Advertisement

நேற்று மாலை பேபி அஸ்வதியுடன் கழித்த பொழுதுகளை நினைத்துக்கொண்டு தனதறையில் அமர்ந்திருந்தாள் மயூரா.அரவிந்த் வீட்டில் இல்லை.அவசர வேலையென்று கிளம்பி சென்றிருந்தான்.
அவன் போன பின்பு,மயூவின் மனம் நிலையில்லாமல் ஊசலாடிக் கொண்டிருந்தது.முயன்று குழந்தையை பற்றி நினைக்க,அவளால் அவளது எண்ணங்களையே வெல்ல முடியவில்லை.
மன அழுத்தம் அதிகமாவது போன்ற உணர்வு!! பெண்களுக்கு இதுவொரு பெரிய பிரச்சனை!! ஹார்மோன் மாற்றங்களால் எப்போது எப்படியிருப்பார்கள் என்று பெரும்பாலும் கணிக்கவே முடியாது. சிலர் அதிலிருந்து எளிதாய் மீண்டுவிடுவார்கள்.சிலரால் அப்படி எதையும் எளிதாய் எடுத்துக்கொள்ள முடியாது. மயூவும் அந்த வகையறா தான்!!
இன்றும் அதுபோலொரு சூழல் தான்!!
கணவனுடன் ஒன்றாக கூடிக்கழித்த பொழுதை நினைத்து மன அழுத்தத்தை கூட்டிக்கொண்டிருந்தாள்.அவனுடன் இருந்த பொழுது எதுவும் தெரியவில்லை. ஆனால் தனிமை கிட்டியவுடன் மூச்சடைக்கும் உணர்வில் திண்டாடி கொண்டிருந்தாள்.
இதுவரை தான் மற்றும் என்றிருந்த உலகில்,திடீரென்று அரவிந்தையும் இணைத்துக்கொண்டதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஏதோ தவறு செய்தது போன்று பிரம்மை!! ஒருக்கட்டத்தில் தலையணையில் முகம் புதைத்து அழுக ஆரம்பித்துவிட்டாள்.
‘எதுக்காக இப்படியெல்லாம் வாழணும்’-தேவையில்லாத சிந்தனைகள் ஆட்டுவிப்பதை சற்று காலம் கடந்து தான் உணர்ந்து,உடனே எழுந்தமர்ந்து கண்களை துடைத்துவிட்டு,வாஷ்ரூம் சென்று முகத்தை நன்றாக கழுவியவள்,கண்களுக்கு மையிட்டு,முகத்திற்கு போதுமான அளவு ஒப்பனையையும் செய்து கொண்டாள்.
”எனக்கு ஒண்ணுமில்லை.நான் ரொம்ப நல்லாயிருக்கேன். சந்தோஷமாயிருக்கேன்”என்று கண்ணாடியில் தன்னையே பார்த்து பேசி,முகத்தை சிரிப்பது போல வைத்துக்கொண்டாள்.
“வாழ்க்கையில நான் எதிர்கொள்ற எல்லா விஷயங்களுக்கும் ஏதோவொரு காரணமிருக்கு.தேவையில்லாம எதிர்மறையா யோசிக்கக் கூடாது. விருப்பப்பட்டு தானே அவங்களோட இருக்க சம்மதிச்சேன்.இப்போ அழுது என்ன பண்ண? இனி அதுபோல நெகட்டிவா யோசிக்க மாட்டேன்!! என்னோட எண்ணங்கள் என்னோட கட்டுக்குள்ள தான் இருக்கணும்.அதைமீறி போக விடமாட்டேன்” உறுதிமொழி போல சொல்லிக்கொண்டாள்.
மாதத்தில் ஒருசில நாட்கள் இப்படி தனக்குத்தானே மயூ பேச்சுவார்த்தை நடத்துவாள்.ஆனால் தனியாகத்தான் பேசுவாள்.ஒரேயொரு முறை மகேன் மட்டும் பார்த்திருக்கிறான்.
அவனும் தங்கையின் மனப்போராட்டங்கள் அவள் உடலில் ஹார்மோன் மாற்றமாக உருவெடுப்பதை உணர்ந்து மருத்துவரிடம் அழைத்து சென்று,மயூவிற்கு போதுமான அளவுக்கு அறிவுரைகள் கிடைக்கும்படி செய்திருக்கிறான்.
பல வீட்டில் இதை யாரும் செய்வதில்லை.பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை.ஆனால் இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மன அழுத்தங்களால் ஹார்மோன் பிரச்சனை ஏற்பட்டு,அது மாதாந்திர பிரச்சனையாக உருவெடுத்து,உடல் பருமனில் முக்கிய பங்கு வகித்து,சுகர்,பிரசர் என்று அடுத்தடுத்து நோயை அதிகமாக இழுத்துக்கொண்டே செல்லும் என்று ஆய்வு சொல்கிறது.
முடிந்தவரை பெண்கள் அவர்களின் மனதை ரிலாக்ஸ் செய்வதற்கென்று நேரம் ஒதுக்கிக்கொள்ளுதல் நலம்.அவர்களின் குடும்பத்தினர் புரிந்துகொண்டு ஒத்துழைத்தல் கூடுதல் நலம்!!
மயூவும் தனக்குள்ளே பேச்சு வார்த்தை நடத்திய பின்னும் இன்று ஏனோ எண்ணங்கள் ஒருகட்டுக்குள் இல்லாமல் போக,மனதிற்கு இதமளிக்கும் பாடல்களை கேட்க நினைத்து,அவளுக்கு மிகவும் பிடித்த ஸ்வர்ணலதா அவர்களின் பாடல்களை அலைபேசியில் ஓடவிட்டாள்.
ஸ்வர்ணலதாவின் குரல் மனதை மயக்கும் குரல் என்பதை விட மனதை ஆளும் குரல் என்றே மயூ அடித்து சொல்லுவாள். அவ்வளவு பிடிக்கும் அவளுக்கு!! அவரின் தாய்மொழி வேறு என்றாலும்,தமிழை கொஞ்சி கொஞ்சி பாடாமல்,ஆழ்ந்து,புரிந்து,பிழையில்லாமல் ஆளுமையுடன் பாடும் அவரின் குரலுக்கு அவள் அடிமை தான்.
அவரின் குரலில் ஒரேயொரு பாடலை திரும்ப திரும்ப கேட்க ஆரம்பித்து,கூடவே பாடவும் செய்தாள்.
இருபது நிமிடம் கழிந்திருக்கும். அப்போது தான் வேலையை முடித்துவிட்டு வந்திருந்த அரவிந்த்,தனதறைக்கு வெளியே சரசு புன்னகையுடன் நின்றிருந்த விதத்தையும் கூடவே மயூவின் குரலும் கேட்க,புன்னகையுடன் அவரை எதிர்கொண்டான்.
அவர் அவனின் கேர் டேக்கர்.சிறுவயதிலிருந்தே அவனுடன் வந்த ஒரு ஜீவன். அவனுக்காக கணவர் கந்தனையும் விட்டு இங்கேயே இருந்துகொண்டிருக்கிறார்.
அதிகமாக அரவிந்த் அவருடன் பேச மாட்டான்.வேலைக்காரர்களுடன் ஒட்டி உறவாடக் கூடாதென்பது அவனுக்கு வீட்டினர் புகட்டிய பாடம்.
இன்றும் எதுவும் பேசாமல் புன்னகையுடன் அவர் முன் நிற்க,சரசு இவனை கவனித்துவிட்டவர்,”பாப்பா ரொம்ப நல்லா பாடுது தம்பி.அதுலயும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் போல! இதோட அஞ்சாவது தடவை கேட்டுக்கிட்டு இருக்கு”என்றவர் அவனின் பதிலை எதிர்பாராமல்,தான் அங்கே நின்றதன் காரணத்தை விலக்கிவிட்டு அவருக்கென்று ஒதுக்கியிருந்த ஓய்வறைக்கு சென்றுவிட்டார்.
மனைவி தான் உள்ளே நுழைந்து,அவளருகில் நிற்பதை கூட உணராமல்,பாடிக்கொண்டிருக்க,அதை கெடுக்க மனமில்லாமல் கொஞ்சம் தூரமாக டிரேசிங் டேபிளில் சாய்ந்து நின்று அவளை கவனிக்க ஆரம்பித்தான்.
கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆலிலையில் அரங்கேற 
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்—
இந்த பாடல் வரிகளுக்கான இசை மட்டும் தனியாக தொடர்ந்து ஒலிக்க,உடன் கேட்கும் இவளது குரலும் அழகிய இசைக்கருவி தான் என்றெண்ணிக் கொண்டவன்,அவளுக்கு வெகு அருகில் சென்று காதோரமாய்,
“இக்கணம் போல இன்பம் ஏதுமில்லை தான்”எனவும் விதிர்த்து போய் இமை திறந்தாள்.
அவ்வளவு அருகில் அவனைக் காணவும்,பதட்டம் ஏற்பட,”சாரி.சாரி..நீங்க வந்ததை கவனிக்கல”எனவும்,
“அதுக்கெதுக்கு இவ்வளவு பதட்டம்.ரிலாக்ஸ்”என்றவன் அவள் பதட்டத்தை கூட்டும் வகையில் அவள் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டான்.
கடந்த மூன்று தினங்களாய் அவன் காட்டும் நெருக்கம் அதிகமே!! எப்படி உடனே இப்படியெல்லாம் உரிமை எடுக்க முடிகிறது என்பதே அவளின் கவலை!!
அதை காட்டிக்கொள்ளாதிருக்க வெகுபாடுபட,அதை உணராதவனாய்”டாக்டர்கிட்ட போயிட்டு வர்றேன்”என்றான்.
“எதுக்கு?”
“பேபி சீக்கிரம் பிறக்க என்ன வழின்னு கேட்டுட்டு வந்தேன்.உன்னோட பீரியட்ஸ் டேட் என்ன”கேட்டு அவளை அதிர வைக்க,தொண்டையை செருமிக்கொண்டு அவனுக்கு பதிலளிக்க,
“வாவ்”என்று குதூகலித்தான்.
“அப்போ இந்த மாசம் எதிர்பார்க்கலாமா?”என்றவன் அவளின் முகம் போன போக்கை உணர்ந்தவன்,
“உன்னை இப்போ இருந்தே டென்ஷன் ஆக்க விரும்பலை தான். இது என்னோட ஆசை. இனிமேல் மன்த்லி இந்த டேட்ஸ் உன்னோட இருக்க மாதிரி பார்த்துக்கறேன். நேத்து அஸ்வதி பார்த்ததில இருந்து ரொம்ப ஆசையா இருக்கு. நமக்கும் ஒரு பேபி. அதுவும் சீக்கிரம் கிடைச்சா சந்தோஷமா இருக்கும்ல” எதிர்கால கனவுகளை பகிர, அவளுக்கும் ஆசையாகத்தான் இருந்தது.
எப்போதோ ஒருமுறை’வருஷம் திரும்பறதுக்குள்ள ரெண்டு பிள்ளை பெத்துக்குவேன்’ சொன்னது ஞாபகம் வர,கூடவே வேறு சில ஞாபகங்கள் வர,முயன்று தடுத்தவள்,மடியிலிருக்கும் கணவனின் புறம் மனதை செலுத்த முடிவு செய்தாள்.
வேறு வழியே அவளுக்கு இல்லை.
தன் பதிலுக்கு கணவன் தன் முகம் பார்ப்பதை உணர்ந்து,”பாப்பா மாதிரி துருதுருன்னு இருந்தா,ரொம்ப நல்லா இருக்கும்”அவனுக்கு ஆதரவாய் பேச,
“அழுதியா”என்றான் திடீரென்று!!
“இல்லையே”
“உன்முகம் வீங்கியிருக்கு. மறைக்காம உண்மையை சொல்லு.எதுக்கு அழுத?”அழுத்தி கேட்க,மறைக்க தோன்றவில்லை.
“என்னை உங்க வாழ்க்கைல வந்த கரைன்னு சொன்னிங்க.அப்போ அந்த கரையோட எப்படி வாழ முடியுதுன்னு யோசிச்சேன்” என்றவள்,
‘இன்னொருத்தனை மனசில வைச்சிருக்கேன்னு கீழ்த்தரமா பேசினவர்,எப்படி அதை பொருட்படுத்தாம,என் கூட சந்தோஷமா இருக்க முடியுதுன்னும் நினைச்சேன்’என்பதை சொல்லாமல் மனதினுள் நினைத்துக்கொண்டாள். வெளியில் சொல்லுதல் பெரும் விளைவுகளை உண்டாக்கும் என்று உணர்ந்திருந்தாள்.
மனைவியின் பதிலில்,அதில் வெளிப்பட்ட கேள்வியில்,அவள் மனதை தான் நோகடித்துவிட்டோம் என்று புரிந்தாலும்,அதற்காக விளக்கம் கொடுத்து சமாதானம் செய்ய முயற்சி செய்யவில்லை.
“நீயும் பேசின,நானும் பேசினேன். எல்லாம் முடிஞ்சுது. இப்போ நாம சந்தோஷமா தான இருக்கோம்? ஆமாவா..இல்லையா” –பதில் எதிர்மறையாக இருக்கக் கூடாதென்ற தொனி அதில் வெளிப்பட,மௌனமாகிவிட்டாள்.
சற்று முன்னிருந்த இதம் தொலைந்தது போலிருந்தது இருவருக்கும்!!
“பதில் சொல்ல மனமில்லையா வல்லி”-அவள் மடியிலிருந்து விலகி கேட்க,வெளியே சரசு யாருடனோ பேசுவது போலிருக்கவும்,வெளியே வந்தான்.
வாயிலில் செக்யூரிட்டியுடன் காயத்ரியும் அவளது அப்பாவும் நின்றிருந்தார்கள்.
“வா..வா காயத்ரி. வாங்கப்பா”என்று இருவரையும் வரவேற்றவன்,
“இவங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு பண்ணுங்க”சரசுவிடம் சொல்லிவிட்டு,
 “வல்லி”குரல் கொடுக்கவுமே வெளியே வந்தவள் காயத்ரியை பார்க்கவும்,
“காயூ”ஓடி வந்து கட்டிக்கொண்டாள்.
அதற்குள் அழுகை வேறு வந்துவிட,’எதுக்கு அடிக்கடி டேமை திறக்கறா’ புரியாத பார்வையுடன்,
”ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க.. வல்லி அவங்களுக்கு ரூமை காட்டு”என்று மனைவியின் அழுகைக்கும் முற்றுப்புள்ளி வைக்க,கண்களை துடைத்துக்கொண்டவள்,கணவனை டீலில் விட்டு,
“வாங்க மாமா” என்று கூடவே தோழியையும் அழைத்துக்கொண்டு விருந்தினர் அறைக்கு கூட்டிக்கொண்டு சென்றாள்.
அறைக்குள் நுழைந்ததுமே,”அப்பா,கொஞ்ச நேரம் தூங்குங்க. நான் எழுப்பறேன்”காயத்ரி கூறவும் தூங்கிவிட்டார். அவர் ஒரு அப்பாவி. மகளின் பேச்சே தாரக மந்திரம்.
“காயூ. உனக்காவது என்னை வந்து பார்க்கனும்னு தோனுச்சே”தனியாக விட்டு சென்று வீட்டினரை பற்றி மறைமுகமாய் தோழியிடம் புகார் வாசித்தாள்.
“அதான்,நான் வந்திருக்கேன்ல. உன்னோட அண்ணியா..போதாதா”வழக்கம் போல வம்பிழுக்க,அதில் கலந்துகொள்ளாமல்,
“யாருமே ஒரு போன் கூட பண்ணலை”எனவும்,வெளியே எட்டிப்பார்த்த காயத்ரி,அரவிந்த் இல்லாததை உணர்ந்து,
“அனு திரும்ப உங்க வீட்டுக்கே வந்துட்டாங்க”எனவும் அதிர்ந்து போனாள்.
“என்ன சொல்ற. எப்படி ஆச்சு”
“எல்லாம் உன்னால தான்”எனவும் திடுக்கிட்டு போனாள்.
“நான் என்னடி பண்ணேன்”
“அதை உங்கப்பா தான் சொல்லணும். நீ தான் காரணம்னு உன் மேல ரொம்ப கோபமாயிருக்கார்”என்றவள் மெதுவாய்,
“மாறன் அண்ணாவோட அம்மாவுக்கு உன்னை மருமகளா கொண்டு வரணும்னு ஆசை இருந்திருக்கும் போலயிருக்கு. அதை ஏதோ காரணத்துக்காக சொல்ல,பெரிய சண்டையாகிடுச்சு”சுருக்கமாய் சொல்ல,எதேச்சையாய் உள்ளே வந்த அரவிந்தின் காதில்,மெதுவாய் சொன்னதும் தெளிவாய் விழ, மயூவை ஒருபார்வை பார்த்துவிட்டு அப்படியே திரும்பி தனதறைக்குள் நுழைந்துகொண்டான்.
மயூராவின் நிலையோ பரிதாபம். அதைவிட அனுவின் நிலைமை பரிதாபம். திருமணமான மூன்றாம் நாளே பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டாள்.

Advertisement