Advertisement

தித்திக்கும் முத்தங்கள் 12

குமரன் கார்த்திகாவின் உடமைகளை எடுத்துவந்து கொடுத்து மூன்று நாட்கள் கழிந்திருக்க, அன்று காலை கண்விழித்தது முதலே உர்ரென்று தான் அமர்ந்திருந்தான் குமரன். இந்த ஐந்து நாட்களின் வழக்கமாக காலையில் உறக்கம் தெளிந்து எழுந்ததுமே பாலும், காய்கறிகளும் வாங்கி வந்து கொடுத்திருந்தான். கார்த்திகா அவனுக்கு முன்பே எழுந்து குளித்து முடித்திருக்க, அவளும் வழக்கம் போல் டீயை அவன் அருகில் வைத்துவிட்டு நகர்ந்துவிட, கீழே இருந்த டீயை  பட்டென்று தட்டிவிட்டு இருந்தான்.

கார்த்திகா பதட்டத்தில் தன் கையில் இருந்த டம்ளரை கீழே போட்டுவிட, பட்டென அவள் நகர்ந்து கொண்டதில் சூடான அந்த டீ அவள்மீது சிந்திவிடாமல் தப்பித்தாள் அவள்.

சமையலறைக்கும், குளியலறைக்கும் இடையில் இருந்த சுவற்றில் அட்டையைப் போல் ஒட்டிக்கொண்டு அவள் குமரனை பார்த்துவைக்க, “ஏய்… இப்போ உன்னை என்ன பண்ணேன்? எதுக்கு இப்படி முழிக்கிற.” என்று அடித்து விடுபவன் போல் அவன் நெருங்க, கண்களை மூடிக்கொண்டாள் அவள்.

அவளின் அந்த பயந்த முகமும், மூடிய இமைகளும் குமரனை வெகுவாக சீண்ட, முதன்முறையாக அவன் வயதுக்கே உரிய உணர்வுகள் வெளிப்பட தொடங்கியது அவனிடம். மனம் “செமையா இருக்காளே!” என்று எண்ணமிட, அதை அதட்டி அடக்கி வைத்தான் அவன்.

கார்த்திகாவை. “கண்ணைத் திறடி.” என்று அவன் அதட்ட, மெல்ல தன் விழிகளை மலர்த்தினாள் அவள்.

“உன் மனசுல நீ என்னதான் நினைச்சுன்னு இருக்க. புக்கு வேணும்னு சொன்ன, வாங்கி கொடுத்தாச்சு. காலேஜ்க்கு கிளம்ப வேண்டியது தான. அதுக்கும் உன்கிட்ட கெஞ்சிட்டே இருக்கணுமா. நீ படிக்கக்கூட நான் உன்பின்னாடி அலையணுமா.? என்னதான் நினைக்கிற நீ… எனக்கு தெரிஞ்சாவனும்.” என்றவன் அவளது முழங்கையை வலிக்கும்படி பற்றியிருந்தான்.

கார்த்திகாவிற்கு பயத்தில் வியர்த்துக் கொட்ட, அவன் கேள்விக்கு பதில் கூறும் நிலையில் இல்லை அவள். மூன்று நாட்களாகேவ இதே சிந்தனை தான் அவளுக்கும். ஆனால், என்னவோ தயக்கம் அவளுக்குள். குமரனும் பெரிதாக அதைப்பற்றி பேசாததால் அப்படியே விட்டுவிட்டாள்.

ஆனால், இப்படி பட்டென வெடிப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. இப்போதும் குமரன் கேள்விகேட்டு நிற்க, அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாதவளாக நின்றிருந்தாள் கார்த்திகா.

‘அவள் பதில் சொல்லமாட்டாள்.’ என்பது அவள் விழித்த விதத்திலேயே புரிந்தது குமரனுக்கு. நேரம் அப்போதுதான் ஏழாகியிருக்க “போய் கெளம்பு. இன்னிக்கு என்ன ஆனாலும் நீ காலேஜ் போற.” என்றான் உத்தரவாக.

“இல்ல… நான் கிளம்ப நேரமாகிடும். நான் நாளைக்கு…” என்று கார்த்திகா இழுக்க,

“இதுக்கு மட்டும் பேச்சு வருதா உனக்கு?” என்று படுநக்கலாக வினவியவன், “இப்போவே கெளம்பு. ஒருநாள் லேட்டா போனா ஒன்னும் ஆகாது. கெளம்பு.” என்றுவிட்டான்.

அதற்குமேல் அவனிடம் வாதாடி நிற்க தைரியம் வந்துவிடுமா கார்த்திகாவுக்கு. அவன் கையை விட்டதுமே, தன் உடைகளில் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்துகொண்டாள் கார்த்திகா.

இங்கு வெளியில் நின்றவனோ, ‘நல்லதுக்கே காலம் இல்ல.’ என்று சத்தமாக தனக்குள் பேசிக்கொண்டிருந்தான்.

கார்த்திகா உடையை மாற்றி வெளியே வரவும், “சீக்கிரம் கிளம்பு. சாப்பிட ஏதாவது வாங்கினு வரேன்.” என்றபடியே வெளியில் கிளம்பிவிட்டான் குமரன்.

அடுத்த பத்து நிமிடங்களில் அவன்  காலை உணவுடன் வந்துவிட, கார்த்திகா அதை உண்டு முடிப்பதற்குள் குளித்து முடித்து வந்துவிட்டான். வேகமாக இருவரும் கிளம்பி நிற்கவும், அவள் கையில் அன்று போலவே ஒரு ஐநூறு ரூபாய் தாளை திணித்தான் குமரன்.

கார்த்திகா தன் ட்ரேட் மார்க் அசட்டுத்தனத்துடன் அவனைப் பார்த்து வைக்க, “கைல வச்சுக்கோ. ஏதாவது வாங்கணும்னா என்ன பண்ணுவ.?” என்றவன் அவள் பார்வையைக் கண்டுகொள்ளாமல் அவளை அழைத்துக்கொண்டு கீழிறங்க, அப்போதுவரை அவன் ஆட்டோவில் அழைத்து செல்வான் என்று எதிர்பார்க்கவில்லை கார்த்திகா.

இருவரும் கீழே வந்த நிமிடம் “ஆட்டோல உட்காரு.” என்றவன் ராஜம்மாவிடம் அவன் வழக்கமாக காசு கொடுத்துவிட்டு வர, அவனுடன் சேர்ந்து கார்த்திகாவை நெருங்கியவர் “இன்னா கண்ணு.. காலேஜிக்கா…ம்ம்ம்ம். ஜோரா போயிட்டு வா ராஜாத்தி. நல்லா படி.” என்று அவளையும் வாழ்த்த, அவர் பேச்சில் புன்னகையுடனே ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்.

குமரன் ஆட்டோவை விரைவாக செலுத்தியதில் விரைவாகவே அவள் கல்லூரியை அடைந்துவிட, கல்லூரி வாசலில் இறக்கிவிட்டவன் “போய்டுவ இல்ல.” என்று அதையும் மிரட்டலாகவே கேட்க, என்ன சொல்வதெனப் புரியாமல் தலையை இருபக்கமும் ஆட்டி வைத்தாள் அவள்.

கிட்டத்தட்ட எட்டு நாட்கள் விடுப்பாகி இருந்தது. வகுப்பாசிரியரிடம் என்ன பதில் சொல்வது என்று பயம் வந்தாலும், அவரைவிட அதிக பயம் குமரனின் மீது. அப்போதைக்கு அவன் அங்கிருந்து சென்றாலே போதும் என்று தலையை ஆட்டிவிட, அவனும் கிளம்பியிருந்தான்.

அவன் கிளம்பவும் தான் அடுத்த பிரச்சனை நினைவுக்கு வந்தது. ஆனால், எத்தனை நேரம் யோசித்துக்கொண்டே நிற்க முடியும்? வுகுப்புக்குச் சென்றாக வேண்டுமே.

தயக்கத்துடனே அவள் தன் வகுப்பறையை அடைய, அவளை அங்கு எதிர்பார்க்காததால் “கார்த்தி” என்று சத்தமாக கத்திவிட்டாள் பூர்ணி.

அவள் கத்திக்கொண்டே வேகமாக ஓடிவந்து கார்த்திகாவை அணைத்துக்கொள்ள, அப்போதுதான் கொஞ்சம் இயல்பாக உணர தொடங்கினாள் கார்த்தி.

பூர்ணியைத் தொடர்ந்து தர்ஷனா, காவியாவும் கார்த்தியை அணைத்து விடுவிக்க, நான்குபேரும் அவர்களின் வழக்கமான இடத்தில் சென்று அமர்ந்து கொண்டனர்.

பூர்ணி “எப்படிடி வந்த?” என,

“அவர்தான் கூட்டிட்டு வந்து விட்டார்.” என்றாள் தயக்கத்துடன்.

“பரவால்லையே. ஆட்டோ அண்ணன் கொஞ்சம் நல்லவர் தான் போல. உடனே உன்னை அனுப்பி வச்சுட்டார்.” என்று பூர்ணி கூற, ‘கொஞ்சம் நல்லவன்தான்’ என்று ஒப்புக்கொண்டது கார்த்திகாவின் மனம்.

 இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, அவர்களின் வகுப்பாசிரியர் வந்துவிட, தயக்கத்துடன் தான் எழுந்து நின்றாள் கார்த்திகா.

அவரும்  கார்த்திகாவைப் பார்த்ததுமே “கார்த்தி. வாட் ஹாப்பென்… லாங் லீவ்…”

 என்று கேட்டுவிட

என்ன பதில் சொல்வதென புரியாமல் சட்டென எழுந்து நின்றுவிட்டாள் கார்த்திகா.

அந்த ஆசிரியர் அதிர்ச்சியாக, “கல்யாணம் ஆகிடுச்சா” என்றார் அவள் கழுத்தைப் பார்த்து.

கார்த்தி வாய்திறக்க முடியாமல் ஆமென தலையசைக்க, என்ன நினைத்தாரோ… அதற்குமேல் துருவாமல் “ஒழுங்கா படிப்பை முடிக்கப்பாரு.” என்று கண்டிப்புடன் கூறியவர் அவள் தலையசைக்கவும், “சிட்.” என்றுவிட்டார்.

கார்த்திக்கும் அப்போதுதான் நிம்மதியாக இருக்க, அவர் அறியாமல் ஒரு பெருமூச்சை வெளியேற்றியபடி அமர்ந்துவிட்டாள். அதன்பின் அவள் கவனம் பாடத்தில் பதிய, வழக்கம்போலவே படிப்பில் ஆழ்ந்துபோனாள். அன்றைய இடைவேளை நேரத்தில் மற்ற மாணவர்கள் அவளது திருமணம் குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட, பூர்ணியும், தர்ஷனாவும் கார்த்திகாவை அடைகாத்துக் கொண்டனர்.

அன்றைய வகுப்புகள் முடியவும், கார்த்திகா தன் நண்பர்களிடம் இருந்து விட்டுப்போன நாட்களின் நோட்ஸை வாங்கிக்கொள்ள, எட்டுநாட்களின் கதைகளைப் பேசியபடியே நண்பர்கள் நால்வரும் கல்லூரியின் வாசலுக்கு வர, அங்கே கார்த்திகாவிற்காக காத்திருந்தான் குமரன்.

அவன் தூரத்தில் வரும்போதே அவளைப் பார்த்திருக்க, அவளின் சிரித்த முகம் அத்தனை நிம்மதியைக் கொடுத்தது குமரனுக்கு. கார்த்திகா பேச்சு சுவாரஸ்யத்தில் அவனை கவனிக்காமல் கடந்து சென்றுவிட, பூர்ணி அவள் கைபிடித்து நிறுத்தி, குமரனை கண்காட்ட, அவனைக் கண்டதுமே வழக்கமான பதட்டம் வந்து ஒட்டிக்கொண்டது கார்த்திகாவிடம்.

குமரனுக்கு அவள் பதட்டம் சிறு புன்னகையைக் கொடுக்க, நின்ற இடத்திலேயே நின்றான் அவன். பூர்ணி கார்த்திகாவை விட்டு அவனை நெருங்கியவள், “தேங்க்ஸ் அண்ணா. இவளை மறுபடியும் காலேஜ்க்கு அனுப்பினதுக்கு. அன்னைக்கு கொஞ்சம் கோபமா பேசிட்டேன். சாரி” என,

“நீ பேசின பேச்சுல தான் உன் ப்ரெண்டை காலேஜிக்கு அனுப்பி வைக்கணும்னு புத்தி வந்தது எனக்கு. எதுக்குமா சாரியெல்லாம். விடு.” என்றான் இலகுவாக.

பூர்ணி சிரித்துக்கொண்டே, “அப்புறம்.. என்ன இந்தப்பக்கம், பொண்டாட்டியை பிக்கப் பண்ண வந்திங்களா” என்று துடுக்காக கேட்டுவிட,

“ஏன் நீயும் வா. உன்னையும் வீட்ல விட்டுடறேன்.” என்றான் குமரன்.

“நீங்க சொன்னதே போதும். உங்க ஆளை கூட்டிட்டு கிளம்புங்க.” என்றாள் அவள்.

தர்ஷனாவும் “தேங்க்ஸ் அண்ணா.” என, அவளிடமும் பூர்ணியிடம் கூறிய பதிலையே கொடுத்தவன் மலர்ந்த முகத்துடன் கார்த்திகாவை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

வரும் வழியிலேயே ஆட்டோவை நிறுத்தி, கரும்பு ஜூஸ் ஒன்றை வாங்கி கொடுக்க, மறுக்காமல் வாங்கிக் கொண்டாள் கார்த்திகா. என்னவோ அவளும் கொஞ்சம் நல்ல மனநிலையில் இருந்தாள் அன்று.

இருவரும் வீடு வந்து சேரவும், கார்த்திகா குளியலறைக்குள் நுழைந்து வெளியே வர, “சாப்பிட என்ன வாங்கிட்டு வரட்டும்?” என்றான் குமரன்.

அவனை  விசித்திரமாக பார்த்து வைத்தவள், “நானே சமைச்சுப்பேன்” என்றாள் தெளிவாக.

“இப்பதானே வந்த, சாப்பிட்டு கொஞ்சநேரம் படுத்து தூங்கு. நைட்டுக்கு நீயே சமைச்சுக்கோ.” என்றான் குமரன்.

“எனக்கு  இது பழக்கம் தான். தினமும்  எல்லாம் வெளிய வாங்கி சாப்பிட முடியாது. ஒரு பத்து நிமிஷம் கழிச்சு நானே சமைச்சுக்கறேன்.” என்றவள் சுவற்றில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள்.

அதற்குமேல் வாதிடாமல் குமரன் கிளம்ப, “ஒருமணி நேரத்துல சமைச்சிடுவேன்.” என்றாள் அவளாகவே.

Advertisement