Advertisement

தித்திக்கும் முத்தங்கள் 26

பூச்சி வாசலோடு விடைபெற்று சென்றிருக்க, மனவியைத் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த குமரன் கையோடு கதவை தாழிட்டு இருந்தான். மனைவி முகத்தை சுருக்கியவளாக அமர்ந்துவிட, குமரன் அவள் அருகில் அமரவும், “எதுவும் பேசிடாதிங்க.” என்றவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

அவள் முகம் மிகுந்த வேதனையை பிரதிபலிக்க, இத்தனை நாட்களாக அவள் மனதில் அழுத்திக் கொண்டிருந்ததை கேட்டு விட்டதில் பாரம் குறைந்திருந்தாலும், வருத்தமே மேலோங்கி இருந்தது. ‘அப்படி இவர்கள் தன்னை நம்பாமல் போகும் அளவிற்கு தான் என்ன தவறு இழைத்து விட்டோம்’ என்பதே அவளை வாடச் செய்தது.

கண்களில் அவளையுமறியாமல் கண்ணீர் பெருக, “கார்த்தி…” என்று அதட்டினான் குமரன்.

அவன் சட்டையில் கண்ணீரைத் துடைத்தவள், “நீங்க எதுக்காக அங்கே போனீங்க.” என்று கணவனை மிரட்டினாள் இப்போது.

குரலில் அழுகையின் ஈரம் இன்னும் மிச்சமிருக்க, “நான் போனது பிரச்சினையில்ல. நீ ஏன் அப்படி பேசுன?” என்று மனைவியை குமரன் கண்டிக்க,

“இன்னும்கூட நிறைய பேசி இருக்கணும். இதோட விட்டதுக்காக சந்தோஷப்படுங்க.” என்றாள் அழுத்தமாக.

“பாவம் கார்த்தி.” என்று மெல்லியகுரலில் குமரன் கூறிட,

“உங்களுக்கென்ன சுலபமா சொல்லிட்டீங்க. அனுபவிச்சது எல்லாம் நான்தானே… எனக்கு யாருமே பாவம் பார்க்கலையே. நான் இப்படி ஒரு காரியத்தை பண்ணியிருப்பேன்னு எப்படி இவங்களால நம்ப முடிஞ்சுது.”

“ஆனா, இந்த ஒரு விஷயம்தான் இல்ல… பொதுவாவே, எங்க அம்மா எதுக்கும் என்னை நம்பினதே இல்லை. அப்படியென்ன, தப்பு பண்ணிட்டேன் நான்? இத்தனைக்கும் அவங்க பேச்சை மீறி எதையும் நான் செஞ்சது கிடையாது.”

“அப்படிப்பட்டவ இவ்ளோ பெரிய விஷயத்தை பண்ணுவேனான்னு யோசிக்கணுமா, இல்லையா?” என்று கேட்பவளிடம் என்னவென்று பதில் கூறுவான் அவன்.

எதுவும் பேசாமல் அவளைத் தோளோடு அணைத்து கொண்டவன் “அப்படி பார்த்தால் நானும் தப்பு தானே?” என,

“நான் இல்லன்னு சொல்லலையே. யாருன்னே தெரியாம கெட்டவனா அறிமுகமான குமரனை நான் புரிஞ்சுக்கிட்டேனே. பத்துநாள்ல இவர் நமக்கு தப்பு பண்ணமாட்டார்ன்னு நம்பினேனே… ஆனா, பத்தொன்பது வருஷம் என்னை வளர்த்தவங்க என்னை நம்பலையே.” என்றவள் மீண்டும் கண்ணீர் வடிக்க,

“பேசிட்டே இருக்கும்போது எங்கே இருந்து கண்ல தண்ணீ வருது உனக்கு. ஒருநாளைக்கு ஒரு முறையாவது அழுதே ஆகணுமா உனக்கு.” என்று கோபத்துடன் அதட்டியவன் அவள் கண்ணீரைத் துடைத்துவிட, மெல்ல சிரித்துக் கொண்டாள் அவள்.

என்ன நினைத்தாளோ… கண்களைத் துடைத்து விட்டவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். குமரன் லேசான அதிர்ச்சியுடன் அவள் முகம் பார்க்க, கண்களை மூடிக் கொண்டிருந்தவள், “இந்த நிமிஷம் எனக்கும் அழ பிடிக்கல. என்னை அழ விடாதீங்க.” என்று     கைகளால் அவனை சுற்றி வளைத்துக் கொண்டாள்.

குமரனுக்கு இறக்கை இல்லாதது மட்டும் தான் குறை. அவன் மனம் வளிமண்டலத்தை தாண்டி பறந்து கொண்டிருக்க, கைகள் கார்த்திகாவை வாகாக அணைத்து கொண்டது.

“தேங்க்ஸ்டி பொண்டாட்டி.” என்றவன் அவள் கன்னத்தில் முத்தமிட, கார்த்திகாவின் அணைப்பு இன்னுமின்னும் இறுகியதே தவிர, குறையவே இல்லை.

குமரனும் எத்தனை நேரம் தான் அமைதியாக இருக்க முடியும். அவளுக்கு எப்படியோ, அவனுக்கு கார்த்திகா காதல் மனைவி தான். திருமணம் எப்படி நடந்திருந்தாலும், இந்த நிமிடம் அவளுக்கான காதல் மிகுந்திருந்தது அவனிடம்.

கார்த்திகாவின் இந்த எதிர்பாராத அணைப்பு அவனுள் புதைந்திருந்த காதலை உயிர்ப்பிக்க, இத்தனை நாட்கள் கார்த்திகாவை எண்ணி விலகி இருந்தவன் முதல் முறையாக கணவனாக நெருங்கினான். அவன் கைகள் கார்த்தியின் முதுகைத் தொட்டு, அதற்குமேலும் நினைத்தபடி அலைந்து கொண்டிருக்க, குமரனின் இதழ்கள் கார்த்தியின் காது மடலை தொட்டுக் கொண்டிருந்தது.

கார்த்திக்கு அவனது முன்னேற்றம் சற்று தாமதமாகவே பிடிபட, அவள் மூச்சுக்காற்றின் வெப்பமும், வேகமும் கூடிப்போனது. குமரனை அணைத்திருந்த அவள் விரல்கள் அவளையறியாமல் நடுங்க ஆரம்பித்தாலும், குமரனை விட்டு விலகும் எண்ணம் வரவில்லை.

குமரனை மறுக்கவோ, தடுக்கவோ எண்ணமில்லை என்றாலும், முதன்முறையாக உணரும் அந்த நெருக்கம் பெண்ணவளை தவிக்கச் செய்ய, அவன் செயல்களை தடுக்கும் துணிவு இல்லாமல், அவனிடமே அழுத்தமாக புதைய ஆரம்பித்து இருந்தாள் அவள்.

குமரனின் இதழ்கள், “கார்த்தி” என்று அவள் காதுகளை உரசிக்கொண்டு ஒலிக்க, அவனுக்கு பதில் கூறும் நிலையில் இல்லை மனைவி. அவன் மீண்டும், “கார்த்திகைச்செல்வி.” என்று அழுத்தமாக அவள் காதுக்குள் உச்சரிக்க, “சும்மாயிருங்க.” என்றவள் நிமிரவே இல்லை.

“இப்போ எப்படி சும்மாயிருக்க முடியும்? சும்மாயிருக்கவா தூக்கிட்டு வந்தேன்.” என்றவன் தனக்கு அருகில் அமர்ந்திருந்தவளை அப்படியே அள்ளி தன் மடியில் அமர்த்திக்கொள்ள, “அச்சோ.” என்று மென்மையாக அவள் அலற, குமரனும், “அச்சோ…” என்று அவளைப் போலவே கூறியவன், “மயக்குறடி நீ…” என்று அவள் பேச்சை நிறுத்திவிட்டான்.

கார்த்தி அவனது அதிரடியில் விழித்துக் கொண்டிருக்க, அவளை சிந்திக்க விடாமல் மொத்தமாக தனக்குள் சேர்த்து சேமித்துக் கொண்டான் குமரன். இத்தனை நாட்கள் மனதில் மட்டும் அவளை நிரப்பிக்கொண்டு பார்வையில் கூட கண்ணியம் காத்தவன், இன்று மொத்தமாக கட்டுப்பாடுகளை கடந்துவிட்டான்.

ஆனால், “ம்ம்ம்” எனும்முன் கோபப்படும் அந்த முரடனிடம் அப்படி ஒரு மென்மையை எதிர்பார்க்கவே இல்லை அவள். ஆரம்பத்தில் அவன் அணைப்பில் நடுங்கியவள் அவனது மென்மையான அணுகுமுறையில் அழகாக அவனிடம் ஆட்பட்டாள்.

குமரனும் தன் கையில் சேர்ந்த பொக்கிஷமாகத் தான் கொண்டாடித் தீர்த்தான் தன் கார்த்திகையை. அவனைப் பொறுத்தவரையில் கார்த்திகையில் பெய்யும் கார்கால மழையைப் போன்றவள் தான் அவள். அன்பு என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்துவிட்ட ஒருவனிடம், அடக்குமுறைகளை மட்டுமே அனுபவித்து முற்றாக ஒடுங்கிப் போயிருந்த அந்த காந்தள் மலர் அகப்பட்டுக் கொண்டிருந்தாலும், அவன் கைகளிலும் தனக்கான குணம் மாறாமல் அழகாக மலர்ந்து, மணம் பரப்ப தொடங்கியிருந்தது.

இரண்டுமே அன்புக்கு ஏங்கிய உள்ளங்கள் என்பதாலோ என்னவோ, சட்டென அடுத்தவரை ஆதரித்து, அரவணைத்துக் கொண்டது. எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல், வரைமுறைகள் வகுக்கப்படாத காதல் இருவரையும் அழகாக தன் கைச்சிறையில் அடைத்துக் கொள்ள, அதன் வெம்மையில் வாழ்வு முழுமைக்கும் குளிர்காய தயாராகவே இருந்தனர் இருவரும்.

கூடல் முடிந்து அலுத்து களைத்திருந்த கார்த்திகாவை அப்போதும் விடாமல் அணைத்துக் கொண்டு அவன் படுத்திருக்க, அவன் நெஞ்சில் மெல்ல தன் விரல் கொண்டு சுரண்டிக் கொண்டிருந்தாள் கார்த்திகா.

“கூசுது கார்த்தி.” என்றவன் அவள் செயலில் நெளிய,

“எனக்கும்தான். என்னை விடுங்க.” என்றாள் மனைவி.

“என்ன உனக்கும் தான்..’

“இப்படி பிடிச்சிருந்தா, கூச்சமா இருக்கு.” என்றவள் அவன் பிடியிலிருந்து விலகப் பார்க்க, அதற்கு அனுமதிக்காமல் இன்னும் வன்மையைக் கூட்டினான் அவன்.

“அச்சோ.” என்று அலறியவள் அணிந்திருந்த அவன் சட்டையை சரியாக இழுத்துவிட,

“ரொம்ப பண்ற நீ. இப்போ இதுவும் இல்லாம போகப் போற பாரு.” என்று மிரட்டியவன் அவள் கைகளை இழுத்து தனது கழுத்தில் சுற்றிக்கொள்ள, அவன் முகத்திற்கு வெகு அருகில் இருந்தாள் கார்த்திகா.

அவன் பேச்சில் அவள் அதிர்ச்சியாகி மௌன நிலைக்கு சென்றிருக்க, “என்ன சவுண்டே இல்ல.” என்றான் மீண்டும்.

“பேசவே விடாம வாயை அடைச்சுட்டு, பேசலன்னு கேட்கறீங்க…” என்று கார்த்தி முகம் திருப்ப,

“எப்படி வாயை அடிச்சேன்… இப்படியா?” என்றவன் மீண்டும் செயலில் இறங்கியிருந்தான்.

வெகுநேரம் அவள் வாயை அடைத்திருந்தவன் மெல்ல விலக, “இத்தனை நாள் விட்டுப்போன கணக்கை இன்னிக்கு ஒரே நாள்ல முடிக்க பார்க்கிறிங்களா?” என்றாள் கார்த்தி.

“அப்படியும் வச்சுக்கலாம். ஆனா, முடிக்கவே மனசு வரலையே.” என்றவன் மையலுடன் அவள் இதழ்களை நெருங்க, “அச்சோ… நான் இல்ல.” என்றவள் இருகைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டாள்.

அவள் செய்கையில் சிரித்தபடி அவள் மீது விழுந்தான் குமரன்.

Advertisement