Advertisement

தித்திக்கும் முத்தங்கள் ௦3

       அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருக்க, நேரம் காலை பதினொன்றை கடந்த பின்பும் உறங்கி கொண்டிருந்தாள் பிரியதர்ஷினி. அவள் குமரகுருவின் தங்கை.

     குமரகுரு காலையிலேயே வேலை முடித்து வந்தவன் கையோடு மீன் வாங்கி வந்து கொடுத்திருக்க, அதை வாங்கி சமையலறையில் வைத்துவிட்டு மீண்டும் உறங்கிய ராணி பத்து மணிக்கு எழுந்து அந்த பாலிதீன் பையை பிரித்துப் பார்க்கையில் சமையலறையே துர்நாற்றம் வீசியது.

       ஆனால், அதை பொருட்படுத்தாமல் மீனை ஒரு பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றியவர் அதன்பின்னும் நிதானமாக தன் வேலைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

        இரண்டு நாட்களாக கழுவாமல் போட்டிருந்த பாத்திரங்களை கழுவி எடுத்து, அவர் அரிசியை உலையில் ஏற்றும்போதே நேரம் பன்னிரண்டைக் கடந்திருந்தது.

     மகள் இன்னும் உறங்கி கொண்டிருக்க, “ஏய் ப்ரியா.. மணி என்னாவுது பாரு.. இன்னும் நீட்டிட்டு இருக்க.. எந்திரிடி..” என்று அவள் பின்பக்கம் ஒரு அடி வைத்தவர் வந்து மீனை சுத்தம் செய்ய அமர்ந்துவிட, இன்னும் மகள் எழவில்லை.

     அடுத்த ஒருமணி நேரமும் மீனை சுத்தம் செய்வதில் கழிய, அதன்பின்பு குழம்புக்கு தேவையானவற்றை தயார் செய்து அவர் எடுத்து வைக்கும்போதே மதிய உணவிற்கு வந்துவிட்டான் குமரகுரு.

      ராணி அப்போதுதான் கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்க, அவர் சமைத்து முடிக்க இன்னும் ஒருமணி நேரமாவது ஆகும் என்று அனுபவத்தில் உணர்ந்தவனாக, குளித்து சட்டையை மாற்றிக்கொண்டு கிளம்பிவிட்டான் அவன்.

      ஞாயிற்று கிழமைகளில் அருகில் இருந்த ஒரு உணவகத்திற்கு மீன் வெட்டி கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தவன் அதை முடித்து கொடுத்து பணத்தை வாங்கிக்கொண்டு தான் வீடு வந்திருந்தான்.

      இன்னும் காலையிலிருந்து ஆட்டோ ஸ்டாண்ட் பக்கமே சென்றிருக்கவில்லை அவன். சாப்பாட்டிற்காக காத்திருந்தால் வேலை கெட்டுப் போகும் என்று புரியவும் தான் கிளம்பியிருந்தான்.

      ராணி “சாப்டு போடா..” என்றபோதும்,

      “வேலை இருக்கும்மா.. வெளியே பார்த்துகறேன்..” என்று கூறியபடி கிளம்பிவிட்டான் குமாரகு.

       ராணியும் அதற்குமேல் அவனைகுறித்து கவலையற்றவராக சமையலை கவனிக்க, அவர் மீன்குழம்பு வைத்து, மீனை வறுத்தெடுக்கையில் தான் உறக்கம் தெளிந்தது மகளுக்கு.

       எழுந்து அமர்ந்தவள் “ம்மா… மீன் வறுக்கிறியா..” என்றாள் முகர்ந்து கொண்டே.

       “ஆமாண்டி.. மீன்வாசம் மூக்குல ஏறவும்தான் தூக்கம் தெளிஞ்சுதா உனக்கு. சூரியன் சுள்ளுன்னு அடிக்கிறது கூட தெரியாம தூங்கற..” என்று பேசிக்கொண்டே அவர் வேலையைப் பார்க்க, அவரைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் கழிவறைக்குள் நுழைந்துகொண்டாள் மகள்.

      காலைகடன்களை முடித்து, பல்லை மட்டும் விளக்கி கொண்டு வெளியே வந்தவள் “பசிக்குதும்மா..” என்று மீண்டும் படுக்கையிலேயே அமர்ந்து கொள்ள, அவளை ஒருவார்த்தைக் கூட கண்டிக்காமல், தட்டில் சோற்றை போட்டு அவளிடம் நீட்டினார் ராணி.

      தாயின் சமையலை ரசித்து ருசித்து அவள் உண்டு முடிக்கும் நேரம் அவள் அலைபேசி ஒசைஎழுப்பியது. குமரகுரு மீன்வெட்டி சேர்த்து வைத்திருந்த பணத்தில் வாங்கிகொடுத்த நவீனரக அலைபேசி அது.

     அவள் அலைபேசி முழுவதும் இதயவடிவ எமொஜிக்களை சுமந்து கொண்டு துடிக்க, “அச்சோ..” என்று அன்னையை ஒரு பார்வை பார்த்தாலும் அலட்டிக் கொள்ளாமல் “சொல்லு காவியா..” என்றாள் பிரியதர்ஷினி.

     எதிர்முனையில் இருந்தவன் “சாயங்காலம் கோயிலுக்கு வாடி.. பார்த்து ரெண்டு நாளாவுது..” என்று அதிகாரமாக அழைக்க,

     “இன்னிக்கா… எங்க அண்ணன் வேற சீக்கிரம் வந்துடுவான்… நாளைக்கு பார்த்துக்கலாம்.. காலேஜிக்கு வா..” என்று மெல்லிய குரலில் அவள் மறுக்க,

     “ஏய் வாடின்னா வா.. சும்மா சீனைப் போடாத..” என்றான் அவன்.

     “தோடா.. என்ன அதிகாரம் எல்லாம் ஜோரா இருக்கு.. நீ வர சொல்ற எதுக்கு எல்லாம் வரமுடியாது..” என்று அவளும் முறுக்கிக்கொள்ள,

     “ஏய் ப்ரியா.. என் செல்லம் இல்ல வாடி.. மாமாவால உன்னைப் பார்க்காம இருக்க முடியல. அதுவும் அன்னிக்கு தியேட்டருக்கு போயிட்டு வந்ததுல இருந்தே உடம்பை என்னவோ பண்ணுதுடி.. உன்னை கூடவே வச்சிக்கணும்னு தோணுது..” என்ற அவன் வார்த்தைகளில் பட்டென அன்னையைப் பார்த்தவளுக்கு ஒருநொடி குற்றவுணர்வு வந்தாலும், அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவன் அவளை அதிகம் யோசிக்கவிடவில்லை.

     “ஏய் பேசுடி..” என்றான் அதட்டலாக

     இதற்குள் உணவை முடித்திருந்தவள் தட்டிலேயே கையை கழுவி, வீட்டை விட்டு வெளியேறி பால்கனியில் வந்து நின்றுவிட, இவள் வீடு அமைந்திருந்தது இரண்டாம் மாடியில்.

     அவள் வெளியே வருவதற்குள் “பிரியா.. ப்ரியா..” என்று கத்த,

      “ஏன்டா உயிரை வாங்குற.. என் வீட்டு வெளியே தான் நிக்கிறேன். வேணும்னா வந்து பார்த்துட்டு போ..” என்றாள் அதிகாரமாக.

      “இப்போ எங்கே வர்றது. பசங்களோட பீச்சுக்கு வந்தேன். அங்கேதான் இருக்கேன். நீ சாயங்காலம் கோயிலுக்கு வாடி ப்ளீஸ்..” என்று அவன் மீண்டும் கெஞ்சலாக கேட்க,

       “டார்ச்சர்டா நீ.. சாவடிக்கிற என்னை..” என்று கோபம் கொண்டாள் அவள்.

       “உனக்கு மாமாவை புரியலியா ப்ரியா.. என்னை மாறி உனக்கு தோணவே இல்லையா..” என்று அவன் உருக்கமாக பேச,

        “போதும் போதும்.. ரொம்ப படம் காட்டாத.. சாயங்காலம் பார்க்குறேன்.. எங்க அண்ணன் வந்துட்டான்னா என்னால ஒன்னும் பண்ண முடியாது.. அப்புறம் என்கிட்ட சண்டைக்கு நிக்காத.” என்று முன்கூட்டியே கூறிவிட்டவள் அழைப்பைத் துண்டிக்க நினைக்க,

         “ப்ரியா..” என்றான் மீண்டும்.

         “இன்னும் என்னடா..” என்று அவள் சலிக்கையிலேயே,

     “மாமாவுக்கு எதாவது கொடுத்துட்டுப் போடி..” என்றான்.

      “பால்கனில நிக்கிறேன்டா..”

     “எங்கே நின்டா என்ன.. என் பொண்டாட்டி தானே.. ஒன்னு கொடுத்துட்டுப் போ.”

      “இப்போல்லாம் முடியாது. போனை வை.”

       “ஏய்.. உன்னை என்ன என்கூட குடும்பமா நடத்த சொன்னேன். ஒன்னு குடுடி..” என்று விடாமல் அவன் தொல்லை செய்ய, அவன் மீது கோபம் கொண்டாலும் அவன் கேட்டதை கொடுத்தபின்பே அழைப்பை துண்டிக்க முடிந்தது ப்ரியாவால்.

      பேசிமுடித்து அவள் உள்ளே வர, “யாருடி போன்ல..” என்று டிவியைப் பார்த்துக்கொண்டே வினவினார் ராணி.

       “ப்ரெண்டுமா..” என்ற மகளின் வார்த்தையைக் காதில் வாங்காமல் அவர் மீண்டும் தொலைகாட்சியில் மூழ்கிவிட, விட்டால் போதும் என்று அலைபேசியை பார்த்துக்கொண்டே அமர்ந்துவிட்டாள் மகள்.

       மாலை கோவிலுக்கு செல்ல வேண்டுமே.. என்ன சொல்லி ராணியை சமாளிப்பது.. என்ற யோசனையில் அவள் தீவிரமாக, போகாமல் விட முடியாது அவளால். அவள் காதலன் கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் விடாமல் அழைத்து உயிரை வாங்குவான் என்பதால் எப்படியும் சென்றே ஆக வேண்டிய கட்டாயம்.

      அன்னையின் அருகில் அமர்ந்து டிவியில் ஓடிய படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவள் ஐந்து மணி அளவில் “கோவிலுக்கு போய்ட்டு வரேன்மா. எக்ஸாம் வருது.” என்று கூறியபடியே எழுந்து குளிக்க செல்ல,

      “உங்கப்பனுக்கு நல்ல புத்தியைக் கொடுன்னு வேண்டினு வா..” என்றார் சிரிப்புடன்.

      “அந்தாளுக்கு நான் ஏன் வேண்டனும். உன் புருஷன் தானே.. நீ போய் வரம் கேளு..” என்றாள் மகள்.

      பேசிக்கொண்டே செருப்பை மாட்டிக்கொண்டு அவள் வெளியேற, அவள் வீட்டின் கீழே அமர்ந்திருந்த சில பெண்களின் பார்வை ஏளனமாக படிந்தது அவள் மீது.

      அவர்கள் பார்வைக்கான காரணம் அவளின் அதிகப்படியான ஒப்பனை தான். அடர்ந்த நிற உதட்டுச்சாயம்.. அதற்கும் மேலாக முகம் முழுவதும் ஏதோ க்ரீம் கொண்டு வெள்ளையடித்திருந்தாள். தலைமுடியை அவள் இஷ்டத்திற்கு வெட்டி விட்டிருக்க, அது ஒருபுறம் அங்குமிங்குமாக விழுந்திருந்தது முகத்தில்.

      நன்றாக இருந்த முகத்தை அவளே ஒப்பனை என்ற பெயரில் கெடுத்துக் கொண்டிருக்க, அதற்கும் மேல் அவள் அணிந்திருந்த உடை. இறுக்கமாக அவள் உடலைத் தழுவியிருந்த அந்த சுடிதாரில் அவள் அங்கங்கள் அப்பட்டமாகத் தெரிய, அவள் இருக்குமிடத்திற்கு மிகவும் அதிகப்படியானவை அவை.

   ஆனால், அவர்களின் பார்வையைக் கண்டுகொள்ளாமல் அவள் அலைபேசியை காதில் வைத்துக்கொண்டு கிளம்பிட, அரைமணி நேரத்தில் அவர்கள் குடியிருப்புக்கு அருகில் இருந்த ஒரு அம்மன் கோவிலில் இருந்தாள் அவள்.

    அடுத்த ஐந்து நிமிடத்தில் அவள் காதலனும் அந்த கோவிலுக்கு வந்துவிட, அன்று ஞாயிற்றுகிழமை என்பதால் கூட்டம் அதிகமில்லை கோவிலில்.

   இருவரும் கோவிலை வலம் வந்து முடித்து, கோவிலின் பின்புறம் அமர்ந்துவிட, சுற்றிலும் பார்வையைச் சுழற்றிய அவள் காதலன் கோவிலில் ஆள்நடமாட்டம் இல்லாமல் போகவும் இன்னும் அவளை நெருங்கி அமர்ந்து கொண்டான்.

      ப்ரியா அவனை தடுத்து எதுவும் சொல்லாமல் அவன் தோளில் சாய்ந்து கொள்ள, அவள் கையைப் பிடித்துக் கொண்டான் அவன். பிடித்திருந்த அவள் கையில் லேசாக முத்தமிட்டு “மிஸ் யூ ப்ரியா.. என்கூடவே வந்துடுடி..” என்றான் அவன்.

      “இப்பல்லாம் வர முடியாது. படிப்பு முடியட்டும்..”

      “உன் படிப்பு முடியிற வரைக்கும்லாம் என்னால வெய்ட் பண்ண முடியாது. நீ படிச்சு இன்னா பண்ண போற. எப்படியும் என் பொண்டாட்டியா தான் இருக்க போற.. அதுக்கு படிப்பெல்லாம் வேணாம்..”

      “மாமா எல்லாத்தையும் சொல்லித்தரேன்.. அன்னிக்கு தியேட்டர்ல சொல்லிகொடுத்த மாறி…” என்றவன் அத்தனைப் பற்களையும் காட்டி இளிக்க,

      “சொல்லி கொடுப்ப.. சொல்லி கொடுப்ப.. அன்னைக்கு ஏதோ ஏமாந்துட்டேன்.. எல்லா நேரமும் அப்படியே இருப்பாங்களா.. போடா..” என்றாள் அலட்சியமாக.

       “உனக்கு நான் இப்ப சொல்றது தான் ப்ரியா.. எப்பவா இருந்தாலும் நம்ம கல்யாணம் இப்பிடிதான்… உன் அண்ணங்காரன் வாழ உட மாட்டான் நம்மளை. ஒழுங்கா என் கூட வந்துடு.”

      “இந்த வருஷத்தோட காலேஜ் முடிஞ்சிடும் மாமா.. முடிச்சுட்டு வரேனே.. உன்கூட வர எனக்கு கசக்குமா என்ன..?” என்று அவன் தோளில் உரசிக்கொண்டு ப்ரியா பேச,

      “அந்த கதையெல்லாம் இங்க வேணாம்… இஷ்டம் இருந்தா என்கூட வா.. உன்னை வச்சு காப்பாத்துற அளவுக்கு நான் சம்பாதிக்கிறேன்.. அப்புறம் என்ன ம….. க்கு நீ படிக்கணும்..” என்று கோபம் கொண்டான் அவன்.

      “இன்னும் ஆறுமாசம் பொறுக்க முடியாதா உன்னால..”

      “ஏன் அதுக்குள்ள வேற எவனையாவது பார்க்க போறியா நீ.. என்ன.. படிப்பை முடிச்சுட்டு என்னை கழட்டி உட்டுட்டு வேற எவனையாவது கட்டிக்கலாம்னு ப்ளான் பண்றியா..”

      “அய்ய.. உன் புத்தி போவுது பாரு.. இந்த மூஞ்சியை விட்டுட்டு வேற ஒருத்தனை பார்க்கிறாங்க… ஏன் நீ எவளையாவது பார்த்துட்டியா.. ஒரே நாள்ல கசந்துட்டேனா நான்..” என்றவளுக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

       “ஏய் இப்ப இன்னாத்துக்கு அழுது சீனைப் போடற.. நான் எவளையாவது பார்த்தா உன்னை ஏண்டி கல்யாணம் பண்ண கூப்பிடறேன்.. ஆனா, நீ என்கூட வரல… கடைசியில நீ சொன்னதுதான் நடக்கும்..”

      “எங்கப்பன் வேற எங்க அத்த பொண்ணைதான் கட்டிக்கணும்னு சொல்லிட்டு திரியுறான். அது என்னைக்கு வந்து ஏழரையை இழுக்குமோ. அதுக்குள்ள நம்ம விஷயம் முடிஞ்சிடணும்…”

       “கல்யாணம் ஆயிடுச்சின்னா எதாச்சும் சமாளிக்கலாம். இல்ல, கட்றா தாலியன்னு நின்னுடுவாங்க.. அதுக்குதான் சொல்றேன். அதுக்குமேல உன் இஷ்டம் தான்..” என்று முழுதாக அவளுக்கு பயம் காட்டி முடித்தவன் “வா போலாம்..” என்று அவளை அழைத்துக்கொண்டு எழ, அங்கேயே அமர்ந்து அழுகையைத் தொடங்கிவிட்டாள் ப்ரியா.

      அவள் அழுகையைத் தாங்காமல் அவன் அருகில் அமர்ந்து அவளை தொட “மேல கைய வச்ச கொன்னுடுவேன் உன்ன.. என்கூட எல்லாத்தையும் முடிச்சுட்டு, இப்போ அத்தபொண்ணு மாமன் பொண்ணுன்னு கதை குடுக்கறியா..” என்றாள் பிரியா.

     “ஏய் அப்படியே வச்சேன்னு வையி, வாயி கோணிக்கும். என்ன ரொம்ப சவுண்டு விடற.. என்கூட வாடின்னு தான் கூப்புடறேன் உன்னை.. வந்தா தாலி கட்டுவேன்.. இல்ல, என்ன நடந்தாலும் என்னை குறை சொல்லகூடாது.. புரியுதா..” என்றான் மிரட்டலாக

       “அப்போ நீ என்னை விட்டுடுவியா…” என்று பயத்துடன் அவள் வினவ

    “நீ என்னை விடமாட்ட இல்ல.. அப்போ என்கூட வந்துடு..” என்றான் அவன் முடிவாக.

     மீண்டும் அவனே “ஒன்னியும் அவசரம் இல்ல.. நீயே யோசிச்சு சொல்லு.. நான் நாளன்னிக்கு போன் பண்றேன்..” என்றவன் அவளை அழைக்காமலே அந்த கோவிலில் இருந்து கிளம்பிவிட்டான்.

        அன்று இரவு வெகுநேரம் கழித்தே ப்ரியா வீடுவர, “ஏண்டி லேட்..” என்ற அம்மாவிடம், “கோவில்ல கூட்டம் ஜாஸ்திமா..” என்று அலுப்புடன் சொல்லிவிட்டு படுத்துவிட்டாள் அவள்.

      இரவு உணவுக்கு கூட எழாமல் உறங்குவதைப் போலவே படுத்துக்கொண்டாள் அவள். குமாரகுருவுக்கும் அன்று இரவு ஒரு பெரிய சவாரி கிடைத்திருக்க, பெரியபாளையம் கோவில் வரை ஒரு குடும்பத்தை அழைத்துச் சென்றிருந்தான் அவன்.

      காலையில் மீண்டும் அவர்களை திரும்ப அழைத்து வந்துவிடுவதாக ஒப்புகொண்டிருக்க, அன்னையிடம் இரவு வரமாட்டேன் என்று போனில் அழைத்து சொல்லிவிட்டவன் தன் ஆட்டோவிலேயே படுத்து உறங்கியிருந்தான்.

      நாள் முழுவதும் உழைத்து களைத்தவனுக்கு படுத்த இரண்டாவது நிமிடமே உறக்கம் கண்களை சுழற்றிவிட, நிம்மதியாக உறங்கிப் போனான் அவன்.

     இந்த நிம்மதி இன்னும் இரண்டு நாட்களில் சுத்தமாக தொலைந்து போகவிருப்பதை அறியாமல் இருந்தான் அவன்.

      இங்கே கார்த்திகைச்செல்வியின் வீட்டிலோ, வழக்கம்போல் அவன் அண்ணன் குடித்துவிட்டு வீடு வந்திருக்க, அவனை துடைப்பத்தை கொண்டு அடித்து அப்போதுதான் வெளியே துரத்தியிருந்தார் மகாலட்சுமி.

      இரவு நேரம் ஒன்பது மணியைக் கடந்திருக்க, அவர் கணவர் தங்கராஜ் வீடு வந்து சேர்ந்தார். வந்தவர் என்றுமில்லாத திருநாளாக கைநிறைய பாலிதீன் கவர்களில் ஏதேதோ வாங்கி வந்திருக்க, என்ன ஏதென்று எதுவும் கேட்கவில்லை மகாலட்சுமி.

      வாங்கி வந்தவற்றை மகளிடம் கொடுத்தவர் “நீ சாப்டுடா.. எல்லாம் உனக்குதான்.. படிக்கிற பொண்ணு.. உங்காத்தாகாரி எப்படி விட்டு வச்சுருக்கா பாரு.. ஆனா, அப்பன் நான் இருக்கேண்டா.. நான் எல்லாம் பண்ணுவேன் உனக்கு..” என்று உளறிக் கொட்டினார் அவர்.

     அவர் குடித்திருப்பது மகாலட்சுமிக்கு புரிய, அவரிடம் எதுவும் பேசாமல் மகளிடம் படுக்குமாறு கண்ணை காட்டினார். மகள் அவள் இடத்தில அமைதியாக படுத்துக்கொள்ள, மீண்டும் அவளிடம் சென்ற தங்கராஜை “யோவ்.. ஒழுங்கா படுத்து தூங்குய்யா… இல்ல, உன் புள்ள மாறியே உன்னையும் அடிச்சு வெளியே துரத்திடுவேன்..” என்று லட்சுமி மிரட்ட, அத்துடன் கப்சிப் என்று படுத்துவிட்டார் அவர்.

       ஆனால், காலையில் மகள் கல்லூரிக்கு கிளம்பிவிடவும், வேலைக்கு கிளம்பிய மனைவியை ஏதோ முக்கியமாக பேச வேண்டும் என்றுகூறி விடுப்பு எடுக்க வைத்தார் தங்கராஜ்.

      அவரின் அலப்பறையில் வேலைக்கு கிளம்பாமல் அமர்ந்து விட்டவர் “என்னய்யா சொல்லணும் நீ.. உன்னால ஒருநாள் பொழப்பு போச்சு எனக்கு. சொல்லி தொல..” என்று கத்த

       “நம்ப கார்த்திக்கு ஒரு இடம் வந்துருக்கு லட்சுமி..” என, லட்சுமி அவரை சந்தேகமாக பார்த்தார் இப்போது.

         அவரின் பார்வையில் “நீ முளுசா கேளேன்.. நீயே குஷியாயிடுவ..” என்றார் பீடிகையாக.

      “நீ விசயத்த சொல்லு..” என்று லட்சுமி கறார் காட்ட,

    “நம்ம வட்டம் சௌந்தர் அண்ணன் இல்ல.. அவர் பையன் வசந்த்.. அவன் கார்த்திய எங்கியோ பார்த்து இருப்பான் போல.. புடிச்சு போச்சு. நேரா அவங்க அப்பாகிட்ட சொல்லிட்டான்.. அண்ணன் இன்னிக்கு என்னை கூப்டு பேசுனாரு லட்சுமி..”

    “நம்ம எதுவும் செய்ய வேணாம்.. பொன்னை மட்டும் அனுப்பி வைன்னு சொல்லிடாரு..” என்று சந்தோஷ பூரிப்பில் அவர் கூறி முடிக்க,

    “அவுங்க இருக்கப்பட்டவங்களாச்சே.. அவுங்களுக்கு ஏத்தா மாறி பாக்காம, நம்ம பொண்ண ஏன் கேட்கணும்.” என்றார் லட்சுமி.

     “பையன் ஆசப்பட்டுட்டான்ல.. அதுக்குமேல இன்னா பேச முடியும் அவரால..”

    “எதுவா இருந்தாலும், இன்னும் ஒருவருசம் போட்டும்.. என் பொண்ணு படிச்சு முடிச்சதும் பேசலாம்.” என்றவர் எழுந்துகொள்ள,

    “அடி என்னடி பைத்தியக்காரி மாறி பேசுற.. உன் பொண்ணு அவனை கட்டிகிட்டா அவங்களே படிக்க வைப்பாங்க.. உன்னை மாறி பிசாத்து காலஜில இல்ல… பெரிய படிப்பெல்லாம் படிக்க வைப்பாங்க.. நம்மால முடியுமா..” என்று தங்கராஜ் குறுக்கிட

    “அந்த பிசாத்து காலேஜிக்கு கூட உனக்கு வக்கில்லல.. நீயெல்லாம் அதைபத்தி பேசாத. என் பொண்ணு படிப்பை முடிக்காம எதுவும் பேசறதா இல்ல நான்.. இத்தோட இந்த கதையை உட்டுடற நீ..” என்று கண்களை உருட்டி எச்சரித்தவர் சமையல்கட்டில் சென்று நின்றுகொண்டார்.

     தங்கராஜும் பொறுமையாக பேசுவோம் என்று அப்போதைக்கு எழுந்து சென்றுவிட்டார்.

Advertisement