Advertisement

தித்திக்கும் முத்தங்கள் 15

பிரியா அழுது சிவந்த விழிகளுடன் தனது தாய்வீடு இருந்த குடியிருப்பை நெருங்க, வழக்கம்போல் அந்த குடியிருப்பின் கீழே இருந்த தண்ணீர்த்தொட்டிக்கு அருகில் அமர்ந்து கதையளந்து கொண்டிருந்தார் ராணி. தொலைவில் வரும்போதே அவரைப் பார்த்துவிட்ட பிரியா “அம்மா…” என்று அழுகையுடன் அழைக்க, அவள் தோற்றம் கண்டு பதறிப்போனார் ராணி.

“பிரியா…” என்று அவர் வேகமாக மகளை நெருங்க, அன்னையை அணைத்துக்கொண்டு கதறி தீர்த்தாள் பிரியா.

“பாவி மவளே… என்னடி ஆச்சு. ஏன் இப்படி கந்தரிகோலமா வந்து நிற்கிற?” என்று அவர் விசாரிக்க,

“ம்மா… நான் ஏமாந்துட்டேன்மா. அவன் என்னை நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டான்மா. அவனும், அவன் ஆத்தாளும் சேர்ந்து என்னை அடிச்சுட்டாங்கம்மா. உனக்கு போவ இடமில்லடின்னு சொல்றான்மா அவன்.” என்று அழுகையுடன் மகள் குறை படிக்க,

“அவனை நம்பி போனியே நாயே… உனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.” என்று தன் பங்கிற்கு இரண்டு அடி வைத்தார் ராணி.

பிரியா அவர் அடிகளை அமைதியாக வாங்கிக் கொண்டவள், “எனக்கு கேட்க யாருமில்லைன்னு சொல்றான்மா.” என்று மீண்டும் அழ,

“ஏன், நான் என்ன செத்தா போயிட்டேன்? வாடி என்கூட. இன்னிக்கு ஆத்தாளையும், மவனையும் ஒருவழி பண்ணல, நான் ராணி இல்ல. வாடி.” என்று மகளின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு மீண்டும் மகாலட்சுமியின் வீடு இருந்த பகுதிக்கு வந்துவிட்டார் ராணி.

பிரியா இன்னும்கூட அவளது கிழிந்த உடையை மாற்றாமல் இருக்க, ராணியும் அதைப்பற்றி அக்கறை காட்டவில்லை. அன்னையும் மகளும் கதிர் வீடு இருந்த குடியிருப்பின் கீழ் நின்றிருக்க, அங்கிருந்தே “டேய்… பொம்பளை மேல கைய வச்ச பொறம்போக்கு, கீழே இறங்கி வாடா.” என்று உச்சஸ்தாயில் கத்தினார் ராணி.

பிரியா அமைதியாக நிற்க, “என் மக மேல கைய வச்சவன் இப்போ இங்க வந்தாவனும். குடிகார நாயே… உன்னை நம்பி  உன்கூட வந்ததுக்கு என் பொண்ணு மேல கையை வைப்பியா.. வெளிய வாடா மானங்கெட்டவனே. ஆம்பளையா இருந்தா வாடா.” என்று அவர் கத்திக் கொண்டிருக்க, மேலே அவனைப் பிடித்து வைக்க படாதபாடுபட்டுக் கொண்டிருந்தார் மகா.

“ம்மா.. உடும்மா என்னை…” என்று கதிர் எகிறிக் கொண்டிருக்க, “கீழேப் போவாதடா. இந்த ஒருவாட்டி என் பேச்சை கேளு. அந்த பொண்ணு மேல நீ கையை வச்சது தப்பு. அவ பெத்தவ… தாங்க முடியாம கத்தினு இருக்கா. நீ போனா சண்டை பெருசாதான் ஆவும். போவாத.” என்று அவர் மகனை அடக்கி வைக்க, அந்த நேரம் தான் “ஆம்பளையா இருந்தா வாடா.” என்றிருந்தார் ராணி.

“மோவ். விடும்மா என்னை. அவளுங்களை என்ன பண்றேன்னு மட்டும் பாரு.” என்று அதற்குமேல் அடங்காமல் கதிர்வேல் கீழே இறங்கிவர,

“வாடா… வா…” என்று ராணி சேலையைத் தூக்கி செருகிக் கொள்ள,

“பொம்பளையாச்சேன்னு பார்க்குறேன். வயசுக்குக்கூட மரியாத குடுக்கமாட்டேன்… போய்டு.” என்றான் கதிர்.

“நீ இன்னாடா எனக்கு மரியாத குடுக்கறது. கட்டினவளை வச்சு வாழ துப்பு இல்ல. நீ எனக்கு மரியாத குடுக்கறியா.” என்று ராணி அடங்காமல் வாயைவிட,

“ஏய். உன்கிட்டலாம் பேச முடியாது கிளம்புடி.” என்று கதிரும் மரியாதைக்குறைவாக பேசிவைக்க, “வேலு.” என்று அவனை அதட்டியபடியே வந்து நின்றார் மகா.

“நீ பேசாம இரு.” என்று மகனை அடக்கியவர் “ஏம்மா. புருஷன் பொண்டாட்டி தகராறு, அதுங்களே பேசி முடிச்சுக்கும். நீ போம்மா. ஆம்பளைப்பையனை நீ மரியாத இல்லாம பேசுனா, அவன் என்ன பண்ணுவான்? நீ போம்மா இங்கேருந்து.” என்று  ராணியை திருப்பி அனுப்ப பார்க்க,

“ஏய்… நீ யாருடி நடுவுல. அவன் என் பொண்ணை அடிப்பான், நான் அவனுக்கு மரியாத கொடுத்து மனையில உக்கார வைக்கணுமா.” என்றார் ராணி.

“தேவையில்லாதத எல்லாம் பேசாத.” என்று மகா பேசும்போதே, “ஏய். எங்க அம்மாவையா டின்னு சொல்ற.” என்று கையை ஓங்கிக்கொண்டு ராணியை அடிக்கப் பாய்ந்தான் கதிர்.

“டேய்… …….. பிறந்தவனே. என்னையா அடிக்க வர. இன்னிக்கு உன்னை விடறதா இல்லடா.” என்று அவனுக்கு சரிக்கு சரியாக எகிறிய ராணி காது கொடுத்து கேட்கமுடியாத அளவுக்கு கெட்டவார்த்தைகள் பேசத் தொடங்கியிருந்தார்.

அவர் பேச்சில் ஆத்திரம் கொண்ட கதிர் தன் அன்னையையும் மீறி ராணியை அடித்துவிட, ராணியும் பதிலுக்கு அவன் வாயிலேயே ஒன்று போட்டிருந்தார். இடையில் பிரியா தன் மாமியார் மீது கையை வைக்க முற்பட, அவளைப் பிடித்து கீழே தள்ளிவிட்டான் கதிர்.

ராணி, “ஐயோ என் மவ.” என்று பதறிப்போய் மகளைத் தூக்க,

“ஒழுங்கா ரெண்டு பேரும் ஓடிப் போய்டுங்க. என் அம்மா மேல கையோங்குற அளவுக்கு ஆளாடி நீ.” என்று கதிர் மீண்டும் பிரியாவை நெருங்க, “டேய்.” என்று மீண்டும் அவன் சட்டையைப் பிடிக்கப் பாய்ந்தார் ராணி.

மகாவுக்கும் அதற்குமேல் பொறுக்க முடியாமல் போக, மகனின் சட்டையைப் பிடித்திருந்த ராணியைப் பிடித்து கீழே தள்ளி விட்டவர் “இதுக்குமேல அவன் மேல கைய வச்ச… நாறி போய்டும். மருமவன்னும் பார்க்கமாட்டேன். அவ அம்மான்னும் பார்க்க மாட்டேன் போடி.” என்றுவிட,

“என்னாடி பண்ணுவ. நீ என்ன பண்ணுவேன்னு நான் பார்க்கணும். பண்ணுடி.” என்று சட்டமாக கூறியபடி ராணி அங்கேயே நிற்க,

“நீ என்ன பண்ணுவ?” என்றார் மகாலட்சுமி.

“உன்னை இன்னா வேணாலும் பண்ணுவேன். நீ இந்த இடத்துலே இருக்க முடியாத மாறி பண்ணிடுவேன்.” என்று ராணி கத்த,

“உன்னால முடிஞ்சதை பாரு, கிளம்பு.” என்றார் மகாலட்சுமி.

“உன்னையும், உன் புள்ளையும் களி துன்ன வைக்கில பாருடி.” என்று ஆங்காரமாக கூறிய ராணி மகளை இழுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்ப, சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்தவர்களை பார்க்க கூசியவராக வேகமாக வீட்டிற்குள் சென்று அடைந்துகொண்டார் மகா.

அவரும் பிரியா சென்ற நிமிடம் தொட்டு, ஓயாமல் திட்டிக் கொண்டு தான் இருந்தார் கதிர்வேலை. மகனும் தவறை உணர்ந்தானோ என்னவோ… அவர் ஏச்சு பேச்சுக்களை கேட்டுக் கொண்டு அமைதியாகத் தான் அமர்ந்திருந்தான்.

அவனை அதட்டி மிரட்டி அவன் தவறை உணரச் செய்து, பிரியாவை அழைத்து வந்துவிட வேண்டும் என்று நினைத்தபடி மகா பேசிக் கொண்டிருக்கையில் தான் ராணியும், பிரியாவும் வந்தது. வந்தவர்கள் அப்படி ஒரு ஆட்டம் ஆடிவிட்டு சென்றிருக்க, மகன் மீண்டும் முருங்கைமரத்தில் ஏறியிருந்தான்.

மனைவியை அடித்து துரத்திய கதிரை விடவும், அதிகமாக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் மகாலட்சுமி. விளையாட்டு விவகாரமா. இப்படி அடித்துக் கொண்டு ஆளுக்கொரு திசையில் சென்றால் வாழ்க்கை என்னாவது என்று உள்ளுக்குள் கலங்கி போனார் அவர்.

ராணியையெல்லாம் ஒரு ஆளாகக் கூட மதிக்கவில்லை மகாலட்சுமி. ‘மகளின் வாழ்வைப் பற்றிக்கூட கவலை இல்லாமல் இப்படி பேயாக ஒரு பெண் இருப்பாளா. நாளை மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டாமா… அறுத்து எறிந்துவிடும் சொந்தமா’ என்று அநேக எண்ணங்கள்.

மகன் தானே தன் வாழ்வை சீரழித்துக் கொண்டான் என்று புரிந்தாலும், எப்படியாவது அவன் தவறுகளை சரிசெய்து அவனை வாழ வைக்கத்தான் நினைக்கிறார் அவர். ஆனால், அவர் மகனின் மனைவிக்கும் அவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவாவது இருக்க வேண்டுமல்லவா…

அவள் தான் யோசிக்கவே தயாராக இல்லையே. கதிர்வேல் அடித்தது மட்டுமே அவள் நினைவில் இருக்க, அவள் பேசியதெல்லாம் வசதியாக மறந்து போயிருந்தது. கதிர்வேல் அவளை ஏமாற்றிவிட்டதாக அவளே முடிவு செய்து கொண்டு, அவனை எப்படியும் மீண்டும் தன் கைக்குள் வைக்க வேண்டும் என்று ஆங்காரமாக எண்ணமிட்டவள் அதற்கான வழிகளைத் தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

ராணி மகளை வீட்டின் கீழே தெருவில் அமர்த்திக்கொண்டு அங்கிருந்த தன் தோழிகளிடம் தன் மகளின் கதையைக் கூறி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, அங்கிருந்த பெண்களோ மேலும் அவரை ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தனர்.

“உனக்கு இதெல்லாம் தேவையா. நீ இருந்த இருப்புக்கு அவன் கூட போனியே.” என்று பிரியாவையும் அவர்கள் சாடிக் கொண்டிருக்க,

“குப்பைல இருந்தது எல்லாம் இன்னிக்கு கோபுரத்துல ஏறி உட்கார்ந்துடுச்சு. நீ அவன்பின்னாடி போய், இப்படி நாசமாகி வந்து நிக்கிற.” என்றாள் ஒருத்தி.

“ம்ம்க்கும்.. அவன் அப்பன் லட்சணத்துக்கு இப்படி ஒரு வாழ்க்கைய நினைச்சு பார்த்திருப்பாளா அவ. அப்படி கமுக்கமா போவும் வரும். அது இருக்கறதே தெரியாது. ஆனா, புளியங்கொம்பா உன் அண்ணனை பிடிச்சா பாரு. அது சாமர்த்தியம்.”

“நீயும் இருக்கியே. அந்த குடிகார பயலோட ஓடிப்போய், முழுசா ஒருமாசம் கூட ஆவல. இதுக்குள்ள அந்த நாதாரி உன்னை கைநீட்டி அடிச்சுருக்கான்.” என்றாள் மற்றொருத்தி.

பிரியாவின் மனதில் குடிகொண்டிருந்த சாத்தான் இவர்களின் பேச்சில் முழுதாக தலைவிரித்து ஆடத் தொடங்கியிருக்க, தன் வாழ்க்கையை மறந்து போனவள், ‘அவள் எப்படி வாழலாம்.’ என்று கொதிக்கத் தொடங்கினாள்.

ராணியிடம், “அவளை விடவே கூடாதும்மா. நான் இங்கே வாழாம வந்து நிக்கிறேன். அங்க உன் மகன் மாமியார் வீட்டோட செட்லாக பார்க்கிறான். அவ துணியெல்லாம் இவனே போய் வாங்கிட்டு வந்தான்மா. அங்கியே நான் நிக்கிறேன், என்னை எப்படி இருக்கன்னு கூட ஒரு வார்த்தை கேட்கலம்மா.” என்று அழுதவள் “அவ என் அண்ணனோட வாழக்கூடாதும்மா. என்னை மாறியே அவளும் அவ வீட்ல போய் கிடக்கட்டும். அப்போதான் இவனுக்கும் உரைக்கும். நீ வாம்மா. அவளை விடவே கூடாது.” என்றவள் அன்னையை அழைத்துக்கொண்டு குமரனின் வீட்டை நெருங்க, ஆரம்பம் முதலே தன் வீட்டின் ஜன்னலருகே நின்று இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ராஜம்மா தன் அலைபேசியில் இருந்து குமரனை அழைத்துவிட்டார்.

அவர் குமரனுக்கு தகவல் கொடுத்துவிட்டது தெரியாமல் இருவரும் கார்த்திகாவின் வீட்டிற்கு முன்னே நிற்க, அவள் கதவைத் திறந்த நிமிடம் அவளைத் தள்ளிக்கொண்டு உள்ளே  நுழைந்துவிட்டனர் தாயும் மகளும்.

கார்த்திகா அவர்களை எதிர்பாராமல் பயந்தவளாக பின்னடைய, “என்னமா நடிக்கிறா பாரேன். அப்படியே பயந்தவ தான். என் அண்ணனை வளைச்சு போடும்போது பயமா இல்லையா.” என்ற பிரியாவின் பேச்சில்தான் அவள் குமரனின் தங்கை என்பதே உரைத்தது அவளுக்கு.

‘கதிர் பொண்டாட்டியா.’ என்று கார்த்திகாவின் எண்ணம் செல்ல, அவளை அதிகம் யோசிக்கவிடாமல் வேகமாக அவளை நெருங்கி அவள் கன்னத்தில் அறைந்துவிட்டார் ராணி.

தவறே செய்யாமல் அடி வாங்கிய குழந்தையைப் போல் கார்த்திகா கன்னத்தைப் பிடித்துக்கொண்டு நின்றுவிட, அதீத வலியில் கண்கள் கலங்கிவிட்டது அவளுக்கு.

“என்னடி அப்படி ஒன்னும் தெரியாதவ மாறி முழிக்கிற… எப்போ உன் அண்ணன் என் மவளை அடிச்சு துரத்திட்டானோ, நீயும் இனி என் புள்ளையோட வாழக்கூடாது. போடி வெளிய.” என்ற ராணி விரலை சொடுக்கி அவளை விரட்ட, பயத்துடன் இன்னும் சுவற்றில் ஒண்டினாள் கார்த்திகா.

அவள் அப்படி அசையாமல் நின்றதே அன்னைக்கும், மகளுக்கும் ஆணவமாக தெரிய, பிரியா அதற்குமேல் பொறுக்கமுடியாமல் கார்த்திகாவின் தலைமுடியை கொத்தாகப் பற்றி விட்டாள்.

“இந்த வேஷம் கட்டிதான் என் அண்ணனை மயக்கினியா.” என்று அசிங்கமாக பேசியவள், “வாடி நாயே.” என்று அவளைப் பிடித்து வெளியே இழுக்க முற்பட, அலமாரியில் வைத்திருந்த அவள் அலைபேசி அடிக்கத் தொடங்கியது.

பிரியாவின் கவனம் அந்த அலைபேசியில் பதிய, “பார்த்தியாம்மா புது போனு. உன் புள்ளை முழுசா அவ கைக்குள்ள இருக்கான்.” என்றவள் அந்த அலைபேசியை எட்டி எடுத்துக்கொண்டு, கார்த்திகாவின் தலைமுடியைப் பிடித்தபடியே அவளையும் வெளியே இழுத்து வந்தாள்.

“விடு… வலிக்குது விடுங்க.” என்று கத்திய கார்த்திகா அவள் பிடியிலிருந்து விடுபட எத்தனைப் போராடியும் அவளால் பிரியாவின் கையைக் கூட அசைக்க முடியவில்லை.

பிரியா அவள் வேதனையைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் கார்த்திகாவை தரதர வென படிகளில் இழுத்து வந்தவள் வாசலில் நின்று கொண்டு, அவளைத் தெருவில் தள்ளிவிட, அதே நிமிடம் அவசரமாக தன் ஆட்டோவை நிறுத்தி இறங்கினான் குமரகுரு.

அங்கிருந்த அன்னை, தங்கை யாரையும் கண்டுகொள்ளாமல் வேகமாக கார்த்திகாவை நெருங்கியவன் கீழே விழுந்து கிடந்தவளை எழுப்பி அமர்த்த, குமரனைக் காணவும் சிறுபிள்ளையாக உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள் அவன் மனைவி.

குமரன், “ஒன்னும் இல்லமா அழாத.” என்றவன் அவள் கன்னம் தொட, “ஆஆ..” என்று வலியில் முகம் சுருக்கினாள் அவள்.

குமரன் அவளை அந்த நிலையில் காணச் சகியாமல், தன்னோடு அணைத்துக் கொண்டான். மொத்தமாக பயந்து பதட்டம் கொண்டிருந்தவள் அவன் அணைப்பை அந்த நிமிடம் பாதுகாப்பாக உணர, அவளையுமறியாமல் குமரனைக் கட்டிக்கொண்டாள் கார்த்திகா.

அழுகையும் அத்துமீற, அவன் சட்டையில் முகம் மறைத்து அப்படி ஒரு அழுகை. குமரன் மெல்ல அவளை சமாதானம் செய்ய, “இன்னாடா நடக்குது இங்க. ரோட்ல வச்சு அசிங்கம் பண்ணினு இருக்க. தங்கச்சிக்காரி இப்படி அடிவாங்கி வந்து நிக்கிறா. அவளை என்னனு கேட்கல. வந்த ஒடனே பொண்டாட்டியை கட்டிப்பிடிக்குறான். த்தூ…” என்று ராணி நீட்டி முழக்க, அவரை அலட்சியமாகப் பார்த்த குமரன் நிதானமாக தன் மனைவியின் கண்களைத் துடைத்து அவளை எழுப்பி நிறுத்தியபின்பே தன் தாயின் புறம் திரும்பினான்.

அவன் பார்வையில் ராணி லேசாக கலக்கம் கொள்ள, கண்ணீருடன் ஓடிவந்து அவன் கையைப் பிடித்தாள் தங்கை.

“அண்ணா… இவ அண்ணன் என்னை அடிச்சுட்டாண்ணா. கேட்க வந்த அம்மாவையும் அடிச்சுட்டான். அதை கேட்க வந்தா இவளும் மரியாதையில்லாம பேசுறா.” என்று மனசாட்சியில்லாமல் கோள்மூட்ட, குமரனுக்கா தன் தங்கையைத் தெரியாது.

நிதானம் மாறாமல், தன் கையைப் பிடித்திருந்த தங்கையின் கையை விலக்கி அவளை தூர நிறுத்தியவன் அவள் என்ன ஏதென்று தெளியும் முன்பே, பளாரென ஒரு அறைவிட்டான்.

பிரியா அதிர்ந்தவளாக நிற்க, “இது அவளை புடிச்சு கீழ தள்ளினதுக்கு. இந்த அறை உனக்கு எப்பவும் ஞாபகம் இருக்கணும். இன்னொருவாட்டி என் பொண்டாட்டி மேல கைய வைக்கிற நினைப்பே வரக்கூடாது. புரியுதா.” என்றான் அழுத்தமாக.

அவன் பேச்சிலும், அவன் கொடுத்த அறையின் வீரியத்திலும் பிரியாவுக்கு அண்ணனின் கோபம் புரிந்தாலும், விட்டுவிடும் எண்ணம் வரவில்லை.

“அப்போ என் வாழ்க்கைக்கு என்ன வழி. நான் வாழாவெட்டியா இருப்பேன். இவ சொகுசா என்வீட்ல குடும்பம் பண்ணுவாளா?” என்றாள் ஆத்திரத்துடன்.

“உன்னை அவளா வீட்டை விட்டு ஓடிப்போவ சொன்னா… உன்னை கட்டிக்கிட்டான்ல அவன்கிட்ட போய் உன் வாழ்க்கைக்கு வழி… அவ என் பொண்டாட்டி. அவளுக்கும் உன் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அதோட அவ இருக்கறது உன் வீடு இல்ல, அவ வீடு.” என்று அழுத்தம் திருத்தமாக கூறியவன் அன்னையின் புறம் திரும்ப, அவன் பார்வையைச் சந்திக்க முடியாமல் வேறு புறம் திரும்பிக் கொண்டார் ராணி.

“அவளுக்கு சொன்னது தான் எல்லாருக்கும். வயசுல பெரியவங்களாச்சேன்னு விட்டுட்டு போறேன். இனி என் பொண்டாட்டியை உங்க பிரச்சனையில  இழுக்கக்கூடாது.” என்று மிரட்டலாக கூறியவன் பிரியாவின் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கி, தன் கைப்பிடியில் நின்றிருந்த கார்த்திகாவிடம் கொடுக்க, தயங்கினாலும் உடனே வாங்கிக்கொண்டாள் அவள்.

ராணியும், பிரியாவும் வயிற்றெரிச்சலுடன் அவர்களைப் பார்க்க, பிடித்த பிடியை விடாமல் மனைவியைத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டான் குமரகுரு.

Advertisement