Advertisement

“கார்த்தி.”

“எனக்கு என்ன சொல்லணும்னு நிஜமா தெரியல. ஆனா, பிடிக்காம எல்லாம் இங்கே இருக்கல. அதோட என் வீட்டுக்கு போகணும்னு நான் நினைக்கல. எனக்கு என்ன வேணும்னு கூட எனக்கு தெரியல. இதுல நீங்க வேற அப்பப்போ எதையாவது கேட்கறீங்க?”

“நல்லா லவ் பண்ணி கல்யாணம் பண்ண என் அண்ணனும், உங்க தங்கச்சியுமே ஒழுங்கா வாழ முடியல. ஆனா, நம்ம கல்யாணம் எப்படி நடந்து இருந்தாலும், இந்த ஒரு மாசத்துல உங்களுக்கும் எனக்கும் பெருசா எந்த சண்டையும் இல்லையே. இது இப்படியே போகட்டுமே.”

“நான் மதியம் அழுதது உங்க அம்மா பேசுனதுக்கு தான். அந்த வார்த்தையெல்லாம் அவங்க ரொம்ப சாதாரணமா சொல்லிட்டாங்க. ஆனா, என்னால அப்படி எடுத்துக்க முடியாது இல்ல. கஷ்டமா இருந்தது. அழுகை வந்துடுச்சு.”

“அப்பவும் உங்ககிட்ட தானே அழுது புலம்புனேன். அப்புறம் ஏன் இப்படி எல்லாம் கேட்கறீங்க?” என்று கார்த்திகா கேட்க, அவள் கேள்விக்கு பதில் தெரியவில்லை குமரனுக்கு.

அவள் சொல்ல வருவதும் முழுதாக புரியவில்லை அந்த நல்லவனுக்கு. ஆனால், தன் மனைவி தன்னை விட்டுச்செல்ல விரும்பவில்லை என்பதே போதுமாக இருக்க, சட்டென மகிழ்ந்து போனான் அவன். அவனுக்கு அந்த வார்த்தைகள் போதுமாக இருந்தது.

அவள் பேச்சில் இருந்த மற்ற விஷயங்களை அவன் கவனித்திருந்தால் மனைவியின் மனம் தன்பக்கம் சாய்ந்து விட்டதை அப்போதே உணர்ந்து கொண்டிருப்பான் அவன். ஆனால், கார்த்தியின் பேச்சில் மகிழ்ச்சியில் உறைந்தவன் அவளது பேச்சை முழுதாக கிரகித்துக் கொள்ளாமல் விட்டுவிட்டான்.

எதிரில் அமர்ந்து இருந்தவளின் வலது கை இன்னும் அவன் பிடியிலேயே இருக்க, காலை அவளை அணைத்து நின்றது நினைவு வரவும், முகத்தில் மெல்ல புன்னகை உதயமானது. அவனது அந்த புன்னகை கார்த்திகைச்செல்வியை நிம்மதியடையச் செய்ய,

அதன் விளைவாக அவள் முகமும் புன்னகை பூசிக் கொண்டது.

குமரன் அவள் சிரித்த முகத்தை ரசித்தபடியே, அவள் கையை லேசாக அழுத்திக் கொடுக்க, அப்போதுதான் தன் கை அவனது பிடியில் இருப்பதை உணர்ந்தாள் அவள். அவள் மெதுவாக தனது கையை இழுக்க, சட்டென தன் விரல்களை விரித்து, பிடியை அவன் விலக்கிக் கொண்டாலும், அவளது கை இன்னும் அவன் கையின் மீது தான் இருந்தது.

ஆனால், சட்டென கார்த்திகாவால் தன் கையை எடுக்க முடியாமல் அவன் பார்வை தடுக்க, அவனது உள்ளங்கையின் மீது இருந்த கையை எடுக்காமல் அப்படியே அமர்ந்துவிட்டாள் அவள். குமரனின் புன்னகை விரிந்து முகமெங்கும் பரவ, அவள் கையை மீண்டும் அழுத்தமாகப் பற்றிக் கொண்டான்.

கார்த்திகா அவன் முகம் பார்க்க முடியாமல் பார்வையைத் திருப்ப, என்னவோ அந்த நிமிட உந்துதலில் அவள் தாடையை பற்றியவன் அவளைத் திரும்ப விடாமல், தன் முகம் பார்க்க செய்ய, அவன் செயலில் சிவந்து நின்றாள் அவள்.

தைரியமாக தொட்டுவிட்டாலும், உள்ளுக்குள் பதறிக்கொண்டு தான் இருந்தான். அழுது விடுவாளோ, திட்டுவாளோ என்று அநேக எண்ணங்கள் அந்த ஒரு நொடியில். அவன் செய்திருந்த பிழை அவனை பிழைக்கவிடாமல் துன்புறுத்த கார்த்தியின் விஷயத்தில் யோசிக்கும் பொறுமையை முழுதாக இழந்திருந்தான் அவன்.

இப்பொழுதும் அந்த ஒரு நொடியில் அவனுக்குள் ஆயிரம் கேள்விகள் உலா வர, அத்தனைக்கும் பதிலாக இருந்தது கார்த்திகாவின் புன்னகை மாறாத சிவந்த முகம். எப்போதுமே அழகி தான் அவன் மனைவி. ஆனாலும், அந்த நிமிடம் அவன் கைப்பிடியில் சிவந்து நின்றவள் பேரழகியாகத் தெரிய, அவளின் மறுப்பில்லாத நிலையும் சேர்ந்து கொள்ள, மெல்ல அவள் தாடையை தன்னை நோக்கி அவன் இழுக்க, அவன் செயலில் பதறிப்போனாள் கார்த்திகா.

சிறுபிள்ளையைப் போல் சட்டென அவள் முகம் அச்சத்தை பூசிக்கொள்ள, அத்தனை அருகாமையில் இருந்த குமரனின் முகம் வேறு திகைக்க வைத்தது. குமரனுக்கு அவள் பதட்டத்தில் சிரிப்பு வந்துவிட, அதுவரை இருந்த நிலை மாறி வாய்விட்டு சிரித்துவிட்டான் அவன்.

அவன் தன்னை கேலி செய்கிறான் என்பது அவன் பாப்பாவிற்கு புரிய, அதில் சிலிர்த்துக் கொண்டவளாக எழுந்துகொள்ள அவள் முயற்சிக்க, இப்போது அவள் கரத்தை இறுக்கமாக பற்றியிருந்தது அவன் கரம். கார்த்தி மீண்டும் திகைப்புடன் அவன் முகம் பார்க்க நிமிரும்போதே, அவளை யோசிக்க விடாமல் அவள் கன்னத்தில் ஒரு அவசர முத்தத்தை பதித்திருந்தான் குமரன்.

கார்த்திகாவுக்கு “என்ன செஞ்சாங்க இவங்க?” என்று கேட்கும் நிலைதான். அத்தனை துரிதமாக செயல்பட்டிருந்தான் குமரன். முழுதாக ஒரு நிமிடம் அவன் பார்வையில் தடுமாறி, அதன்பின் தெளிந்தவளுக்கு அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் துணிவு வரவில்லை.

இதற்கே அவள் கைகள் லேசாக நடுங்க தொடங்கியிருக்க, அவளது நடுக்கம் உணர்ந்தவனுக்கு அப்படி ஒரு உல்லாசம். மெல்ல குமரன் அவள் கரத்தை விடுவிக்க, வேகமாக எழுந்தவள் குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள். பின்னே அந்த குட்டி வீட்டில் எங்கே சென்று ஒளிந்து கொள்ள முடியும்.

அவளுக்கு தான் குமரனின் முகம் பார்க்கவே தயக்கமாக இருந்ததே. குளியலறையின் கதவில் சாய்ந்து நின்றவளுக்கு லேசாக மூச்சு வாங்க, மெல்ல தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருந்தாள் அவள்.

அவள் அப்படி வேகமாக விலகியதில் குமரன் தான் குழம்பிப் போனான். அதுவும் பத்து நிமிடங்களுக்கு மேல் அவள் வெளியே வராமல் இருக்க, வேகமாக எழுந்து குளியலறை கதவைத் தட்டியவன் “கார்த்தி.” என்று குரல் கொடுக்க, “வரேன்.” என்றவள் அடுத்த நிமிடம் வேகமாக கதவைத் திறந்தாள்.

குமரன் அவசரமாக அவள் முகத்தை ஆராய, அவன் முன் நிற்காமல் வேகமாக நகர்ந்துவிட்டாள் அவள். அன்று முழுவதுமே இந்த நிலை தொடர்ந்தாலும், குமரனுக்கான கவனிப்பு குறையவில்லை. குமரனுக்கு அவள் முகம் பார்க்கவில்லை என்ற குறை இருந்தாலும், அவள் இயல்பாக தன் வேலைகளை கவனிப்பதே நிம்மதியாக இருந்தது.

அந்த நாள் கடந்து அடுத்தநாள் காலையில் அவன் முயற்சிக்காமலே அவன் மனைவியின் பார்வை அவனைத் தொடர்ந்து கொண்டே இருக்க, அவள் பார்வையை உணர்ந்தாலும் கவனிக்காதவன் போல் வேகமாக வேலைக்கு தயாராகி நின்றான் குமரன்.

நேற்றே அவன் தீர்த்து சொல்லி இருந்ததால் கார்த்திக்கும் அவனைத் தடுக்க வாய் வரவில்லை. அதிகமாக பேசுவதாக அவன் நினைத்து விடுவானோ என்று பேசாமல் நின்றாள் அவள். அவன் “கிளம்புறேன் கார்த்தி.” என்றபோதும் நேற்றுபோல் அழாமல், “ம்ம் ” என்று தலையை மட்டும் அசைத்தாள்.

ஆனாலும், அவளையறியாமல் முகம் லேசாக வாடிவிட, அது பொறுக்கவில்லை குமரனுக்கு.

“இப்போ ஏன் இப்படி மூஞ்சியை தூக்குற.” என்று அவன் கத்த,

“நான் உங்களை ஏதாவது சொன்னேனா.” என்று முகம் சுருங்கினாள் கார்த்திகா.

“இப்படி மூஞ்சியை வச்சிருந்தா, நிம்மதியா வெளியே போக முடியுதா?” என்று மீண்டும் வீட்டிற்குள் வந்து அமர்ந்தவன் கையிலிருந்த ஆட்டோவின் சாவியைத் தூக்கி தூர எறிந்தான்.

அவன் கோபத்தைக் கண்டு பயம் வந்தாலும், அவன் வேலைக்கு செல்லாமல் இருந்ததே அப்போதைக்கு போதுமாக இருக்க, அவன் கோபத்தை கண்டுகொள்ளாமல் மீண்டும் ஒரு டீ வைத்துக் கொடுத்தாள் கார்த்தி.

அன்று காலை உணவுக்கும் குமரனுக்கு பிடித்தம் என்று அவள் உணர்ந்த சப்பாத்தி, உருளைக்கிழங்கு மசாலா செய்து கொடுத்தவள் தன் அலைபேசியை அவனிடம் நீட்ட, “போடி.” என்று முறுக்கிக்கொண்டு பால்கனியில் சென்று நின்றுவிட்டான் அவன்.

கார்த்தி ‘நீ என்னவும் பேசிக்கொள்.’ என்று துவைத்த துணிகளை மடிக்க அமர்ந்துவிட்டாள். குமரன் பால்கனியில் நின்றிருந்த நேரம், கீழே சாலையில் அவன் மற்றொரு நண்பன் வௌவால் வருவதைப் பார்த்தவன் அவனுடன் எங்காவது சென்று வருவோம் என்று நினைத்து, கார்த்தியிடம் ஒருமணி நேரத்தில் வந்துவிடுவதாக கூறித்தான் கிளம்பினான்.

வௌவால் மற்ற விஷயங்களில் சரியாக இருந்தாலும், குடிக்காமல் இருக்க முடியாது அவனால். இப்போதும் அவன் சாராயக்கடைக்கு செல்லும் போது தான் குமரன் அழைத்திருந்தான்.

“மச்சி… வைன் ஷாப்புக்கு போறேண்டா.” என்று வௌவால் கூறியும்,

“போரடிக்குது. சும்மா வர்றேண்டா.” என்று அவனுடன் நடந்தான் குமரன்.

கடையில் சரக்கை வாங்கிக்கொண்டு கதையோடு சேர்ந்திருந்த பாரில் சென்று இருவரும் அமர, அங்கே ஏற்கனவே முழு போதையில் அமர்ந்திருந்தார் தங்கராஜ்.

குமரனைக் காணவும், தள்ளாடியபடியே எழுந்து அவன் அருகில் வந்தவர், “டேய் குடிகாரப்பயலே… உனக்கு என் பொண்ணு கேட்குதா? என் பொண்ணை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டு, இப்போ குடிச்சுட்டு ஊரை சுத்துறியா?” என்று தன் நிலையை மறந்துவிட்டு அவனைக் கேள்வி கேட்டார் அவர்.

“ஒழுங்கா ஓடிடு.” என்று நிதானமாக உரைத்தவன் அவரைக் கண்டுகொள்ளாமல் இருக்க, “என் பொண்ணு எப்புடி வாழ்ந்து இருக்க வேண்டிய தெரியுமாடா? சௌந்தர் அண்ணன் வூட்டு மருமகளா இருந்துருப்பா. நடுவுல நாதாரி நீ வந்து கெடுத்துட்ட. அவளுக்கும் புடிச்சு தான் இருந்தது. என் பொண்டாட்டியும் நீயும் சேர்ந்து தான் ஏதோ பண்ணிட்டீங்க. ஒழுங்கா உண்மையை சொல்லுடா.” என்று அவன் சட்டயைப் பிடிக்க முற்பட, ஒரே உதறலில் அவரை தூர தள்ளியவன் அதற்குமேல் அங்கே நிற்காமல் வெளியே வந்துவிட்டான்.

தங்கராஜின் குரல் அவனை விடாமல் துரத்திக் கொண்டிருந்தது. ஏற்கனவே கார்த்தியின் வாழ்வை கெடுத்து விட்டோமோ என்று தவித்து கொண்டிருப்பவன் அவன். நேற்றுதான் அவன் மனைவி அவனைக் கொஞ்சம் மீட்டெடுத்திருக்க, இன்று தன் வார்த்தைகளால் தங்கராஜ் மொத்தமாக உடைத்துப் போட்டிருந்தார் அவனை.

அவர் பேசியது சரிதானே. சௌந்தரின் வீடு கொஞ்சம் வசதியானவர்கள் தான். கார்த்தியின் வாழ்வு நிச்சயம் வளமாக இருந்திருக்கும் என்பதே அவன் குற்றவுணர்வை அதிகரித்தது.

அதுவும் அவளுக்கும் பிடிச்சிருந்தது என்ற அந்த மனிதரின் வார்த்தைகள் நேற்றைய முத்தத்தை நினைவுபடுத்த, தன் கையில் சிவந்து நின்றிருந்த மனைவியின் முகம் கண்ணில் நிழலாடவும் இன்னமும் குழம்பி போனான் அவன்.

அவள் கண்களில் தெரிந்த உணர்வுகளும், சிவந்து புன்னகை சிந்திய அவள் முகமும் பொய்யில்லையே என்று சிந்தித்துக் கொண்டிருந்தவன் கைகள் அனிச்சையாக கையில் இருந்த சிகரெட்டை சுண்டி தூர வீசியது. அதுவும் சட்டெனத் தான் சுட்டுவிட்டது அவனை.

Advertisement