்கி கொடுத்து மனையில் அமர்த்தியிருக்க, இதோ கைநிறைந்த கண்ணாடி வளையல்களுடன், மகிழ்ச்சியில் கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் அவள்.

இதைவிட வேறென்ன வந்து நிறைந்து விடும்….

Advertisement