Advertisement

தித்திக்கும் முத்தங்கள் 27

குமரனிடம் சொன்னது போலவே திங்கள் அன்று காலையில் கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள் கார்த்திகைச்செல்வி. ஆனால், சிலம்ப வகுப்பிற்கு மட்டும் செல்லவே மாட்டேன் என்று அப்படி ஒரு பிடிவாதம். குமரனுக்கும் முன்போல அவளை அதட்டி மிரட்ட முடியவில்லை என்பதால், முகத்தை மட்டும் தூக்கி வைத்துக் கொண்டிருந்தான்.

ஆனால், அவன் முறைப்பை சட்டையே செய்யாமல் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்தவள் தானே காலை உணவை தயார் செய்து முடித்தாள். அப்போதே மதியத்திற்கும் அவள் சமைத்துக் கொண்டிருக்க, “உனக்கு காலேஜ் போற எண்ணமே இல்லையா?” என்று குமரன் கத்தியதை எல்லாம் காதில் வாங்கவே இல்லை.

தனது வேலைகளை முடித்தவள் ஏற்கனவே வாங்கி வந்து வைத்திருந்த மூடியுடன் கூடிய கிண்ணங்களில் பழங்களை நிரப்பி, ஒரு எவர்சில்வர் தண்ணீர் கேனில் நீர்மோரையும் நிரப்பிக் கொண்டிருந்தாள். குமரன் ‘காலேஜ்க்கு எடுத்துட்டு போறாளோ.’ என்று பார்க்கும்போதே, அவற்றை அழகான ஒரு பையில் போட்டு அவன் கையில் கொடுத்தாள்.

காலை உணவை இருவரும் வேகமாக உண்டு முடித்து கிளம்புகையில், “இதுல இருக்கறது எல்லாம் மதியம் என்னை கூப்பிட வரும்போது காலியாகி இருக்கணும்.” என்று கட்டளையாக கூற, குமரனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

பள்ளிக்கு சென்ற காலங்களிலேயே இப்படியெல்லாம் யாரும் கொடுத்தது இல்லை அவனுக்கு. சத்துணவு திட்டத்தில் கொடுக்கும் உணவு தான். அதை நினைத்துக் கொண்டவனுக்கு நெஞ்சம் நெகிழ, வேகமாக மனைவியை அணைத்து விடுவித்தவன் “நேரமாச்சு வா.” என்று கையைப் பிடித்து இழுத்துச் செல்ல,

“நேரமாச்சுன்னா எதுக்கு கட்டிக்கணும்.?” என்று முனகிக்கொண்டே அவன் பின்னால் நடந்தாள் கார்த்திகா.

அவள் பேச்சு காதில் விழுந்தாலும், அதைக் காற்றில் விட்டவனாக மனைவியை அழைத்துச் சென்று கல்லூரியில் விட்டவன் கையில் கிடைத்த பணத்தை எடுத்து அவள் கையில் கொடுக்க, சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள் அவள்.

அவளுக்கு செலவே இல்லை என்று அவளே கூறிவிட்டாலும், இந்த பழக்கத்தை மாற்ற முடியவில்லை குமரனால்.

கார்த்தியும் அவன் செயலில் சிரித்துக்கொண்டே தான் கல்லூரிக்குள் நுழைந்தது. அவள் தோழிகள் தர்ஷனாவும், பூர்ணியும் கிண்டலடித்து சிரித்தபோதும் கூட, பெரிதாக கண்டுகொள்ளவில்லை கார்த்தி. அன்றைய வகுப்புகள் வேகமாக கடந்து செல்ல, இடைவேளை நேரத்தில் அவளைத்தேடி கல்லூரி வளாகத்திற்கே வந்திருந்தான் கதிர்வேல்.

தோழிகளுடன் வெளியே வந்தவள் தனது துறைக்கு வெளியே காத்திருந்த அவனை எதிர்பார்க்கவில்லை. பூர்ணியிடம் வந்துவிடுவதாக கூறிவிட்டு, அண்ணனை நெருங்கியவள் அவன் ஏதாவது சொல்வானா என்று நிற்க, கதிர்வேல் பேசுவதாக இல்லை.

கார்த்தியின் முகம் பார்த்து, கலக்கத்தை மறைத்த கண்களுடன் அவன் நிற்க, “இங்கே எதுக்கு வந்த?” என்று தான் கேட்டாள் அவள்.

“என்னை மன்னிச்சுடு கார்த்தி.” என்று கதிர் உருக,

“மன்னிப்பு கேட்க நல்ல இடம் பார்த்த. நீ கிளம்பு.” என்று அவனை விரட்ட,

“என்னாலதான உனக்கு இந்த நிலைமை. நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கறேன் கார்த்தி. ஆனா, என்னை மன்னிச்சுடு. என்னால உன் வாழ்க்கை நாசமாகிடுச்சே.” என்று கலங்கினான் அவன்.

“என்ன தண்டனை கொடுக்கணும்? நீங்க எனக்கு கொடுத்து இருக்கீங்களே அப்படியா?” என்று நிறுத்தியவள் “என் வாழ்க்கைக்கு எந்த குறையும் இல்ல. என்ன நடந்து இருந்தாலும், இந்த நிமிஷம் நான் நல்லா இருக்கேன். சந்தோஷமா இருக்கேன். அதுக்கு காரணம் அவர்தான். நீ என் வாழ்க்கையை பத்தி கவலைப்பட வேண்டாம்.” என்றவள் திரும்பி நடக்க,

“எங்களை எப்பவும் மன்னிக்கவே மாட்டியா கார்த்தி.”

“என்னால மறக்கவே முடியலையே. மறந்தால் தானே மன்னிக்க.” என்று வேதனையுடன் கூறியவள் “என்னை தேடி யாரும் வராதீங்க.” என்று வருத்தத்துடன் கூறியதுடன் வேகமாக அங்கிருந்து விலகியும் சென்றுவிட்டாள்.

அதன்பின்னான கல்லூரி நேரம் மொத்தமும் அமைதியில் கழிய, மதியம் கல்லூரி முடியும் நேரம் வந்து நின்றவன் பார்த்தவுடனே கண்டுபிடித்துவிட்டான் அவள் முகமாற்றத்தை. அவள் அருகில் வந்து நிற்கவும், “ஏன் ஒரு மாதிரியா இருக்க? என்னாச்சு… யாரவது ஏதாவது சொன்னாங்களா?” என்று அவன் விசாரிக்க,

“கதிர் வந்திருந்தான்.” என்று உண்மையையே கூறினாள் மனைவி.

“சண்டையா… ஏதாவது திட்டிட்டானா?” என்று கேட்டவனிடம், “நாந்தான் திட்டினேன்.” என்றவள் அதற்குமேல் பேசாமல் வண்டியில் ஏறிக்கொண்டாள்.

‘அவனே பாவம்… இவ வேற என்ன பேசி வச்சா தெரியலையே…’ என்று புலம்பியபடியே வண்டியை எடுத்தவன் வழக்கமாக அவர்கள் கரும்புச்சாறு அருந்தும் கடையின் முன்பாக வண்டியை நிறுத்த, “வெளியே எதுவும் சாப்பிட வேண்டாம் சொல்லி இருக்காங்க. வீட்டுக்கு போவோம்.” என்றவளை கடுப்பாகப் பார்த்தான் குமரன்.

“கரும்பு ஜூஸ் தானே…”

“தண்ணீ கலந்து தான கொடுக்கறாங்க. என்ன தண்ணியை கலக்கறாங்கன்னு தெரியுமா நமக்கு? கிளம்புங்க.” என்றவள் ஆட்டோவை விட்டு இறங்கவே இல்லை. அவளின் பிடிவாதத்தில் இருவரும் நேரே வீடு வந்து சேர, வாசலோடு கிளம்ப பார்த்தவனை, “மேலே வாங்க.” என்று அழைத்தாள் கார்த்தி.

‘நேரமாச்சே’ என்று தயங்கினாலும், அவள் வார்த்தையை மறுக்காமல் அவன் வீட்டிற்கு வர, வேகமாக குளித்துவிட்டு வந்தவள், காலையில் சமைத்த உணவுகளை சூடுபடுத்திக்கொண்டே, “குளிச்சுட்டு வாங்க.” என்றாள் கணவனிடம்.

“ஏய்.. பசிக்கவே இல்ல கார்த்தி. நீ கொடுத்த பழம் எல்லாம் பதினோரு மணிக்கு தான் சாப்பிட்டேன்.”

“இப்போ மணி ரெண்டரை ஆச்சுங்க. குளிச்சுட்டு வாங்க.” என்று விரட்டினாள் கார்த்திகா.

அவள் அலப்பறைகளைத் தாங்க முடியாமல் அவன் குளித்துவிட்டு வர, அதற்குள் உணவு தயாராக இருந்தது. சாப்பிடும்போது, “கதிரை என்ன சொன்ன?” என்று குமரன் கேட்க,

“என்னை பார்க்க வரவேண்டாம்ன்னு சொன்னேன்.” என்றாள் கார்த்திகா.

“ஆள் பார்க்க தான் அமைதியா இருக்க. ஆனா, பிடிவாதம், அடம் எல்லாம் ஓவராதான் இருக்கு.”

“எனக்கு அடம் பிடிக்க தெரியும்ன்னே இப்போதான் தெரியுது எனக்கு.” என்றவளிடம் என்ன சொல்ல முடியும் அவனால்.

“ஏன் நான் அடம் பிடிக்கிறது பிடிக்கலையா? கோபப்படுத்தறேனா…” என்று கார்த்திகா கேட்க,

“நீ என்ன அடம் பண்ணாலும், நான் சமாளிப்பேன். அதோட உன்கிட்ட எனக்கு கோவம் வராது. அந்த நேரம் ஏதாவது கத்துறதோட சரி.” என்றான் குமரன்.

கார்த்தி கண்களில் வெளிப்படையாகத் தெரிந்த மையலுடன் அவனை பார்க்க, “என்ன மாமாவை ரொம்ப லவ் பண்றியா?” என்றான் விளையாட்டாக.

ஆனால், இதுவரை காதல் என்று எப்போதும் வாய் திறக்காதவள், “ம்ம்… நிறைய பிடிக்குது உங்களை. ரொம்ப அதிகமா காதலிக்க வைக்கறீங்க.” என்றுவிட, வாயிலிருந்த உணவை மறந்து அவளை ஆவென பார்த்தான் குமரன்.

அவன் பார்வையில் கார்த்திகா சிரித்துவிட, “எதுக்குடி சிரிக்கிற?” என்று முறைத்தான் கணவன்.

“எதுக்கு இப்படி முழிக்கறிங்க?” என்று சலுகையாக அவள் கிண்டலடிக்க,

“பின்ன.. நீயெல்லாம் லவ் பண்றேன்னு சொன்னா, முழிக்காம என்ன பண்ண சொல்ற?” என்றவனை இப்போது கார்த்தி முறைக்க, “தப்பா எல்லாம் சொல்லல கார்த்தி. ஆனா, ஷாக்காயிட்டேன்.” என்று சமாளித்தான் அவன்.

“போங்க.” என்றவள் உண்டு முடித்து தட்டை எடுத்துக்கொண்டு எழுந்துவிட்டாள்.

குமரனும் அடுத்த சில நிமிடங்களில் உண்டு முடித்துவிட, அவன் மீண்டும் வெளியே கிளம்பவும், “வீட்ல இருங்க.” என்றாள் மனைவி.

“ஏய். வேலைக்கு போகணும்டி.”

“அஞ்சு மணிக்கு போங்க.”

“அதுவரைக்கும் என்ன செய்ய சொல்ற?”

“அது உங்க இஷ்டம். டாக்டர் முடிஞ்சவரைக்கும் ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லி இருக்காரு. நானும் உங்களை வேலைக்கே போக வேண்டாம்ன்னு சொல்லலையே. ரெண்டுமணி நேரம் ரெஸ்ட் எடுங்க.” என்று அவன் வழியை மறித்து நின்றிருந்தாள் அவள்.

குமரனும் சில நிமிடங்கள் யோசித்தவன் அந்த நேரம் பெரிதாக சவாரி எதுவும் இருக்காது என்பதால், அவள் சொல்படி வீட்டில் இருக்க ஒப்புக்கொண்டான். ஆனால், மதியத்தில் தூங்கி பழக்கம் இல்லாதவன் என்பதால் அவன் தரையில் உருண்டுகொண்டே இருக்க, கார்த்தி அன்றுபோலவே அலைபேசியில் ஒரு படத்தை வைத்துக்கொடுக்க, அதைப் பார்த்தபடி படுத்திருந்தான் அவன்.

கார்த்தி அவன் அருகில் படுத்திருந்தவள் அயர்ந்து உறங்கியிருக்க, அவள் உறங்குவதை கவனித்து விட்டவன் அலைபேசியை தூர வைத்துவிட்டு அவளை அணைத்து கொண்டு படுத்துவிட்டான்.

நேற்று அவளுக்கு காய்ச்சல் கண்டபோதே அடிக்கடி அவளை இம்சிக்கக்கூடாது என்று அவன் முடிவெடுத்திருக்க, கார்த்திகாவை அதன்பின் பெரிதாக நெருங்கவில்லை. ஆனால், புதிதாக உணர்ந்த பெண்மையின் சுகம் அவனையும் இம்சித்துக் கொண்டு தான் இருந்தது.

அதுவும் கார்த்தியின் இயல்பான நெருக்கங்களும், அவளின் லேசான தொடுகைகளும் வாட்டியது தான். ஆனால், படிக்கும் பெண்… தன்னால் அவள் தடுமாறக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான் அவன்.

இப்போதும் அவள் உறங்கும் தைரியத்தில் தான் அவளை அணைத்துக்கொண்டு படுத்தது. அப்போதும் அவளின் இதழ்கள் அவனை படுத்தி வைக்க, “தப்புடா குமரா… தூங்குறா.” என்று மனம் கண்டித்தது.

ஆனால், “தூங்குறாடா தெரியாது…” என்று அதற்கு பதிலுரைத்தவன் வேகமாக அவள் இதழ்களில் தந்து இதழை பதித்து விலகினான். அவன் மனைவி அசையாமல் உறக்கத்தை தொடர, “இவளை வச்சுக்கிட்டு…” என்று அவளை செல்லமாக கடிந்து கொண்டபடியே, அவளை அணைத்துக்கொண்டு உறங்க முற்பட்டான் குமரன்.

நான்குமணிக்கு உறக்கத்தை தழுவியவன் ஆறு மணிவரை உறங்கியெழ, அதன்பின்னும் கார்த்தி டீ வைத்துக் கொடுத்தபின்பே கிளம்பினான். இரவு பத்தரை மணி வரை உழைத்தவன் அதன்பின் வீடுவர, அவன் மனைவி அவனது உணவு, உறக்கம் என்று அவன் தேவைகளை அழகாக கவனித்துக்கொள்ள, குமரனின் உடல் அடுத்த ஒரு வாரத்தில் ஓரளவுக்கு சீரானது.

அவனை பரிசோதித்த மருத்துவரும் உடலில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக கூற, அப்போதுதான் சற்று நிம்மதியாக உணர்ந்தாள் கார்த்திகா. குமரனின் உடல்நிலையைப் போலவே, அவனது பொருளாதாரமும் கார்த்திகாவால் சீரடையத் தொடங்கி இருந்தது.

கையில் கிடைத்ததை அப்படியே அவளிடம் கொடுக்க பழகியிருந்தான் கணவன். ராணிக்கு கொடுக்கவேண்டிய இருநூறு ரூபாயைக்கூட அவளிடம் இருந்துதான் வாங்கி கொடுத்தான். கார்த்தியும் வீட்டின் வரவு, செலவுகளை ஒரு நோட்டில் எழுதி வைப்பவன் அவன் கொடுக்கும் பணத்தையும் குறித்து வைப்பாள்.

அவனின் வருமானம் அவளுக்கே கொஞ்சம் ஆச்சரியமானது தான். ஆட்டோ ஓட்டுவதில் இத்தனை சம்பாதிக்க முடியும் என்பதே அப்போது தான் தெரிந்தது அவளுக்கு. அதிலும், இத்தனை சம்பாதிக்க வேண்டுமென்றால் அவன் எத்தனை உழைக்க வேண்டுமென்பதும் புரிய, கணவனின் உழைப்பு பெருமிதமாக உணர வைத்தது.

தங்களின் தேவைக்கு அதிகமாகவே அவன் பொருளீட்டுவதால், திட்டமிட்டு அவன் உழைக்கும் நேரத்தைக் குறைத்து அவனுக்கு ஓய்வு கொடுக்கவும் தொடங்கியிருந்தாள்.

இவர்களின் வாழ்வு அழகாக நகர தொடங்கிய அதே நேரம், கதிரின் வாழ்வையும் வளமாக்க முடிவு செய்தான் குமரன். அவன் பத்தாயிரத்துக்கு துணிக்கடையில் வேலை செய்வது பொறுக்காமல், தன் பெயரிலேயே ஒரு ஆட்டோவை வாங்கி அவன் பொறுப்பில் கொடுத்திருந்தான்.

ஆட்டோவிற்கு ஒரு நாளைக்கு 400 ரூபாய் வாடகை மட்டும் அவன் வாங்கி கொள்வதாக ஏற்பாடு. கதிரும் இந்த இடைப்பட்ட நாட்களில் வாழ்வின் நிதர்சனத்தை உணர்ந்து இருந்ததால், அவனும் குமரன் செய்த உதவியை பற்றிக்கொண்டு முன்னேறிவிடத்தான் முயன்று கொண்டிருந்தான்.

குமரனின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ஆட்டோவின் வாடகையை சரியாக அவனிடம் ஒவ்வொரு நாள் இரவும் குமரனின் வீட்டிற்கே சென்று கொடுத்துவிடுவான். அந்த நேரங்களில் கார்த்தி கண்ணில்பட்டாலும், ஒரு வார்த்தைக்கூட கேட்கமாட்டாள் அவள்.

‘உங்கள் விஷயம் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள்.’ என்பதாகத் தான் இருக்கும் அவளது செயல்.

கதிருக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் வலித்தாலும், கடந்துவிட்ட இந்த ஒரு மாதத்தில் ஓரளவிற்கு இதற்கு பழகிவிட்டான் அவன்.

அவன் வண்டி வாங்கிய புதிதில் ராணி குமரனிடம் சண்டையே போட்டிருக்க, “உன் மருமகனுக்கு செய்யல. என் பொண்டாட்டியோட அண்ணன் அவன். என் மச்சான். அதுக்காக செய்யுறேன். இதுல நீங்க என்னை கேள்வி கேட்க என்ன இருக்கு?” என்றவன் “உங்க வேலையை மட்டும் பாருங்க.” என்று சரியாக பதிலடி கொடுத்திருந்தான்.

ராணி அவனைப் பேச முடியாத ஆத்திரத்தை எல்லாம் மகள் மீது காண்பித்துக் கொண்டிருக்க, மகள் பொறுத்துக் கொள்பவளா? இப்போதெல்லாம் அடிக்கடி அன்னைக்கும், மகளுக்கும் சண்டை வர தொடங்கியிருந்தது.

குமரனை வைத்து தொடங்கிய பிரச்சனை, பிரியாவின் முறையற்ற திருமணத்தில் வந்து நின்றது. ஒருகட்டத்தில் “உன்னாலதான் எனக்கு இந்த நிலைமை. நீ ஒழுங்கா இருந்திருந்தா, என் புள்ள என் கையில இருந்திருக்கும்.” என்றார் ராணி.

அதற்கும் மேலாக, “அவன் கொடுக்கற இருநூறு ரூபா எனக்கே பத்தல… இதுல உனக்கு வேற நான் தண்டசோறு போடணுமா?” என்று கேட்டுவிட, பிரியாவுக்கு அப்போதுதான் தனது நிலை உரைத்தது.

அதுவும் பெற்ற தாயே இப்படி ஒரு வார்த்தை கூறிவிட, அதற்குமேல் அவர் பணத்தில் வாழ்வதற்கு விருப்பமில்லை அவளுக்கு.

அந்த ஏரியாவில் இருந்த அவளது தோழி ஒருத்தியிடம் வேலைக்கு சொல்லி வைக்க, கதிர்வேல் வேலை செய்து கொண்டிருந்த துணிக்கடையிலேயே அவளுக்கும் ஒரு வேலை பார்த்து கொடுத்தாள் அந்த தோழி.

அந்த துணிக்கடையில் குடவுனில் துணியின் ரகத்திற்கு ஏற்ப அதற்கு விலை அட்டையை ஒட்டி வைக்கும் வேலை தான். கதிர்வேல் இப்போது அந்த  கடையில் வேலை செய்யவில்லை என்று தெரியும் பிரியாவிற்கு.

அவன் ஆட்டோவில் வந்து குமரனின் வீட்டருகே இறங்குவதை பலமுறை அவளும் பார்த்திருக்கிறாள் தானே.

இப்போது தனக்கு வேறு வழியில்லை என்பதோடு படிப்பையும் முடிக்கவில்லை என்பதால் கிடைத்த வேலைக்கு ஒப்புக்கொண்டிருந்தாள்.

அந்த மாதம் முதல் தேதியிலிருந்து அவள் வேலைக்கு சென்றுவர தொடங்கியிருக்க, அவள் வேலைக்கு சென்று வரும் விஷயம் கட்டிக் கொண்டவனுக்கோ, உடன் பிறந்தவனுக்கோ தெரியவே தெரியாது.

கதிர்வேல் அன்று காவல் நிலையத்தில் வைத்துப் பிரியாவை பார்த்ததோடு சரி. அதன்பின்பு அவளைப்பற்றி யோசிக்கவே இல்லை.

குமரன் அன்று அவள் வீட்டில் வைத்து பேசியதில் மொத்தமாக வெறுத்துப் போயிருந்தான். தங்கை மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தவன் தான். ஆனால், அன்னையும், மகளும் சேர்ந்து ஆடிய ஆட்டத்தில் மொத்தமாக ஒதுங்கியிருந்தான் அவன்.

பிரியாவுக்கும் வெளியில் வேலைக்கு என்று வந்தபின் தான் உழைப்பின் அருமையும், உழைப்பவர்களின் அருமையும் புரிய தொடங்கி இருந்தது. குமரன் தன்னை கவனித்துக் கொண்டதும், கேட்ட நேரத்திற்கு முகம் சுளிக்காமல் அவன் கொடுத்த பணத்தின் மதிப்பும் இப்போது புரிந்தது.

ஆனால், எல்லாம் முடிந்தபிறகு… புரிந்து என்ன பயன்?

Advertisement