Advertisement

குமரன் சட்டென திரும்பிப்பார்க்க, அதற்குள் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள். குமரன் சிறுசிரிப்புடன் கிளம்பிவிட, அவனிடம் சொன்னதுபோலவே சமைத்து முடித்தவள் சாப்பிட்டு முடித்து தன் பாடங்களை எடுத்து வைத்துக்கொண்டு அமர, குமரன் வந்துவிட்டான்.

அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்க முற்பட்டவளை, “நீ பாரு. நான் போட்டு சாப்பிட்டுக்கறேன்.” என்றபடியே நகர்ந்துகொண்டான்.

சொன்னதுப்போலவே அவன் உண்டுமுடித்து கிளம்பிவிட, அவனை நிமிர்ந்தும் பாராமல் புத்தகங்களில் மூழ்கிப் போயிருந்தாள் கார்த்திகா.

குமரன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாலும், அவன் நினைவெல்லாம் வீட்டில் பதுமைபோல் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தவளைத் தான் சுற்றி வந்தது.

இத்தனை நாட்களில் ஒருமுறைக்கூட அவன் தங்கை புத்தகத்தோடு அமர்ந்து பார்த்தது இல்லை அவன். என்னவோ, படிக்கிறாள்… கல்லுரிச் செல்கிறாள் என்று மட்டுமே தெரியும் அவனுக்கு.

கல்லூரிச் செல்வதை காரணமாக கூறியே வீட்டு வேலைகளையும் எப்போதும் தவிர்த்துவிடுவாள் ப்ரியா. அவள் சமையல்கட்டிற்கு சென்றோ, ஏதாவதோ வேலை செய்தோ பார்த்த நியாபகம் கூட இல்லை குமரனிடம்.

செய்யமாட்டாள் என்பதைவிட அவளுக்கு தெரியுமா என்பதே சந்தேகம் தான். ஆனால், அவள் வயதேயான இளம்பெண். வீட்டில் அத்தனை வேலைகளையும் பொறுப்பாக செய்து முடித்து, படிப்பிலும் கருத்தாக இருக்க மனம் இயல்பாக இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தது.

அதுவும் தன் அன்னையைப் போல் ஏனோ தானோவென்று எந்த வேலையையும் அவள் செய்வதே இல்லை என்பதும் நினைவுவர, அவன் வீட்டு குளியலறையே அதற்கு முக்கிய சாட்சி.

அவன் வீட்டில் எப்போதும் ஒருவித துர்நாற்றம் இருந்துகொண்டே இருக்கும் கழிவறையில். அவன் அன்னை பின்பக்கம் இருக்கும் கழிவுநீர் குழாய்களை காரணமாக சொல்வாரே தவிர, வேறெதுவும் செய்ததே இல்லை.

ஆனால், இங்கு கார்த்திகா அத்தனை  அழகாக பொறுப்பெடுத்துக் கொள்ள, அவன் வீடே மிளிர்ந்து கொண்டிருந்தது அவள் வரவில்.

இத்தனை நாட்கள் அவள் படித்து முடித்து சுயமாக தன் வாழ்வை தானே முடிவெடுக்கும் வரை அவளுக்கு காவலாக இருக்கவேண்டும் என்று மட்டுமே எண்ணம் கொண்டவன் முதல்முறையாக சற்று சுயநலமாக சிந்திக்கத் தொடங்கியிருந்தான்.

என்னவோ, மனம் கார்த்திகாவை எப்போதும் தன்னுடனே வைத்துக் கொள்ள வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்க, தவறென்று புரிந்தாலும் ஆவலை அடக்க முடியவில்லை குமரனால்.

‘கார்த்திகாவின் மீது காதல் இருக்கிறதா?’ என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், நேரம் தவறாமல் கிடைக்கும் சுவையான உணவும், வீட்டில் கிடைத்த அமைதியும், நிம்மதியான உறக்கமும் கார்த்திகாவை நெருக்கமாக உணர வைத்தது. அத்தனையும் அவளால் தான் என்று மனம் சான்றளிக்க, அவளை விடும் எண்ணம் வர மறுத்தது.

இறுதியில் ‘நடப்பது நடக்கட்டும். அவள் படிப்பை முடிக்கவும் பேசிக் கொள்வோம்.’ என்று முடிவெடுத்துக் கொண்டவன் அடுத்தடுத்த வேலைகளை கவனிக்கத் தொடங்கிவிட்டான்.

அன்றுநாள் முழுவதும் உழைத்து களைத்தவன் இரவிலும் வெகுநேரம் சவாரி பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவீட்டை மட்டும் கவனிக்கும்போதே அவன் சம்பாதிப்பது போதாது அவனுக்கு.

ராணியின் செலவுப்பட்டியல் அத்தனை நீளமாக இருக்கும். இப்போது இரண்டு வீட்டையும் பார்த்தாக வேண்டுமே. அந்த கவலையில் நின்று ஆசுவாசிக்க கூட நேரமில்லாமல் இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருந்தான் குமரன்.

முன்புபோல் இரவில் கடலுக்கும் செல்ல முடியாது என்பதால் கிடைத்த நேரமெல்லாம் ஆட்டோவை எடுத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தான்.

வீட்டுச்செலவை தாண்டி கார்த்தியின் படிப்புக்கும் செலவிட வேண்டுமே.. அவளையும் கவனிக்க வேண்டுமல்லவா…

கார்த்திகா கல்லூரிச் செல்ல தொடங்கி இரண்டு நாட்கள் கழிந்திருக்க, நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருப்பவன் சற்றே தன்னை நிதானித்துக் கொள்வது அவளை கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நேரங்களில் தான். அவள் அருகாமை கொஞ்சமே கொஞ்சம் இயல்பாக சுவாசிக்க வைத்தது அவனை.

இதோ இன்று சனிக்கிழமையாக இருக்க, ஆட்டோவை வீட்டு வாசலில் நிறுத்தியவன் வீட்டுக்கதவை தட்டும்போதே நேரம் பத்தைக் கடந்திருந்தது.

கார்த்திகாவிற்கும் அவன் முகம் பார்க்கவுமே, அவன் சோர்ந்து போயிருப்பது புரிந்தது. மனம் அவளறியாமல் அவனுக்காக கவலைக்கொள்ள, குளித்து முடித்து வந்தவன் சாப்பிடுவதற்காக வேகமாக உணவுகளை எடுத்து அடுக்கினாள் அவள்.

அவன் உழைப்பு புரிந்தவளாக உணவில் சற்று கவனமாக சமைக்கத் தொடங்கியிருந்தாள் கார்த்திகா. அங்கு நான்குபேருக்கு சமைத்து பழகியவள் அதில் பாதியை மட்டும் அளவாக கொண்டு சமைக்க, உணவு பெரும்பாலும் வீணாகாது.

ஆனால், ஒரு பொரியல் வைக்கும் இடத்தில் இரண்டு வகை காய்களை சேர்க்க தொடங்கி இருந்தாள். கூடவே தினசரி உணவில் ஒரு முட்டையும் தவறாமல் இருப்பதுபோல் பார்த்துக் கொண்டாள். அதற்குமேல் அவனிடம் நெருங்கவோ, இயல்பாக பேசவோ இன்னும் மனம் இடம் கொடுக்காமல் இருக்க, அவன் வயிற்றை மட்டும் கவனமாக கவனிக்க தொடங்கியிருந்தாள் பெண்.

இதோ இன்றும் அத்தனையும் எடுத்து கடைபரப்பி விட்டாலும், அவன் குளியலறையில் இருந்து வெளியேறுகையில் சுவற்றோடு ஒட்டிக் கொண்டாள். குமரன் இருந்த களைப்பில் அவளைக் கவனிக்காமல் சாப்பிட அமர்ந்துவிட, சரியாக அவன் உணவில் கையை வைக்கும் நேரம் வீட்டின் கதவு தட்டப்பட்டது.

அவன் எழுவதற்குள், “நான் பார்க்கிறேன்.” என்று கார்த்திகா எழுந்துகொண்டாள்.

அவள் கதவைத் திறக்க, வாசலில் ஆறுவயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் நின்றிருக்க, “என்ன வேணும்.?” என்றாள் கார்த்தி.

“குமார் அண்ணா இல்ல?” என்றவன் தோரணையில் கார்த்திகா நகர்ந்து வழிவிட, சாதம் பிசைந்து கொண்டிருந்த குமரனை எட்டிப் பார்த்தவன் “அண்ணா.. ஆயா காசு கேட்டுச்சு. நாளைக்கு குழுக்கு காசு கட்டணுமாம். சாப்பாட்டுக்கும் காசு இல்லையாம்.” என்றான்.

குமரன் என்ன நினைத்தானோ, சட்டென எழுந்துவிட்டான். மனம் முதல்முறையாக யாரோ ஒருவரின் அரவணைப்புக்காக ஏங்கியது. உடலும் வெகுவாக சோர்ந்து போயிருக்க, மதியமும் நேரமின்மையால் சாப்பிடவே இல்லை அவன்.

இதோ இப்போதும் சாப்பாட்டில் கையை வைக்கும் நேரம் ராணி கெடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டிருந்தார். குமரனை பொறுத்தவரையில் பணம் கொடுப்பது பெரிய விஷயமே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் ராணி மறந்து போனாலும், அந்த மகளிர் குழுவின் தலைவியிடமே நேரடியாக சென்று பணத்தை செலுத்தி விடுபவன் தான் அவன்.

அப்படிப்பட்டவன் இப்போது மட்டும் மறந்துவிடுவானா.. தன் மகன் தானே என்ற எண்ணமில்லாமல் ராணி இப்படி நடந்து கொள்வது வலிக்க வைத்தது.

சட்டைப் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டவன் வேறு சட்டையை அணிந்துகொண்டு அந்த சிறுவனுடனே வெளியேறிட, அவன் வேதனையை உணர்ந்து கொள்ள முடிந்தது கார்த்திகாவால்.

அவள் கண்கள் அவனுக்காக கண்ணீரைச் சுரக்க, ‘ஏன்தான் இப்படி இருக்கிறாரோ.’ என்று ராணி மீது ஒரு அதிருப்தி எழுந்தது.

குமரன் ராணியின் வீட்டிற்கு சென்றவன் அவரிடம் ஐந்தாயிரத்தைக் கொடுக்க, மகனின் முகத்தை கேள்வியாகப் பார்த்தார் அவர்.

“குழுக்கு ரெண்டாயிரம் கட்டிட்டு, மூவாயிரத்தை செலவுக்கு வச்சுக்கோ. அடுத்தவாரம் ஏதாவது பார்த்து தரேன்.” என்றவன் அவர் பதிலைக் கேட்காமல் நடந்துவிட,

“பார்த்தியாய்யா.. உன் புள்ளை பிச்சை போட்டுட்டு போறான். இந்த மூணாயிரத்தை வச்சி மூக்குல தான் மோந்து பார்த்துக்கணும் நீயும் நானும். விக்கிற விலைவாசிக்கு வாரம் முழுசும் சோறாக்கி தின்ன வேணாம். அதுசரி… அந்த அக்கறையெல்லாம் அவனுக்கு இருக்கணும்ல.”

“குடிகார பயலே.. நீ ஒழுங்கா இருந்தா, நான் ஏண்டா அவன்கிட்ட பிச்சைக்கு நிற்கணும்? உன் பிள்ளையை பெத்து வளர்த்ததுக்கு எனக்கே அளந்த படி குடுக்கிறான்.. ஆண்டவா… என்னை இப்படி நிறுத்திட்டியே.” என்று அவர் கத்தியது வார்த்தை மாறாமல் குமரனின் காதுகளில் ஸ்பஷ்டமாக விழுந்துவிட, ‘கண்கள் கலங்கிவிடுமோ.’ என்று அச்சமாக இருந்தது அவனுக்கு.

இந்த ஒருவாரத்தில் வெளுத்துவிட்ட அன்னையின் சாயத்தை அத்தனை சுலபமாக ஏற்க முடியவில்லை அவனால். அலையாக மோதிய எண்ணங்களுடன் தன்வீடு வந்தவன் தன்முகம் பார்த்திருந்தவளை கண்டுகொள்ளாமல் ஒரு ஓரம் படுத்துவிட,

முதல்முறையாக “சாப்பிடலையா.” என்று அவனுக்காக அவனிடம் வாய் திறந்தாள் கார்த்திகா.

குமரன் எங்கே அதையெல்லாம் உணரும் நிலையில் இருந்தான்?, “இல்ல பசியில்ல. எடுத்து வச்சுட்டு படுத்துக்கோ.” என்றவன் மறுபுறம் திரும்பி படுத்துவிட்டான்.

கார்த்திக்கு எப்போதும் அதட்டிக் கொண்டும் மிரட்டிக்கொண்டும் திரிபவனை அந்த நிலையில் பார்க்க முடியாமல் போக, உள்ளுக்குள் எதுவோ உடைந்துவிழும் எண்ணம். அவனை விட மனமில்லாமல் “கொஞ்சமா சாப்பிட்டு படுங்க. நைட்ல சாப்பிடாம படுக்கக்கூடாது.” என்றாள் மீண்டும்.

அவன் அசையாமல் இருக்க, “நாள் முழுக்க உழைக்கிறதே இந்த சாப்பாட்டுக்காகத் தானே. எத்தனைபேர் இந்த சாப்பாடு இல்லாம பட்டினியா இருக்காங்க. யார் மேலேயோ இருக்க கோபத்தை ஏன் சாப்பாட்டுல காட்டணும். சாப்பாட்டை வீணாக்குற உரிமையை நமக்கு யார் கொடுத்தா?” என்றாள் மீண்டும்.

குமரனுக்கு அவள் இத்தனைப் பேசுவது திகைப்புதான் என்றாலும், அந்த நேரத்திற்கு அவள் வார்த்தைகள்  இதமாக இருந்தது. “அவள் மடிசாய்ந்து தன் வலிகளை கொட்டிவிட மாட்டோமா?” என்று மனம் ஏக்கம் கொள்ள, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவனாக எழுந்து அமர்ந்தான் அவன்.

என்ன நினைத்தாளோ.. பட்டென அவன் பரிமாறி வைத்திருந்த  கையில் கொடுத்தாள் கார்த்திகா. அவன் உணவின் சுவையைக்கூட உணராமல் எதிரில் இருந்தவளுக்காக மட்டுமே சாப்பிட தொடங்க, அவன் தட்டில் குறைந்ததை நிரப்பிக்கொண்டு அவன் உண்டு முடிக்கும்வரை அருகில் அமர்ந்திருந்தாள் கார்த்திகா.

அந்தநேரம் அவன் உணவைத்தவிர வேறெதுவும் பெரிதாக தோன்றவில்லை அவளுக்கு.

Advertisement