அந்த நினைவே கசப்பாக இருக்க, எப்படி அங்கிருந்து கிளம்பினான். எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்று சத்தியமாக தெரியாது அவனுக்கு. வீட்டின் கீழே ஆட்டோவை நிறுத்தி இறங்கியவனுக்கு வீட்டுக்குச் செல்ல மனம் வரவில்லை.
என்ன நினைத்தானோ மீண்டும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியவன் பைத்தியக்காரன் போல் அன்று முழுவதும் சென்னையை சுற்றிவர, இதற்கும் சவாரிகூட இல்லை. ஆனால், வீடு செல்லும் எண்ணமில்லாமல் தனியாக சுற்றிக் கொண்டிருந்தான்.
நேரம் இரவு பத்தை தாண்டவும், பெசன்ட் நகர் கடற்கரைக்கு அருகில் இருந்தவன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு தன் வீடு இருக்கும் பகுதிக்கு வர, அவர்கள் வீட்டின் அருகில் இருந்த தண்ணீர்த்தொட்டியின் பின்பக்கம் அமர்ந்திருந்தான் வௌவால். கையில் பாட்டிலுடன் அவன் அமர்ந்திருக்க, என்ன நினைத்தானோ, தானும் சென்று அவன் அருகில் அமர்ந்து கொண்டான் குமரன்.
வௌவால் “வா மச்சான்.” என்றவன் அவனைக் கண்டுகொள்ளாமல் குடித்துக்கொண்டிருக்க, எப்போதும் குடிக்கவேண்டாம் என்று அவனைத் திட்டுபவன் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். அவன் மனம் வசந்த் பேசிய வார்த்தைகளில் உழன்று கொண்டிருந்தது.
தான் கார்த்தியை சரியாக புரிந்து கொள்ளவில்லையோ… அவனை மனதில் நினைத்துக் கொண்டு தன் தாலியை வாங்கிக்கொள்ள, எத்தனை போராடியிருப்பாள்? முட்டாள்தனமாக அவசரப்பட்டு அவள் வாழ்க்கையை சீரழித்து விட்டோமே என்று மொத்தமாக தன்னையே குற்றவாளியாக்கிக் கொண்டான் அவன்.
அவனின் தவறு செய்த மனம் ஒருமுறைக்கூட, இது பொய்யாக இருக்குமா என்று யோசிக்கவில்லை. இந்த சிந்தனைகளின் கனம் தாங்காதவன் ஒரு கட்டத்தில் வௌவால் வைத்திருந்த டம்ளரில் மதுவை ஊற்றி , வாயருகில் கொண்டு செல்ல, அதன் நாற்றம் தாங்காமல் கண்களை மூடிக்கொண்டான்.
அருகில் அமர்ந்திருந்தவனோ, நல்ல நண்பனாக “அப்படித்தான் குமரா. கண்ணை மூடிட்டு கப்புன்னு அடிச்சிடு.” என்று எடுத்துக் கொடுக்க, அவன் கூறியபடி குடிக்க முயன்றவன் அரை டம்ளர் கூட குடித்திருக்க மாட்டான்.
அதற்குள்ளாகவே அவன் வாயிலிருந்ததை துப்பிவிட்டவன், “த்தூ.. இதை என்னன்னுடா குடிக்கிற நீ. கருமம்.” என்று தன் சட்டையால் வாயைத் துடைத்துக்கொண்டு எழுந்துவிட்டான்.
“இதெல்லாம் உனக்கு புரியாது மச்சான். சரக்க வீணாக்காத. ஊட்டுக்கு போ.” என்றவனை முறைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியவன் வீட்டின் கதவைத் தட்டியபோது நேரம் பதினொன்று பத்து.
கார்த்தி கதவைத் திறக்கும்போதே அவன் மீது வீசிய மதுவாடையைக் கண்டு கொண்டாள். அவளுக்கு மதுவின் வாடை புதிதில்லையே.
“என்ன செய்து கொண்டிருக்கிறான் இவன்?” என்று அவள் உள்ளம் கலக்கம் கொள்ள, அதைக் கண்டுகொள்ளாமல் வீட்டிற்குள் நுழைந்தான் அவன்.
கார்த்தி அவனை அப்படியே விட மனதில்லாமல், “குடிச்சு இருக்கீங்களா?” என்று கேட்க,
“ஆமா… இன்னா இப்போ. குடியா முழுகி போச்சு.” என்று கோபத்துடன் கேட்டவன், ‘என் வாழ்க்கையே போச்சு’ என்று மனதிற்குள் புலம்ப,
“குடி முழுகித்தான் போச்சு. என் குடி கெட்டுப்போச்சு.” என்றவளுக்கு கண்களில் நிற்காமல் கண்ணீர் வடியத் தொடங்க,
“உன் குடி கெட்டுப்போற அளவுக்கு ஒன்னும் நடக்கல இங்கே. நீ இப்படி கஷ்டப்பட்டு கண்ணீர் சிந்தி என்கூட குடும்பம் பண்ண வேணாம். அதான் உனக்காக ஒருத்தன் உருகிட்டு இருக்கானே, அவன்கூட கிளம்பு…” என்றான் குமரன்.
கார்த்திக்கு அவன் பேச்சில் தலைகால் புரியாத நிலை. “யாரைச் சொல்கிறான் இவன்?” என்று புரியவே இல்லை அவனுக்கு. எத்தனை அலட்சியமாகப் பேசுகிறான் என்று கொதித்தவள் “எவன்கூட போக சொல்றிங்க என்னை? உங்க பொண்டாட்டி தானே நான்.” என்று கேட்டுவிட, அவளுக்கு அருகில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் முஷ்டியை இறுக்கி ஒரு குத்து குத்தினான் குமரன்.
அதில் அவன் கையில் இருந்து ரத்தம் வடிய, “ஐயோ… என்ன பண்றிங்க?” என்று பதறிக் கொண்டே அவனை நெருங்கினாள் கார்த்திகா. ஆனால் குமரனோ,
“ஏய் சும்மா நடிக்காத. நீயும் செத்து என்னையும் சாவடிக்காம கிளம்பு. எனக்கு எல்லாம் தெரியும்…. பொண்டாட்டியாம், ஆசைப்பட்டா கட்டிக்கிட்டா என்னை.” என்று வார்த்தைகளால் அவன் அடிக்க,
“என்ன தெரியும் உங்களுக்கு?” ஆத்திரத்துடன் கேட்டாள் அவள்.
பார்வையில் கூட ஒரு தவறும் இழைக்காதவள் அவள். யாரையும் கண்டு மெல்லியதாக சலனம் கூட கொண்டதில்லை அவள். அவளைப்போய்…. அதுவும் கட்டிய கணவன் இப்படி ஒரு வார்த்தை சொல்லிவிட, இதற்குமேல் பொறுமையாவது ஒன்றாவது.
“என்ன தெரியும் என்னைப் பத்தி… வாயைத் திறந்து சொல்லுங்க.” என்று அவள் தன்னை மீறி கத்த,
“நீ வசந்தை லவ் பண்ணது தெரியும் எனக்கு. உங்களுக்கு உங்க வீட்ல கல்யாணம் பேசி வச்சு இருந்ததும் தெரியும். அதுக்குதான் சொல்றேன். இப்படி தேவையில்லாத கதையெல்லாம் பேச வேண்டாம். என்னைப் பிடிக்காம தான என்கூட வந்த, அப்புறம் என்ன. அவன்கூட போய் வாழுற வழியைப் பாரு.” என்று குமரன் பேசிக்கொண்டே செல்ல,
“நான் அவனை லவ் பண்ணதா உங்களுக்கு யாரு சொன்னது?” என்று விடாமல் வினவினாள் அவள்.
“அவனே சொன்னான். அவன் பிரெண்ட்கிட்ட சொல்லி புலம்பிட்டு இருந்தான்.”
“நீங்களும் அவன் சொன்னதை அப்படியே நம்பிட்டிங்க இல்ல.” என்ற குரல் மொத்தமாக வெறுமையைச் சுமந்திருக்க, அந்த நிமிடம் அவள் கண்களில் தெரிந்த வலியை குமரன் உணர்ந்தாலும், அது எதற்காக என்று புரியவில்லை அவனுக்கு.
“ஆம்பளைங்க ரெண்டாவதா எவளையாவது கட்டிக்கிட்டா கூட, அவளை அவன் வச்சிருக்கான், வப்பாட்டி ன்னு தான் சொல்லுவாங்க நம்ம ஊர்ல. ஆனா, நீ உயிரோட இருக்கும்போதே என்னை அவனோட போக சொல்றியே, எனக்கு என்ன பேர் வைப்பாங்க.” என்று அழுத்தம் திருத்தமாக அவள் கேட்க, “ஏய்.” என்று அவளை அடிக்கவே கையோங்கிவிட்டான் குமரன்.
ஒருவிரலை அவன் முகத்திற்கு நேராக நீட்டியவள், “என் மேல கையை வச்ச.” என்று பற்களைக் கடித்துக் கொள்ள, குமரனின் கைகள் அந்தரத்திலேயே நின்றுவிட்டது.
“உனக்கு என்னை வச்சு வாழ வக்கிலைன்னா துரத்தி விடு. அதைவிட்டுட்டு அவன் கூட போ… இவன்கூட போன்னு சொல்ல உனக்கு எந்த உரிமையும் கிடையாது. எவனோ ஒருத்தன் என்னை லவ் பண்ணதா சொல்லவும் அப்படியே நம்ப தோணுதா உனக்கு.”
“நேத்து எனக்கு முத்தம் கொடுத்தியே. அவன் மனசுல இருந்தா, உன் கையில மயங்கி கிடந்திருப்பேனா? இதெல்லாம் நினைக்கவே இல்லையா நீ? எவனோ சொன்ன ஒரு வார்தையைக் கேட்டு என்னை சந்தேகப்படுவியா? அப்போ நான் எதுக்குடா இந்த வீட்ல?”
“என்கிட்டே கேட்கமாட்டியா?” என்றவள் என்றுமில்லாமல் ஆவேசம் வந்தவள் போல் அவன் சட்டையைப் பற்றிக்கொண்டு கத்திக் கொண்டிருக்க, குமரனுக்கு வழக்கம்போலவே அவள் காதலிக்கவில்லை என்பதைத் தாண்டி எதுவும் மனதில் பதியவில்லை.
அவள் உலுக்கலில் தடுமாறி நின்றவன் “கார்த்தி.” என்று அவன் கையைப் பிடிக்க,
“தொடாதீங்க என்னை.” என்று அவனைப் பிடித்து பின்னால் தள்ளிவிட்டாள் அவள்.
அவன் சமையல் தடுப்பின் சுவற்றில் மோதி நிற்க, நின்ற இடத்தில மடங்கி அமர்ந்தவள் முகத்தை மூடிக் கொண்டு, அடிபட்டவளாக கதறித் தீர்க்க, “கார்த்தி.” என்று அருகில் வந்தவனை ஆறுதலாக கூட தொட அனுமதிக்கவில்லை அவள்.
‘என்னை தொடாத போ.” என்று அவன் கைகளை விலக்கி அவள் அழுகையைத் தொடர,
“கார்த்தி சாரிடி. என் நிலைமையை புரிஞ்சிக்கோ” என்று அவன் மீண்டும் அவள் கைப்பிடிக்க,
“என்ன கேடு வந்தது உன் நிலைமைக்கு. நீ கட்டாயத்தாலி கட்டினாலும் உன்கூட தானே இருக்கேன். இதுக்குமேல என்ன எதிர்பார்க்கிற என்கிட்டே. என்ன செய்யணும் நான்?” என்று மீண்டும் கத்தியவள், “எனக்கு நீ வேண்டாம் போ.” என்று மீண்டும் அழ, ஒரு நிலைக்கு மேல் குமரனின் பொறுமை பறந்துவிட்டது.
அழுது கொண்டிருந்தவள் கையைப் பிடித்து அவள் முகம் பார்க்க முற்பட, “இனி ஒரு நிமிஷம் கூட உன் வீட்ல இருக்க மாட்டேன். நீ வேண்டாம் எனக்கு.” என்றவள் அவன் கையை உதறி, அலமாரியின் அருகில் செல்ல, அவளை இழுத்துப் பிடித்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான் அவன்.
“விடுங்க என்னை.” என்று அவள் கத்த,
“ரெண்டு நிமிஷம் அமைதியாயிரு கார்த்தி.” என்று சத்தமாக அதட்டினான் அவன். அவன் அதட்டலில் அப்போதும் உடல் தூக்கிப்போட்டது அவளுக்கு.
குமரன் அவள் உடல் நடுக்கத்தை குறைப்பவன் போல் இன்னும் அணைப்பை இறுக்க, “எனக்கு பிடிக்கல.” என்றாள்.
“எனக்கு கவலையில்ல.” என்றவன் விடாமல் இருக்க,
“வலிக்குது.” என, ‘பொறுத்துக்கோ… விட்டா, என்னை விட்டுட்டு போய்டுவியோன்னு பயமா இருக்கு.”என்றவன் கரங்களும் நடுங்கி கொண்டுதான் இருந்தது.
“நீங்கதானே போக சொன்னிங்க. நான் போறேன்” என்று அவள் திமிர,
“அடிச்சுடுவேன் கார்த்தி.” என்று மீண்டும் மிரட்டியவன் அவளை விடுவதாக இல்லை.
கார்த்திக்கு அவன் அணைப்பு இதமாக இருந்தாலும், அவனுடன் ஒன்ற முடியாமல் கோபம் தடுத்தது. கோபம் கொஞ்சம் குறையவும், அவனது கையின் காயம் நினைவு வர, “விடுங்க என்னை.” என்று கத்தியவள் அவன் பிடி சற்று இளகவும், வேகமாக அவன் கையை ஆராய்ந்தாள்.
ஆங்காங்கே கண்ணாடி சில்லுகள் கையைக் குத்தி கிழித்திருக்க, அவன் கையைப் பார்த்தவள் அவனை நிமிர்ந்து பார்த்து முறைக்க, “சரியாகிடும்…” என்றவன் கையை அவள் பிடியிலிருந்து விலக்கி கொள்ள, அவன் கையைபிடித்து குளியலறைக்கு இழுத்துச் சென்றவள் அவன் காயத்தை கழுவி, அவன் செய்தது போல் அதில் சிறிது மஞ்சளை வைத்து அழுத்திவிட, கண்கள் கலங்க அவளைத்தான் பார்த்திருந்தான் அவன்.
கார்த்திகா அவன் முகம் பார்க்கவும், அவள் இடையில் கைகொடுத்து தன்னுடன் இழுத்துக் கொண்டவன், “எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும்ன்னு எதிர்பார்த்ததே இல்ல கார்த்தி நான். எங்கேயோ ஒரு மூலையில நான் உனக்கு பொருத்தம் இல்லன்னு பதிஞ்சு போச்சு. நான் பண்ண தப்பு வேற”
“அதுவே என்னை நிம்மதி இல்லாம சாவடிக்குது. இதுல அவன் பேசவும், நான் உன் வாழ்க்கையை கெடுத்துட்டேன்னு தான் தோணுச்சு கார்த்தி. உன்கிட்ட கேட்கணும்னு எல்லாம் தோணல. உனக்கு நல்லது பண்ணனும்னு தான் நினைச்சேன்.”
“ஆனா, நானும் மனுஷன் தானே. உன்னை அப்படியே தூக்கி கொடுக்கவும் மனசு வரல. அந்த கோபத்துல தான்.” என்றவன் அமைதியாக,
“குடிச்சுட்டு வந்திங்க.”
“ஏய். குடிக்க எல்லாம் இல்ல. துப்பிட்டேன்.”
கார்த்தி நம்பாமல் பார்க்க, “உன்மேல சத்தியமாடி. அப்படியே துப்பிட்டேன்.” என்றான் மீண்டும்
“ஆனா, குடிக்கணும்னு நினைச்சிங்க இல்ல.” என்றவள் குரலில் வருத்தம் வெகுவாக இருக்க, குமரனால் அவளுக்கு பதில் கூற முடியாமல் போனது.
கார்த்திகா அவன் மௌனத்தில் வேதனையுடன் விலக, “ஏய். இப்போ ஏன் தள்ளிப் போற. நீ என்னைவிட்டு போயடுவியோ ன்னு கவலைல தான் குடிச்சேன். இனி எப்பவும் குடிக்கறது என்ன… அதைபத்தி நினைக்ககூட மாட்டேன். சத்தியமா…”என்றான் குமரன்.
கார்த்திகா அப்போதும் மௌனம் காக்க, “தெரியாம பண்ணிட்டேன் கார்த்தி.” என்று குமரன் கூற,
குமரன் அவள்நிலை புரிந்தவனாக அவளை அணைத்துக்கொள்ள, “ரொம்ப பயந்துட்டேன்.” என்றாள் மீண்டும். இந்த முறை அவள் கைகள் அவனை லேசாக அணைத்திருக்க, குமரன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
கார்த்தி அவன் முகம் பார்க்காமல் வேறு புறம் திரும்ப, “ஏய்… ஒழுங்கா என்னைப் பாருடி. எப்போ முத்தம் கொடுத்தாலும் மூஞ்சிய திருப்பிட்டு போற. உனக்கு பிடிக்குதா இல்லையான்னு தெரியாம மண்டை காயுது எனக்கு.” என்று குமரன் அதட்ட, தன்னைமீறி சிரித்துவிட்டாள் அவள்.
சிரிக்கும் அவள் இதழ்களை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தவன் தனது அடுத்த இலக்காக அதை எட்டிபிடிக்க, ஒருநொடி கண்களை அகல விரித்தவள் அடுத்தநொடி இறுக்கமாக மூடிக் கொண்டாள்.
வெகுநேரம் நீடித்த அந்த இதழ் முத்தத்திற்கு பின் மெல்ல விலகியவன், அவள் இதழ்களை கையில் பிடித்துக்கொள்ள, “அச்சோ..” என்று மெல்லியதாக அலறியவள் அவன் இழுப்புக்கு வர, “ரசகுல்லா சாப்பிட்ட மாறி இருக்குடி.” என்று அவன் முத்தத்தின் தித்திப்பை அளவிட, முகம் சிவந்து அவன் நெஞ்சில் ஒளிந்து கொண்டாள் கார்த்தி.