Advertisement

தித்திக்கும் முத்தங்கள் 16

குமரனின் அருகாமை கொடுத்த இதத்தில் அமைதியாக படுத்திருந்தாள் கார்த்திகா. குமரன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்ட போதும், பயத்தில் நடுங்கியபடிதான் இருந்தாள் கார்த்திகைச்செல்வி. ராணியும், பிரியாவும் ஆடிய ஆட்டம் அப்படியானது அல்லவா.

குமரன் “பயப்படாத கார்த்தி. இனிமே வரமாட்டாங்க. இப்பிடி நடுங்காத.” என்று கொஞ்சமாக குரலுயர்த்தியதற்கே அவள் உடல் அதிர, அவள் கைப்பிடித்து இருந்தவன், “ஏய்… ஒன்னும் இல்லடி, உடம்புக்கு எதையாவது இழுத்துக்காத, நான் இருக்கேன்ல.” என்று குழந்தையை அணைப்பவன் போல் லேசாக அவளைத் தோளோடு அணைத்துக் கொள்ள, அதையெல்லாம் உணரும் நிலையிலேயே இல்லை அவள்.

அவன் அணைப்பில் அமர்ந்திருந்தவளின் முகம் அவன் முகத்திற்கு வெகு அருகாமையில் இருக்க, அப்போதுதான் அவள் கன்னத்தில் இருந்த விரல்தடங்களை கவனித்தான் குமரன்.

கீழே தெருவிளக்கின் வெளிச்சத்தில் சரியாக தெரியாத கைத்தடம் இப்போது மிக கோரமாக காட்சியளிக்க, லேசாக தன் விரல் கொண்டு அவன் கன்னம் தொடவும், அனிச்சை செயலாக பின்வாங்கினாள் மனைவி.

குமரன் “சாரி…” என்று பட்டென சரணடைய, அவன் அணைப்பில் இருப்பதையும் அப்போதுதான் முழுதாக உள்வாங்கினாள் கார்த்திகா.

அவள் மெல்ல அவன் அணைப்பில் இருந்து விலக முயற்சிக்க, சட்டென தானே நகர்ந்து அமர்ந்தான் குமரன். “வேணும்னு பண்ணல. பயத்துல திரும்ப ஜுரம் வந்துடப் போதுன்னு தான் புடிச்சேன்.” என்றான் விளக்கமாக.

கார்த்திகா ‘பரவால்ல’ என்பதாக தலையசைத்து நன்றாக பின்னால் நகர்ந்து அமர்ந்து கொள்ள, “கன்னம் வீங்கிப் போயிருக்கு. மெடிக்கல்ல ஏதாவது ஆயில்மெண்ட் வாங்கினு வரவா.” என்றவன் குரல் வழக்கத்திற்கு முற்றிலும் மாறாக கனிந்து வெளிவர, அவனை ஆவென பார்த்தாள் கார்த்திகா.

குமரன் அவள் பார்வையை உணர்ந்து, என்னவென தலையை ஆட்டி சைகையில் கேட்க, இடவலமாக தலையசைத்து ‘ஒன்றுமில்லை.’ என்றுவிட்டாலும், “மருந்து வாங்கிட்டு வரவா.” என்று மீண்டும் கேட்டவனை அனுப்பிவிட்டு தனியே அமர்ந்திருக்கும் துணிவு வரவில்லை.

“இல்ல வேண்டாம்…” என்று அவள் இழுக்க,

“நாளைக்கு காலேஜ் போக வேணாமா.” என்றான் குமரன்.

கார்த்திகா கொஞ்சம் பாவமாக அவன் முகம் பார்க்க, “மூஞ்சி வீங்கி போய், பார்க்கவே அசிங்கமா இருக்கு. இதோட எப்டி காலேஜ் போவ.” என்றான் மீண்டும். அவன் பேசியதில் ‘அசிங்கமா இருக்கு’ என்றது மட்டுமே மனதில் பதிய, முகம் சுருக்கிக் கொண்டவள் “வேண்டாம்…” என்று முறுக்கிக்கொண்டாள்.

“சும்மா அடம் பண்ணாத. நான் போயிட்டு வாங்கிட்டு வரேன்.” என்றவன் எழுந்துவிட,

“எனக்கு தனியா இருக்க பயமா இருக்கு.” என்று அவள் இயல்பை மீறி சத்தமிட்டாள் கார்த்திகா.

குமரனுக்கும் அவள் தயங்கிய காரணம் அப்போதுதான் உரைத்தது. ஆனால், அப்படியே விட மனதில்லாமல் “காலைல ரொம்ப வலிக்கும். நீ தாங்கமாட்டா.” என்றான் ஒருவிரல் நீட்டி.

கார்த்திகா அதற்குமேல் என்ன சொல்வது என்று புரியாமல் மௌனமாக படுத்துக்கொள்ள, “என்கூட வர்றியா. ஹாஸ்பிடல் போகலாம்.” என்றான் அவன்.

“எனக்கு எதுவுமே வேணாம். கொஞ்சநேரம் தூங்கினா போதும்.” என்று அவள் சலித்துக்கொள்ள, குமரனும் ‘போடி.’ என விட்டுவிட்டான்.

பிறவிக்குணம் என்று ஒன்று உள்ளதே. யாரிடமும் பெரிதாக இறங்கிப்போய் பழக்கமில்லாதவன் அவன். இப்படி பார்த்து பார்த்து மற்றவரைக் கவனித்தும் பழக்கம் இல்லை. சம்பாதிப்பதை ராணியிடம் கொடுத்துவிட்டால் அவன் வேலை முடிந்தது. மொத்தத்தில் தனிக்காட்டு ராஜா என்பார்களே… அப்படி வாழ்ந்து வந்தவன் தான் அவன்.

என்னவோ, கார்த்திகா விஷயத்தில் தவறிப் போனதால், அவள் மீது இயல்பாகவே ஒரு கனிவு வந்திருந்தது. இத்தனை நாட்களில் கனிவு பிடித்தமாகவும் மாறியிருக்க, சொல்லமுடியாத ஒரு உரிமையுணர்வு அவள் மீது கிளர்ந்திருந்தது.

அந்த உரிமையில் தான் அணைத்துக் கொண்டது, கன்னம் தொட்டது எல்லாமே. அதன்பின்னர் மருந்து வாங்கி வரவா என்றதும், அவள் மீது கொண்ட அன்பால் தான். ஆனால், கார்த்திகா கிளிப்பிள்ளை போல் அத்தனைக்கும் வேண்டாம் சாமி போட, அவனும் முறுக்கிக்கொண்டு ஒரு ஓரம் படுத்துவிட்டான்.

கார்த்திகா அவன் அளவுக்கெல்லாம் யோசிக்கவே இல்லை. இந்த கல்லுக்குள் கனிவு, காதலெல்லாம் எதிர்பார்ப்பாளா அவள்? அந்த நிமிடம் அவன் வீட்டில் அவளுடன் இருப்பதே பெரிய நிம்மதியாக இருக்க, படுத்த பத்து நிமிடத்திற்கெல்லாம் உறங்கிவிட்டாள் அவள்.

குமரன் புரண்டுகொண்டே இருந்தவன் உறக்கம் வராமல் எழுந்து அமர்ந்துவிட, பார்வை உறங்கிக்கொண்டிருந்த மனைவியின் மீது பதிந்தது. மனதின் உந்துதலில் எழுந்து அவள் அருகில் வந்து அமர்ந்தவன் மெல்ல அவள் கன்னம் தொட, ம்ஹூம்… எந்த எதிர்வினையும் இல்லை அவளிடம்.

ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தவளை அப்படியே விட மனம் வராமல் எழுந்தவன் சமையல்கட்டில் இருந்த மஞ்சளை நீரில் கலந்து மெல்ல அவள் கன்னத்தில் பூசிவிட, அதைக்கூட உணராமல் உறங்கி கொண்டிருந்தாள் அவன் மனைவி.

“பொம்பளை கும்பகர்ணனா இருப்பா போல..” என்று சத்தமாக தனக்குள் பேசிக் கொண்டவன் சிறு சிரிப்புடன் கையை கழுவிவந்து மீண்டும் அவள் அருகில் அமர்ந்துவிட, கார்த்திகாவின் முகம் நிச்சயம் வசீகரித்தது அவனை.

‘என்னமோ பண்றா.’ என்று புலம்பிக் கொண்டவனை ‘விலகிச் செல்.’ என்று மூளை கட்டளையிட, மனமோ அதன் பேச்சைக் கேட்பதாக இல்லை.

‘என் பொண்டாட்டி இவ.’ என்று உள்ளம் கட்டியம் கூற, இன்று நடந்த கலவரத்தில் அவள் தன்னை அணைத்து கொண்டதும் துணிச்சல் கொடுக்க, வாழ்வில் முதல்முறையாக ஒரு பெண்ணிடம் பித்து கொண்டான் குமரகுரு.

அந்த நிமிடம் அவளை விட்டு விலக முடியாமல் எதுவோ ஒன்று அவனை ஈர்க்க, மெல்ல அவள் அருகில் குனிந்தவன் அவளின் அடிபட்ட கன்னத்திற்கு மேலாக அவளின் நெற்றியின் பக்கவாட்டு பகுதியில் தன் முதல் முத்தத்தை முத்தாய்ப்பாய் பதித்து விட்டான்.

கைகள் இரண்டையும் பக்கவாட்டில் லேசாக உயர்த்தியபடியே குனிந்திருந்தவன் அவளை முத்தமிட்ட மறுநிமிடம் ‘தப்புடா குமரா… உன்னை நம்பி உன்கூட இருக்கா.’ என்று அவனது நியாயமனம் அழுத்தமாக கண்டிக்க, பட்டென விலகி அமர்ந்துவிட்டான்.

அவளுக்கு அருகில் இருந்த சமையலறைத் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டவன் கார்த்திகாவின் முகம் பார்த்தபடியே இருக்க, ‘ஏன்டி இப்படி பண்ற.’ என்று சத்தமில்லாமல் அவளிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தது மனது.

இதுவரை பெண்களையே பார்த்திராதவன் எல்லாம் இல்லை. ஆனால், பெரிதாக யாரும் ஈர்த்தது இல்லை அவனை. இந்த இருபத்தியாறு வருட வாழ்க்கையில் எந்த பெண்ணிடமும் நின்றுகூட பேசியவனில்லை அவன். முதன்முதலில் தொட்டது, தூக்கியது, தாலி கட்டியது, இதோ இப்போது மொத்தமாக விழுந்து கிடப்பது என்று அத்தனையும் கார்த்திகாவிடம் தான்.

அவன் அளவில் அது பிடித்து இருந்தாலும், கார்த்திகா என்ன முடிவெடுப்பாளோ என்று தெரியாமல் அவளிடம் இப்படி நடந்து கொள்வது தவறாகப்பட, இனி அவளை நெருங்குவதில்லை என்று அவசரமாக முடிவெடுத்துக் கொண்டான் அந்த அர்த்த ராத்திரியில்.

அப்படியே அமர்ந்திருந்தவனுக்கு உறக்கம் கண்களை சுழற்ற, அங்கிருந்து எழுந்து சென்று விலகிப் படுக்க மனமில்லாமல், கார்த்திகாவின் தலைக்கு அருகில் தலை வைத்து அப்படியே அவளுக்கு எதிர்புறமாக படுத்துவிட்டான்.

இருவரின் முகமும் அருகருகில் இருக்க, உடல் எதிரெதிர் திசையில் இருந்தது. “சீக்கிரமே உன்னை கரெக்ட் பண்றேன்.” என்று வெட்கமே இல்லாமல் உறங்குபவளிடம் நெஞ்சை நிமிர்த்திக் கூறிக் கொண்டவன் அவளைப் பார்த்தபடியே உறங்கிப் போனான்.

காலையில் முதலில் கண்விழித்த கார்த்திகா, அத்தனை அருகில் குமரனின் முகத்தை எதிர்பார்க்காமல் “அம்மா…” என்று மெல்லியகுரலில் அலறிவிட, அவளின் அந்த சத்தத்திற்கே எழுந்து கொண்டான் குமரன்.

அவளின் அலறலைக் கண்டுகொள்ளாமல், தன்னை இயல்பாக காட்டிக் கொண்டவன் எழுந்து குளியலறைக்குள் நுழைந்து கொள்ள, இன்னும் அதிர்ச்சி மாறாமல் தான் அமர்ந்திருந்தாள் கார்த்திகா.

முகத்தை எதுவோ இறுகப் பற்றியிருந்ததுப் போல் தோன்றியதில் தன் கைக்கொண்டு முகத்தை தடவியவள் கைகளில் காய்ந்த மஞ்சள் துகள்களாக உதிர்ந்து வர, ‘இவனா போட்டுவிட்டது..’ என்று அதிர்ச்சியில் எப்போதும் போல் சிலையாக அமர்ந்துவிட்டாள் அவள்.

குமரன் குளியலைறையிலிருந்து வெளியே வந்து கூடையை எடுத்துக்கொண்டு பால் வாங்க புறப்பட்டவன் அவள் அதிர்ச்சியில்  அவளை நின்று ஏறிடவும், வேகமாக எழுந்து குளியலறைக்குள் ஒளிந்து கொண்டாள் அவள்.

முகத்தில் தண்ணீரை எடுத்து அடித்தவள் கைகளால் முகத்தை தேய்க்கவும், முகத்திலிருந்த மஞ்சள் அவள் கைகளுக்கு இடம் மாற, அந்த மஞ்சள் தோய்ந்த கரங்கள் காரணமில்லாமல் முகத்தை சிவக்கச் செய்தது. ‘முகத்துல மஞ்சள் பூசுனது கூட தெரியாமலா தூங்குனோம். அம்மாக்கு தெரிஞ்சுது… கொன்னுடுவாங்க என்னை.” என்று நினைத்துக் கொண்டவள் மெல்ல சிரித்துக் கொண்டே நின்றுவிட்டாள்.

குமரனுக்கு காலையிலேயே மண்டை காயும் நிலை. அவள் முகத்திலிருந்து அவள் என்ன நினைக்கிறாள் என்பதை கணிக்க முடியவில்லை அவனால். இன்னும் முகம் பார்த்து அகம் படிக்கும் அளவிற்கு நெருக்கம் இல்லையே.

அவள் அருகில் படுத்திருந்ததைக் கொண்டு தன்னை  ஏதும் தவறாக நினைக்கிறாளோ என்ற நினைவே கசக்க, அதே சிந்தனையில் தான் பால் வாங்கி வந்தான். என்னவோ, கார்த்திகாவும் இத்தனை நாள் இல்லாமல் அன்று அவன் முகம்கூட பாராமல் தவிக்கவிட, வீட்டில் இருக்கவே பிடிக்காமல் போனது அவனுக்கு.

காலையில் பல்லைக்கூட விலக்க மனமில்லாமல், அவளிடமும் எதுவும் கூறாமல் தனது காக்கி சட்டையை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டான் அவன்.

அவன் கதவைத் திறந்த சத்தத்தில் சமையல் தடுப்புக்குள் இருந்து எட்டிப் பார்த்தவள் ‘டீ கூட குடிக்காம போறாங்களே.’ என்று நினைத்தாலும், செல்லும் அவனை அழைக்கும் தைரியம் வரவில்லை.

அந்த வீட்டிற்கு அவள் வந்த நாள் முதலாக, இப்படி அவன் சொல்லிக்கொள்ளாமல் செல்வதும் இதுதான் முதல்முறை. ‘அப்படி என்ன அவசரம்.’ என்று கோபம் கொண்டாலும், அதை அவனிடம் வெளிப்படுத்த முடியாதே என்று மௌனமாகிப் போனாள் அவள்.

எப்போதும் போல டீ வைத்து இருந்தாலும், என்னவோ ருசிக்கவில்லை அன்று. குமரனின் அழுத்தமான பார்வை இல்லாமல் அந்த காலை வேளையில் ஏதோ தவறிப் போனதாக உணர்ந்தவளுக்கு அடுத்து எதையும் செய்ய மனம் வராமல் போக, அமைதியாக ஒருபக்கம் அமர்ந்துவிட்டாள்.

மனம் நிதானமாக சிந்திக்க தொடங்கவும், நேற்று நடந்த நிகழ்வுகள் அடுத்தடுத்து நினைவுக்கு வந்தது. பிரியா கூறியதில் இருந்து அவளுக்கும், கதிருக்கும் என்னவோ பிணக்கு என்பது வரை புரிந்தது.

அவர்களின் காதலை நினைத்தும் தானாகவே ஒரு விரக்திப் புன்னகை மலர்ந்தது அவள் இதழ்களில். ‘இந்த காதலுக்காகவா தான் பலியாக்கப்பட்டோம். இவ்வளவு தான் இவர்கள் காதலா.’ என்ற எண்ணமே கசந்து போனது.

அவள் அண்ணனைப் பற்றி நன்கு அறிந்தவள் என்பதால் பிரியா அவனுக்கு சரியான துணை இல்லை என்று திண்ணமாக தெரிந்து போனது அவளுக்கு. அவன் குணத்தில் அப்படியே அவன் தந்தையை கொண்டு பிறந்தவன்.

இப்படி சத்தமாக பேசுவது, அதட்டுவது, கேள்வி கேட்பது என்று எதுவுமே அவன் குணத்திற்கு ஒத்து வராதே. அதிகமாக கண்டிக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக தானே அவன் மகாவை வெறுத்தது. அப்படிப்பட்டவனிடம் இவள் இப்படி கத்தி வைத்தால், எங்கே இவர்கள் சேர்ந்து வாழ்வது.?

‘என்ன தைரியத்தில் இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.’ என்று நினைத்தவளுக்கு இதற்கு என்ன தீர்வு என்று புரியவே இல்லை.

பிரியா கூறியபடி தன்னை குமரன் விரட்டிவிட்டாலும் கூட, அதற்கெல்லாம் பயந்து பணிந்து செல்பவனில்லை கதிர் என்பதும் புரிய, ‘முதலில் உன் வீட்டில் உன்னை ஏற்றுக் கொள்வார்களா.’ என்று ஏளனமாக சிரித்தது மனது.

அன்று அன்னை காவல் நிலையத்தில் வைத்து பேசிச் சென்றது இன்னும் மறக்காமல் இருக்க, நிச்சயம் தன்னை ஏற்கமாட்டார் என்பது வருத்தம் கொடுக்க, ‘நான் என்ன தப்பு செஞ்சேன்.’ என்று கோபம் கொண்டது மனது.

அதுவும் நேற்று பிரியா பேசியதில் இருந்தே, இவர்கள் சண்டையில் அன்னையும் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதுவரை புரிந்திருக்க, அதுவும் வருத்தியது அவளை.

‘தவறு செய்தவனை ஏற்றுக்கொண்டு அவனுக்காக சண்டையிடுபவர், ஒரு தவறும் செய்யாத தன்னை மட்டும் தண்டித்தது எந்த விதத்தில் நியாயம்’ என்று உள்ளம் கலங்க, அதன் வெளிப்பாடு கண்களிலும் வெளிப்படும்படியே அமர்ந்து கொண்டிருந்தாள் அவள்.

குமரன் காலை ஆறு மணிக்கு வெளியேச் சென்றவன் அப்போதுதான் மீண்டும் வீடுவர, மனைவியின் அழுத முகம் கண்ணில்பட்டு காயப்படுத்தியது அவனை.

‘எதுக்கு இப்போ அழுதுட்டு இருக்கா.’ என்று நினைத்தாலும், அதை கேட்காமல், “காலேஜ் கிளம்பலையா.” என்றான் வழக்கம்போல்.

கார்த்திகா அவனை விநோதமாகப் பார்த்தவள் “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை.” என, “ஹான்.” என்று விழித்து நின்றான் குமரன்.

அதுவரை அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதே அவனுக்கு மறந்து போயிருந்தது. வழக்கமாக அவன் வேலைக்கு செல்லும் உணவகத்திற்கும் சென்றிருக்கவில்லை. நேரம் அப்போதே ஏழைத் தாண்டி இருக்க, அவசரமாக உடையை மாற்றிக்கொண்டு மீண்டும் ஓடிவிட்டான் அவன்.

Advertisement