Advertisement

தித்திக்கும் முத்தங்கள் 01

                    வடசென்னையின்  அடையாளங்களில் ஒன்றான காசிமேடு கடற்கரை அதிகாலை பரபரப்பில் சுழன்று கொண்டிருந்தது. பெரிய அளவிலான விசைப்படகுகளும், மோட்டார் படகுகளும், சிறிய கட்டுமரங்களும் என்று கடலே தெரியாத அளவுக்கு படகுகள் நிறைந்திருக்க, மீன்களை இறக்குபவர்களும், படகுகளை நிறுத்துபவர்களும், வலைஞர்களும், வியாபாரிகளும் என்று நிரம்பி வழிந்தது கடற்கரை.

                 அப்போதுதான் வந்து நின்ற படகில் இருந்து சில இளைஞர்கள் குதித்து இறங்க, அவர்களில் முதலாவதாக கீழே குதித்தவன் “டேய் குமரா..” என்று குரல் கொடுக்க, கையில் மீன்கூடையுடன் நிமிர்ந்தான் அவன்.

                 “ஏய் ……ராட்டம் நீ கீழே குதிச்சா கத்தினே இருப்பியா.. எறக்க வேணாம்..” என்றவன் கையில் இருந்த கூடையை அவனை நோக்கி வீச, வாகாக அதைப் பிடித்துக் கொண்டான் அந்த பூச்சி. அவன் பெற்றோர் மதன் என்று அழகாக பெயர் வைத்திருக்க, அவன் உருவத்தை வைத்து அவனுக்கு பூச்சி என்று பெயர் வைத்திருந்தான் குமரகுரு.

                “டேய்.. நீதானடா குதிக்க சொன்ன..” என்று வாய்க்குள் முனகியபடியே கூடையை அடுத்தவனுக்கு கைமாற்றுவதற்குள் வேகமாக அவனை நோக்கி அடுத்த கூடையை வீசிவிட்டான் குமரன். “டேய் குமரா…” என்று கத்தியபடியே கடைசி நொடியில் அவன் அந்த கூடையைப் பிடிக்க, மேலே நின்றவன் நக்கலாக சிரித்தபடி “புட்றா.. சவுண்டு விட்ட இல்ல.. புடி பூச்சி..” என்றபடியே அடுத்தக்கூடையை வீச,

                 “சாவடிக்காதடா..” என்று கத்திகொண்டே வேலையைத் தொடர்ந்தான் பூச்சி. அந்த மொத்த கூடையையும் இறக்கி முடிக்கும் வரையும் குமரன் அவனை வாட்டியெடுக்க, “தெரியாம கத்தி தொலைச்சிட்டேன்.. விட்டுடறா..” என்று கையெடுத்து கும்பிடும் நிலையில் இருந்தான் பூச்சி.

                   மொத்த கூடையையும் கீழே இறக்கியபின் கடைசியாக கீழே குதித்தவன் “பூச்சி..” என்று குரல் கொடுக்க, அவன் கண்ணசைவில் இருவருக்கும் சேர்த்து கூலியை வாங்கிக் கொண்டு இரண்டு கூடை மீன்களையும் தூக்கிக் கொண்டு வந்தான் பூச்சி.

                  நேராக மீன் ஏலம் நடக்கும் இடத்திற்கு சென்றவர்கள் கையிலிருந்த மீனை நியாயமான விலைக்கு விற்று முடித்து, அதில் வந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு அந்த மணல்வெளியில் நடக்க, இரவு முழுவதும் விசைப்படகில் நின்றுகொண்டே இருந்ததும், வலையை இழுத்ததும் கைகளில் அப்படி ஒரு வலியைக் கொடுத்தது.

                 பூச்சி நெளிந்து கொண்டே கையை காலை அசைத்தபடி வளைந்து வளைந்து நடக்க, “என்னடா பாம்பு மாதிரி நெளியுற..” என்று அவனை வெறுப்பேற்றி சிரித்தபடி பின்னால் நடந்தான் குமரகுரு.

                “ஏன்டா கேட்கமாட்ட… குமரான்னு கூப்பிட்டது ஒரு குத்தமாடா.. வச்சு செஞ்சுட்டு இப்போ சௌக்கியம் கேட்கறான்..” என்று புலம்பிக் கொண்டிருந்தான் பூச்சி.

                 இருவரும் பள்ளிக்காலம் முதலே நல்ல நண்பர்கள். ஒல்லியாக நெடுநெடுவென்று இருப்பவனை மற்ற மாணவர்கள் கேலி செய்ய, முரடன் என்று பெயர் வாங்கியிருந்த குமரகுரு அவர்களை விரட்டிவிட்டு மதனுக்கு ஆதரவாக நின்றதில் அவனுடன் ஒட்டிக் கொண்டான் மதன்.

                 எப்போதும் மதனை மற்றவர்கள் எதுவும் கூறிவிட்டால் அவனுக்கு முன்னே சண்டைக்கு நிற்பது குமரகுரு தான். அதனால் தானோ என்னவோ அவன் சகட்டுமேனிக்கு கிண்டலடித்தாலும், வம்பு செய்தாலும் கோபமே வராது மதனுக்கு.

                   குமரகுருவும் அவன் பேசுவானே தவிர்த்து, வேறு யாரையும் ஒருவார்த்தை பேசவிட மாட்டான். படிப்பு சுத்தமாக மண்டைக்கு ஏறாமல் குமரகுரு பள்ளிப்படிப்பை ஏழாம் வகுப்பிலேயே நிறுத்திவிட, அவன் அன்னை ராணி அடித்து துவைத்தபோதும் பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று உறுதியாக நின்று விட்டான் அவன்.

               அவனுடனே சுற்றிக் கொண்டிருந்த மதனும் பள்ளி செல்லமாட்டேன் என்று நிற்க, அவன் அன்னை வசந்தா குமரகுருவின் வீட்டிற்கே வந்து “உன் புள்ளையால தான் என் புள்ளையும்கெட்டுப்போவுது.. சொல்லி வை அவன்கிட்ட, என் புள்ளையோட சேரவே கூடாது..” என்று எச்சரிக்க,

               ராணிக்கு கோபம் வந்துவிட்டது. அவரும் சென்னையின் செந்ததமிழில் சில வார்த்தைகளை எடுத்துவிட, இரண்டு பெண்மணிகளும் பேசிய வார்த்தைகள் மொத்தமும் அகராதியில் ஏற்ற முடியாதவை தான். அப்படி அவர்கள் சண்டையிட்டு இருவரையும் பிரித்து வைக்க, மதனும், குமரனும் அடுத்தநாள் மீண்டும் விளையாட கடற்கரைக்கு சென்றுவிட்டது வேறு கதை.

               எத்தனை முறை அடித்தாலும் இருவரும் சேர்ந்தே சுற்றி வர, ஒரு கட்டத்தில் இரண்டு பெற்றவர்களுமே “போய்த் தொலை..” என்று விட்டுவிட்டனர் மக்களை. கடற்கரையில் விளையாடுபவர்களை மீன்கூடையை இறக்கி வைக்க உதவிக்கு அழைக்க, அவர்கள் கொடுக்கும் ஐம்பது ருபாய் பெரிதாக தெரியவும் அதற்காகவே கடற்கரைக்கு சென்றுவிடுவர் இருவரும்.

              அப்படியே அதையே தொழிலாக்கி கொண்டு இருவரும் வளர்ந்து வர, பதினேழு வயதில் அங்கிருந்த மீனவர்களுடன் சேர்ந்து கடலுக்கு மீன்பிடிக்க தயாராகி நின்றான் குமரகுரு. அவனுடன் மதனும் சேர்ந்து கொள்ள, வரும் பணத்தை இருவருமே சரியாக வீட்டில் கொடுத்து விடுவதால் பெரிதாக பெற்றவர்களும் அவர்களைத் தடுக்கவில்லை.

             குடிகார கணவனுக்கு வாழ்க்கைப் பட்டிருந்த ராணிக்கு மகன் கொடுக்கும் பணம் பெரிய உதவியாக இருக்க பள்ளிக்கு செல்லும் இளையமகளை சற்று அதிகமாக கவனிக்கத் தொடங்கினார் அவர். எப்போதுமே மகள் என்றால் ஒருபடி கூடுதல் பிரியம் தான் ராணிக்கு.

            மகனையும் அப்படியே அவர் வளர்க்க, தங்கைக்கு என்றால் எதற்கும் கணக்கு பார்க்கமாட்டான் அவனும். அந்த வயதில் இருந்தே தங்கைக்கு தேவையானதை தான் தான் செய்து கொடுக்க வேண்டும் என்று மனதில் பதிந்துவிட, இன்று வரை அவளின் பொறுப்பு மொத்தமாக குமரகுருவைச் சேர்ந்தது தான்.

             ராணியும் மகளுக்கென்று நகைகள், உடைகள் என்று சேர்த்து வைத்திருந்தாலும், எப்போதும் குமரகுருவைப் பற்றி கவலை கொண்டது இல்லை. அவனுக்கென்ன ஆம்பிளை பிள்ளைதானே என்றே எப்போதும் குமரகுருவை ஒரு பொருட்டாக நினைத்து அவனுக்கென எதையும் செய்ததில்லை ராணி.

             எந்த நேரமும் வெளியில் சுற்றி திரிவதால் வீட்டில் நடக்கும் பல விஷயங்கள் குமரகுருவின் கவனத்திற்கே வராது. அவன் வீடு வரும் நேரத்திற்கு அன்னை உணவெடுத்து வைப்பதே போதுமாக இருக்கும் அவனுக்கு.

             இவன் கதை இப்படியென்றால், மதன் நிலை அவனைவிட மோசம். இயல்பிலேயே சற்று பணத்தாசைக் கொண்டவர் அவன் அம்மா. இவனால் வரும் பணம் ஒன்றே குறியாக இருக்க, மற்றபடி அவனைக் குறித்து எந்த கவலையும் கிடையாது. மதன் அன்னையின் எண்ணம் தெரிந்தாலும், பெரிதாக கண்டுகொள்ள மாட்டான். அவன் எந்த நேரமும் குமரகுருவுடனே இருப்பதால் அவனின் உணவு, மற்ற தேவைகள் என்று எதற்கும் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் அத்தனையும் குமரகுரு கவனித்துக் கொள்வான் என்பதால் எதற்குமே பெரிதாக கவலைப்பட்டவன் இல்லை மதன்.

             நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டே மணற்பரப்பைக் கடந்து சாலைக்கு வர, அங்கே நின்றிருந்த குமரகுருவின் ஆட்டோவை எடுத்துக்கொண்டு சாலையில் கலந்தனர் இருவரும். குமரகுருவின் அருகில் அமர்ந்துகொண்டு அவன் தோளை சுற்றி கையைப் போட்டுகொண்டு மதன் அமர்ந்திருக்க, போக்குவரத்தில் வளைந்து நெளிந்து ஆட்டோவை வைத்து வித்தை காட்டியபடியே தங்கள் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தனர் இருவரும்.

              தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு ஒன்றில் சுனாமி நேரத்தில் இவர்கள் குப்பத்திற்கே வீடு ஒதுக்கியிருக்க, அங்கேதான் வாசம் செய்தது குமரகுருவின் குடும்பம். அந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மூன்றாக பிரிக்கபட்டிருக்க, குமரகுருவின் வீட்டிற்கு பின்புறம் இருந்த குடியிருப்பில் மதனின் வீடு அமைந்திருந்தது.

            குமரகுரு மதனை அவன் வீட்டின் கீழே இறக்கிவிட்டு தன் வீட்டிற்கு வர, இன்னும் உறக்கத்தில் இருந்தே விழித்து எழவில்லை அவனது குடும்பம்.

             காலை எட்டு மணிக்கு குடும்பமே உறங்கி கொண்டிருக்க, அவன் விடாது கதவைத் தட்டியதில் அவன் அம்மா ராணி எழுந்து வந்து கதவைத் திறந்தார்.

             “என்னமா இன்னும் விடியலையா உங்களுக்கு..” என்று குமரன் கேட்க,

             “உங்கப்பன் ராத்திரி குடிச்சுட்டு வந்து கொடைச்சல் குடுத்ததுல, ஒருமணிக்கு தான் படுத்தோம்பா..” என்றார் ராணி.

        “ஏன் என்னவாம் உன் வீட்டுகாரருக்கு..”

       “ அவனுக்கு வேற என்ன வேல இருக்கு.. குடி ஒன்னுதான் தெரியும்.. நீ வாடா..” என்று மகனை உள்ளே அழைத்தார் அவர்.

           வீட்டிற்குள் வந்தவன் உறங்கி கொண்டிருந்த யாரையும் கண்டுகொள்ளாமல் நேராக அந்த ஒற்றையறை வீட்டின் ஒருபக்கம் இருந்த கழிவறைக்குள் நுழைந்தான்.

        அந்த சிறிய இடத்தை தடுத்து அதன் ஒருபக்கம் கழிப்பிடமும் அமைத்திருக்க, குளிக்கும் இடத்தின் ஒருபுறம் துணிகளை ஊறவைத்து அப்படியே விட்டிருந்தார் ராணி.

           அதில் இருந்து மெல்லியதாக ஒரு வாடை வீச தொடங்கி இருந்தது. முகத்தை சுளித்தபடியே தனது வேலைகளை முடித்துக் கொண்டு அவன் வெளியே வர, அதற்குள் கடையில் இருந்து டீ வாங்கி வந்து வைத்திருந்தார் ராணி.

             டீயும் கூடவே பேப்பர் கப்பும் வாங்கி வந்திருந்தவர் அதிலேயே டீயை ஊற்றி குமரனிடம் நீட்டினார் ராணி.

              எப்போதும் நடப்பதுதான் என்பதால் இயல்பாக டீயை வாங்கி குடித்து முடித்தவன் கொடியில் காய்ந்து கொண்டிருந்த தனது காக்கிசட்டையை எடுத்துக்கொண்டு மீண்டும் குளியறைக்குள் நுழைந்தான்.

             குளித்து முடித்து அடுத்த அரைமணி நேரத்தில் அவன் வீட்டை விட்டு வெளியேற, ராணி மீண்டும் ஒருபக்கம் படுத்து விட்டிருந்தார்.

            குமரகுரு அவர்களை கண்டுகொள்ளாமல் கீழே இறங்கி வர, அவன் இருந்த அடுக்குமாடியின் வாயிலுக்கு எதிரே இருந்த அந்த சிறிய கோவிலின் வாசலில் அமர்ந்திருந்த ராஜம்மா பிடித்துக் கொண்டார் அவனை.

          “குமரா… இன்னாடா பார்த்தும் பாக்காம போற. அக்காவை கண்ணு தெரியலையா..” என்றவர் ஒரு திருநங்கை.

          “நிஜமாவே பார்க்கலக்கா..” என்றவன் அவரை நெருங்கி தன் பாக்கெட்டில் இருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து அவரிடம் கொடுக்க,

              “நீ நல்லா இருப்படா ராஜா.. என்னிக்கும் நீ ராசாதான்..” என்று கைகளால் அவன் முகத்தை சுற்றி நெட்டி முறித்து அவனை வழியனுப்பினார் அவர்.

               “பார்த்து போ சாமி.. நல்லபடியா பொழப்பு நடக்கும் போ..” என்றவர் வார்த்தைகளில் சிரித்துக்கொண்டே ஆட்டோவை கிளப்பிக்கொண்டு அவன் அடுத்த குடியிருப்புக்கு வர, அங்கிருந்த இட்லிகடையின் அருகே ஆட்டோவை நிறுத்தி அவன் அமர்வதற்கும், பூச்சி அவன் வீட்டிலிருந்து இறங்கி வரவும் சரியாக இருந்தது.

      இருவரும் அந்த கடையின் பக்கவாட்டில் இருந்த காலி இடத்தில் அமர, அவர்களைத் நன்கு அறிந்தவராக எண்ணெய் அதிகம் விட்டு முறுகலாக தோசை வார்த்து வடைகறி சேர்த்துக் கொடுத்தார் அந்த வயதானவர்.

         “இதுக்குதான் ஒத்தரோசா வேணும்னு சொல்றது.. என்னா ருசி.. இதுக்கே நான் உன்னை கட்டிக்கிறேன் கிழவி..” என்று குமரன் அவரை வம்பிழுக்க,

           “தோசைகரண்டிய வாயில வச்சு இழுத்துடுவேன். தின்னுட்டு எழுந்து போடா..” என்றார் சரோஜா.

            “இவ்ளோ டேஸ்டா சமைச்சு போடற.. இத்த துன்ன குடுபனை இல்லாம, போய் சேர்ந்துட்டாரே உன் புருஷன்..” என்று மீண்டும் அவன் உச்சு கொட்ட,

        “ஆமா.. அவன் இருந்து மட்டும் என்ன செஞ்சிட்டான் எனக்கு. அவனை கட்ன நாள்ல இருந்து இந்த இட்லிகட தான் சோறு போடுது.. இன்னும் நான் சாவற வரைக்கும் கூட இதே பொழப்பு தான்..” என்றவர்

       “காலங்காத்தால ஏன்டா ஆவாத கதையை பேசற.. வேலை வெட்டி இல்லையா உனக்கு..” என்று கேட்க,

         “உன்னை லவ்ஸ் உடுறதை விட, ஆட்டோவா முக்கியம் எனக்கு.. என் உசுரே நீதான ஒத்தரோசா..” என்று மீண்டும் காதல் வசனம் பேசினான் குமரகுரு.

          அவன் பேச்சில் புரையேறிய பூச்சி, வாயில் இருந்த உணவு வெளியே வரும்வரை இரும, “டேய் கஸ்மாலம். துன்ற இடத்துல ஒக்காந்து துப்பின்னு இருக்க.. ஏந்திரிடா.. “ என்று அருகில் இருந்த குடத்து நீரை சொம்பில் எடுத்து சரோஜா ஊற்ற,

         “ஏய் ஆயா.. “ என்றபடியே எழுந்தவன் “நீயெல்லாம் இரும்ப மாட்டியா.. கிழவி..” என்றான் தன் பங்குக்கு..

            “டேய் நெட்டைகாலா.. கிழவின்னு சொன்ன.. தோசையில உப்பை அள்ளி போட்ருவேன்..” என்றார் மிரட்டலாக.

              “ஏன் அவன் சொன்னா மட்டும் இனிக்குதா..” என்றவன் மீண்டும் “கெழவி கெழவி..” என்று அழுத்திக் கூற

               “அவன் என் டாவு… நாளைக்கே என்னை கட்டிக்குவான்.. நீயும் என்னை கட்டிக்குவியாடா மலைமாடு..” என்று சரோஜா விடாமல் பேச,

         “உன்னை கட்டிக்கிட்டு நானும் உன் வீட்டுக்கார் மாறி அல்பாயுசா போகவா.. போவியா கெழவி..” என்றான் மதன்.

       “டேய் பூச்சி.. இன்னிக்கு உன்னை நான் நசுக்கி எடுக்கல..” என்று சரோஜா எழுந்து கொள்ள பார்க்க,

         “ஒத்தரோசா அவனை விடு.. நீ மாமாவுக்கு தோசை வை..” என்றான் குமரன்.

          “உன் மூஞ்சிக்காக தான் பார்கிறேன் குமரா..” என்றபடியே அவனுக்கு மீண்டும் அவர் தோசை வைக்க, “எனக்கும் வையி..” என்று தானும் அருகில் இருந்த தட்டை எடுத்து நீட்டினான் பூச்சி.

      “என் கடைல உனக்கு தோசை இல்ல போடா..” என்றவரிடம் “நீ மட்டும் தோசை வைக்கல.. அடுப்புல தண்ணிய மொண்டு ஊத்திடுவேன் கெழவி..” என்றான் பூச்சி.

         “உன் மூஞ்சில சுடுதண்ணியை ஊத்துறேன் பாரு இன்னிக்கு.” என்று அவர் வெந்து கொண்டிருந்த இட்லிசட்டியை திறக்க,

        “டேய் குமரா காப்பாத்துடா உன் மச்சானை..” என்று அவன் பின்னே ஒளிந்து கொண்டான் பூச்சி..

             “ஒத்தரோசா.. நோ வன்முறை.. நோ அடிதடி.. வேணும்ன்னா என் மச்சானுக்கு ஒரு கிஸ் கொடுத்துக்கோ..” என்று குமரன் சிரிக்க,

            “அடப்பாவி டேய்.. உன்கூட சாப்பிட வந்தேனே.. என்னை செருப்பால அடிக்கணும்..” என்று பூச்சி அலற

            “சாரி மச்சான். செருப்பை அங்கேயே விட்டுட்டேன்..” என்று ஆட்டோவை கண்காட்டினான் குமரகுரு.

          “போடா நீயும் உன் ஒத்தரோசாவும்..” என்றவன் அதற்குமேல் அங்கே நிற்காமல் அவன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

    குமரகுரு சிரித்துகொண்டே உண்டுமுடித்து அவனுக்கும் இரண்டு தோசைகளை பார்சல் வாங்கிக்கொண்டு ஆட்டோ ஸ்டாண்டிற்கு வர, பூச்சி அங்கேதான் இருந்தான்.

       “இந்தாடா..” என்று உணவுபார்சலை குமரன் நீட்ட, “எனகொன்னியும் வேணா..” என்று பூச்சி முகம் திருப்ப,

         “வேணா இல்ல.. உடு..” என்றவன் பார்வையால் சுற்றிலும் யாரையோ தேட, “டேய் பசி குடலை புடுங்குது.. குட்றா..” என்று பிடுங்கி கொண்டான் குமரன்.

         அடுத்து அவன் முறையாக இருக்க, ஆட்டோ கேட்டு வந்தவர்களிடம் குமரனைக் கைகாட்டிவிட்டு உணவை உண்டு கொண்டிருந்தான் அவன்.

        குமரன் அவர்கள் செல்ல வேண்டிய இடத்தைக் கேட்டுக்கொண்டு வண்டியை எடுக்க, இது எப்போதும் வழக்கம் தான் என்பதால் அந்த ஸ்டாண்டில் இருந்த மற்றவர்களும் அமைதியாகவே வேடிக்கைப் பார்த்தனர்.

       குமரனும்,மதனும் ஆரம்பத்தில் மீன்கூடை தூக்கும் வேலைக்கு சென்றாலும், அதில் வரும் பணம் போதாமல், வாடகைக்கு ஒரு ஆட்டோவை எடுத்துக்கொண்டு பிழைப்பை மாற்றிக் கொண்டான் குமரன்.

    அவனைக்கொண்டு மதனுக்கும் அதுவே வேலையாகிப் போக, இருவருமே சனி, ஞாயிறு என விடுமுறை தினங்களில் மட்டுமே கடலுக்கு செல்வார்கள்.

         அதுவும் இரவில் மட்டுமே. மீதி நேரங்களில் அந்த ஆட்டோவை நம்பித்தான் அவர்களின் பிழைப்பு.

         இதோ இப்போதும் சென்னை கடற்கரை சாலையில் அமைந்திருந்த கலங்கரை விளக்கம் வரை சவாரியாக குமரன் சென்றிருக்க, அவர்களை கலங்கரை விளக்கத்தின் அருகே இறக்கிவிட்டு அவன் திரும்பும் வேளையில் அவன் கண்ணில்பட்டாள் அவள்.

             இராணிமேரி கல்லூரியின் அருகே அமைந்திருந்த அந்த சிக்னலை கடப்பதற்காக அவள் நின்றிருக்க, “நம்ம ஏரியா பொண்ணுல்ல..” என்று அவளை பார்த்தபடியே கடந்து சென்றான் குமரகுரு.

               “ஏய் கார்த்தி சீக்கிரம் வாடி..” என்று அவள் தோழி ஒருத்தி கைப்பற்றி அழைக்க, அங்கே சாலையோரம் இருந்த நீருற்றை பார்த்தபடி நின்றவள் வேகமாக சாலையை கடந்து கல்லூரிக்குள் நுழைந்து விட்டாள்.

            குமரகுரு என்பவனை இதற்குமுன் பார்த்த நியாபகம் கூட இருக்காது அவளுக்கு. கல்லுரி அதை விட்டால் வீடு என்றே பழகிப் போனவள் அவள்.

           இன்னும் ஒரே வாரத்தில் தான் அவனது மனைவியாகப் போகிறோம் என்பது தெரியாமல், உற்சாகமாக கல்லூரியில் சுற்றிக் கொண்டிருந்தாள் கார்த்தி என்ற கார்த்திகைச் செல்வி.

Advertisement