Advertisement

தித்திக்கும் முத்தங்கள் 21

நேற்று இரவு கார்த்திகாவின் அருகாமையில் குமரன் நிம்மதியாக உறங்கியிருக்க, காலை ஆறுமணி வரையும் கூட அவன் உறக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால், கார்த்திகா எப்போதும்போல் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிட, குமரனை எழுப்பாமல் தானே வீட்டின் கதவைத் திறந்துகொண்டு கீழே இறங்கி வந்திருந்தாள்.

அதே நேரம், ராஜம்மா வாசல் தெளிப்பதற்காக எழுந்து வெளியே வந்திருந்தார். கார்த்திகாவைக் காணவும், “என்ன ராஜாத்தி தனியா இறங்கி வர்ற. குமரன் விட மாட்டானே.” என்று சத்தமாக கேட்க,

“அவருக்கு உடம்பு சரியில்லம்மா. தூங்கிட்டு இருக்காங்க.” என்று கார்த்திகா கூறவும், “இன்னாம்மா ஆச்சு?” என்று கேட்டுக்கொண்டே அவளை நெருங்கினார் ராஜம்மா.

அவரிடம் குமரனின் உடல்நிலையை பற்றி விளக்கியவள், “பால் வாங்கிட்டு வந்திடுறேன்ம்மா.” என்று நகர,

“அட… நீ ஏன் போற. குடு. நான் வாங்கியாறேன்.” என்று அவர் கூடையைப் பிடுங்கினார்.

“இல்லம்மா… நானே வாங்கிக்கறேன். நீங்க வேலையைப் பாருங்க.” என்று கண்ணால் அவர் தண்ணீர் தெளிக்க வைத்திருந்த வாளியைக் காட்டினாள்.

“அது பொறுமையா போட்டுக்குவேன். இங்கே எவ ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கீழே வரப்போறா. நீ குடு.” என்று பிடுங்கிக்கொண்டு சென்றுவிட்டார் அவர்.

கார்த்திகா செல்லும் அவரை சில நிமிடங்கள் பார்த்தபடி நின்றவள் அவர் வைத்திருந்த துடைப்பத்தை  எடுத்துக்கொண்டு தானே வாசலை பெருக்கி தண்ணீர் தெளித்து முடித்தாள்.

ராஜம்மா கைக்கு வந்தபடி நான்கு கோடுகளை இழுத்துவிட்டு, இதுதான் கோலம் என்று சென்றுவிடுவார். ஆனால், கார்த்தி அப்படியில்லையே. நிறுத்தி நிதானமாக ரசித்து ஒரு ரங்கோலி மயில் வரைந்து கொண்டிருந்தாள்.

இவள் கோலத்தை ரசித்து குனிந்த தலை நிமிராமல் கோலத்தில் மூழ்கியிருக்க, சற்று தூரத்தில் தண்ணீர் டேங்க் அருகில் நின்றிருந்த ஆட்டோவில் அமர்ந்தபடி அவளை ரசித்துப் பார்த்திருந்தான் வசந்த். நிச்சயம் அவனுக்கு தவறான நோக்கமெல்லாம் கிடையாது.

ஆனால், தனக்கு மனைவியாக வேண்டியவள் என்ற எண்ணம் இருந்தது. ‘என்னைவிட எந்தவிதத்தில் குமரன் உசத்தி என்று அவனைக் காதலித்தாள் இவள்’ என்று அதுவேறு.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கார்த்திகாவைத் தொடர்ந்து கொண்டிருக்கிறான். எப்போதுமே அந்த ஏரியா பெண்களில் இருந்து தனித்து தெரிவாள் கார்த்திகா. பெரிதாக அலட்டல் இல்லாமல், எப்போதும் தான் உண்டு தன் வேலையுண்டு என்று அவள் பாட்டிற்கு செல்வாள். தெரிந்தவர்கள் யாரும் எதிரில் வந்தால் கூட அவர்களாக இவளை நிறுத்தி பேசினால் தான் உண்டு.

தலையைக் குனிந்தபடி நடக்கமாட்டாள் என்றாலும், யாரிடமும் கவனம் செலுத்தமாட்டாள். அவளை வெளியில் பார்ப்பதே அவள் கல்லுரிக்குச் செல்லும் நேரங்களில் தான். அவள் பின்னால் சுற்றி களைத்துப்போய் ஒரு கட்டத்தில் இவள் கண்டுகொள்ள மாட்டாள் என்பது தெளிவாகத் தெரியவும் தான் தன் தந்தையிடம் விஷயத்தைக் கூறியிருந்தான் அவன்.

அவரும் கார்த்திகாவைப் பற்றி விசாரித்த பிறகு தான் தங்கராஜிடம் பேசுவதாக உறுதியளித்தார். ஆனால், அடுத்த ஒரே வாரத்தில் கார்த்திகாவின் திருமணம். சௌந்தர் கார்த்திகாவை மறந்துவிடும்படி மகனிடம் கூறியவர் அவனை அவனது அத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார்.

ஒருமாதம் பாண்டிச்சேரியில் அவன் அத்தைவீட்டில் இருந்தவன் நேற்றுதான் ஊருக்கு வந்திருந்தான். நேற்று அவன் வீட்டிற்குள் நுழைந்தது முதலே கார்த்திகாவைப் பற்றிய எண்ணங்கள் தான் சூழ்ந்திருந்தது அவனை.

நேற்று முழுவதும் உறங்கக்கூட முடியாமல் தவித்துப் போனவன்  அதிகாலையில் அவள் வீட்டின் முன்னே வந்து அமர்ந்திருந்தான். இத்தனை அருகில் அவளைப் பார்க்கவும், இழப்பின் வலி பெரிதாக தோன்றியது.

“ஏன் என்னை மறுத்தாய்?” என்று அவளை பிடித்து உலுக்கிவிடத் துடித்தது மனம். ஆனால், அதிகாலைப் பூவாக அழகாக அமர்ந்திருந்தவளைக் கண்டு கோபத்தை பெருக்க முடியவில்லை. அடுத்தவன் மனைவி என்று அறிவு இடித்துரைத்தபோதும், அவள் அழகை ஆராதிக்க தான் நினைத்தது மனம்.

கண்களைக் கூட சிமிட்டாமல் அவளை அணு அணுவாக அவன் ரசித்திருக்க, அவள் கோலத்தை முடிக்கும் நேரம் தான் திரும்பிவந்தார் ராஜம்மா. அவள் கோலமிடுவதை ரசித்துப் பார்த்தவர், “ஸோக்கா இருக்கு கண்ணு. நமக்கு இதெல்லாம் வராது.” என்றார் சிரித்துக்கொண்டே.

கார்த்திகாவும் சிரித்தபடி எழுந்தவள் கோலமாவு கிண்ணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு தன் கூடையை அவரிடம் இருந்து வாங்கிக் கொண்டாள்.

“டீ போடறேன். வீட்டுக்கு வாங்கம்மா.” என்று அவரை அழைத்துவிட்டு அவள் நகர, “புள்ள தூங்கட்டும் கண்ணு. நான் பூ வாங்கியாற கோயம்பேடு போவனும். போயிட்டு வந்துடுறேன்.” என்று அவர் வீட்டிற்குள் நுழைந்தார் ராஜம்மா.

கார்த்திகா வீட்டிற்குள் நுழைந்து பாலைக் காய்ச்சி முடித்தபின்னும் குமரன் எழவில்லை. கார்த்திகாவும் அவனை எழுப்ப மனமில்லாமல் குளித்துவிட்டு வர, அப்போதும் உறங்கிக்கொண்டு தான் இருந்தான். ‘ஒரேடியா தூங்குறாங்க’ என்று சிரிப்புடன் அலுத்தவள் சாளரத்தின் அருகில் நின்று தலையைத் துவட்ட, அவள் கூந்தலைப் பட்டென துண்டால் தட்டியதில் சிதறிய நீர்த்துளி லேசாக முகத்தில் படவும், விழித்துவிட்டான் குமரன்.

இத்தனைக்கும் அவனை விட்டு வெகுவாக விலகித்தான் நின்றிருந்தாள். அப்படியும் அவன் விழித்துக்கொள்ள, “சாரி… சாரி…” என்றாள் வேகமாக.

அவள் சாரியை காற்றில் விட்டவன் நேரத்தைப் பார்த்து பதறினான். “எழுப்பி இருக்கவேண்டியதுதான. மணி ஏழாகுது. எப்போ கிளம்பி எப்போ காலேஜ்க்கு போறது?” என்றான் முறைப்பாக.

அவன் திட்டியதில் முகத்தை சுருக்கிக் கொண்டவள், “காலேஜ்க்கு லீவ் சொல்லிட்டேன். அதனாலதான் தூங்கவிட்டேன்.” என்றாள்.

“லீவா… எதுக்கு இப்போ வீணா லீவு? ஒழுங்கா கிளம்பு.” என்று குமரன் மிரட்ட,

“எனக்கு எக்ஸாம் எல்லாம் முடிஞ்சுடுச்சு. இன்னும் ரெண்டு நாள்ல அவங்களே லீவ் விட்டுவாங்க.”

“அவங்க விடும்போது விடட்டும். அதுவரைக்கும் காலேஜ் போ.”

“ம்ச். சும்மாதான் போயிட்டு வந்துட்டு இருக்கேன்.க்ளாஸ் எதுவும் நடக்கல. அதுக்கு வீட்லேயே இருப்பேன்ல.”

“காலேஜுக்கு மட்டம் போட என்னென்ன சொல்ற நீ. காலேஜ்தான் லீவு. முன்னாடியே எழுப்பி இருந்தா, கிளாஸ்க்கு கூட்டிட்டு போய் விட்டு இருப்பேன்ல.” என்று குமரன் முறைக்க,

“கிளாஸ்க்கும் திங்கள்கிழமைல இருந்து போறேன்.” என்றாள் முடிவாக.

“நீ லீவெடுத்து வீட்ல என்ன செய்ய போற. நானும் வேலைக்கு போய்டுவேன். தனியாத்தான் உக்காந்துட்டு இருக்கணும்.” என்ற குமரனின் பேச்சில்,

“வேலைக்கு போறீங்களா.” என்று அதிர்ந்தாள் மனைவி.

“பின்ன உன்கூட உட்கார்ந்திட்டு இருப்பேனா?”

“டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க.”

“அவங்க அப்படிதான் சொல்லுவாங்க. வாங்குற காசுக்கு எதையாவது சொல்லணும் இல்ல.” என்று அலட்சியமாக கூறியவன் எழுந்து குளிக்கச் செல்ல, கார்த்திகாவுக்கு அவனை எப்படி பிடித்து வைப்பது என்று புரியவில்லை.

“போகக்கூடாது.” என்று கட்டளையிட்டு நிறுத்தி வைக்கும் அளவுக்கு உரிமையோ, நெருக்கமோ எதுவும் இல்லையே. ‘நீ யாரடி.’ என்று கேட்டுவிட்டால் என்ன செய்ய முடியும்?

ஆனால், அவனது அலட்சியம் லேசாக பயத்தைக் கொடுத்தது. உடலைக் கெடுத்துக் கொள்வானோ என்று மீண்டும் நேற்றைப்போலவே துடித்தது நெஞ்சம்.

நின்ற இடத்திலேயே அவள் அசையாமல் நின்றிருக்க, பத்து நிமிடங்களில் குளித்து முடித்து வந்துவிட்டான் குமரன். முகம் கொஞ்சம் தெளிந்து இருந்தாலும், முன்பை விட சோர்ந்திருந்தது பார்த்தவுடனே தெரிந்தது.

கார்த்திகா அவனையே கவனித்துக் கொண்டிருக்க, சுவற்றில் இருந்த கண்ணாடியைப் பார்த்து தலையை வாரி படியவைத்தவன் “என்ன” என்று கண்ணாடியின் வழியே தலையசைத்து கேட்க, அதைக்கூட உணராமல் நின்றிருந்தாள் அவள்.

அவள் முகத்தைப் பார்த்தவன் “என்ன கார்த்தி.” என்று கேட்டபடி அவளை நெருங்கி வர, “இன்னிக்கு ஒருநாள் வீட்ல இருங்களேன்.” என்றாள் இறைஞ்சுதலாக.

“ம்ச். சும்மா கிளம்பும்போது நொச்சி பண்ணாத கார்த்தி. வீட்ல உட்கார்ந்த எப்படி சோறு வரும். உழைச்சா தான் காசு. நமக்கு சம்பாரிக்கறது இல்லாம, என் அம்மா, அப்பாவையும் பார்க்கணும். வீட்ல எல்லாம் உக்காந்துட்டு இருக்க முடியாது.” என்று தன்னிலையை தெளிவுபடுத்தினான் குமரன்.

அதற்குமேல் அவனிடம் அழுத்தி எதையும் கூறும் துணிவில்லாமல் கார்த்திகா மெளனமாக நகர்ந்துவிட, அவள் கொடுக்கும் டீக்காக காத்திருந்தான் குமரன்.

அவன் காத்திருப்பது புரிந்தோ என்னவோ பாலை அடுப்பில் ஏற்றி அருகில் நின்றுகொண்டாள் அவள். அவள் முகம் வாடியிருந்தது குமரனுக்கு புரிந்தாலும், அவளுக்காக வீட்டில் உட்கார முடியாதே. அவளிடம் பேச்சுக் கொடுத்தால் வற்புறுத்துவாளோ என்று பயந்து அவனும் அமைதியாக அமர்ந்து கொண்டான்.

ஆனால், கார்த்திகா அவன் எதிர்பார்த்தது போல் எதையும் பேசவில்லை. டீயைப் போட்டு அவன் முகம் பாராமல் அவன் கையில் கொடுத்தவள் அவனுக்கு முகம் காட்டாமல் மீண்டும் அந்த சிறிய சமையல் தடுப்பில் சென்று நின்றுகொண்டாள்.

“என்னவாம் இவளுக்கு.” என்று முறுக்கிக்கொண்டவனாக குமரன் டீயைக் குடித்து எழ, அப்போதும் வெளியே வரவில்லை அவள்.

“நான் கிளம்புறேன்.” என்று குரல் கொடுத்து அவன் வெளியே செல்ல, சமையல் தடுப்பில் இருந்து மெல்ல எட்டிப் பார்த்தவளுக்கு இயலாமையில் கண்கள் கலங்கியது.

காலில் செருப்பை மாட்டிக்கொண்டு நிமிர்ந்த குமரனுக்கு அவளது கலங்கிய கண்கள் தான் கண்ணில்பட்டது. வேகமாக அங்கிருந்து நகர்ந்து கொண்டவன் விறுவிறுவென படிகளில் இறங்கிவிட்டாலும், வாசலைத் தாண்ட விடாமல் மனம் சண்டித்தனம் செய்தது.

அவளது அழுத முகத்தைப் பார்த்தபின்பும் அப்படியே விட்டுச் செல்வாயா என்று புத்தி அதட்ட, தனக்குத்தானே தலையை அசைத்துக் கொண்டு புன்னகையுடன் மீண்டும் படிகளில் ஏறினான் குமரன்.

அவன் மீண்டும் வீட்டுக்குள் நுழைகையில் அந்த வீட்டின் சாளரத்தின் வழியே கீழே வீதியைப் பார்த்து நின்றிருந்தாள் கார்த்திகா. தன்னைத்தான் தேடுகிறாள் என்பது வரை அந்த நல்லவனுக்குப் புரிய, சத்தம் கொடுக்காமல் மெல்ல அவள் அருகில் நெருங்கி அவளுக்குப் பின்பக்கம் நின்று கொண்டவன் “ம்க்கும்.” என்று இருமிக் காண்பிக்க, பதறியடித்துக் கொண்டு திரும்பினாள் கார்த்திகா.

பதட்டத்தில் குமரனின் மீது மோதியவள் வேகமாக நகர்ந்து ஜன்னலில் சாய்ந்துவிட, “ஏய் பார்த்து…” என்று மீண்டுமொரு முறை அவன் கையைப் பிடித்திருந்தான் குமரன்.

கார்த்தி பேயறைந்தவள் போல் நிற்க, “என்ன பார்க்கிற?” என்று சாதாரணமாக கேட்டவன் அவளை இன்னும் நெருங்கி அவளுக்குப் பின்னால் பார்ப்பதுபோல் பாவனை காட்ட, ‘உங்களைத் தான் பார்த்தேன்.’ என்றா சொல்வாள். சொல்லிவிட்டால் அது கார்த்தி இல்லையே.

வழக்கம்போல் மௌனியாகிப் போனாள் அவள். குமரன் அவளைவிட்டு ஓரடி தள்ளி நின்று ‘என்ன’ என்று சைகையில் கேட்க, “ஒன்னுமில்ல.” என்று அவசரமாக கூறியவள் வேகமாக நகர்ந்து விட்டாள்.

குமரன் அதற்குமேல் அவளை நெருங்காமல் அந்த ஜன்னல் சுவற்றிலேயே சாய்ந்து அமர்ந்துவிட, “வேலைக்கு போகலையா இவங்க” என்று மூளையைக் கசக்கி கொண்டிருந்தாள் கார்த்திகா.

அவளாக கேட்கமாட்டாள் என்று தெரிந்தவனாக, “இன்னிக்கு ஒருநாள் லீவு விட்டாச்சு. இனி நான் வெளியே போகும்போது அழற வேலை வச்சுக்காத. அந்த மூஞ்சியைப் பார்த்தா நிம்மதியா இருக்க முடியல.”

“உன்னை எதுக்கும் அழவிட கூடாதுன்னு தான் எல்லாம் பண்றேன். ஆனா, எப்பவும் அழுமூஞ்சியாவே நிற்கிற. அதுவும் என்னால தான் அழற எப்பவும். இனி அழுவாத. நீ அழுதா உன் மூஞ்சி நல்லாவே இல்ல. பார்க்கவே சகிக்கல.” என்றான் கெத்தாக.

அவன் பேச்சில் கார்த்தி கடுப்பாகி அவனை முறைக்கத் தொடங்க, “சும்மா சும்மா கலாய்… ஆனா, அழுவாத.” என்றான் மீண்டும் பாவமாக.

கார்த்தி நூலிழையாக புன்னகைக்க, “நீ சொன்னதுக்காக எல்ல்லாம் லீவு எடுக்கல. உன்னைப் பார்த்தா பாவமா இருக்கேன்னு தான் நானே லீவு விட்டுட்டேன்.” என்றான் மீண்டும்.

இப்போது கார்த்தியின் புன்னகைப் பெரிதாக, “இதை முன்னாடியே செஞ்சிருந்தா, ஒழுங்கா பொழைப்புக்கு போயிருப்பேன்.” என்று கடுப்பாக குமரன் கூற, சட்டென கோபம் கொண்டு மீண்டும் அவனை முறைத்தவள் நொடித்துக் கொண்டு மீண்டும் சமையல் தடுப்புக்குள் ஒளிந்து கொண்டாள்.

ஆனால், அவளையே பார்த்து இருந்தவனோ, மனைவியின் இந்த உரிமையான கோபத்தில் வாயெல்லாம் பல்லாக அமர்ந்திருந்தான்.

Advertisement