Advertisement

அடுத்த இரண்டுமணி நேரங்கள் பேச்சும், சிரிப்புமாக நீண்டு, அயர்ந்த உறக்கத்தில் முடிவடைய, குமரன் மீண்டும் கண்விழித்த நேரம் இரவு ஒன்பது மணி. கார்த்திகா இன்னும் உறக்கத்திலிருந்து எழாமல் இருக்க, அவளை எழுப்பாமல், பூச்சியை அழைத்து இருவருக்கும் உணவு வாங்கிவர சொல்லியவன் அவன் வருவதற்குள் குளித்து உடை மாற்றிவிட்டான்.

பூச்சி உணவை வாங்கி வந்து கொடுத்துவிட்டு கிளம்பிவிட, அதன் பின்னும் கூட கார்த்திகா எழவில்லை. நேரம் பத்தை கடக்கவும், குமரன் அவளை எழுப்ப, சோர்வுடன்  எழுந்து அமர்ந்தவள் குமரன் ஊட்டிவிட்டதைக் கூட, கவனிக்காமல் வேகமாக உண்டு முடித்து மீண்டும் படுத்துவிட்டாள் அவள்.

“ஓவரா போயிட்டோமோ…” என்று குமரன் பயந்துவிட, அவன் பயந்ததற்கு ஏற்ப, அடுத்தநாள் காலை கண்விழிக்கையில் லேசான காய்ச்சல் இருந்தது கார்த்திகைக்கு. குமரன் பதறிப்போய் அவளை மருத்துவமனைக்கு அழைக்க, “டேப்லெட் போட்டாலே சரியாகிடும்.” என்றவள் அவன் வாங்கிவந்து கொடுத்த மாத்திரையை விழுங்கி வைத்தாள்.

குமரன் அவளை எழ விடாமல் தானே வீட்டை ஒதுங்க வைக்க, வேலை செய்யும் அவனை காதலாக பார்த்திருந்தாள் கார்த்திகா.

வேலையை முடித்தவன் அவளுக்கு உணவும் வாங்கிவர, நேற்று இரவு போலவே ஊட்டியவனை பார்வையால் விழுங்கியவள் மெல்ல உணவையும் விழுங்கி வைத்தாள். இருவருக்குமே அடுத்து அவசரம் எனும் அளவிற்கு எந்த வேலையும் இல்லாததால் இருவரும் அமைதியாக அடுத்தவர் அருகாமையை அனுபவித்து படுத்திருக்க, குமரனின் கையில் தலைவைத்து படுத்திருந்தாள் கார்த்தி.

அவன் அமைதி வித்யாசமாக இருக்க, “என்ன அமைதியா இருக்கீங்க?” என்றாள் மனைவி.

“நேத்து ரொம்ப கஷ்டப்பட்டியா?” என்றவன் கேள்வி புரியாமல் விட்டத்தைப் பார்த்து படுத்திருந்தவள் திரும்பி அவன் முகம் பார்க்க, “உனக்கு எதுக்குடி திடீர்னு பீவர் வந்துச்சு?” என்றான் அவன்.

“எனக்கு எபப்டிங்க தெரியும்?” என்றவள் பாவமாக விழிக்க,

“ஒருநாள் மனுஷனை நிம்மதியா விடறியா? சும்மா பயம் காட்டிட்டே இருக்கவேண்டியது…” என்று சுகமாக அலுத்துக் கொண்டவன் மென்மையாக அவளை அணைத்தபடி திரும்பி படுத்தான்.

ஆனால், அணைப்பை தாண்டி வேறெதுவும் வேண்டாம் என்று அவன் அமைதிகாக்க, “என்னாச்சு.” என்றாள் கார்த்தி.

“ஒன்னும் ஆகல. தூங்கு…” என்றவன் அமைதியாக,

“பயந்துட்டீங்களா?”

“உன்னாலதான்டி.”

“நான் என்ன பண்ணேன்?”

“இப்படி சிணுங்காத. மனுஷன் நிலைமை புரியாம.” என்று சலித்தவன் மீண்டும் அவளை நெருங்குவதாக இல்லை.

ஆனால், கார்த்தியும் அவனை விடுவதாக இல்லை போல… “ஹாஸ்பிடல் எப்போ போகலாம்?” என்றாள் நினைவு வந்தவளாக.

“ஏன் ஜுரம் இருக்கா?” என்றவன் அவள் கழுத்தில் கையை வைத்து சோதிக்க,

“உங்களை இன்னிக்கு வர சொல்லி இருந்தாங்க இல்லை.” என்று நினைவூட்டினாள்.

“கண்டிப்பா போகணுமா?”

“கண்டிப்பா போகணும். விளையாடாதீங்க.”

“நான் எல்லாம் காய்ச்சலுக்கு கூட ஆஸ்பத்திரிக்கு போனதில்லடி. யாரும் கூட்டினு போனதும் இல்ல. நமக்கெல்லாம் மெடிக்கல் ஷாப்காரன் தான் டாக்டர்.” என்று பெருமையாக உரைக்க,

“அதுதான் இந்த நிலைமைக்கு வந்திருக்கு. ஒழுங்கா என்னோட ஹாஸ்பிடலுக்கு வர்றிங்க…” என்றாள் மனைவி.

“ம்ம்ம்.” என்றவன் சொன்னபடியே மாலை அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று வர, அன்றைக்கான மருந்துகளை ஊசியின் வழியே செலுத்திய மருத்துவர் அவன் உடலை பரிசோதித்து, மாத்திரைகளையும் மாற்றி எழுதிக் கொடுத்து அனுப்பி இருந்தார்.

அன்றும் கிட்டத்தட்ட மூன்றாயிரம் ரூபாய்க்கு செலவாகி இருக்க, குமரனுக்கு செலவுகணைக்கு தான் பெரும் தலைவலியாக இருந்தது. அவன் அன்னையும் அன்று சண்டையிட்டு சென்ற நாள் முதலாக அவனை எதற்கும் தேடி வராமல் இருந்தார்.

அவர் இப்படி இருப்பது தான் பெரும் ஆபத்து என்று அவனது பட்டறிவு எச்சரித்துக் கொண்டே இருக்க, அதற்கு ஏற்றார் போலவே, அன்று இரவு அவனை அழைத்து அனுப்பினார் ராணி.

கார்த்தி அவர் பெயரைக் கேட்டதுமே பயம்கொள்ள, “தலையையா வாங்கிடுவாங்க… பயந்தாங்கொள்ளி.” என்று அவள் மண்டையில் வலிக்காமல் கொட்டியவன் வந்துவிடுவதாக கூறி தனது தாய் வீட்டை அடைந்தான்.

அங்கே ராணி, பிரியா, அவன் தந்தை சேகர் மட்டுமில்லாமல் இன்னும் அவர்களின் உறவுகள் சிலரும் இருக்க, குமரனின் முகம் இறுகிவிட்டது.

இவர்கள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தி, அதில் ஆதாயம் தேடுவது தான் ராணியின் முயற்சி என்பது வரை புரிந்து கொள்ள முடிந்தது அவனால். இத்தனை நாட்கள் அவன் உழைப்பை மொத்தமாக சுரண்டிக் கொண்டிருந்தவர் உறவுகளை அண்டவிட்டதே இல்லை எனலாம்.

அவர்களும் பெரிதாக இவர்களிடம் பாசம் காட்டியவர்கள் இல்லை என்பதால், இதுவரை குமரனுக்கும் ராணியின் செயல் தவறாக பட்டதில்லை. ஆனால், இன்று அப்படிப்பட்ட உறவுகளின் முன்னால் தன்னை அழைத்து நிறுத்தியிருக்கும் அன்னையின் மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிருப்தி எழுந்தது அந்த நொடி.

வீட்டிற்குள் வந்து நின்றவன் அங்கிருந்த யாரையும் கண்டுகொள்ளாமல், “எதுக்கு கூப்பிட்டிங்க?” என்று ராணியிடம் கேட்க,

“கேட்டியாக்கா… பெத்த ஆத்தாவுக்கு சோறு போடாம விட்டுட்டோம்னு நினைப்பே இல்லாம, எதுக்கு கூப்பிட்டன்னு கேட்கறான் பாரு. இப்போ தெரியுதா மயக்கம்.” என்று தன் அக்காவிடம் ராணி பேச,

அவர் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், “காசு குடுத்தா மட்டும் நல்லவன்னா சொல்ல போறீங்க.  இப்போ எதுக்கு கூப்பிட்டிங்க. அதை மட்டும் பேசுங்க.” என்று குமரன் கேட்டு நிற்க,

“ஏன்டா… கல்யாணம் பண்ணிட்டா, பெத்தவளை ரோட்ல விட்டுடணும்னு உன் பொண்டாட்டி பாடம் படிச்சு கொடுத்தாளா?” என்றார் அவன் பெரியம்மா.

“அவளுக்கு அந்த அளவுக்கு எல்லாம் அறிவு இல்ல பெரியம்மா. இவங்க கேட்டாங்கன்னு காசையும் குடுத்துட்டு, அதுக்கும் பேச்சு வாங்குறவ அவ.”

“இது என்னடி புதுசா சொல்றான்?” என்று அவர் தங்கையைப் பார்க்க,

“என் புள்ள காச எனக்கு கணக்கு பார்த்து கொடுக்குறா அவ. அதை நான் ஏன்னு கேட்ககூடாதா.?” என்று அவர் பழையதைப் பேச,

“இதே கதையை திருப்பி திருப்பி சொல்லாதீங்க. இப்போ என்ன வேணும்? அதை பேசுங்க” என்று குமரன் தீர்த்து கூற,

“எனக்கு மாசம் இருபதாயிரம் செலவுக்கு குடுத்துட சொல்லு. எங்க மூணு பேருக்கும் அவன் தான செய்யணும்?” என்ற ராணியை அற்பமாக ஒரு பார்வை பார்த்தான் குமரன்.

நொடியும் தாமதிக்காமல், “நானும் என் பொண்டாட்டியும் ஏதாவது கோவில் வாசலா தான் பார்த்து உட்காரனும்.” என்றுவிட்டான் குத்தலாக.

ராணி தன் மகனுக்கு இப்படியெல்லாம் பேசத் தெரியுமா என்று பார்க்க, அதற்கும் மேலாக பேசினான் குமரன்.

அதுவும் ராணியின் முகத்தைப் பாராமல் வந்து அமர்ந்திருந்த உறவுகளிடம் பேசினான்.

“இவங்க கேட்கிற மாறி அவ்ளோ பணம் எல்லாம் என்னால குடுக்க முடியாது பெரிம்மா. இவங்க வாங்கி வச்சு இருக்க லோன் எல்லாம் நான் பார்த்துக்கறேன். ஆனா, இனி எதுவும் வாங்கக்கூடாது. இந்த வீட்டுக்கு கரண்ட்பில் என்ன வருதோ அதையும் நான் கட்டிட்டு, ஸ்டோர் சாமான் வாங்கி போடறேன். ஒருநாள் செலவுக்கு இருநூறு ரூபா கையில கொடுத்திடறேன். இதுதான் என்னால முடியும்.”

“அதோட, பெத்த கடமைக்கு இவங்களுக்கு காசு கொடுக்கணும் சரி. இவளுக்கு ஏன் நான் குடுக்கணும். அண்ணன்னு என்னைக்கு என்னை மதிச்சிருக்கா, நான் தங்கச்சிக்கு பார்க்க… கல்யாணம் பண்ணினு போய்ட்டால்ல, அவ செலவை எல்லாம் அவ புருஷன்கிட்ட கேட்டுக்க சொல்லு. இவளுக்கு செய்யணும்னு எனக்கு தலையெழுத்து இல்ல.” என்ற மகனை ராணி வாயில் கைவைத்துப் பார்த்திருக்க, ப்ரியா ஏளனமாக பார்த்திருந்தாள்.

ஆனால், அவள் அதோடு நிறுத்தி இருக்கலாம். “நீ என்னடா என்னை பார்க்குறது? என்னை பார்த்துக்க என் அம்மா இருக்காங்க.” என்று குமரனிடமே அவள் பேசி வைக்க,

“அப்போ பார்த்துக்க சொல்லுங்க.” என்றுவிட்டான் அவனும்.

“எத்தனைவாட்டி பேசினாலும், என்னால இதுதான் செய்ய முடியும். இதுக்குமேல பேச ஒன்னும் இல்ல. கிளம்புறேன்.” என்றவன் நகர,

“அப்படி சொல்லிட்டு போனா எப்படி கண்ணா?” என்று அவன் பெரியம்மா கேட்க,

“வேற என்ன சொல்லணும் பெரிம்மா? எனக்கு உடம்பு சரியில்ல. கிட்னில கல்லு இருக்குன்னு சொல்லிட்டாங்க. என் பொண்டாட்டி தான் ஆஸ்பத்திரிக்கு கூட்டினு அலைஞ்சுட்டு இருக்கா. இதுவரைக்கும் தெரியுமா இவங்களுக்கு?”

“இவங்க எத்தனை லோன் வாங்கி வச்சுருக்காங்க தெரியுமா? வாங்கி இன்னா பண்ணாங்க… கேளு. வீடு, வாசல் எதுவும் வாங்கி வச்சுருக்கா… இல்ல, நகை நட்டு எதுவும் சேர்த்திருக்கா? ஒன்னும் கிடையாது. வாங்குறது, கட்டுறது, திரும்ப வாங்குறது… எதுக்கு…”

“எனக்கும் குடும்பம்ன்னு ஆகிடுச்சு. இதுக்கு மேல பைத்தியக்காரனா இருக்க முடியாது. ஒன்னு நான் சொல்ற வழிக்கு வரச்சொல்லு. இல்ல, அவுங்க குடும்பத்தை அவங்க பார்த்துக்கட்டும்.” என்றுவிட்டான் குமரன்.

“அதென்னா அவுங்க குடும்பம்?”

“என்னை புள்ளையா அவுங்க பார்த்ததே இல்லையே பெரிம்மா. சம்பாரிக்கிற மிஷினா தான் பார்த்து இருக்காங்க. அண்ணன்கூட தான் லவ் பண்ணி இழுத்துட்டு வந்தது. நீ இன்னா துரத்தியா உட்டுட்ட… உனக்கு செலவுக்கு காசு கொடுக்காத அவனையே நீ தாங்கிட்டு இருக்க. நான் இங்க அஞ்சு மூணு அடுக்கும் பண்ணியும் என்னை ரோட்ல தான் உட்டாங்க.”

“நீ பேசிக்கோ. நான் கிளம்புறேன்.” என்றவன் அதற்குமேல் தாமதிக்காமல் கிளம்பிவிட, வந்திருந்த உறவுகள் அத்தனைப் பேரும்  அறிவுரை வழங்கினர்.

அவன் பெரியம்மா, “இனியாவது அவன் வாழட்டும் விடு.” என்று வெளிப்படையாகவே தங்கையிடம் கூறிவிட்டார். ராணிக்கு மகன் மீது அடங்காத ஆத்திரம் தான். ஆனால், இப்போது பேசினால் இருப்பதும் கெட்டு விடுமோ என்று அப்போதைக்கு அமைதியாகி விட்டார்.

Advertisement