Advertisement

அரவிந்த் சென்றவுடன்,”மயூ,அண்ணாவை கோபப்படுத்திட்டனா? இப்போ என்ன செய்யறது”காயத்ரி கேட்கவும்,மயூவிற்கும் கலக்கம் இருந்தாலும்,
“அதை விடு.நீ முதல்ல விஷயத்தை தெளிவா சொல்லு”எனவும்,காயத்ரி பயங்கரமாய் முறைத்தாள்.
“நான் நாளைக்கு வரைக்கும் இங்க தான் இருப்பேன்.அதனால முதல்ல நீ போய் உன் வீட்டுக்காரரை சமாதானம் பண்ணு”
“ம்ப்ச்ச். கொஞ்ச நேரம் போனா,அவங்களே யோசிச்சு தெளிவாகிடுவாங்க. இப்போ போனா தேவையில்லாத பேச்சு வரும்”
“நீ ஏன் இவ்வளவு அலட்சியமா இருக்கற மயூ. அவங்களே சமாதானம் ஆகிடுவாங்கன்னாலும்,நீ போய் சமாதானம் பண்ணா தான் அவங்களுக்கு நிம்மதியா இருக்கும்.அவங்களோட ஈகோவும் வெளில வராது. நீ இப்படி அலட்சியமா இருந்தா,அவங்களுக்கு தேவையில்லாத ஈகோ வந்து ஒட்டிக்கும்.எதையும் யோசிச்சு செய். இப்போ முதல்ல நீ ஓடு”கையை பிடித்து வெளியே தள்ளாத குறையாய் இழுத்து வர,தோழியின் கையை உதறிவிட்டு,கணவனின் அறைக்கு சென்றாள்.
முதல்தளத்தில் தான் அவனுடைய அறை என்றாலும்,அந்த படிகளை ஏறுவதற்கே சிரமப்பட்டாள்.கூடவே சலித்துக்கொண்டாள்.
கணவனது அறைக்கு இன்று தான் முதல்முறை போகிறாள்.வெளியிலிருந்து கதவை தட்ட,”உள்ள வா”அனுமதி வழங்கினான்.
கீழே மயூ தங்கியிருந்த அறை போலவே இருந்தாலும்,இங்கு கூடுதலாக புத்தக அலமாறி இடம் பெற்றிருந்தது. அலுவலக வேலையை படுக்கையறைக்கு கொண்டு வரக் கூடாதென்ற கொள்கையுடையவன் என்பதால்,அந்த அறை இட வசதியுடன் அழகாக இருக்க,படுக்கை மட்டும் பெரிதாக இருந்தது.
அதை கவனித்தபடியே கணவனை பார்க்க,”நான் எதுவும் தப்பா நினைக்கலை”அவனே குறிப்பறிந்து பேசினான்.
“எனக்கும் எதுவும் தெரியாது”
“தெரிஞ்சிருந்தாலும் ஒண்ணும் பண்ணியிருக்க முடியாது.நீ எனக்கு மட்டும் தான்னு முடிவாகியிருக்கும் போது,யாரோட ஆசையினாலும்,எதுவும் ஆகப்போறதில்லை”
இதற்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல்,”நான் அப்போ கீழ போறேன்”என்றாள்.
“என்ன பிரச்சனைன்னு காயத்ரிகிட்ட தெளிவா கேளு.உன்னாலைன்னா சரி செய்யற பொறுப்பு நமக்கு இருக்கு”என்றவனை ஆச்சர்யமாக பார்க்கவும்,
“நானே உன் வீட்டுக்கு போன் செய்து கேட்கவா?”எனவும் பதட்டத்துடன்,
“ஐயோ,வேண்டாம். அப்பா கோபமாயிருப்பாங்க. பிரச்சனை முடிஞ்சா,அவங்களே போன் பண்ணி பேசுவாங்க. நாம எதுவும் பண்ண வேண்டாம்”என்றாள்.
“இப்படி இருக்கக் கூடாது மயூ. நம்மனால முடியும்னா,நாம செய்ய வேண்டியது செய்தே ஆகணும். நமக்கென்னன்னு அலட்சியமா விட்டுடக் கூடாது”-மீண்டும் அதே ஆச்சர்ய பாவனையில் பார்த்தவள்,
“ம்ம்”என்று மட்டும் சொல்ல,
“நானும் கீழ வர்றேன்.அவங்கள விட்டுட்டு இங்க இருக்கது சரியா இருக்காது”என்றவன் அவளோடு கீழே வர,காயத்ரி ஹாலில் டென்ஷனாக அமர்ந்திருந்தாள்.
மயூவின் முகம் தெளிவாக இருக்கவும் தான்,காயத்ரிக்கு டென்ஷன் குறைய,எதிரே வந்து அமர்ந்தவர்களிடம்,இயல்பாக தான் இங்கே வந்தது பற்றி பேச்சை எடுத்தாள்.
“நான் வேலை பார்க்கற காலேஜ்ல ஸ்டாப்-க்கு ஸ்பெஷல் ப்ரோக்ராம் இங்க தான் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. காலைல அட்டென்ட் பண்ணிட்டு,மயூவை பார்க்கறதுக்காக,பாதியிலையே கட் பண்ணிட்டு வந்துட்டேன்”
“காலேஜ்ல,என்ன சப்ஜெக்ட் எடுக்கற காயத்ரி”
“மேத்ஸ் தான்-ண்ணா.எனக்கும் மயூவுக்கும் ரொம்ப பிடிச்ச சப்ஜெக்ட்”
“ரெண்டு பேரும் ஒண்ணா தான் படிச்சீங்களா?”-மனைவியை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் கேட்டான்.
“ஸ்கூல்ல இருந்து,பிஜி வரைக்கும் ஒண்ணா தான் படிச்சோம்-ண்ணா. வேலைக்கு தான் என்னோட வரமாட்டேண்ணுட்டா”
“ஏன்”மனைவியை பார்த்து கேட்க,அவளை விட காயத்ரி தான் சங்கடப்பட்டு போனாள்.
மயூ பதில் சொல்லும் முன்,”அவங்க வீட்டுல பொண்ணுங்களை வேலைக்கு அனுப்ப பிரியப்பட மாட்டாங்க அண்ணா.ஆனால் யூடியூப்ல நிறைய வீடியோஸ் போட்டிருக்கா. அவளோட பொழுதுபோக்கே இது தான்”எனவும்,
“அப்படியா..என்ன பேர்ல?”மயூவை பார்த்தே கேட்க,
“லைப் மேத்ஸ்(life maths)”என்றாள்.
உடனே போனை எடுத்து ஆவலாய் தேடிப்பார்த்தான்.
காணொளியை அவன் பார்க்கும் முன்,”அப்புறம் பார்த்துக்கங்க”என்று போனை பிடுங்கிக்கொள்ள,காயத்ரி தோழியை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
‘அதுக்குள்ள கெமிஸ்ட்ரி பயங்கரமா வேலை செஞ்சுடுச்சு போலையே’விரிந்திருந்த கண்களை இயல்பாக ஆக்கிக்கொண்டு,
“அது குழந்தைங்களுக்கான வீடியோஸ்-ண்ணா.சில நேரம் பேரெண்ட்ஸ்-க்கு வீட்டுல சொல்லி கொடுக்க முடியாத போது,உபயோகமா இருக்கும்னு நினைச்சு ஆரம்பிச்சா.மாமாவும் ஹெல்ப்  பண்ணாங்க”எனவும்,
“தட்ஸ் நைஸ்”மனைவியை பார்த்தபடி சொன்னவன்,
“வல்லியோட அக்காக்கு என்ன பிரச்சனை”கேட்க..
அந்த’வல்லி’என்ற தொனி யாரென்று யோசிக்க வைத்தாலும்,வினாடிப்போழுதில்,மயூவை தான் செல்ல பெயர் வைத்து குறிப்பிடுகிறான் என்று புரிய,இத்தனை மாற்றம்,இந்த சிலநாட்களில் ஏற்பட்டதை ஜீரணிக்கவே அவளுக்கு சில நொடிகள் தேவைப்பட,அதை அறியாத அரவிந்தோ,பிரச்சனை என்னவென்று சொல்ல தயங்குகிறாள் என்றே நினைத்தான்.
“என்னால முடிஞ்சா சால்வ் பண்ணலாம்னு தான் பார்க்கறேன்.சொல்லுமா”மீண்டும் கேட்க,மயூவை பார்த்தபடியே சொன்னாள்.
“எனக்கும் விஷயம் முழுசா தெரியாதுண்ணா.நீங்க எப்படி ரூம்-குள்ள நுழையும் போது,நான் பேசினதை கேட்டுட்டீங்களோ,அதே மாதிரி தான் நானும் சண்டை நடந்த வீட்டுக்குள்ள எதேட்சையா இந்த பேச்சை கேட்டேன்.என்ன ஒண்ணு..எதுவுமே என் காதுல விழாதது மாதிரி’அப்புறம் வர்றேன்னு’ சொல்லிட்டு வந்துட்டேன். உங்க கெத்து எனக்கு வரலைண்ணா”
“ம்ஹ்ம்.. பாராட்டுறியா,திட்டறியான்னு தெரியலை”
“டவுட்டே வேணாம்-ண்ணா.பாராட்ட தான் செய்யறேன்.நீங்க பார்த்த பார்வையில அப்படியே எங்க மயூ பதறிப்போயிட்டா”
“உண்மையாவா? உங்க மயூ பதறிப்போயிட்டாளா? நான் நம்பிட்டேன்”ஜாலியாக சொன்னாலும், உண்மை என்னவென்பதை அங்கிருந்த மூவருமே அறிவார்களே.
அரவிந்தும் பேச்சின் போக்கு திசைமாறுவதை உணர்ந்து,”உனக்கு தெரிஞ்சதை சொல்லும்மா”என்றான்.
“பெரியம்மா,மாறன் அண்ணாவை வேலையை விட்டுட்டு,வேற வேலைக்கு முயற்சி செய்ய சொல்லியிருப்பாங்க போலண்ணா.சரியா அந்த நேரம் என் மாமனார் என்ட்ரி கொடுத்துட்டார்”என்றவள்,பட்டென்று நாக்கை கடித்துக்கொண்டாள்.
அரவிந்த் சத்தமாகவே சிரித்தான்.
“ஊருக்கே தெரிஞ்ச ரகசியம்.எனக்கும் தெரிஞ்சுடுச்சு.பயப்பட தேவையில்ல.நம்ம மாமனார் என்ன பண்ணார்”என்று ஊக்க,அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு,
“அவங்க இன்ஸ்பெக்டர் உத்தியோகம் பார்க்கறவனுக்கு,என் பொண்ணை கொடுத்ததே பெருசுன்னு சண்டைக்கு கிளம்பிட்டாங்க.அந்த சண்டை திசை மாறி,மயூவை அண்ணாக்கு கல்யாணம் பண்ண ஆசையிருந்ததை பெரியம்மா சொல்லவும்,அதை மாமா இன்னும் பெருசாக்கி,அனுவை வீட்டுக்கு இழுத்துட்டு போயிட்டார்”
“அப்போ அனு,விருப்பப்பட்டு போகலை,சரியா”
“ஆமாண்ணா. மாறன் அண்ணாவும்,அனு வீட்டுக்கு போக சங்கடப்படறாங்க.அவங்களால பெரியம்மாவை எதிர்த்து பேசவே முடியாது.அதோட பெரியம்மா பேச்சை மீறவே மாட்டங்க.அதான் மயூ எடுத்து சொன்னா,அத்தை மனசு மாறுவாங்கன்னு..”என்று மேலும் இழுத்தாள்.
மயூவின் முகம் மாற,”மயூ கோவிச்சிக்காதே.சண்டை நடந்து ரெண்டு நாளாச்சு.நான் புரோகிராமுக்கு நாலு நாள் முன்னாடியே பேர் கொடுத்துட்டேன்.நிஜமா உன்னை பார்க்க தான்டி வந்தேன்”அரவிந்த் முன்னாடியே சமாதானம் செய்ய,
“ப்ச்ச்.அதை விடு.நான் எப்படி அத்தைகிட்ட பேச முடியும்.பேசறது தெரிஞ்சா,அப்பா என் உறவே வேணாம்னு முடிச்சுக்குவார்”
“அது அப்போ மயூ. இப்போ தான் பெரியம்மா உங்க குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கமாகிட்டாங்களே.உன்னை பெரியம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் மயூ.நீ சொன்னா கேட்பாங்க”
“நம்பர் கொடு.பேசறேன்”எனவும்,
“வெயிட்.வெயிட்…மாறன் அம்மா கூட பேசினா,உன்னோட அப்பா எதுக்கு கோபப்படுவாங்க?”புரியாமல் கேட்டான் அரவிந்த்.
எப்படி சொல்வதென்ற சங்கடத்தோடு காயத்ரியை முறைக்க,காயத்ரி தெளிவாகவே விளக்கினாள்.
“பெரியம்மா இவளோட சொந்த அத்தை தான்.தாத்தா ஒண்ணு.பாட்டி மூணு..இல்ல நாலு”நக்கலாக சொல்ல,
“என்னம்மா சொல்ற”கொஞ்சம் டென்ஷனோடு கேட்க,
“பெரியம்மா,மயூ தாத்தாவோட நாலாவது சம்சாரத்து பொண்ணுன்னு நினைக்கறேன்.சரியா எத்தனையாவது வைப்-ன்னு தெரியல.அதுலயும் நம்ம மயூ,பெரியம்மா சாயல்.அதான் மாமாவுக்கு ரொம்ப டென்ஷன் கொடுக்கற விஷயம்”எனவும்,மயூவின் கையிலிருந்த போனை பிடுங்கி,அதிலிருந்த தங்களது திருமண வீடியோக்களை பார்த்தவன்,அதிலிருந்த மாறனின் அம்மா கவிதாவையும் மயூவையும் ஒப்பிட,இருவரும் தோற்றத்தில் சிறிதே வேறுபட்டிருந்தனர்.
“இவங்க உனக்கு அத்தைன்னு ஏன் எனக்கு முன்னாடியே சொல்லலை”காயத்ரி முன்பே சத்தமிட்டான்.
மயூ காயத்ரியை முறைத்துவிட்டு,”நீங்களோ,நானோ இன்னும் நம்ம உறவுகளை பற்றி எதுவும் பேசிக்கலை”-அரவிந்தும் எதுவும் சொல்லவில்லை என்பதை சரியாய் நினைவுபடுத்த,கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டான்.
எதற்காக இந்த கோபம்?-அவனுக்கே தெரியவில்லை என்பதே நிஜம்.
“சரிம்மா காயத்ரி.நானும் இவங்க வீட்டுல பேசறேன்.நீ போய் ரெஸ்ட் எடு…… வல்லி நீ காயத்ரிக்கு பிடிச்ச டிஷ் செய்ய சொல்லி உள்ள சொல்லிடு.நான் என்னோட வேலைகளை கொஞ்சம் கவனிக்கறேன்”என்றவன் கீழேயிருந்த ஒரு அறைக்குள் நுழைந்துகொண்டான்.
அவன் உள்ளே போய்விட்டதை உறுதிப்படுத்திக்கொண்ட காயத்ரி,”மயூ உன்னோட வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சிருக்குன்னு நம்பறேன்.தேவையில்லாததை எல்லாம் மனசில இருந்து தூக்கி எறிஞ்சுடு.நீயும் மாறிட்டு வர்றன்னு எனக்கு புரியுது. அதனால தான் இதை சொல்றேன்.
உன்கிட்ட எதையும் மறைச்சு எனக்கு பழக்கமில்ல. உன் அண்ணனும் எதையும் சொல்லக் கூடாதுன்னு மிரட்டி தான் அனுப்பி வைச்சார். ஆனால் உனக்கும் உன் வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிருக்கணும்னு தான்,வந்தவுடனே எல்லாத்தையும் சொல்லிட்டேன். இன்னொரு விஷயத்தையும் சொல்றேன். வினோதன் ஜெயில்ல இருக்கான். அதுவும் திருட்டு கேஸ்ல!!
மாறன் அண்ணா தான் அவன் மேல பாவம் பார்த்து,திருட்டு கேஸ் மட்டும் போட்டு உள்ள தள்ளியிருக்காங்க. வேற யார் மூலமாவோ அவன் ஜெயில்ல இருக்கது உன் காதுக்கு வந்து,உன்னால தான் ஜெயிலுக்கு போயிருக்கான்-னு நினைச்சு,நீ உன்னோட வாழ்க்கையை சிக்கலாக்கிக்க கூடாதுன்னு தான் நானே இதை சொல்லிட்டேன்.
அவன் செஞ்சதுக்கு தான் அவன் அனுபவிக்கறான்.உன்னால இல்ல. அதை நீ புரிஞ்சுக்கணும். தேவையில்லாம அதையும் இதையும் போட்டு குழப்பிக்கக் கூடாது “ தக்க நேரத்தில் மயூவின் மனதில் இருந்த குழப்பங்களுக்கு, காயத்ரி தன்னை அறியாமலையே விடை கொடுத்துக் கொண்டிருக்க,அவள் பேச்சுக்கு “ம்ம்ம்” கொட்டிக்கொண்டிருந்தவள் மனதில் என்ன இருக்கிறதென்று காயத்ரிக்கு தெரியவேயில்லை.
வினோதனின் பேச்சு வந்தால் மட்டும்,மயூவின் உணர்வுகளை யாராலுமே படிக்க முடியாது.
சரியாய் இதே நேரத்தில்,காவல் நிலையத்தில் வினோதனை பார்க்க,அவன் நண்பன் வந்திருந்தான்.
சில நிமிட காத்திருப்பிற்கு பிறகு வினோதனை பார்த்தவன்,”இது தான் அவ கல்யாண போட்டோ. உன்னை ஏமாத்திட்டா போயிட்டா அந்த நாய் மச்சி…” இன்னும் கீழ்த்தரமாய் பேச,
“அப்படி பேசாதடா. என்ன இருந்தாலும் அவ நா காதலிச்ச பொண்ணு. உண்மையான காதல்-ன்னா நாம காதலிச்சவங்க சந்தோஷமா இருக்கணும்னு தான் நினைக்கணும். நானும் அப்படியே தான் நினைக்கறேன். எங்க இருந்தாலும்,யாரோட வாழ்ந்தாலும் அவ சந்தோஷமா இருக்கணும்”கலங்கிய கண்களோடு சொல்ல,அவன் நண்பன் உருகிப் போய்விட்டான்.
“நீ கிரேட் மச்சி”என்றவன்,தன் நண்பர்களிடமும் அதையே சொல்ல,அவர்களும் நிறைவேறாமல் போன,தன் நண்பனின் காதலை எண்ணி துவேசமாய் மயூராவை திட்டிக்கொண்டிருந்தார்கள்…அவளின் பெற்றவர்களின்..உறவினர்களின் காது படவே!!!
அந்த இரவு நேரத்தில்,வினோதன் தான் மறைத்து வைத்திருந்த மயூராவின் திருமண புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் வெகு நேரமாய்!!
கொள்ளை அழகாயிருந்தாள் மயூரா!!
‘எனக்கே எனக்குன்னு கிடைக்க வேண்டிய அழகு.. இப்போ எவனுக்கோ!’பெருமூச்சுவிட்டபடி,அரவிந்தனை பார்க்க…
‘இவனை எங்கேயோ பார்த்திருக்கேனே’வெகு நேரம் மூளையை தட்டி யோசித்தான்.
‘அட இவன் தான,மயூக்கு நான் ஹீரோவா தெரிய காரணமானவன்’சரியாய் ஊகித்தவன் மீண்டும் போட்டோவை பார்த்து உறுதிப்படுத்திவிட்டு,
‘அன்னைக்கு அவளுக்கு நீ தான் வில்லனா தெரிஞ்சடா.. வில்லன் நீயே என் மயூவை கல்யாணம் பண்ணிட்டியா!!’திகைப்போடு சிந்தனையை ஓட்டியவன் அப்படியே உறங்கிப்போனான்.
வினோதன் மாறியிருந்தான்!! ஆனால் அந்த மாற்றம் வேறு விதமாய் மயூராவையும் அரவிந்தனையும் வருத்த காத்திருந்தது!!

Advertisement