Advertisement

தித்திக்கும் முத்தங்கள் 30

பிரியா கதிர்வேல் வீட்டிற்கு வந்து மேலும் சில நாட்கள் கடந்திருக்க, காலையிலேயே ஆட்டோவை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பியிருந்தான் கதிர். அவன் வேலைக்கு சென்றுவிடவும், மகாவுடன் அவர் வீட்டில் இருந்தாள் பிரியா. மகா மகனுக்காக மதிய உணவு தயாரிக்கும் பரபரப்பில் இருக்க, அவர் கையில் கொடுத்திருந்த கேரட்டையும், பீன்ஸையும் பொடியாக நறுக்கிக் கொண்டிருந்தாள் பிரியா.

அவளுக்கு வேலைக்கு செல்லாமல் இப்படி வீட்டிலேயே அடைந்து கிடப்பது எப்படியோ இருந்தது. அவள் வீட்டில் டிவியாவது இருந்தது. இங்கு அதற்கும் வழியில்லாததால் நேரம் கழிவது கொடுமையாக இருந்தது.

மகாவும் அவள் வேலைக்கு சென்று வரட்டுமே என்று மகனிடம் பேசிப் பார்த்துவிட்டார். ஆனால், கதிர் பிரியாவை அங்கே வேலைக்கு செல்ல அனுமதிக்கவே இல்லை. மகா அழுத்திக் காரணம் கேட்டபோது, அவன் கூறிய விஷயத்தில் அவரும் அமைதியாகிவிட்டார்.

ஆனால், ஏதோ யோசனையில் விட்டத்தை வெறித்து கொண்டு அமர்ந்திருக்கும் பிரியாவைப் பார்க்கையில் சற்றே பாவமாக இருக்கும். அவரால் முடிந்தவரை அவளிடம் பேச்சுக்கொடுப்பவர் மெதுவாக சமையலையும் அவளுக்கு பழக்கிக் கொடுக்க ஆரம்பித்து இருந்தார்.

அவளுக்கும் கற்று கொள்ளும் ஆர்வம் இருக்க, சற்று பொறுமையாக செய்தாலும், அவர் சொல்லித் தருவதை நேர்த்தியுடன் செய்வாள் பிரியா. இப்போதும் கேரட், பீன்ஸை பொரியலுக்கு ஏற்றபடி அவர் நறுக்கி காட்டியிருக்க, மிகுந்த சிரத்தையுடன் அவர் சொல்லிய அளவு மாறிவிடாதபடி நறுக்கிக் கொண்டிருந்தாள்.

பிரியாவை பற்றிய யோசனையுடனே அவர் சமையலை முடிக்கவும், மகன் மதிய உணவுக்கு வந்து நிற்கவும் சரியாக இருந்தது. வந்தவன் என்றுமில்லாத வழக்கமாக, “அவளுக்கும் சோறு போடும்மா.” என்றான் மகாவிடம்.

பிரியா, “நான் அத்தையோட சாப்பிடறேன்.” என,

“ஏன்… என்கூட சாப்பிட்டா சோறு இறங்காதா.?” என, இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தாள்.

“போடும்மா.” என்று தாயிடம் கூறியவன், “சீக்கிரம் சாப்பிட்டு கெளம்பு.” என்றான் மனைவியிடம்.

எங்கே என்றுகூட கேட்காமல் அவள் உண்டு முடிக்க, பிரியாவை அழைத்துக் கொண்டு கிளம்பியவன் நேராக ஒரு கைத்தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு அழைத்து வந்திருந்தான்.

பிரியாவுக்கு தையல் பயிற்சிக்கும், அழகுக்கலை பயிற்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தான் கதிர். பிரியா அந்த இடத்தை வேடிக்கைப் பார்த்தபடி இருக்க, அங்கிருந்த பெண்ணிடம், “இவதான்கா என் பொண்டாட்டி பிரியா. இவளுக்குதான் கேட்டு இருந்தேன்.” என்று மனைவியை கைகாட்டி கதிர்வேல் கூறவும் தான் அவர்கள் பேச்சைக் கவனித்தாள் பிரியா.

“உன் பேர் என்னம்மா?” என்று அந்த பெண்மணி கேட்க,

“பிரியா.”

“தைக்க கத்துக்கறியா இங்க?” என்று சிரிப்புடன் கேட்டார் அவர்.

பிரியா வேகமாக தலையாட்ட, அன்றே அந்த வகுப்பிற்கான கட்டணத்தில் ஒருபகுதியை கட்டி, அவளை வகுப்பில் சேர்த்துவிட்டான் கதிர். பிரியாவுக்கும் பெரிதாக படிக்கும் எண்ணமெல்லாம் எப்போதும் இருந்தது இல்லையே.

இப்போதும் கல்லூரிக்கு சென்று படிக்க எல்லாம் அவள் தயாராக இல்லை. அந்த வகையில் வீட்டில் இருப்பதற்கு தையல்கலையை கற்றுக்கொள்ள முடிவு செய்துவிட்டாள் அவள்.

அன்றைய தினம் இரண்டு மணிநேரம் அடிப்படைகளை சொல்லிக் கொடுத்த அந்த பெண்மணி, அடுத்து அழகுக்கலையை பற்றியும் மேலோட்டமாக எடுத்துரைக்க, அவர் பேசும்விதத்தில் இயல்பாகவே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது பிரியாவுக்கு.

இவளையும் சேர்த்து மொத்தம் ஒரு பத்து பேர் தான் இருந்தனர் அங்கு. அத்தனைப் பேருக்கும் அவர் ஒருவரே கற்பித்தாலும் அத்தனை தெளிவாக இருந்தது அவர் பேச்சும், நடவடிக்கைகளும்.

அன்று வகுப்பு முடியும் நேரம் சரியாக கதிர் வந்து நிற்க, பிரியாவின் மலர்ந்த முகம் கண்டு பெருத்த நிம்மதி அவனுக்கு. அவனுக்கும் பிரியாவை வீட்டிலேயே அடைத்து வைக்கும் எண்ணமெல்லாம் இல்லையே. அவளை வேலைக்கு அனுப்புவதற்கு கூட அவனுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை.

ஆனால், அவள் வேலைக்கு சேர்ந்திருந்த இடம்தான் பிரச்சனை. அவன் வேலை செய்த கடைதான் என்றாலும், அங்கே நடக்கும்  சில விஷயங்கள் எப்போதுமே பிடிக்காது அவனுக்கு. பிடிக்காது என்றாலும் கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவான்.

ஆனால், இன்று தன் மனைவி என்று வருகையில் அவளை அங்கே வேலைக்கு அனுப்புவதற்கு அவன் தயாராக இல்லை. அங்கே மேல்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளிடம் அவள் பேச்சு வாங்குவதோ, அல்லது அவர்களுக்கு அவள் வளைந்து கொடுப்பதோ இரண்டுமே அவனுக்கு விருப்பமில்லை.

அதைக் கொண்டு தான் அவளை பார்த்த நிமிடமே இழுத்து வந்துவிட்டான். அவள்மீது இன்னமும் கோபம் மீதமிருந்தது தான். ஆனால், நீ எப்படியும் போ என்று எப்போதும் விட முடியாது அவனால். விட்டு விடுவாளோ என்ற பயத்தில் தானே, அவளை அவசரப்படுத்தி அவன் திருமணத்தை முடித்துக் கொண்டது.

இடையில் எத்தனை விஷயங்கள் நடந்திருந்தபோதும், அவளை அழைத்து வந்த நிமிடம் தொட்டே மொத்தமும் அவள் குறித்த சிந்தனைகள் தான். என்னதான் கோபம், வருத்தம் என்று அவன் கூறிக்கொண்டாலும், பிரியாவை விட்டு விலகியிருக்க முடியவில்லை அவனால்.

அடாவடியாக அவளை அணைத்துக் கொண்டதும்கூட, தவறாக படவில்லை அவனுக்கு.

அதன்பின்னும் மனைவியிடம் இறங்கிச் செல்லும் எண்ணமில்லாதால் தான் மொத்த குற்றத்தையும் அவள் பெயரில் ஏற்றிவிட்டான். ஆனால், பிரியா இருந்த மனநிலையில் பட்டென அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட, அதன்பின் எங்கே கோபம் கொள்வது?

ஆனால், அதற்காக பழைய வாழ்க்கையை தொடரவும் விரும்பவில்லை அவன். அதனைக் கொண்டு தான் பிரியாவை விரட்டிக்கொண்டு இருக்கிறான். அவனுக்கு தன்னையறியாமல் ஒரு பயம் எழுந்திருந்தது. பிரியாவிடம் மீண்டும் இணக்கம் காட்டினால், பழையகதை தொடருமோ என்று. மேலும், அவள் இன்னொரு ராணியாக உருவெடுப்பதை எல்லாம் நினைக்கவே முடியவில்லை அவனால்.

பிரியாவை தனக்கேற்றவளாக மாற்றிக் கொள்ளவே முயன்றான் கதிர். அதே சமயம், தானும் அவளுக்கு நல்ல கணவனாக நடக்க வேண்டும் என்ற உறுதியும் எழுந்தது அவனுக்குள். அவனுக்கு குமரன்- கார்த்திகாவின் வாழ்க்கையும், அவர்களின் புரிதலும் ஆகச்சிறந்த முன்னுதாரணம்.

கடத்திச்சென்று திருமணம் முடித்திருந்தாலும், இன்றைய அவர்களின் பிணைப்பு… காதல் கொண்டு மணந்த தங்களுக்குள் இல்லை என்பது அவனது மிகப்பெரிய வருத்தமாக இருந்தது. ஆனால், இதற்கு பிரியாவை மட்டும் காரணம் சொல்ல முடியாது என்பதும் புரிய, மாற்றத்தை தன்னிடம் இருந்து தொடங்கினான் அவன்.

ஏற்கனவே, மகாவின் தற்கொலை முயற்சியால் பாதி திருந்தியிருந்தவன், மனைவியின் வருகைக்குப் பின் முயன்று தன்னை சரிசெய்து கொண்டிருக்கிறான்.

அதன் ஒரு பகுதி தான் அவளை இந்த பயிற்சி நிலையத்தில் சேர்த்துவிட்டது. இன்னமும் அவள் சொந்தக்காலில் நிற்பதற்கான வழிமுறைகளையும், வருங்கால திட்டங்களையும் வகுத்து வைத்திருக்கிறான். அதற்காக முன்பைவிட அதிகநேரம் உழைக்கவும் தொடங்கி இருக்கிறான்.

ஆனால், இது அனைத்தையும் பிரியா புரிந்து நடக்க வேண்டும் என்பதே பெரிய கவலையாக இருந்தது அவனுக்கு. அவளிடமும் மாற்றங்கள் தென்பட்டாலும், எப்போது அவள் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி நின்று கொள்வாளோ என்று அந்த பயமும் இருக்கத்தான் செய்கிறது.

தனக்குள் சிந்தனையில் மூழ்கியிருந்தவனை பின்னிருந்து பிரியா தோள்பட்டையில் தட்ட, அப்போதுதான் நிகழ்விற்கு திரும்பினான் கதிர்.

அவனது ஆட்டோ அந்த பயிற்சி நிலையத்தின் வாயிலிலேயே நின்றிருக்க, வேகமாக வண்டியை எடுத்தான் அவன். பிரியா அவனைப் புரியாமல் பார்த்திருக்க, அவளை கண்டுகொள்ளாமல் வீட்டு வாசலில் இறக்கி விட்டு மீண்டும் கிளம்பிவிட்டான்.

கணவன் தனக்காக யோசித்ததை நினைத்து பெருமிதம் கொண்டிருந்தவள் அவனது இந்த செயலில் காயப்பட்டாள். ஆனால், அவன் கோபம் தெரிந்தது தானே… என்று தன்னை தேற்றிக் கொண்டு அவள் வீடு வர, அவளை எதிர்பார்த்தவராக வாசலை பார்த்து அமர்ந்திருந்தார் மகா.

மாமியாரைக் காணவும் உற்சாகமானவள் கணவனிடம் பகிர்ந்து கொள்ள முடியாத தன் மகிழ்ச்சியை மாமியாரிடம் பகிர்ந்து கொண்டாள். அவள் முகத்தில் தெரிந்த வெளிச்சம் மகாவின் மனதை நிறைத்தாலும், அவ்வபோது மகளின் நினைவு எட்டிப் பார்த்து உதைத்துக் கொண்டிருந்தது.

கார்த்திகாவைப் பார்க்க வேண்டும் என்று உள்ளம் துடித்துக் கொண்டிருந்தாலும், என்னவோ சொல்ல முடியாத ஒரு தயக்கம். இதுவரை அடக்கியே பழகிப் போனவருக்கு, அடங்கிப் போக மனம் வரவில்லையோ என்னமோ மகளை சென்று பார்க்க தயங்கி கொண்டிருந்தார் மகாலட்சுமி.

ஆனால், அவரது ஒதுக்கத்தை நினைத்து கவலை கொள்ளும் நிலையிலெல்லாம் கார்த்திகா இல்லை என்பது நிதர்சனம். குமரன் என்ற ஒருவன் அவளுக்கு யாதுமாகி நிற்க, அவனைத் தவிர வேறெதுவுமே நினைவில் இல்லாத நிலைதான் பெண்ணுக்கு.

அப்படி இல்லையெனில், தான் கருவுற்று இருப்பதையே அறியாமல் சுற்றிக் கொண்டிருப்பாளா அவள். ஆம்… கார்த்தி கருவுற்று இருந்தாள்.

குமரன் அத்தனை எச்சரிக்கையாக இருந்தபோதும், எப்படியோ நிகழ்ந்திருந்தது இது. இன்னும் குமரனுக்கு தெரியாது. தெரிந்தால் என்ன செய்வானோ என்று அதுவேறு ஒரு பக்கம் கவலை கொள்ள செய்ய, அமைதியாக அந்த கல்லூரி வளாகத்தில் அமர்ந்து கொண்டிருந்தாள் கார்த்திகா.

நேற்று காலையில் கீழிறங்கி வரும்போது, அவள் முகத்தைப் பார்த்த ராஜம்மா, “என்ன கண்ணு ஏதானும் விசேஷமா?” என்று சிரித்தபடியே கேட்க, ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.

அவரே மீண்டும், “முழுகாம இருக்கியா?” என்று பட்டவர்த்தனமாக கேட்டு வைக்க, அவளிடம் பதில் இல்லை. ஆனால், ‘இருக்குமோ.’ என்றொரு சந்தேகம் உதித்துவிட்டது அந்த நொடியில்.

Advertisement