Advertisement

தித்திக்கும் முத்தங்கள் 17

 அன்று காலையில் அவசர  அவசரமாக கிளம்பிச் சென்ற குமரன் நாள் முழுவதும் வீட்டிற்கு வராமல் இருக்க, வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு எதையோ சமைத்து வைத்திருந்தாள் கார்த்திகா. மதியம் வழக்கமான நேரம் கடந்தும் அவன் வரவில்லை என்றாகவும், நான்கு மணிக்கு மேல் தான் மட்டும் உண்டு முடித்திருந்தாள்.

எப்போதும் திட்டிக்கொண்டும், மிரட்டிக்கொண்டும் மட்டுமே இருந்தாலும், ஏனோ மனம் அவன் இருப்பைத் தான் விரும்பியது. அவன் முகம் காட்டாமல் ஒளிந்து கொண்டிருக்க, அந்த கணங்கள் நிச்சயம் கனக்கச் செய்தது.

செய்வதற்கும் பெரிதாக எந்த வேலைகளும் இல்லாததால், குமரனையே வெகுநேரம் அலசி ஆராய முற்பட்டுக் கொண்டிருந்தாள் கார்த்திகா. அவன் நல்லவனா கெட்டவனா என்பதில் தொடங்கிய அவளின் ஆராய்ச்சி அவனுக்கு தன்னைப் பிடிக்குமா இல்லையா என்பதில் வந்து நிற்க, அப்போதுதான் தன் சிந்தனையின் தீவிரம் உறைத்தது அவளுக்கு.

‘என்ன நினைக்கிறன் நான்’ என்று அதிர்ந்தவள் ‘இதெல்லாம் சரியா வராது’ என்று நிமிடமே புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள். மனம் சண்டித்தனம் செய்தபோதும், தன்னை ஒருநிலைப்படுத்திக் கொண்டு பாடங்களில் கவனம் செலுத்தியவள் மெல்ல அதில் ஆழ்ந்துவிட, மூன்று மணி நேரம் எப்படி நகர்ந்ததென்றே தெரியாமல் நகர்ந்து இருந்தது.

இரவு பத்து மணி அளவில் குமரன் கதவைத் தட்டியதில் தான் புத்தகங்களை எடுத்து வைத்து எழுந்தாள் அவள். ஆனால்,அதன்பின்பும் கூட அவளை வேறெதையும் சிந்திக்க விடாமல் அலைக்கழித்தான் குமரன். காலையில் போலவே இப்போதும் அவள் முகம் பார்ப்பதைத் தவிர்த்தவன் அவள் தட்டில் வைத்ததை என்ன ஏதென்று கூட கவனிக்காமல் உண்டு முடித்து எழ, கார்த்தி கவலையுற அதுவே போதுமாக இருந்தது.

எப்போதும் அவள் என்ன சமைத்தாலும், அதை ரசித்து உண்பவன் குமரன். வாய்திறந்து பேசிக் கொள்ளவில்லை என்றாலும் அவன் கண்களில் ஒரு மெச்சுதல் இருக்கும். கார்த்திகாவுக்கும் அது பிடித்தே இருக்க, அவன் உணவுக்கு அமர்ந்துவிட்டால் அவன் முகத்தை அவனறியாமல் கவனிப்பதை பழக்கமாக்கிக் கொண்டிருந்தாள் அவள்.

ஆனால், இன்று கல்லோ, மண்ணோ என்ற பாவனையில் உண்டு முடித்தவன் அதன் பின்னும் எதுவும் பேசாமல் வாசல் கதவுக்கருகே படுத்துவிட, இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை அவளுக்கு.

அதுவும் நேற்றுதான் அவன் தங்கை வந்து அப்படி ஒரு ஆட்டம் ஆடியிருக்க, இன்று இவன் இப்படி நடந்து கொள்ளவும் மொத்தமாக தன்னை குழப்பிக் கொண்டாள் பெண்.

வழக்கமாக வரும் கண்ணீர் கூட வராமல் சதி செய்ய, அரைகுறை வயிற்றோடு தானும் ஒருபுறம் படுத்துவிட்டாள் கார்த்திகா. எப்போதும் சுவற்றின் பக்கம் திரும்பி படுத்துவிட்டால் விடியும் வரை அவன் புறம் திரும்பாதவள் இன்று ஏதோ யோசனையுடன் அவன் முதுகை வெறித்தபடி படுத்துக் கிடந்தாள்.

குமரகுரு புறக்கணிக்கிறானோ என்று சிந்திக்கும்போதே, ஏனென்று தெரியாமல் உள்ளுக்குள் ஒரு வலி. ஆனால், அவளின் முதிர்ச்சியடையாத மனம் அவளை அதற்குமேல் யோசிக்கவிடாமல் பிடித்திழுக்க, ‘ஒருவேளை வெளியே போக சொல்லிட்டா எங்கே போவேன்’ என்று கலங்கினாள் அவள்.

‘அதற்காக போன்னு சொன்னப்பிறகும் இங்கேயே இருக்க முடியுமா. அவ்வளவு ரோஷமில்லாமல் போய்டுச்சா உனக்கு?’ என்று  தன்னையே கேள்வி கேட்டு, ‘அப்படியெல்லாம் இல்ல. நான் எங்கேயாவது போய்டுவேன்.” என்று அவளே பதில் கூறிக் கொள்ள, ‘எங்கே போவ’ என்று மீண்டும் அவளை கேலி செய்து சிரித்தது மனசாட்சி.

அதன் கேள்விக்கு பதில்கூற முடியாமல் மௌனித்தவள் கண்களில் கண்ணீர் பெருகியது. உண்மைதானே… என்ன செய்ய முடியும் தன்னால். படிப்பில்லை, இந்த நிமிடம் சொந்தமென்று யாரும் இல்லை. சொந்த அம்மாவே அவள் யாரோ என்று விட்டுச் சென்றுவிட்டாரே. எங்கே சென்று, என்ன செய்ய முடியும் தன்னால் என்று கலங்கியவள் வெகுநேரம் தன்னை நினைத்தே கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். சத்தமில்லாத ஒரு அழுகை.

ஆனால், அத்தனை அழுகைக்குப் பின்பும், மனம் தெளிவாகவில்லை. ஒருவேளை குமரன் தன்னை வெளியேறச் சொன்னால், அடுத்த நிமிடமே இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டவள் கண்ணீருடனே உறங்கிப் போனாள்.

காலை வழக்கமான நேரத்திற்கு குமரன் எழுந்துவிட, கார்த்திகா இன்னும் உறக்கத்தில் தான். அவள் அருகில் நின்று சில நிமிடங்கள் அவளைப் பார்த்திருந்தவன் அவளை எழுப்பாமல் பால் வாங்க சென்றுவிட, அவன் சென்ற அடுத்த சில  நிமிடங்களில் எழுந்துவிட்டாள்.

ஜன்னல் வழியே தெரிந்த ஆகாயம் மேகமூட்டத்துடன் காணப்பட, தன் மனநிலையும் இப்படித்தான் இருண்டு கிடக்கிறதோ என்று கசப்புடன் நினைத்தபடியே எழுந்து குளியலறைக்குள் நுழைந்தாள் அவள். அவள் வெளியே வரவும், குமரன் பால் வாங்கி திரும்பி வரவும் சரியாக இருந்தது.

அப்போதும் பால்கூடையை சமையல்கட்டில் வைத்தவன் வேகமாக குளியலறைக்குள் நுழைந்துகொள்ள, முகத்தில் அடித்ததுப் போல் உணர்ந்தாள் கார்த்திகா.

அதற்குமேல் அவனை நிமிர்ந்துகூடப் பாராமல் அவள் தன் வேலைகளைத் தொடர, எப்போதும் போல் எட்டு மணிக்கு “கிளம்பிட்டியா.” என்றான் குமரன். வாய்திறக்காமல் தலையசைத்து அவனைப் பின்தொடர, குமரனும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

கார்த்திகாவை அவன் கல்லூரி வாயிலில் இறக்கிவிட, அவனைத் திரும்பியும் பாராமல் நடந்தவளை பெருமூச்சுடன் பார்த்திருந்தான் குமரன். ஆனால், அதெல்லாம் சில நொடிகள் தான். வழக்கம்போல் ‘ரொம்ப பண்றா. மூஞ்சியைக்கூட பார்க்கமாட்டாளா. போடி.’ என்று கிளம்பிவிட்டான்.

இருவருமே ஒருவர் மற்றவர் முகம் பார்க்க மறுத்து, மற்றவரின் எண்ணம் இதுவாகத் தான் இருக்குமோ என்று சிந்தித்து தங்களுக்காகவே தங்களை வதைத்துக் கொள்ள தொடங்கியிருந்தனர்.

அன்று மதியமும் அவளை அழைத்துச் செல்ல, குமரன் கல்லூரிக்கு வந்திருந்தான் தான். ஆனால், எப்போதும்போல் அவளைக் கண்டதும் எழும் புன்னகை இல்லாமல் அவன் நிற்க, மீண்டும் மௌனமாகவே தொடர்ந்தது பயணம்.

வீட்டின் வாசலில் அவளை இறக்கிவிட்டவன் அப்படியே வாசலோடு சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிவிட, மொத்தமாக உடைந்து நின்றாள் கார்த்திகா. அவனுக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்று மொத்தமாக முடிவு செய்துவிட்டாள் அந்த நிமிடம்.

கண்ணீரை முயன்று அடக்கி கொண்டு வேகமாக வீட்டை அடைந்தவள் சுதந்திரமாக ஒருமூச்சு அழுது தீர்த்து, தனது பொருட்களை எல்லாம் ஒரு பையில் அடுக்கிவைத்தாள். தனது புத்தகங்களை மற்றொரு பையில் அடுக்கிவிட்டவள் அவன் வாங்கிக் கொடுத்திருந்த அலைபேசியை சாமி படத்திற்கு முன்பாக வைத்துவிட்டு ஜன்னலோரம் சென்று அமர்ந்துவிட்டாள்.

முடிவு செய்துவிட்டாள் தான். ஆனால், என்னமோ அவனிடம் சொல்லிக்கொள்ளாமல் செல்ல மனம் வரவில்லை. உனக்கு பாரமாக என்றும் இருக்கமாட்டேன் என்று அவன் முகத்திற்கு நேராக கூறிச் செல்ல வேண்டும் என்ற பேராவல்.

வேறு எதுவும்  எண்ணமில்லாமல் அவள் அமர்ந்திருக்க, காலையில் குடித்த டீ தான். அதன்பின்பு கல்லூரியிலும் எதுவும் உண்டிருக்கவில்லை. இப்போதும் சமைத்து சாப்பிட எண்ணம் இல்லை. சோர்ந்திருந்த உடல் மனதை இன்னும் தளர்வடையச் செய்ய, குமரனின் வரவுக்காக காத்திருந்தவள் உட்கார்ந்தபடியே உறங்கிப் போயிருந்தாள்.

வெளியேச் சென்ற குமரனுக்கும் கார்த்திகாவின் நினைவு தான். என்னதான் இயல்பாக காட்டிக்கொண்டாலும், அவள் முழுதாக ஆட்டி வைத்தாள் அவனை. ஏற்கனவே தனது முத்தத்தால் குற்றவுணர்வில் இருந்தவன் இப்போது  அவளின் பாராமுகத்தில் மொத்தமாக குழம்பி நின்றான்.

‘இன்னும் என்னதான் செய்யணும் நான். கன்னம் நல்லா பன்னு மாதிரி வீங்கிப் போச்சேன்னு மஞ்சா போட்டது ஒரு குத்தமா… அதுக்கு இன்னாவோ மூஞ்சியை திருப்பிட்டு போறா. குமரன் அவ்ளோ இளக்காரமா போய்ட்டான் இல்ல. இந்தம்மா பெரிய உலக அழகின்னு நினைப்பு. போடி.’ என்று அவள் எதிரில் இருப்பதாக நினைத்து புலம்பிக் கொண்டிருந்தான் அவன்.

‘இறங்கி இறங்கி வந்தா ஏறிக்கின்னே போறா. உனக்கு குமரன் வேணான்னா, குமரனுக்கும் நீ வேணா. அப்படி ஒன்னும் யாரும் இங்க ஏங்கின்னு இல்ல.’ என்று தனக்கு தானே கூறிக்கொண்டு அவன் சவாரியை கவனிக்க, சரியாக ஐந்து மணிக்கெல்லாம் பசிக்கத் தொடங்கிவிட்டது.

‘எப்பிடியும் சோறாக்கி வச்சிருப்பா.’ என்று மனம் ஆசைமூட்ட, ‘ஊர்ல வேற கடையே இல்லையாடா குமரா.’ என்று அதட்டியது மனசாட்சி.

அவன் ஆட்டோவை நிறுத்தியிருந்த இடத்திற்கு அருகிலேயே ஒரு பிரியாணி கடை வேறு இருக்க, ‘ஒழுங்கா பிரியாணி வாங்கி தின்னுட்டு பொழப்பை பாரு.’ என்று அவனுக்குள் இருந்த மானஸ்தன் மீண்டும் குரல் கொடுக்க, வழக்கம்போல், ‘அவ சாப்பிட்டாளான்னு தெரியலையே.’ என்று அவனை குழப்பி நிற்க வைத்தது மனம்.

இறுதியில் ‘நீ சாப்பிட வீட்டுக்குப் போற குமரா. உன் வூடு அது. அவளை ஏன் பார்க்கிற? போனமா  சாப்பிட்டமா ன்னு வந்துட்டே இருக்கணும்.’ என்று முடிவு செய்தவனை மனசாட்சி காறித் துப்ப, “சோறு முக்கியம் பிகிலு” என்று சத்தமாக கூறிக்கொண்டே ஆட்டோவை எடுத்தவன் இருபது நிமிடங்களில் வீட்டிற்கு வந்துவிட்டான்.

வழக்கத்திற்கு மாறாக அவன் வீட்டின் கதவு தாழிடப்படாமல் லேசாக திறந்து கிடந்தது. ‘கதவைக்கூட மூடாம அப்படி என்ன பண்றா.’ என்றபடியே அவன் வீட்டிற்குள் நுழைய, அந்த குட்டி வீட்டின் ஒரு மூலையில் சுவற்றில் சாய்ந்து அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தாள் கார்த்திகா.

அவள் முகம் அழுததில் சிவந்து போயிருக்க, வேகமாக அவளை நெருங்கியவன் நெற்றியில் கைவைத்துப் பார்க்க காய்ச்சல் ஏதுமில்லை.

‘ஒழுங்கா படுத்து தூங்கினா என்ன’ என்று கடிந்தபடியே தலையணையை எடுத்துப் போட்டவன் அவளை லேசாக சாய்த்து தலையணையில் படுக்க வைத்தான். அவள் சமைத்ததிற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்க, பூச்சிக்கு அழைத்து இருவருக்கும் உணவை வாங்கி வர சொன்னவன் வெளியே எண்ணமில்லாமல் அமர்ந்துவிட்டான்.

பத்து நிமிடங்களில் பூச்சி உணவுடன் வந்துவிட, அவனிடம் உணவை வாங்கிக் கொண்டு திரும்பியவன் அப்போதுதான் அலமாரியின் அருகில் இருந்த அந்த பைகளை கவனித்தான். தூங்கி கொண்டிருந்தவளை ஒரு பார்வை பார்த்தவன் உணவுபார்சலை ஒரு ஓரமாக வைத்துவிட்டு அந்த பைகளை ஆராய, சொல்லமுடியாத கோபம் கிளர்ந்தது அவனுக்குள்.

அந்த பையில் இருந்த உடைகளை பிரித்து கீழே கொட்டியவன் புத்தகங்களையும் ஒருபக்கம் கொட்டிவிட்டான். அவனது ஆத்திரம் எல்லையைக் கடந்து கொண்டிருக்க, கார்த்திகாவைப் பார்க்க பார்க்க மீண்டும் தலைக்கேறியது.

தன் கோபத்தை தாங்கமாட்டாள் என்பது வரை அந்த நேரத்திலும் நினைவில் இருக்க, வேகமாக குளியல் அறைக்குள் நுழைந்தவன் வேகமாக தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டு அமர்ந்துவிட்டான். அந்த வாளியில் இருந்த நீர் மொத்தமும் தீர்ந்துபோன பின்னும் கூட, அவன் கொதிப்பு அடங்காமல் போக, குழாயைத் திறந்துவிட்டவன் தலையில் நீரை அள்ளி ஊற்றிக்கொண்டே இருந்தான்.

வெகுநேரம்  குளியலறையில் நின்று தன்னை ஓரளவு சமன்படுத்திக் கொண்டவனாக அவன் வெளியே வர, உறக்கம் களைந்து எழுந்து அமர்ந்திருந்தாள் அவன் மனைவி.

ஈர உடையுடன் வெளியே வந்தவனை கார்த்திகா புரியாமல் பார்க்க, தானாக எதுவும் பேசுவதில்லை என்று முடிவெடுத்தவனாக நின்று கொண்டிருந்தான் குமரன். அவன் தலையில் நீர் சொட்டிக் கொண்டிருக்க, அனிச்சை செயலாக ஜன்னலில் இருந்த துண்டை எடுத்து அவனிடம் நீட்டினாள் கார்த்திகா.

அதைக் கையால் கூட தொடாமல், “என்ன இதெல்லாம்…” என்று இழுத்து நிறுத்தினான் குமரன்.

கார்த்திகாவும் தயங்கவில்லை. முடிவெடுத்தபின் தயங்கி என்ன பயன் என்று நினைத்தாளோ என்னவோ.

“நான் உங்க வீட்டை விட்டுப் போறேன்.” என்றாள் ஸ்திரமாக

“ஓ… முடிவெடுத்துட்ட.” என்றவன் “இன்னா திடீர்ன்னு…” என்றான் மீண்டும் முடிக்காமல்.

“நான் யாருக்கும் பாரமா இருக்கவேண்டாம்ன்னு நினைக்கிறேன்.”

“அதுசரி… இன்னிக்குதான் அறிவு வந்துச்சா.” என, கார்த்திகா அவனுக்கு பதில்கூறாமல் தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.

“போகணும்னு முடிவு பண்ணவ உண்மையை சொல்லுடி.” என்று அழுத்தமாக அவன் மிரட்ட,

“எனக்கு தாலி கட்டிட்டதால மட்டுமே நீங்க என்னோட  பொறுப்பை ஏத்துக்கணும்னு அவசியம் இல்ல. பிடிக்காம என்னை இந்த வீட்ல வச்சுக்க வேண்டாம்.அனுப்பிடுங்க.” என்று தலையைக் குனிந்தபடியே வேகமாக அவள் கூறி முடிக்க,

“உனக்குதான் அறிவே கிடையாதே. எனக்கு உன்னை பிடிக்கலன்னு எப்படி கண்டுபிடிச்ச?” என்ற குமரனை பதிலில்லாமல் கார்த்திகா வெறிக்க,

“போறதுன்னு முடிவாயிடுச்சு. எங்கே போவ? அதையும் சொல்லிட்டுப் போ.” என்றான் சலனமில்லாமல்.

“அறிவில்லாத முட்டாள் தான் நான். ஆனா, கண்ணு முன்னாடி நடக்கற விஷயங்கள் கூடவா புரியாம போகும். நான் இந்த வீட்டை விட்டு போறது எல்லா வகையிலேயும் நல்லதுதான்.”

“யாருக்கு?”

“உங்க தங்கச்சிக்கு கூட நல்லதா இருக்கலாம். அவங்களும் இதைத்தானே செய்ய நினைச்சாங்க.”

“நம்ம வாழ்க்கைக்கும் என் தங்கச்சிக்கும் எந்த  சம்பந்தமும் இல்ல. நமக்குள்ள உன் அண்ணனையோ, என் தங்கச்சியையோ இழுக்காத. உனக்கும் எனக்கும் நடுவுல என்ன இருக்கோ அதை பேசு. எதை வச்சு எனக்கு உன்னை புடிக்கலன்னு முடிவு பண்ண.?” என்று  தவறு செய்யாத பாவனையில் குமரன் கேட்க,

“இத்தனை நாள் இதே வீட்ல தானே இருக்கேன். எனக்கு வித்யாசம் தெரியாதா?”

“என்ன தெரிஞ்சுக்கிட்ட நீ” என்று அதே தொனியில் குமரன் கேட்க,

“என்முகத்தைப் பார்க்க கூட விருப்பமில்ல உங்களுக்கு.  கடைசி ரெண்டு நாளா நான் என்ன சமைச்சு வச்சேன்னு தெரியுமா? நான் இந்த வீட்டுக்கு வந்த நாள்ல இருந்து என்னை திட்டவாச்சும் என்கிட்டே பேசுவீங்க. கடைசி ரெண்டு நாள் என்னை திட்டக்கூட இல்ல. இதைவிட வேறென்ன வேணும்?” என்று தன் மனதை தனக்கே தெரியாமல் குமரனுக்கு படம் பிடித்துக் காண்பித்துக் கொண்டிருந்தாள் கார்த்திகா.

அவள் பேசப்பேச குளிர்ந்துதான் போனான் குமரன். மேனி முழுவதும் சந்தனக்காப்பு சாற்றிக்கொண்ட குமரனின் நிலையில்தான் இருந்தான் அவனும். முகத்தில் பரவிடத் துடித்த புன்னகையை வெகுவாக சிரமப்பட்டு அடக்கிக் கொண்டவன் வெளியே விரைப்பாகவே நின்றான்.

கார்த்திகா இதற்குமேல் என்ன சொல்ல வேண்டும் என்று அவனைப் பார்த்திருக்க, “உன் கணக்கெல்லாம் கரெக்டுதான். நீ எப்பப்போ நீயா என்கிட்ட பேசி இருக்க?” என்றான் நக்கலாக.

“நான் பத்து வார்த்த பேசுனா, ஒத்த வார்த்த பேசறியா நீ. நான் மட்டும் நாய் மாறி உன் பின்னாடி அலைஞ்சுட்டே இருக்கவா?” என்று கோபம்போல் குமரன் நிற்க,

“ஹான்…” என்று விழித்துக் கொண்டிருந்தாள் கார்த்திகா.

“உன்னை தூக்கிட்டு போனேன் தான். கட்டியிருக்கறதும் கட்டாய தாலி தான்… ஆனா, நீ இந்த வீட்டுக்கு வந்த நாள்ல இருந்து சொல்லு. தப்பாவோ, உனக்கு பிடிக்காமையோ ஏதாவது செஞ்சிருக்கேனா?” என்றவனுக்கு அவள் பதில் கொடுக்காமல் நிற்க, ‘என்ன’ என்று தலையை அசைத்து கேட்டான் குமரன்.

கார்த்திகா மறுப்பாக தலையசைக்க, ‘அப்புறம் எப்ப பார்த்தாலும் வில்லனை பார்க்கிறா மாறியே பார்த்து வைக்கிற. வீட்ல இருக்கறது ரெண்டு பேர். உன்கிட்ட நான் பேசினா, என்கிட்ட நீ பேசணும் இல்ல. நான் மட்டும்தான் பேசணும்ன்னா, தோ… இந்த சுவத்துக்கிட்ட பேசிக்கறேன்.” என்றான் முடிவாக.

கார்த்திகா இன்னும் தெளியாமல் நிற்க, “நீ பேசுனா உங்கிட்ட பேசுவேன். இல்லன்னா, நானும் சைலண்டா போய்டறேன். ஏன் எதுக்குன்னு கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது..” என்று மீண்டுமொருமுறை அழுத்திக் கூறியவன் “புடிக்காம எல்லாம் பேசாம இருக்கல. பிடிச்சதனால தான் பேசாம இருந்தேன்.” என்றுவிட்டான் பேச்சோடு பேச்சாக.

ஆனால், அவன் எதிர்பார்த்ததுப் போலவே கார்த்திகா அவன் பேச்சு புரியாமல் விழித்துக் கொண்டு நிற்க, சிரிப்புதான் வந்தது குமரனுக்கு. “நெஜமாவே பாப்பாதான்டா குமரா.” என்று தனக்குள் சிரித்துக் கொண்டான் அவன்.

Advertisement