Advertisement

நாட்கள் தள்ளிப் போயிருப்பதும் அப்போதுதான் நினைவு வர, ராஜம்மாவின் அருகில் வந்து, “ஏன் அப்படி கேட்டிங்க?” என்று புரியாதவளாக மீண்டும் அவள் கேட்க,

“எத்தனைப் பேரை பார்த்திருப்பேன்? எனக்கு தெரியாதா? உன் முகத்தை பார்த்ததும் அப்படிதான் கேட்க தோணுச்சு எனக்கு. நாள் தள்ளி இருக்கா கண்ணு.” என்று மீண்டும் கேட்டவருக்கு பதில் எதுவும் சொல்லாமல் வீட்டிற்கு வந்துவிட்டாள் அவள்.

நேற்று முழுவதும் அதே யோசனையில் இருந்தவள் இன்று காலையில் வழக்கம்போல் கல்லூரிக்கு கிளம்பி இருந்தாள். என்ன செய்வது என்று புரியாமல் அவள் தன் சந்தேகத்தை பூர்ணியிடம் கூறிவிட, பூர்ணிதான், “டெஸ்ட் செய்து பார்க்கலாம்.” என்று அருகில் இருந்த மருந்தகத்தில் இருந்து அந்த கிட்டை வாங்கி வந்து கொடுத்திருந்தாள்.

அலைபேசி வழியாக அதை உபயோகிக்கும் முறையை அறிந்து கொண்டவர்கள் அதை அப்படியே செயல்படுத்த, முடிவு கார்த்தியின் கர்ப்பத்தை உறுதிப்படுத்தி இருந்தது.

கார்த்திக்கு தனது வயிற்றில் இருந்த பிள்ளையைப் பற்றி யோசிக்கவெல்லாம் இயல்பாகவே வரவில்லை. அவளின் மனம் மொத்தமும் குமரன் என்ன சொல்வானோ, என்ன செய்வானோ என்று அவனை நினைத்துதான் கவலை கொண்டது.

வகுப்புக்கு கூட செல்லாமல் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க, அவளின் அருகில் அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர் பூர்ணியும், தர்ஷினியும்…

“பயமா இருக்குடி.” என்று வெகுநேரத்திற்கு பின் கார்த்தி வாயைத் திறக்க,

“ஹேய்… இதெல்லாம் ஒரு விஷயமா? கல்யாணம் பண்ணிட்டா இது நார்மல் தான.. ஏன் இப்படி பயந்து சாவுற?” என்று பூர்ணி வழக்கம்போல் அதட்ட,

“காலேஜ்கூட முடிக்காம இப்படி… அவரும் இப்போ எதுவும் வேண்டாம்ன்னு தான் சொல்லி இருந்தார் பூர்ணி.” என்று மீண்டும் அவள் புலம்ப,

“இதுக்கும் உன் படிப்புக்கும் என்ன சம்பந்தம் கார்த்தி. குழந்தை வந்துட்டா படிக்க கூடாதுன்னு யார் சொன்னது?” என்று பூர்ணி கேட்டதற்கு பதில் இல்லை.

“அம்பது வயசுல கூட டிகிரி படிக்கிறாங்கப்பா. வேண்டாம்ன்னு நினைச்சு இருந்தீங்க, பட் இப்போ வந்தாச்சு. என்ன பண்ண முடியும்? அங்கங்கே குழந்தை இல்லாம எத்தனைப் பேர் கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. உனக்கு அப்படியெல்லாம் இல்லாம, கல்யாணமாகி மூணாவது மாசமே கிடைச்சா, நீ வேண்டாம்ன்னு சொல்லுவியா?” என்று பூர்ணி மிரட்டியபோது,

“நான் வேண்டாம்ன்னு எப்ப சொன்னேன்.?” என்று முகத்தை சுருக்கிக் கொண்டாள் கார்த்தி.

“அப்புறம் என்ன?”

“உன் அண்ணன் என்ன செய்வாரோ தெரியல…” என்று கார்த்தி கவலை கொள்ள,

” அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டார். அப்படியே ஏதாவது சொன்னாலும், நீ அவரை ஆப் பண்ணிடு.” என்றவளை புரியாமல் பார்த்தாள் கார்த்தி.

பூர்ணி இயல்பாக கண்ணடிக்க, “ரொம்ப கெட்டு போய்ட்ட பூர்ணி” என்று அவளை அடித்தாள் கார்த்தி.

“நிஜமா கார்த்தி வாய் அதிகமா போச்சு..” என்று தன் பங்கிற்கு தர்ஷினியும் இரண்டு அடி வைக்க, தொடர்ந்த அவர்களின் கலகலப்பில் ஓரளவுக்கு இயல்பாகி இருந்தாள் கார்த்திகா.

அன்று மதியம் வழக்கம்போல் குமரன் வந்து நிற்க, என்றுமில்லாமல் அவன் முகம் பார்க்கவே தயக்கமாக இருந்தது கார்த்திக்கு. எது வந்தாலும் சமாளிப்போம் என்று எடுத்த முடிவெல்லாம், அவனது ஒரு பார்வையில் சுக்கு நூறாகிக் கொண்டிருக்க, “அச்சோ.” என்று வாய்விட்டு புலம்பும் நிலையில் தான் இருந்தாள் அவள்.

பூர்ணியும், தர்ஷினியும் கண்களால் அவளுக்கு தைரியம் கூற, ஒரு பீதியுடன் தான் ஆட்டோவில் ஏறினாள் அவள். பாதி வழியிலேயே, “என்ன கார்த்தி… என்ன சொல்லணும்?” என்று குமரன் தொடங்க,

“ஹான்…” என்று அதிர்ந்து தன்னை காட்டிக் கொடுத்தவள், “வீட்டுக்கு போனதும் சொல்றேன்.” என்று சரணடைந்து விட்டாள்.

அவனும் விடாக்கண்டனாக வீட்டிற்குள் நுழைந்த நிமிடமே, அவளை இடையோடு வளைத்துக்கொண்டு, “என்னடி சொல்லணும்?” என்று கொஞ்சலாக கேட்க,

“கோபப்படக்கூடாது…”

“முதல்ல சொல்லுடி.” என்றவனை பார்த்து அவள் தயக்கத்துடன் வாய் திறக்க,

“என்ன கார்த்தி. என்ன பண்ணிடுவேன் உன்னை?” என்று கோபம் கொண்டான் குமரன்.

“நீங்க கொஞ்ச நேரம் என்னை மிரட்டாம இருங்க.” என்றவள் அவன் முறைக்கவும், அவன் பார்வையிலிருந்து தப்பிக்கும் வழி அறியாமல் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

“கார்த்தி..” என்று குமரன் அவள் முகம் நோக்கி குனிய,

தனது இருகைகளால் அவனை அணைத்து கொண்டவள், “நமக்கு பாப்பா வரப்போகுது…” என்றாள் அறிவிப்பாக.

குமரனுக்கு முதலில் புரியவே இல்லை. சில நொடிகளுக்கு பிறகே அவள் வார்த்தைகளின் பொருள் புரிய, வேகமாக அவளை விலக்கி நிறுத்தியவன், “என்ன சொன்ன? ஒழுங்கா சொல்லு.” என்று மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்த, பயத்தில் எப்போதும் போலவே நடுங்க ஆரம்பித்துவிட்டாள் கார்த்தி.

“கார்த்தி… ஏன் இப்படி பண்ற?” என்று அவளை அணைத்து கொண்டவன், “இப்போ சொல்லு” என்று மீண்டும் கேட்க,

“அதுதான்… பாப்பாதான் வரப்போகுது…” என்றாள் பாவமாக.

குமரன் அதிர்ச்சியா, ஆனந்தமா என்று புரியாமல் சில நொடிகள் நின்றுவிட, அவன் மௌனத்தில் கலக்கம் கொண்டவளாக நிமிர்ந்தாள் கார்த்திகா.

குமரனின் கவனம் வேறெங்கோ இருக்க, மெல்ல தன் விரல்களால் அவன் தாடையைப் பிடித்து அவள் அசைக்க, சட்டென மீண்டவன், “உனக்கு எப்படி தெரியும்? டாக்டர்கிட்ட போனாயா?” என,

“கிட் வச்சு டெஸ்ட் பண்ணி பார்த்தேன். பூர்ணி வாங்கி கொடுத்தா.” என்ற கார்த்தியை மென்மையாக அணைத்து கொண்டவன், “முழுசா சந்தோஷப்படக்கூட முடியலடி என்னால. படிக்கிற பொண்ணை இப்படி பண்ணிட்டேன்னு தான் நினைக்க முடியுது.” என்று அவன் கவலை கொள்ள, அவன் பேச்சில் புன்னகைத்தாள் கார்த்தி.

“சிரிக்காத கார்த்தி.” என்று குமரன் கடிய, முகத்தை சுருக்கி காண்பித்தவள், “சிரிக்கல போதுமா.” என்றாள் விளையாட்டாக.

“உனக்கு பயமா இல்லையா… இவ்ளோ நேரம் நடுங்கிட்டு இருந்த. இப்போ கூலா இருக்க?”

“உங்ககிட்ட சொல்லத்தான் பயமா இருந்தது. இப்போ சொல்லிட்டேன்ல. அதான் டென்சன் போய்டுச்சு.” என்று கண்களை சிமிட்டி அவள் சிரிக்க,

“இப்போ பாப்பா வேணுமா கார்த்தி. எனக்கு நீயே பாப்பாவா தான் தெரியுற… நாம கொஞ்சநாள் கழிச்சு..” என்று அவன் பேசும்போதே கைக்கொண்டு அவன் வாய் மூடினாள் கார்த்திகா.

“எனக்கு பாப்பா வேணும்.” என்று அவன் கண்களைப் பார்த்து அழுத்தமாக அவள் உரைத்த விதத்தில் அவளை இன்னும் நெருக்கமாக்கி கொண்டவன் அவள் தோளில் புதைந்தான்.

“கார்த்தி…” என்ற அவன் குரல் முழுதாக மயக்கத்தை சுமந்திருக்க, கார்த்திகாவையும் மயக்கியது.

“ம்ம்ம்..” என்ற ம் காரம் மட்டுமே மொழியாக,

“தேங்க்ஸ்…” என்று அவள் பின்கழுத்தில் இதழ் புதைத்தான் குமரன்.

மீள முடியாத, மீள விரும்பாத சில கணங்கள்… இருவரும் மௌனமொழியில் தங்கள் புதுவரவின் வருகையைக் கொண்டாடித் தீர்க்க, நொடிகள் நிமிடங்களாக நீண்டபோதும் இருவருக்கும் இடையில் மாற்றமேதுமில்லை.

அன்று முழுநாளும் ஆட்டோவிற்கு கூட செல்லாமல் குமரன் கார்த்திகாவின் அருகிலேயே இருக்க, அன்று மாலையில் கார்த்தியைத் தேடி வந்துவிட்டார் மகாலட்சுமி.

கதிரும், பிரியாவும் கூட உடன் வந்திருக்க, “வாங்க.” என்று வரவேற்றதோடு சரி. அதற்குமேல் ஒரு வார்த்தைக்கூட அவர்களிடம் பேச விருப்பமில்லாமல் ஒதுங்கி நின்றுகொண்டாள் கார்த்திகா.

வந்தவர்களுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுக்க கூட மனமில்லை அவளுக்கு. குமரன் தண்ணீர் கொண்டுவந்து கொடுக்க, அதை மறுத்து தன் மகளை நெருங்கினார் மகாலட்சுமி.

“கார்த்திம்மா.” என்று உள்ளம் உருகியவராக அவர் அழைக்க, கார்த்திகையின் நெஞ்சம் கசியவில்லை.

தன் கைகளைப் பற்றிய அவர் கையிலிருந்து தன் கைகளை விலக்கிக் கொண்டு, அவளும் ஓரடி பின்னால் நகர்ந்து நின்று கொண்டாள்.

“கார்த்தி…” என்று குமரன் அதட்ட, அவனுக்கும் என்றும் இல்லாத திருநாளாக ஒரு முறைப்புதான் பதிலாக கிடைத்தது.

“நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க கார்த்தி.” என்று மனம் கேட்காமல் குமரன் பேச,

“உங்க தங்கச்சியோட மாமியாருக்கு மரியாதை கொடுக்க நான் தயாரா தான் இருக்கேன். உங்க மச்சானும், உங்க தங்கச்சியும் முதல்முறை நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. அவங்களுக்கு விருந்து வைக்கணும்னு சொன்னாலும் செய்றேன்.”

“ஆனா, இவங்க அப்படி நடந்துக்கணும். உங்க தங்கச்சியை வச்சு தான் இவங்க நமக்கு சொந்தமா இருக்கணும் . எனக்கு இவங்களோட வேற எந்த உறவும் வேண்டாம்.” என்று நிமிர்ந்து நின்றாள் கார்த்தி.

“கார்த்தி…” என்று மகா கண்ணீர்விட,

“என் முன்னாடி அழாதீங்க. உங்களை அழவச்ச பாவம் எனக்கு வேணாம்.” என்றவள் சமையல் தடுப்பில் சென்று நின்றுகொண்டாள்.

“கார்த்தி.” என்று மகா மகளின் பின்னால் செல்ல,

“இவங்களை போக சொல்லுங்க.” என்று குமரனிடம் பேசினாள் கார்த்தி.

“கார்த்தி… உன்னை பார்க்கத்தான் வந்திருக்காங்க. உன் குழந்தைக்காக தானே வந்திருக்காங்க.”

“அதுக்காகத்தான் சொல்றேன். இவங்க எனக்கு வேண்டாம். என்மேல எந்த தப்பும் இல்லன்னு நீங்க சொல்லிக்கூட, என்கிட்டே இறங்கிப்போக மனசு வரல இவங்களுக்கு. எப்பவும் போல நாய்க்குட்டி மாறி பொண்ணு நம்மை தேடி வந்திருவான்னு ஒரு எண்ணம். நிச்சயமா அப்படிதான் நினைச்சிருப்பாங்க இவங்க.” என்று கசந்த குரலில் கார்த்திகா முடிக்க,

“நீ நினைக்கிற மாதிரி இல்ல கார்த்தி. அம்மா உன்னை நினைச்சு டெய்லி அழுதுன்னு இருக்கு தெரியுமா…”

“அதனாலதான் பாசம் தாங்காம இவ்ளோ வேகமா என்னை தேடி வந்துட்டீங்களா?” என்று மகாவைப் பார்த்து அவள் கேட்க,

“என்னை என்னடி செய்ய சொல்ற? நம்பின எல்லாரும் என்னை ஏமாத்திட்டு போனா, நான் யாரை நம்புவேன்?” என்றார் மகா.

“உண்மை தெரிஞ்ச பிறகும் என்னை தேடி வரலையே நீங்க… எப்படியோ போகட்டும்னு தானே விட்டுட்டீங்க..”

“உன்னை மிஞ்சி எனக்கு என்னடி இருக்கு. உன்னை எப்படி விடுவேன்?”

“விட்டுடீங்க தான். அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன்லேயும் என்னை விட்டுட்டு தான் போனீங்க. ஆனா, என் அம்மா நொந்து போய் இருக்காங்கன்னு என்னை நானே தேத்திக்கிட்டேன். உங்களுக்காக எத்தனை நாள் வருத்தப்பட்டு இருக்கேன் தெரியுமா…”

“ஆனா, என்னைப்பத்தி நீங்க யாருமே யோசிக்கலையே…” என்றவள் கலங்கி நிற்க,

“கார்த்தி…. அம்மாவை மன்னிச்சிடுடா…” என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டார் மகா.

“இந்த மன்னிப்பால என்ன மாறிடும்? எதுவுமே இல்ல… எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து உங்க பேச்சை மீறி எதையுமே செஞ்சதில்ல. ஆனா, என்னை நீங்க எப்பவுமே நம்பினதில்ல…”

“என் விருப்பமே இல்லாம என் கல்யாணம் நடந்தது தெரிஞ்ச பிறகும் கூட என்னைத் தேடி வந்து பார்க்க உங்க கௌரவம் இடம் கொடுக்கல. ஆனா, உங்க மகன் செஞ்ச அத்தனையும் மறந்து அவனையும், அவன் பொண்டாட்டியையும் மட்டும் கூடவே வச்சுருக்கீங்களே… இப்போ உங்க கௌரவத்துக்கு குறைச்சல் வராதா?” என்று சாட்டையடியாகத் தான் வந்து விழுந்தது கார்த்தியின் வார்த்தைகள்.

Advertisement