Advertisement

தித்திக்கும் முத்தங்கள் 23

அந்த சிறிய வீட்டின் சுவற்றில் சாய்ந்து குமரன் அமர்ந்திருக்க, அவன் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் கார்த்தி. ராணி ஆடிய ஆட்டத்தில் மொத்தமாக உடைந்து போயிருந்தாள் அவள். குமரனுக்காக அழுகையை நிறுத்திக் கொண்டாலும் முகம் வாடிப்போனது.

குமரன் பலமுறை எடுத்துக் கூறியும் அவள் இயல்புக்கு திரும்பவில்லை. இறுதியில் குமரன் சற்று கடுமையாக அதட்டித் தான் அவன் மடியில் படுக்க வைத்திருந்தான். அன்று அவள் செய்ததைப் போல இன்று அவன் கார்த்தியின் தலையை நீவிவிட, வெகுநேரத்திற்குப் பின் மெல்ல கண்ணயர்ந்து இருந்தாள் அவள்.

குமரனுக்கு மனம் முழுவதும் கார்த்திதான். அவன் சிந்தனை மொத்தமும் கார்த்தி நிறைந்திருந்தாள். ஆனால், எப்போதும் கார்த்தி என் மனைவி என்று உரிமையாக எண்ணமிடுபவன் இன்று அதைச் செய்ய முடியாமல் தடுமாறி நின்றிருந்தான்.

‘கார்த்திக்கு தான் பொருத்தமானவன் தானா?’ என்ற சந்தேகம் எழுந்துவிட்டது அவனுக்குள். அதுவும் தன் அன்னையின் பேச்சில் அவள் கலங்கி நின்றதும், தன்னை அணைத்துக்கொண்டு அவள் கதறித் தீர்த்ததும் இந்த ஜென்மத்திற்கும் மறக்காது என்றே தோன்றியது.

‘அவளுக்கு என்ன தலையெழுத்து? எல்லாம் உன்னால் தான்’ என்று இரக்கமே இல்லாமல் அவனது மனசாட்சி அவனை குத்திக் கிழிக்க, ‘அன்னைக்கு கடத்தும்போது எங்கே போயிருந்த நீ.’ என்று கேள்வி கேட்டு அதை அடக்கி வைத்தான் குமரன்.

ஆனால், அவனுக்கே அவன் செயல் உதைக்க தொடங்கியது. எப்படியோ வாழ்ந்திருக்க வேண்டியவளை தன் இஷ்டத்திற்கு இங்கு கொண்டு வந்து தள்ளி விட்டோமோ என்று யோசித்து யோசித்தே களைத்துப் போனான் அவன்.

யோசனைகளின் கனம் தாங்காமல் கைகளால் தலையை அழுத்திவிட்டுக் கொண்டு அவன் அமர்ந்திருக்க, கார்த்திகா விழித்து எழுந்துவிட்டாள். குமரன் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கவும், “என்ன செய்யுது. காஃபி போடவா?” என்றாள் அவள்.

குமரன் அந்த நிமிடம் தன் மனதில் இருந்ததை தெளிவாக அவளிடம் பேசி தெளிவுபடுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால், அவளிடம் என்ன கேட்பது என்று உண்மையில் அவனுக்கு தெரியவில்லை. என்ன கேட்டு விட முடியும்?

“உன்னை உன் வீட்டில் கொண்டு போய் விடட்டுமா?” என்றா கேட்க முடியும். அப்படியே அவன் கேட்டு, கார்த்திகா “ம்ம்” என்று விட்டால். அதன்பின் அவள் வார்த்தையை மறுக்க முடியாது அவனால். ஆனால், அதற்காக அவளை உடன் வைத்து இப்படி வதைக்கவும் மனம் வரவில்லை.

கேள்விக்கான பதிலை எதிரில் இருப்பவரிடம் இருந்து பெற முயற்சிக்காமல், விடையைத் தானே தேடிப்பிடித்து கொண்டவன் கேள்வி கேட்கும் எண்ணத்தை அப்போதைக்கு கைவிட்டான். என்னால் அவளை விட முடியாது என்று தீர்மானமாக மனம் உறுதி கூற, “சுயநலவாதி” என்று திட்டியது மனசாட்சி.

“இருந்துட்டு போறேன். என் பொண்டாட்டி அவ” என்று அவன் பதில் கொடுக்க, “பொண்டாட்டியா.” என்று நக்கலாக மீண்டும் சிரித்தது அவன் மனசாட்சி.

தனக்குள் கேள்விகேட்டு, பதில் தேடி அவன் போராடிக் கொண்டிருக்க, அவனது இந்த போராட்டம் புரியாமல் “என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படி இருக்கீங்க?” என்று அவன் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள் கார்த்திகா.

அவள் கையைப் பிடித்தவன் “ஒன்னுமில்ல கார்த்தி. நல்லாதான் இருக்கேன்.” என்று அலுப்புடன் கூற,

“என்ன ஆச்சு?” என்றாள் மீண்டும்.

“உனக்கு இங்கே இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கா?” என்று ஒருவழியாக கேட்டுவிட்டான்.

“நான் அப்போ சொன்னதை யோசிச்சுட்டே இருக்கீங்களா?” என்று அவனைப் புரிந்தவளாக மனைவி கேள்வி கேட்க, சோகமாக சிரித்தான் குமரன்.

“பார்த்தியா… நான் கேட்ட ஒரு கேள்வியை வச்சு நான் என்ன நினைக்கிறேன்னு கண்டுபிடிச்சுட்ட. உன் அளவுக்கு யோசிக்க தெரியாது எனக்கு. என்ன தோணுதோ, என் மனசுக்கு எது சரின்னு படுதோ அதைத்தான் செய்வேன். இதுவரைக்கும் யாருக்கும் என்னால எந்த கெட்டதும் நடந்தது இல்ல. உன் விஷயத்துல மட்டும்தான் நான் செய்யுறது மொத்தமும் தப்பா போகுது.”

“எனக்கு எப்படி இதை சரி பண்றதுன்னு கூட தெரியல. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேன்னு மட்டும் தெரியுது. ஆனா, அது சரியாக என்ன வழின்னு தெரியமாட்டுது. உனக்கு இங்க இருக்க புடிக்கலைன்னா, நேரா சொல்லிடு.”

“நீ என்ன சொல்றியோ, அதை செஞ்சு கொடுக்கறேன். ஒருவேளை நீ உங்க வீட்டுக்கு போகணும்னு சொன்னாலும்…” என்று அவன் முடிப்பதற்குள்,

“நான் இங்கே இருக்கறது உங்களுக்கு கஷ்டமா இருக்கா.?” என்றுவிட்டாள் கார்த்திகா.

குமரன் “என்ன பேசுற கார்த்தி?” என்று முகம் வாட, “நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.” என்றாள் அவள்.

“நீ கூட இருக்கறது எனக்கு எப்பவுமே சந்தோஷம் தான் கார்த்தி. ஏன் நீ வந்தபிறகு தான் மூணுவேளை சோறு, டெய்லி துவைச்ச சட்டை, நல்ல டீ, நிம்மதியான தூக்கம் எல்லாமே.”

“நீ இதுவரைக்கும் பார்த்ததை வச்சே என் குடும்பத்தை பத்தி ஓரளவுக்கு புரிஞ்சிருக்குமே. எங்க அம்மாகிட்ட எல்லாம் எதையும் எதிர்பார்க்க முடியாது. நிறைய நாள் மூணுவேளையும் கூட பட்டினி கிடந்திருக்கேன் தெரியுமா… வீட்டுக்கு வரணும்னே தோணாது. ஆட்டோவை கடலோரத்துல நிறுத்திட்டு, அதுலயே படுத்து தூங்கிடுவேன்.”

“என் துணியை துவைச்சு போட, எனக்கு சோறு போட, வந்த நேரத்துக்கு ஒரு டீ போட்டு குடுக்க கூட ஆள் இருக்கமாட்டாங்க. ஆனா, எனக்குமே இதெல்லாம் அப்போ பெருசா தெரியாது. இப்போ கிடைக்கும்போது தான் அதோட சுகம் புரியுது.”

“ஆனா, அதுக்காக நீ இதை மட்டுமே செய்யணும்னு சொல்ல முடியாது இல்ல. உங்க அம்மா நிச்சயமா உனக்கு ஒரு நல்லவனை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிருக்கும். உனக்கும் படிச்சு வேலைக்கு போகணும். பெரிய ஆளா வரணும்னு எல்லாம் இருந்துருக்கும் இல்ல. இப்போ எல்லாத்தையும் விட்டுட்டு, இங்கேயே இருன்னு உன்னை புடிச்சு வைக்க கூடாது இல்ல.” என்று நீளமாக அவன் பேசி முடிக்க, அவன் மிகவும் நெகிழ்ந்து போயிருப்பது புரிந்தது கார்த்திகாவுக்கு.

அதிகமாக தன்னை யோசிக்கிறான் என்பதே அவன் மீதான நேசத்தை வளர்க்கத் தூண்டியது. இப்போதும் அவன் மீதான பழைய கோபங்கள் எல்லாம் அழியாமல் தான் இருந்தது. ஆனால், என்ன முயன்றும் அந்த நல்லவனை முழுதாக வெறுக்க முடியவில்லை அவளால்.

ஆம். குமரன் நல்லவன்தான் என்று ஆணித்தரமாக நம்பியது அவள் மனம். கெட்டவனாக இருந்திருந்தால் இந்நேரம் அவள் நிலை வேறாக இருந்திருக்குமே. அதுவும் பிரியா கதிரின் பிரிவுக்கு பின்னும் கூட, தன்னை எந்த விதத்திலும் கடிந்து கொள்ளவில்லையே அவன்.

என்னவோ, அந்த நேரம் அவன் தங்கையின் திடீர் திருமணத்தில் தடுமாறி, எதையோ யோசித்து, என்னவோ செய்து முடித்துவிட்டான் என்று அவனை, அவன் செயலை நியாயப்படுத்த முடிந்தது அவளால்.

கார்த்திக்கு குமரன் அளவுக்கு துணிச்சலும், தைரியமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், வாழ்வைப் பற்றிய தெளிவு அதிகமாக இருந்தது அவளிடம். அந்த தெளிவு தான் குமரனை அவள் கணித்ததும். அந்த கணிப்பினால் தான் குமரனின் வாழ்வு நிம்மதியாக இருக்கிறது.

முதல் இரண்டு நாட்கள் கோபத்தில் அவனை எடுத்தெறிந்து பேசி, அவனுக்கு காரசோறு போட்டு, அழுதே அவனை சித்ரவதை செய்து இருந்தாலும், நிதானமாக யோசிக்கும்போது தான் குமரனின் எதிர்வினைகள் நினைவுக்கு வந்தது.

அவள் அத்தனை செய்தபோதும் எதற்கும் அவளை அடிக்கவோ, துன்புறுத்தவோ இல்லையே. ஏன்… இதுநாள் வரை அவளைத் தவறாக ஒரு பார்வைகூட பார்த்தது இல்லையே. இத்தனைக்கும் அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது என்பதையும் உணர்ந்துதான் இருந்தாள்.

குமரனின் அக்கறையும், அதட்டலும் அவளுக்கும் பிடிக்கிறது தான். ஆனால், அதற்குமேல் யோசிக்க ஏனோ சற்று அச்சமாக இருந்தது. மகாவின் வளர்ப்பில் எந்த பெரிய முடிவையும் அவள் சுயமாக இதுவரை எடுத்தது இல்லையே.

வாழ்வின் மொத்தத்தையும் இதுவரை அடுத்தவர்கள் தீர்மானித்து இருக்க, தன் வாழ்வை முடிவு செய்யும் நொடியில் முடிவெடுக்கத் தெரியாமல் தயங்கிக் கொண்டிருக்கிறாள் அவள். இதோ இத்தனை தெளிவாக தனது மனநிலையும், குமரனின் மனநிலையும் யோசித்து, அலசி ஆராய்ந்து முடித்து விட்டாலும் அவனிடம் மொத்தத்தையும் கூறிவிட முடியாது அவளால்.

குமரனைப் போல் தன்னிலையை மொத்தமாக அவனிடம் விளக்கி கூற முடியாமல், “நான் உங்களோட இருக்கறது உண்மையா உங்களுக்கு பிடிச்சிருக்குன்னா, இனி ஒருமுறை என்னை வெளியே அனுப்புறத பத்தி எப்பவும் பேசாதீங்க.” என்று மட்டுமே கூறினாள்.

ஆனால், அதற்கே குமரனின் மனம் குத்தாட்டம் போட, “நான் படிச்சு முடிச்சுட்டா வேலைக்கு போகக்கூடாது சொல்லுவீங்களா..” என்று தனது முக்கிய சந்தேகத்தை அவனிடம் கேட்டு நின்றாள் கார்த்திகா.

“உன் விருப்பம்தான் கார்த்தி. நீ என்ன சொல்றியோ அதுதான்.” என்று வேகமாக குமரன் கூற,

“எல்லாமே என் விருப்பம்தான்னு சொன்னா, நீங்க ஏன் கண்டதையும் யோசிக்கிறீங்க.”

Advertisement