அப்படியே ஒன்றொண்டாய் கூறியபடி சிறிது நேரம் யோசனையில் இருந்தாள் சங்கமித்ரா.
திடீரென ஞாபகம் வந்தவளாய் அவள் தலையிலேயே ஒரு போடு போட்டாள் சிவபரணிகா.. “ஆ.. வலிக்குது நாயே”
“எரும.. எரும.. நீ செஞ்ச வேலைக்கு உன்னைய மொத்தாம கொஞ்சுவாங்களா..”
“நான் என்ன செஞ்சேன்” என்று சங்கமி அப்பாவியாய் கேட்டுவைக்க..
“எனக்கு எதுக்குடி பாட்டி ரோல் குடுத்தே!! ட்ரீம் நாளும் ஒரு நியாயம் வேணாம்??” என்று அழாத குறையாய் கேட்டுவிட்டு வராத கண்ணீரை துடைத்துக்கொண்டாள் சிவா.
“ஈஈஈஈஈ….”
“சிரிச்சன்னு வை வாய்லயே குத்துவேன்”
“ஏய் டென்ஷன் ஆகாதடி எனக்கும் அதே ரோல் தான்”
அவளை கீழே தள்ளி ஒரு புரட்டு புரட்டியபின் தான் சிவாவிற்கு நிம்மதியாய் இருந்தது.. இருவரும் பெரிய பெரிய மூச்சுகளுடன் அமர்ந்திருக்க..
“ஆனாலும் எப்படி இப்படி ஒரு ட்ரீம் வந்ததுன்னு தான் தெரியல” என்று வியந்த சங்கமித்ராவை முறைத்த சிவபரணிகா,
“உனக்கு தான் இப்படி அடிக்கடி வந்து எங்க உயிரை வாங்குமே.. என்னமோ புதுசா கேக்குற மாதிரி கேக்குறே.. உதைச்ச நீ மறந்திருக்கலாம் ஆனா உதைவாங்குன நான் மறக்கல..” என கண்களை ஒரு நொடி மூடி ஆழ்ந்த மூச்செடுத்துக்கொண்டு தொடர்ந்தாள்
“ஆழ் மனசோட எண்ணங்கள் தான் இப்படி கனவா வரும்.. நீ அப்படி என்ன நெனச்சின்னு கொஞ்ச நேரத்துல நான் கண்டுபிடிக்கிறேன் இரு” என்றாள் தோழியின் அருகில் நெருங்கி அமர்ந்தபடி.
“நானும் சந்தியாவும் டிவி பார்த்துட்டு இருந்தோம்.. சேனல் மாத்தும்போது அந்த சாங் புள் சவுண்ட்ல பிளே ஆயிருச்சு.. நீ நல்லா தூங்கிட்டு இருந்தயா!! நான் உடனே வால்யூம் குறைச்சிட்டேன்.. இப்போதான் தெரியுது நீ பாட்டி வேசத்துக்கு இங்கிருந்து தான் ட்ராக் போட்டிருக்கைன்னு”
மதிய உணவை மெஸ்ஸில் முடித்துக்கொண்டு தங்களது அறையில் இன்டெர்னல் தேர்விற்காக மூவரும் படித்துக் கொண்டிருந்த வேளை.. மனமும் உடலும் மிகவும் சோர்ந்துபோய்விட.. சங்கமி உறங்கச் சென்றுவிட்டாள். மற்ற அறைத் தோழிகளும் உள்ளே வந்து வளவளத்துக் கொண்டிருக்க சந்தியாவிற்கும் சிவாவிற்கும் ஏக கடுப்பு. அவர்களது பெட்டில் தான் அனைவரும் அமர்ந்திருந்தனர். அவர்களால் மேற்கொண்டு படிக்கவும் முடியவில்லை உறங்கவும் முடியவில்லை.
இருவரும் சங்கமியையும் இழுத்துக் கொண்டு ப்ராஜெக்ட் செய்யவேண்டும் என மற்ற தோழிகளிடம் கூறிவிட்டு.. ப்ராஜெக்ட் செய்ய ஹால் ஒன் தான் வேண்டும் என வார்டனிடம் பெர்மிசன் வாங்கிக்கொண்டு.. அதாவது அனைவரது காதிலும் பூ சுத்திவிட்டு தனிமையில் டிவி பார்த்து சிறிதுநேரம் ஓய்வெடுக்கவே அவர்கள் மூவரும் அவ்வறைக்கு வந்தது.
பேருக்கு அவர்கள் செய்து வைத்திருந்த ஒன்றுக்கும் உதவாத.. ஒர்க் ஆகாத.. ப்ராஜெக்ட் மாடலையும் மடிக்கணினியையும் தலையணை சைஸில் இரண்டு புத்தகங்களையும் தூக்கிக்கொண்டு சென்றனர். சோர்வால் அப்படியே சங்கமி மட்டும் உறங்கிவிட.. மற்ற இருவரும் தொலைக்காட்சியில் ஐக்கியம்.
அதன்பின் வந்த சண்டையில் தான் அதே அறையில் ஒரு மூலையில் உறங்கி கொண்டிருந்த சங்கமித்ராவை கவனிக்காமல் டமார் என்று கதவை அடைத்துவிட்டு வெளிநடப்பு செய்தது. இருவரும் அடித்துக் கொள்வதற்கு முன் நடந்தது வரையில் மட்டும் சிவா கூறினாள்.
“அப்போ ஸ்டீபன் ஹாவ்க்கிங்ஸ்?? ஏலியன்??” என தன் கனவு குறித்த சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொள்வதில் கவனம் வைத்தாள் சங்கமித்ரா.
“நம்ம தானே போன மாசம் ஸ்டீபன் ஹாவ்கிங்ஸ் ஓட ஆர்டிக்கிள்ஸ்.. பிளாக் ஹோல் அண்ட் பேபி யூனிவெர்ஸ்.. எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் புக்ஸ் எல்லாம் படிச்சிட்டு இருந்தோம்.. நீ அதவே நெனச்சிட்டு இருந்திருப்ப அந்த எபெக்ட் உனக்கு..”
“இல்லையே.. அது போனமாசம்.. நான் சொல்லுறது இப்போ.. கொஞ்ச நேரம் முன்னாடி.. இது நான் காதார கேட்டதுபோல தானே இருந்துச்சு”
“அது.. அது.. நான் சேனல் மாத்தும்போது நேட் ஜியோவும் போட்டேன் அதுலயும் ஹாவ்க்கிங்ஸ் வந்தாரு..” தலையை ஆட்டிக்கொண்டே அடுத்த சந்தேகத்தை முன்வைத்தாள் சங்கமி..
“யாரோ ரெண்டுபேர் செமையா சண்டை போட்டுக்கிட்டாங்க.. திடீர்னு டமார்ன்னு சவுண்ட் கேட்டுச்சு டி” சங்கமிக்கும் தெரியும் இவர்கள் தான் அடித்துக் கொண்டிருப்பார்கள் என்று இருந்தும் சிவாவின் வாயார கேட்பதில் ஒரு அற்ப சந்தோசம்.
‘இனிமேல் இவ தூங்குறப்போ எதுவுமே பேசக்கூடாது எல்லாம் ஷார்ப்பா ஸ்டோர் பண்ணி வெச்சிருக்காளே’ என்று வியந்த சிவா,
“அது.. அந்த குட்டி பிசாசு.. சந்தியா தான்.. அவளும் நானும் அடிச்சுகிட்டோமா.. நான் சும்மா சீண்டிப்பார்த்தேன் அவ கோவிச்சிட்டு கதவை டமார்ன்னு சாத்திட்டு வெளில போய்ட்டா..”
‘அந்த சத்தத்துக்கும் நீ எழுந்திருச்சியா சாத்தானே.. கும்பகர்ணனுக்கு ஒன்னு விட்ட சிஸ்டர் போல தூங்கிட்டு.. இப்போ கேள்வி மட்டும் கேக்குறத பாரு’ சிவா மைண்ட் வாய்ஸ்.
“சந்தியா எங்க? இன்னும் கோவமா இருக்காளா? என்ன ஏன் தனியா விட்டுட்டு போனீங்க?”
“அவளுக்கு சமோசா வாங்கிக்குடுத்து கரெக்ட் பண்ணிட்டேன்.. லைப்ரரி வரைக்கும் போயிருக்கா.. எதோ ரெஃபர் பண்ணனும் ஆமா ப்ராஜெக்ட்க்கு. எனக்கும் சமோசா சாப்பிடும்போது தான் உன் ஞாபகமே வந்துச்சு உன்ன விட்டுட்டு வந்துட்டோமேன்னு.. சரி சாப்பிட்டுட்டு போய் எழுப்பலாமேன்னு வந்தேன். நீ அதுக்குள்ள நீல கிரஹ வாசியாவே மாறிட்டடி அவதார் குட்டி” என்று புன்னகையுடன் அவள் தலையில் தட்ட..
சங்கமியும் புன்னகைத்துவிட்டு “எல்லாம் ஓகே அந்த தேவ்.. ரியா.. காலக்ஸி பாக்ஸ் எல்லாம் எங்க இருந்துன்னு யோசிக்கிறேன்.. ஸ்ட்ரைக் ஆகலேயே”
“என்ன பேரு சொன்ன தேவ்.. ரியாவா??” என்று யோசித்த சிவபரணிகா எதையோ கண்டு பிடித்தவள் போல், “யுரேகா.. யுரேகா..” என்று கத்திகொண்டே
“தேவ் ரியா நீ கடைசியா படிச்சு சொன்னா நாவல்ல இருந்த கேரெக்டர்ஸ்.. காலக்ஸி பாக்ஸ்னு சொன்னியே அது ஒருவாரம் முன்னாடி அறை எண் முன்னூத்தி ஐந்தில் கடவுள்ன்னு ஒரு பழைய படம் பார்த்தோமே அந்த எபெக்ட்.. இன்னும் சொல்றேன் கேட்டுக்கோ.. கனவுல ரோபோட் வந்தது கடைசியா நம்ம பார்த்த டூ பாயிண்ட் ஓ படத்தோட எபெக்ட்.. ஏழு கழுதை வயசாயும் நீ கார்ட்டூன் பார்த்தா கனவுல கண்டிப்பா டோரா வரும். சாங்ஸ் எல்லாம் பேட்ட மூவி எபக்ட்டு.. உலகம் அழிஞ்சதெல்லாம் எதாவது ஹாலிவுட் மூவில இருந்து சுட்டிருப்ப கேர்ள் நீ.. இதுல இருந்து ஒன்னு நிச்சயம் படம் பார்த்து நீ ரொம்ப கேட்டுப் போய்ட்டடா செல்லம்” என்று கூறிவிட்டு
‘எப்படி என் கண்டுபிடிப்பு’ என கண்கள் மின்ன தோழியைப் பார்த்திருந்தாள்.
தோழியை எண்ணி மலைத்துப் போயிருந்தாள் சங்கமித்ரா.. “நீ ஒரு நடமாடும் என்சைக்கிளோபீடியா சிவா” என்று கட்டிக்கொண்டாள்.
இன்னும் குழப்ப ரேகைகளுடன் சங்கமித்ரா அமர்ந்திருக்க.. “இன்னும் என்னடி!!”
“எல்லாம் சரி அந்த வாயேஜர் சாட்டிலைட் எங்கயோ சமீபத்துல கேள்விப்பட்ட மாறி இருக்கு எங்கனு தெரில” என்று புலம்பிக் கொண்டிருந்தவள் சிவாவின் முகத்தை பார்த்து சட்டென்று அமைதியாக…
“அட ஆண்டவா.. நாளைக்கு எக்ஸாம் வெச்சுட்டு இவ பண்ணுற அலப்பறை தாங்க முடியலையே!! சங்ங்ங்கு.. நாளைக்கு உனக்கு சங்கு தான்”
“நீ பன்ச்ச் பேசுறத பார்த்தா!! எங்கன்னு கண்டு பிடிச்சுட்டயா டி”
“நாயே!! நாளைக்கு சாட்டிலைட் கம்யூனிகேஷன் எக்ஸாம்..”
“ஓ..”
“என்னது ஓ வா.. ஓஹோ தான்.. நானும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த குவெஸ்ட்டினை சத்தம்போட்டு படிச்சுட்டு இருந்தேன் சந்தியாவை வெறுப்பேத்த.. நீயும் இதெல்லாம் தூங்குறதுக்கு முன்னாடி தானே படிச்சிட்டு இருந்தே..”
“ஈஈஈ.. ஆமால்ல”
“சிரிக்காத.. த்தூ…”
“சரி சரி விடுடி.. மறந்துட்டேன் எதோ நியாபகத்துல”
“ஓவரா படிச்சா இப்படித்தான்.. நாளைக்கு தேரிருமா!! உன்ன பார்த்தா நாளைக்கு பேப்பர்ல எல்லாம் நீல கிரகத்தை பத்தி கட்டுரை எழுதுவ போலயே.. ஆனா அதுக்கும் மார்க்கு போட்டுருவாங்க டோன்ட் வொரி.. பார்த்து கேர்ள் தேவ் ரியான்னு மட்டும் போற்றாத அப்பறம் சிக்கிருவே”
“எக்ஸாம் ஹால்ல எல்லாம் கன் மாறி இருப்போம்.. ஸ்டெடி ஆஹ்” என்று தம்சப் செய்து புன்னகைத்தாள் சங்கமித்ரா.
இருவரும் புன்னகைத்துவிட சிறிதுநேர மௌனத்திற்குப்பின் சிவா, “நீ பேரப் பசங்க ன்னு சொல்லும்போது மட்டும் என் லிட்டில் ஹார்ட் அப்டியே குதிச்சு குதிச்சு ஆட்டம் போட்டுச்சு தெரியுமா!” என நெஞ்சில் கைவைக்க..
“யூ க்நொவ் வாட்! தேவ் அப்படியே எனக்கு பையன் வேஷம் போட்ட மாதிரி இருந்தான்.. ரியா உன்ன மாறியே இருந்தா”
“அப்போ டோரா என்ன அந்த சப்ப மூக்கி சந்தியா மாதிரியா இருந்துச்சு?” என சிவா கேட்டதும்
டமார்ர்.. என்று இடியோசை கேட்டதுபோல் கதவு திறக்கப்பட்டது..
*****
12
அந்த அறைக்குள் நுழைந்தாள் சந்தியா.
‘இவளுக்கு இதே வேலையாப்போச்சு கதவை டமார்னு அடிச்சு தூக்கிட்டு தான் வருவா எரும’ என சிவா மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டிருந்தாள். அவளும் அப்படித்தான் வந்தாள் என்பது மட்டும் அப்போது அவள் நினைவிலில்லை.
சந்தியாவோ அறைக்குள் நுழைந்ததும் தோழிகள் இருவரையும் கண்டுகொள்ளாமல் தீவிரமாக எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.
“ஏய் சப்ப மூக்கி இங்க வாயேன்..” சிவா அழைக்க
“ஏய் பேசாம இருந்திருடி குண்டோதரி.. என் வாய கிளறாத” என கடலில் சுனாமி வருமுன் ஏற்றப்படும் எச்சரிக்கை கூண்டு போல் முன்நடவடிக்கை எடுத்திருந்தாள் சந்தியா.
“சரி செல்லக் குட்டி இங்க வாயேன்.. செமயா ஒரு விஷயம் நடந்திருக்கு.. நம்ம சங்கமிக்கு வந்த ட்ரீம் பத்தி கேட்டன அப்டியே ஷாக் ஆய்ருவ” என்று சும்மா இருந்தவளை சொறிந்துவிட்டாள் சிவபரணிகா.
“அப்டியா!! என்ன ட்ரீம்” என்றபடி தேடுவதை விட்டுவிட்டு ஆர்வமாய் வந்து அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டாள் சந்தியா.
‘ஆடு சிக்கிருச்சு.. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று உள்ளுக்குள் சிரித்தபடி அமர்ந்திருந்தாள் சிவா.
சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் எந்த ஸ்டேஷனில் நிக்காமல் ஓடிக்கொண்டிருந்தது. அது ஓடி முடிந்ததும்.. இப்போது சந்தியாவின் முகத்தில் குழப்ப ரேகைகள். சந்தியா வைத்த ராக்கெட்டால் தான் ஓசோனில் ஓட்டை விழுந்ததென்று எண்ணும் அளவிற்கு சங்கமித்ரா கூறிக்கொண்டிருந்தாள்.
அவள் என்னவோ மிகுந்த வருத்தத்துடன் தான் கூறிக்கொண்டிருந்தாள் ஆனால் சிவாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் சிரித்துவிட்டாள்.
சந்தியா முறைக்கவும் “என்ன முறைப்பு.. என் கோட்டா அப்போவே முடிஞ்சுது” என்றாள் சிரிப்பினூடே.
ஆனால் சந்தியா அவளுக்கு பதிலளிக்காமல் யோசனையில் இருந்தாள்.
சங்கமித்ரா கூறியதை பற்றித்தான் அவளது சிந்தனை முழுதும். நாட்டில் என்னென்னவோ நடக்கிறது ஹைட்ரொ கார்பன் பிரச்சனை ஸ்டெர்லைட் பிரச்சனை போன்று அதை எல்லாம் தடுத்து விட முடியுமா என்ன? ஆனால் இவள் ஒரு கனவை கண்டுவிட்டு இவ்வளவு வருந்துகிறாளே! அதன் தாக்கம் இப்படி பேச வைக்கிறது இவளை. இவள் செய்ததெல்லாம் கடலில் ஒரு துளி அளவில் தான். ஆனால் இதுபோல் தானே இங்கிருக்கும் அனைவரும் செய்கின்றனர். நான் உட்பட..
இப்படி ஒவ்வொரு சிறு துளியும் சேர்ந்தால் பெரு வெள்ளம் ஆயிற்றே!! அதை ஏன் மாற்றத்திற்கான சிறுதுளியாய் மாற்றக்கூடாது!! நீ மாறு என்பதை விடுத்து நான் மாறுகிறேன் நீ மாறினால் மாறு என்ற எண்ணம் அல்லவா தோன்றவேன்றும்..
மரத்தை வெட்டுபவன் வெட்டிக்கொண்டு தான் இருக்கிறான் வளர்த்துபவன் வளர்த்திக் கொண்டுதான் இருக்கிறான். இருவரும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இதில் நாம் யார் என்பதுதான் கேள்வி. வாழவைத்து வாழ்பவனா?? வயிற்றை நிரப்பி வாழ்பவனா??
என்னால் என் பூமிக்கு எந்த பாதிப்பும் வராது என்று என்னுள் ஒரு விதையை விதைக்கிறேன். அது போதும் எனக்கு.. இப்போது சந்தியாவின் முகம் தெளிவடைந்தது.
அவள் சங்கமித்ராவின் கையை அழுந்த பற்றி “யு ஆர் ரைட்.. இதுபோல ஒவ்வொருத்தருக்கும் தோணனும்.. நம்மளே லேட் பிக்கப் தான்” என்றாள் புன்னகைத்து.
“சந்தியா.. நீ இவ்வளவு பொறுமையா.. பேசி நான் பார்த்ததே இல்லை யா..” என்றாள் சிவா ரைமிங்காக.
“ரைமிங் அடிச்சது போதும் வந்து எனக்கு ப்ராஜெக்ட் முடிக்க ஹெல்ப் பண்ணு.. அதை தேடிட்டு தான் வந்தேன் இங்க காணோமே எங்க வெச்சோம்?” என்று யோசித்தாள் சந்தியா.
“ப்ரொஜெக்ட்டு.. அது ஹால் ஒன்ல தானே இருக்கு?” கண்டுபிடித்தாள் சி.ஐ.டி சிவா.
சங்கமியை இழுத்துக்கொண்டு இருவரும் ஹால் ஒன்னிற்கு ஓடினர். அங்கு அவர்கள் வைத்த இடத்தில் அவர்களது ப்ராஜெக்ட் இல்லை..
இப்போது சந்தியாவின் முகத்தில் குழப்ப ரேகைகள்.. சிவாவின் முகத்தில் பய ரேகைகள்..
“டிக்டிக் ன்னு கேட்டதா சொன்னியே!! அது என்ன” என்று சிவா கேட்கும் போதே நாக்கு வறண்டுவிட்டது.
“இங்க இருந்துச்சா!! எங்கே??” என சிவா சுற்றிலும் தேட,
“அதோ அங்க” என்று ஒரு திசையை காட்டினாள் சங்கமித்ரா.
“ஓஹ் நோ” என இருவரும் கோரஸாக கத்தினர்.
சந்தியா வீறு கொண்டு எழுந்த சிங்கம் போல் சென்று குழந்தையை கையில் ஏந்துவதுபோல் அங்கு கிடந்த பெட்டியை பூப்போல் எடுத்து,
“ஐயோ ஐயோ ஐயோ ப்ரொஜெக்ட செதச்சுட்டாளே!! நான் என்ன பண்ணுவேன்.. ஹெட்ச்.ஓ.டி கிட்ட நான் என்ன சொல்லுவேன்..” என்று ஒப்பாரியிட்டுக் கொண்டிருக்க..
“ஐயோ நம்ம ப்ரோஜெக்டா அது!! கைல காலுல விழுந்த செஞ்ச ப்ரொஜெக்டயா இவ செவுத்துல விட்டெறிஞ்சா.. டிக்டிக் டிக்ன்னு சொல்லும்போதே நான் உஷாராயிக்கணும்.. போச்சே போச்சே எல்லாம் போச்சே” என்று பஜனையில் சிவாவும் இணைந்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் இழவு வீடுபோல் மாறியது அந்த அறை. மூவரும் சேர்ந்து செய்த ப்ராஜெக்ட் தான் அந்த செங்கல் பெட்டி. ஐ.சி ட்ரிபிள் பைவ் டைமெர் உபயோகித்தால் உருவான ஒலிதான் அது. சந்தியாவிற்கு சிவாவிற்கு ஏற்பட்ட சண்டையில் ப்ரொஜெக்ட்டிற்கு டேமேஜாகமல் இருக்க சங்கமித்ராவின் அருகில் பத்திரமாக வைத்திருந்தனர். உறங்கி கொண்டிருந்த சங்கமித்ரா அதன் மேல் கையை போட்டதால் உருவான ஒலிதான் டிக்டிக் டிக்டிக் டிக்டிக்..
ஒன்றும் புரியாமல் பார்த்திருந்த சங்கமித்ராவிற்கு அது தங்களது ப்ராஜெக்ட் என்று தெரிந்ததும்.. அதைவிட அது ஒர்க் ஆகிறது என்று தெரிந்ததும்..
“ஒஹ்.. அப்போ அது நம்ம ப்ரொஜெக்ட்டா!! ஒர்க் ஆக ஆரம்பிச்சிருச்சா!! அதுக்கு சாத்தியமே இல்லையே?”
“அடியேய் நானே கஷ்டப்பட்டு நாலு ஒயரை மாத்தி சொருகி சத்தம் வர்ற அளவுக்கு ரெடி பண்ணிருக்கேன்.. நீ மொத்தமா ஒன்னுமில்லாம பண்ணிட்டியே டி” என்றபடி தோழிகள் இருவரும் சேர்த்து சங்கமியை ஒரு புரட்டு புரட்டியதும் தான் நிம்மதி அடைந்தனர்.
சிறிது நேரத்தில் டிக்டிக் டிக்டிக் ஒலி அந்த அறை முழுதையும் நிரப்ப.. சிவப்பு நிறத்திலான ஒளியும் வந்து கொண்டிருந்தது. எல்சிடி டிஸ்பிலேயில் சில எண்களும் வந்துபோய் கொண்டிருந்தது. தோழிகள் மூவரும் அவர்கள் வடிவமைத்த செங்கல் பெட்டியின் அருகில் சென்று பார்க்க.. அது இப்போதுதான் முழுவீச்சில் செயல்பட்டுக்கு கொண்டிருந்தது.
சங்கமித்ரா தூக்கி எறிந்ததில் சுவரில் அடித்து விழுந்ததும் தான் அது சரியாக செயல்பட ஆரம்பித்திருக்கிறது. அதை எடுத்து பரிசோதித்து பார்த்த சிவா சந்தியாவின் முகத்தில் அதை விட பிரகாசம்.
ஹூர்ரே…
உடனே சங்கமியின் ஒரு கன்னத்தில் சந்தியா முத்தமிட.. சிவபரணிகா மறு கன்னத்தில்.. இருவரும் சேர்ந்து அவளை அணைத்துக்கொள்ள லாரி டயரில் சிக்கிய எலுமிச்சை ஆகிப்போனாள்.
“ப்ச்.. ஐயோ.. விடுங்கடி.. எலும்பு ஒடஞ்சிரும் போலயே” என்றதும் தான் அவளை விட்டு நகர்ந்தனர்.
“ப்ராஜெக்ட் போச்சினதும் என்ன கீழ தள்ளி புரட்டி எடுத்துட்டு இப்போ அதுவே ஒர்க் ஆனதும் என் கன்னத்துல கிஸ்ஸிஸ் குடுகுதுக லூசுக” என்று இரண்டு கன்னங்களையும் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் சங்கமித்ரா..
அதெல்லாம் அவர்களது காதில் விழவில்லை அவளை இழுத்துக்கொண்டு அவர்களது அறைக்கு ஓடினர்.
மூவரும் அவர்களது அறைக்கு திரும்பியதும், “நம்ம ப்ராஜெக்ட் கைய்டு கீழ் ரூம்ல தான் இருக்கு.. நான் இப்போவே இத நம்ம கைய்டு கிட்ட காமிச்சிட்டு வந்தர்றேன்.. அப்போதான் அப்ரூவ்ல் கிடைக்கும்..” என்று அதை தூக்கிக்கொண்டு வெளியே செல்ல எத்தனித்தாள் சந்தியா.
“ஏண்டி நான் எவ்வளவு விஷயம் சொல்லிருக்கேன்.. அதையெல்லாம் பாலோவ் பண்ணாம.. நீ எங்க வந்து நிக்குறே!! சரி அப்படிதான் என்ன யாரோ கூப்பிட்டாங்களேன்னு ஆசையா பார்க்குற நேரத்துல.. டமார்ன்னு கதவை தொறந்துட்டு வந்து என் கனவை கலைச்சதும் இல்லாம பேச்சை பாரு” என்று பொங்கிவிட்டாள்.
“ப்ச்.. உன் பார்ட்னெரை கேக்கல.. நான் என்…” என்று முடிக்குமுன்
“எடு கட்டையை” என்று சுற்றிலும் எதாவது கைக்கு கிடைக்குமா என்று வேகமாக சங்கமித்ரா தேட.. தூரத்தில் இருந்த ப்ரூம்ஸ்டிக்கை காண்பித்தாள் சந்தியா.
அடியேய்!! என்று அவளை முறைத்து பார்த்த சிவா, சங்கமியிடம் திரும்பி
“ஏய் பார்க்கலைன்னா பார்க்கலைன்னு சொல்ல வேண்டியது தானே.. இப்போ எதுக்கு கட்டையைத் தேடுற.. நீ சொல்லாட்டி போ கேர்ள்.. நைட் நானே என் ட்ரீம்ல நீல கிரஹத்துக்கு போய் பார்த்துக்கறேன்” என்றாள்.
மூவரும் பேசிக்கொண்டே கேன்டீனை நெருங்கினர். அங்கு போடப்பட்டிருந்த டேபிளை சுற்றிலுமான இருக்கையில் இளம் பட்டாளமே அமர்ந்திருந்தது. மூவரும் ஆளுக்கொரு டேபிளில் அமர்ந்து மற்ற நட்புகளோடு கைகோர்த்திருந்த வேளையில் சங்கமித்ராவின் பார்வையில் பட்டது அது.
சரியாக மூடாமல் ஒழுகிக் கொண்டிருந்த வாட்டர் டேப். அவள் எழுந்து இடப்பக்கமாக அதனை நெருங்க.. வலப்பக்கமாக சிவபரணிகா அதேபோல் நெருங்கினாள். இருவரும் ஒரே நேரத்தில் அதை சரியாக மூடுவதற்காக கையை நீட்ட.. சந்தியா அதை அணைத்திருந்தாள். அவள் நேர் பக்கமாக இவர்களுக்கு நடுவில் நின்றிருந்தாள். மூவரும் டேப்பை மட்டும் கவனித்தால் மற்றொருவரை கவனிக்க வில்லை.
கவனித்ததும் மூவர் இதழ்களிலும் அழகிய புன்னகை..
சிவா சந்தியாவைப் பார்க்க.. சந்தியா சங்கமியைப் பார்க்க.. சங்கமி சிவாவைப் பார்த்திருந்தாள். சுற்றிலும் ஒலித்த கரகோசங்களில் மூவரும் பார்வையை விலக்க.. அங்கிருந்த அனைவரும் இவர்களைத்தான் பார்த்திருந்தனர்.
சிலர் புரிந்துகொண்டனர் அதனால் கரகோசம் எழுப்பினர். பலர் விரைவில் புரிந்து கொள்வார்கள்.
“இன்னைக்கு தேவ் ரியாவும் ட்ரீம்ல என்ன சொல்லுவாங்கன்னா தேங்க் யூ சோ மச் கிரன்னி ன்னு.. ஆன இந்த சப்ப மூக்கிய டோரா தான் புகழும், உன் சின்ன கை அற்புதம் செஞ்சிருச்சே ன்னு” என்று சிவபரணிகா இருவரையும் கிண்டல் செய்ய..
“ஏய் குண்டோதரி உன்ன..” என சந்தியா அவளைத் துரத்த.. சங்கமித்ரா வாய்விட்டே சிரித்துவிட்டாள்.
கனவும் நிஜமும் கலவையாய் சேர்ந்து அவளது எண்ணங்களில் கலந்து நீல கிரஹத்தை உருவாக்கி அதில் அவளையும் பயணிக்க வைத்துவிட்டது. அவள் மனதில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும் இந்தக் கனவும் அதில் கண்ட காட்சியும்..
இன்று அளவிற்கு மீறி இருக்கிறதென்று நாம் வீணாக்கும் ஒவ்வொன்றும் நாளை இல்லாமல் போகலாம். கனவாய் வந்தது நாளை காட்சியாய் மாறினால் நிச்சயம் நம் சந்ததியினரும் நீல கிரகத்தில் நடந்ததுபோல் தான் ஒவ்வொரு நொடியையும் கடக்க நேரிடும். நாளைய தலைமுறையினருக்கும் கொஞ்சம் இயற்கையையும் அதன் வளங்களையும் விட்டு வைப்போமே!! நாமும் வாழ்ந்து பிறரையும் வாழவைப்போமே!!