Advertisement

தித்திக்கும் முத்தங்கள் 25

வழக்கமான அதிகாலை நேரம் தான். ஆனால், குமரனுக்கு மட்டும் வாழ்வு வசந்தமாகி விட்டதைப் போல் ஒரு எண்ணம். தன் மனைவியின் மனதில் தனக்கான இடம் என்னவென்பதை நேற்றைய அவளின் கண்ணீர் உணர்த்தியிருந்தது.

ஒரு கணவனாக அதற்குமேல் என்ன வேண்டும் அவனுக்கு. அருகில் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்த மனைவியின் மீது பார்வை பதியவும், தன்னைமீறி குனிந்தவன் இன்று பயமில்லாமல் நிறுத்தி நிதானமாக அவள் கன்னத்தில் இதழ் பதித்து நிமிர்ந்தான்.

‘இவள் என் மனைவி’ என்பதே மிகப்பெரிய கௌரவமாக தோன்றியது குமரனுக்கு. மையலாக மனைவியின் மீது பார்வையைப் பதித்திருந்தவன் அவளை விட்டு விலக மனமில்லாமல் அவள் அருகில் படுத்து, அவள் வயிற்றில் கையைப்போட்டு அணைத்து கொண்டான்.

அவள் தூக்கத்தில் கும்பகரணியாக இருப்பது இது போன்ற நேரங்களில் அவனுக்கு வசதியாக இருந்தது. பின்னே, அருகில் படுத்துக்கொள்வதற்கே அத்தனை போராட்டம்.

நேற்று இரவு நடந்த கலவரங்களுக்கு பின் ஒருவழியாக இருவரும் நெருங்கி இருந்தாலும், இருவருக்குமே அதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் எண்ணமில்லை. கார்த்தி வழக்கம் போல் அவள் இடத்தில் பாயை விரிக்க, குமரன் தான் அடத்திற்கு அவள் அருகில் வந்து படுத்துக்கொண்டான்.

கார்த்திகா மறுப்பாக பார்த்தபோதும், “புருஷன் பொண்டாட்டி இப்படிதான் தூங்கணும். எதுவும் இல்லேன்னாலும் பரவாயில்ல. என்கூட படுத்து தூங்கு.” என்றவன் அசையாமல் இருக்க, அவன் தீவிரத்தில் பெண் அடங்கிப்போனாள்.

குமரன் நல்ல பிள்ளையாக சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற, அந்த இதத்தில் வழக்கம்போலவே பத்து நிமிடத்திற்கெல்லாம் உறங்கிவிட்டாள் கார்த்தி. குமரனும் அதற்காகவே காத்திருந்தவன் போல் மொத்தமாக அவளை அணைத்து கொண்டு உறங்கி போயிருந்தான்.

இதோ இந்த நிமிடம் வரை அந்த அணைப்பு நீள, குமரனுக்கு தேவை தீரவில்லை. இன்னுமின்னும் மனம் கார்த்தியின் பால் சாய்ந்து கொண்டிருந்தது. மொத்தமாக தனது கைகளுக்குள் அவளை அடைத்துக் கொள்பவன் போல் அவன் அணைப்பை இறுக்க, கும்பகர்ணிக்கு தூக்கம் தூரப் போனது.

கண்களைத் திறந்தவள் அசைய முடியாத தனது நிலையை அப்போதுதான் உணர்ந்தவளாக, சட்டென திரும்பி குமரனைப் பார்க்க, அவளைப் பார்த்து அழகாக கண்சிமிட்டினான் அவன்.

கார்த்திக்கு அந்த நாள் அழகானதாக மாறிப்போக, புத்துணர்ச்சியுடன் புன்னகைத்தவள் அவன் அணைப்பை மறந்து போனாள். குமரன் அவள் புன்னகையில் சிதறியவனாக, அவள் முகத்தை நெருங்க, “பல்லுகூட விளக்காம.. தள்ளிப் போங்க.” என்று கார்த்தி விலகப் பார்க்க, அது முடியாமல் போகவும் தான் அவன் அணைப்பு கவனத்தில் பதிந்தது.

“விடுங்க என்னை.” என்று மீண்டும் அவள் சிணுங்க,

“இனிப்பா ஏதாவது கொடுத்தா விட்டுடறேன்.” என்று பேரம் பேசினான் குமரன்.

“சமையல் கட்டுல சர்க்கரை இருக்கு.” என்றவள் சிரிப்புடன் நாக்கை கடித்துக் கொள்ள, அதில் தொலைந்தவன் அவள் திமிறலை மீறி முத்தமிட்டு விலகினான்.

கார்த்தி அவனை முறைத்துக்கொண்டு, “விடுங்க என்னை. அதான் நினைச்சதை முடிச்சிட்டீங்கள.” என,

“ம்ஹூம்.. நீ கொடு… கொடுத்தா விட்டுடறேன்.” என்றவனை முறைத்தவள் “அதெல்லாம் முடியாது போங்க.” என்று விலக முயல,

“ஏங்க.” என்று மீண்டும் இறுக்கினான் அவன்.

“அநியாயம் பண்ணாதீங்க. வேலை இருக்கு.” என்று கார்த்தி கெஞ்ச,

“ஒரு முத்தம் கொடு கார்த்தி. ஒரே ஒரு முத்தம் போதும். விட்டுடறேன்.” என்று அடம்பிடித்தான் குமரன்.

“நீங்க ஆளை விடுங்க.” என்றவளால் அவன் கைப்பிடியில் இருந்து விலகவே முடியவில்லை. போராடி தோற்றவள் பாவமாக அவனைப் பார்க்க, அவளின் தவிப்பை உணர்ந்து அவளை விடுவித்தான் குமரன்.

ஆனால், அவள் முத்தம் தர மறுத்ததில் அவன் மனம் சுணங்கிக் கொண்டது. கார்த்தி அவன் முகம் பாராமல் எழுந்து கொண்டவள் வேகமாக எழுந்து குளியலறைக்குள் நுழைந்து வெளியே வர, இன்னமும் அப்படியே தான் படுத்திருந்தான்.

கார்த்தி, “கோபமா” என்று அவனைவிட்டு இரண்டடி தள்ளி நின்று கேட்க,

“போடி.” என்றவன் எழுந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

கார்த்தி அவன் பேச்சில் சிரித்துக்கொண்டே, தரையில் கிடந்த தலையனை, போர்வைகளை மடித்து எடுத்து வைக்க, அவள் வீட்டைப் பெருக்கி முடிப்பதற்குள் குளித்து முடித்து வந்துவிட்டான் அவன்.

வந்தவன் நேராக கூடையை எடுத்துக்கொண்டு பால் வாங்க புறப்பட, சிரிப்புடன் காலை வேலைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தாள் கார்த்தி.

குமரன் பத்து நிமிடத்தில் வந்து சேர, அடுத்த பத்தாவது நிமிடம் அவனுக்கு டீ கொடுத்தாள் மனைவி. இருவரும் சேர்ந்து டீயைக் குடித்து முடிக்கவும், “நான் கொஞ்சம் வெளியே போகணும் கார்த்தி.சீக்கிரம் வந்துடறேன்.” என்று அவன் புறப்பட,

“வேலைக்கு போறீங்களா.” என்று பயந்தாள் அவள்.

“ம்ச் இல்ல. இது வேறொரு முக்கியமான வேலை. இன்னைக்கே முடிக்கணும். நீ இரு, நான் வரேன்.” என்றவன் அவள் பதிலுக்கு காத்திராமல் கிளம்பிவிட்டான்.

வீட்டிலிருந்து கிளம்பியவன் பூச்சியை அழைத்துக்கொண்டு நேராக வந்து நின்றது சௌந்தரிடம் தான். அவர்கள் பகுதியின் ஆளும்கட்சி வட்டச்செயலாளர் அவர். அடுத்து நடக்கவிருக்கும் தேர்தலில் கவுன்சிலராக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த பகுதி மக்களுக்கு அவரால் இயன்றதை செய்பவர் என்பதால் மக்கள் இடையே கொஞ்சம் நல்ல பெயரும் இருந்தது அவருக்கு. அவர் வீடும் எப்போதும் கட்சி ஆட்கள், பொதுமக்கள் என்று ஜே ஜே வென கூட்டம் நிறைந்து தான் இருக்கும்.

குமரனுக்கு நேரடியாக அவரிடம் பேசியாக வேண்டிய தேவை இருக்க, காலை ஏழு மணிக்கெல்லாம் வந்து நின்றிருந்தான். சௌந்தரின் வீட்டு வாசலில் நின்றவர்களை அவர் மனைவி உள்ளே அழைத்து அமர்த்த, அடுத்த பத்து நிமிடத்திற்கெல்லாம் வந்துவிட்டார் அவர்.

அதே ஏரியாவைச் சேர்ந்தவன் என்பதால் குமரனையும் தெரிந்திருந்தது அவருக்கு. “சொல்லுங்க தம்பி.” என்று மரியாதையுடன் அவர் பேச,

“உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும் ஐயா.” என்று பவ்யமாகவே பேசினான் குமரன்.

“இங்கே நம்மைத் தவிர யாரும் இல்லையே. என் பொண்டாட்டியை உள்ளே போக சொல்லவா?” என்று அவர் கேட்கையில்,

“அம்மா இருக்கிறது பத்தி ஒன்னுமில்ல ஐயா. என் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். தேவையில்லாம அடுத்தவங்களுக்கு தெரியுறதை நான் விரும்பல.”  என்று குமரன் வலியுடன் பேச,

“அந்த கதவை சாத்திவிடும்மா.” என்றவர் “சொல்லுப்பா.” என்றார் குமரனிடம்.

“எனக்கு கல்யாணமாகி ஒரு மாசம் ஆகுது ஐயா. காதல் கல்யாணம் தான். என் மனைவி பேர் கார்த்திகைச்செல்வி.” என்று அவன் கூறவும், சௌந்தரின் பார்வையில் கவனம் கூடியது.

ஆனாலும், அதை வெளிக்காட்டாமல், “சரிப்பா. அதுக்கு ஏன் என்னைத் தேடி வரணும்?” என்று அறியாதவராக அவர் கேட்க,

“நேத்து பீச்ல உங்க மகனைப் பார்த்தேன் ஐயா. அவர் பிரெண்டுகிட்ட அவர் என் மனைவியை காதலிச்சதா சொல்லி புலம்பிட்டு இருந்தார். அது மட்டும் சொல்லி இருந்தாக்கூட பரவாயில்ல. என் மனைவியும்..” என்றவன் அடுத்த வார்தையைக் கூற முடியாமல் நிறுத்திக் கொள்ள,

“இல்லப்பா. அப்படியெல்லாம் எதுவும் இல்ல.” என்று சௌந்தர் பதறிவிட்டார் அவன் பேச்சில்.

“எனக்கும் அது தெரியும் ஐயா. என் பொண்டாட்டியை எனக்கு தெரியாதா?” என்று அவன் நிமிர்வுடன் கூறும்போதே, அவன் எங்கு வருகிறான் என்று புரிந்து போனது சௌந்தருக்கு.

மனைவியிடம், “கூப்பிடுடி உன் பிள்ளையை.” என்று அவர் சத்தம் போட, சில நிமிடங்களில் கீழிறங்கி வந்தான் வசந்த்.

அந்தநேரம் தன் வீட்டில் குமரனை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் திகைப்பு உணர்த்த, “இவர் யாருன்னு தெரியுமா?” என்று அதட்டலாக கேட்டார் அவன் தந்தை.

வசந்த் மறுப்பாக தலையசைக்க, “உங்களுக்கு தெரியும். நேத்து என்னைப் பார்த்த பிறகுதான் நீங்க என் பொண்டாட்டியை தப்பா பேசினீங்க. நேத்து நான் வேற ஏதோ யோசனையா இருந்துட்டேன். சட்டுன்னு யோசிக்க முடியல. ஆனா, இப்போ சொல்றேன். உங்களுக்கு என்னை நல்லா தெரியும்.” என்று குமரன் மரியாதையாகவே பேச,

“ஆமா பேசினேன்… என்னடா செய்ய முடியும் உன்னால. அவ விருப்பமில்லாம அவளை தூக்கிட்டு போனவன் தானே நீ. உன்கிட்ட கார்த்தி இருக்கக்கூடாது.” என்றவனை அதற்குமேல் விட்டு வைக்க முடியாமல் குமரன் ஒருஅடி முன்னே வைக்க, அதற்க்குள் சௌந்தர் மகனை அறைந்துவிட்டார்.

வசந்த், “அப்பா.” என்று அதிர,

“அவன் பொண்டாட்டி அவனோட இருக்காம வேற எங்கே போவா. என்ன நினைப்புல பேசிட்டு இருக்க நீ. அவ எப்படி போனா, உனக்கு என்னடா?” என்றவர் மீண்டும் ஒரு அறைவிட, அவருக்கு பதில்கூற முடியாமல் அமைதியாக நின்றான் வசந்த்.

“அந்த பொண்ணு உன்னை விரும்பினதா உன் பிரெண்டுகிட்ட  சொல்லிட்டு இருந்தியா.?” என்றவர் அவன் மௌனத்தில் மீண்டும் கையை ஒங்க, “என்னங்க…” என்று முன்னால் வந்த மனைவியை ஒரு அறை விட்டார் இப்போது.

“உன் பிள்ளை என்ன பண்றான், எங்கே போறான், எங்கே வர்றான்னு கூட பார்க்க முடியாத அளவுக்கு என்ன வேலை இருக்கு உனக்கு?” என்று அவரையும் சௌந்தர் கடிந்து கொள்ள,

“அப்பா. அவங்களை ஏன் அடிக்கிறீங்க. என்மேல தானே கோபம், என்கிட்டே காட்டுங்க. கார்த்தி என்னை லவ் பண்ணதா நாந்தான் சொன்னேன். அதுவும் இவன் அங்கே இருக்கறதைப் பார்த்த பிறகு தான் சொன்னேன். அப்படியாவது இவன்கிட்ட இருந்து அவ தப்பிக்கமாட்டாளா ன்னு நினைச்சு தான் சொன்னேன்.”

“அவளை விருப்பமில்லாம கல்யாணம் செய்துட்டு, தினம் தினம் டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான் இவன். இவன்கூட அவ இருக்க வேண்டாம் ன்னு தான் செஞ்சேன்.” என்று குற்றவுணர்ச்சி எதுவுமில்லாமல் வசந்த் கூறி முடிக்க,

“என் பொண்டாட்டி கஷ்டப்படுறான்னு உனக்கு எப்படி தெரியும்? நான் டார்ச்சர் பண்றதா என் பொண்டாட்டி வந்து உன்கிட்ட சொன்னாளா?” என்று குமரன் இடையிட,

“அவ எப்படி சொல்லுவா? அதான் அவளை மிரட்டி வச்சிருக்கியே. அவளோட அப்பாவே சொன்னார்.” என்று வசந்த் தங்கராஜை அவனறியாமல் காட்டிக்கொடுத்து விட,

சௌந்தர் “முட்டாளாடா நீ.” என்று தலையிலடித்துக் கொண்டார்.

Advertisement